சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு?



‘‘கடந்த 2011 தேர்தலில் இஸ்லாமியர்கள் சார்பில் இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான் அதிமுகவின் முன்னால் வைக்கப்பட்டது. ஒன்று, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். இரண்டாவது கோரிக்கை, சுமார் 20 ஆண்டுகளாக, தண்டனைக்காலம் கழிந்தபிறகும் சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். முதல் கோரிக்கையை, ‘கட்டாயம் நிறைவேற்றுவேன்’ என்று பொதுக்கூட்டங்களில் உறுதி கூறினார் ஜெயலலிதா. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான சிறு முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை.



சிறைவாசிகளை விடுதலை செய்வது பற்றி சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை. அந்தக் குடும்பங்கள் நிலைகுலைந்து நிற்கின்றன. பிள்ளைகள் தவிக்கிறார்கள். எத்தனையோ போராட்டங்களை நடத்தி ஓய்ந்து விட்டது இஸ்லாமிய சமூகம். அவர்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை. அதிமுகவுக்கு பாடம் புகட்டும் தருணம் இது.  இஸ்லாமியர்களின்  ஒரு ஓட்டு கூட இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு விழப்போவதில்லை...’’ - ஆவேசமாகச் சொல்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல... கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மொத்த சிறுபான்மையினரும் மிகுந்த வேதனையோடுதான் நம் கேள்வியை எதிர்கொள்கிறார்கள். ‘யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு ஒற்றைக்குரல்தான் பதிலாக வருகிறது... ‘‘நிச்சயம் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்!’’

‘‘எப்போதுமே சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை கொண்டவர் ஜெயலலிதா. அவரிடம் இஸ்லாமியர்கள் எப்போதும் நிறைய கோரிக்கைகள் வைப்பதில்லை. வைத்தாலும் நடக்காது என்று தெரியும். கடந்த தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சி போன்ற சில கட்சிகள் மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துத்தான் அதிமுக கூட்டணியில் இணைந்தன. ஆனால், இந்தக் கோரிக்கைகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை.

தொடர்ச்சியான வலியுறுத்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில், ‘அதிமுக ஆட்சி அமைத்தால் கட்டாயம் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. குறைந்தபட்சம் இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்திருந்தால் கூட நம்பிக்கை வந்திருக்கும். எதுவுமே செய்யவில்லை. தமிழக சிறைகளில் 49 பேர் தண்டனைக் காலம் நிறைவடைந்தபிறகும் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

அவர்களின் குடும்பங்கள் தத்தளிக்கின்றன. இதுகுறித்து பலமுறை ஜெயலலிதாவின் கவனத்துக்குக்கொண்டு சென்றிருக்கிறோம். ஆனால் அவர்களின் சட்டபூர்வ உரிமையைக் கூட வழங்க அதிமுக அரசு தயாராக இல்லை. சிறுபான்மையினர் மட்டுமல்ல... கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எவருக்குமே ஏற்றமில்லை. மீனவர்களைப் போல, மாணவர்களைப் போல, விவசாயிகளைப் போல, நெசவாளர்களைப் போல, சிறு குறு தொழிலாளர்களைப் போல சிறுபான்மையினரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்த தேர்தலில் ஒரு வாக்கும் அதிமுகவுக்கு கிடைக்காது’’ என்கிறார் ஆளூர் ஷா நவாஸ்.

நாம் சந்தித்த சிறுபான்மை சமூக மக்கள் பலரும் அதிமுக அரசு மீது வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, ‘இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. சுதந்திரமாக நடமாட முடியவில்லை...’ என்பதுதான். ‘‘அதிமுக அரசு  எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்படும். பாஜகவின் தேசிய அஜெண்டாவை தமிழகத்தில் அதிமுக செயல்படுத்துகிறது. வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதை மீட்க பலமுறை  வலியுறுத்தியும் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. எனவே இந்தத் தேர்தலில்  அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்...’’ என்று கோபமாகச் சொல்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த கே.என்.பாஷா.

