போட்டோ



வி.சிவாஜி

‘‘நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள் இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!’’ - புது மாப்பிள்ளை பாஸ்கர் தன் மனைவி ரேகாவிடம் கேட்டான். அவன் மனதில் ஒரு திட்டம். தன் பர்சனல் ஆல்பத்தை எடுத்து வந்தாள் ரேகா. ஒவ்வொரு போட்டோவாக பார்த்தான் பாஸ்கர். காலேஜ் லைப்ரரியில், கேன்டீனில், வகுப்பறையில், கிரவுண்டில்... இப்படி பல இடங்களில் எடுக்கப்பட்டவை.



பல படங்களில் ரேகா தனியாக இருக்க, சிலவற்றில் மட்டும் தோழிகள். பக்கத்தில் எந்தப் பையனும் இல்லை. கோ-எட் காலேஜில் படித்தாலும் எந்தப் பையனுடனும் அவள் பழகவில்லை என உறுதி செய்துகொண்ட பாஸ்கருக்கு திருப்தி. ‘‘ரொம்ப நல்லா இருக்கு ரேகா. ஒவ்வொரு படத்திலும் நீ ரொம்ப அழகா தெரியறே!’’ - திருப்தியுடன் ஆல்பத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பினான்.

பாஸ்கர் போனவுடன் மொபைலை எடுத்தாள் ரேகா. ‘‘ஹேய் மதன்... எப்படி இருக்கே? இத்தனை நாள் போன் பண்ணாததுக்கு ஸாரிடா! பை தி வே... நீ காலேஜ்ல என்னை ரசிச்சு ரசிச்சு போட்டோஸ் எடுத்தியே... அதையெல்லாம் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா வந்திருக்கு’னு பாஸ்கர் சொன்னார். ‘என் காலேஜ் காதலர் எடுத்த படம்னு சொல்லவா முடியும்!’’ - மேலும் கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிவிட்டு மொபைலை படுக்கையில் போட்டாள் ரேகா.