கிறிஸ்தவர்களின் மனநிலையும் அதிமுகவுக்கு எதிராகவே இருக்கிறது. நம்மிடம் பேசிய இந்திய தேசிய கிறிஸ்தவக் கட்சியின் மாநிலத் தலைவர் ரெவரண்ட் டாக்டர் ஜெயச்சந்திரன் ‘‘கிறிஸ்தவர்கள் இன்னொரு முறை அதிமுகவுக்கு வாக்களித்து ஏமாறத் தயாராக இல்லை...’’ என்கிறார். ‘‘பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் வழிபாட்டு உரிமை, சடங்குகள் கட்டிக்காக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் அப்படியான நிலை இல்லை.

சிறுபான்மை சமூக நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், உணவு விடுதிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் குறிவைத்து அடைக்கப்பட்டன. அவற்றை நடத்துபவர்கள் மிரட்டப்பட்டார்கள். குமரி மாவட்டத்திலும், சென்னையிலும் அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆராதனைக் கூடங்கள் அடித்து உடைக்கப்படுகின்றன. சமூக சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது. அமைதியாக வழிபாடுகளில் ஈடுபடுவோர் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. இவற்றைத் தடுத்து பாதுகாப்பை உறுதி செய்து தரவேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது.

சிறுபான்மையின மக்கள் மிகவும் மன உளைச்சலோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை நிறுவனங்களை மிரட்ட சில மேலதிகாரிகளை அரசு  பயன்படுத்திக் கொண்டது. இந்தத் தேர்தலில் அதற்கெல்லாம் சேர்த்து எம் மக்கள் கணக்குத் தீர்ப்பார்கள்...’’ என்கிறார் ஜெயச்சந்திரன். தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவிலேயே அதிக நபர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.



இரண்டாவது இடம்தான் குஜராத்துக்கு. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்று சொல்லப்படும் உத்தரப் பிரதேசம் கூட மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. சாதாரண சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட முடியாத கொடுங்குற்றவாளிகள் மீதுதான் இந்தச் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என குரலற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களே தடுப்புக் காவல் சட்டத்தில் பிணைக்கப்படுகிறார்கள். 2012ம் ஆண்டில் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 523 பேரில் 358 பேர் மேற்கண்ட நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்கள் மீது இந்தச் சட்டங்களை ஏவுவதற்குப் பதிலாக எந்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் மீதே இதைப் பயன்படுத்துவது இயற்கை நீதிக்கு முரணானது...’’ என்று குமுறுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ‘‘ஒரு குடும்பத்தின் தலைவரோ, பிள்ளையோ சிறையில் அடைபட்டுக் கிடந்தால் அந்தக் குடும்பமே நிலைகுலைந்து போய்விடும். பல்வேறு தருணங்களில் எத்தனையோ சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்கள்.

தண்டனைக்காலம் கடந்தும் காரணமே இல்லாமல் சிறையடைந்து கிடக்கிற சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், போராடியும் ஓய்ந்து போய்விட்டோம். அதைக் காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை அதிமுக அரசு. கடந்த 5 ஆண்டுகளில் மதவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து விட்டன. நிச்சயம் இந்தத் தேர்தல் ஒரு விடியலை ஏற்படுத்தும்...’’ என்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் உசேன் கனி.

தமிழகம் முழுவதும் நாம் சந்தித்த சிறுபான்மை சமூக சகோதரர்கள் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். இதுநாள் வரையிலான பாராமுகமும், புறக்கணிப்பும் அவர்களை உணர்வுபூர்வமாக பாதித்திருக்கிறது. தங்களைப் பாதுகாக்கும், தங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கும் ஒரு அரசுதான் அவர்களின் எதிர்பார்ப்பு!

சொன்னீர்களே...செய்தீர்களா?

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சிறுபான்மையினருக்கு அளித்த வாக்குறுதிகள்

* வேலைவாய்ப்பு பெருகியுள்ள துறைகளில் சிறுபான்மையினர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக மாற்றப்படுவர். தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படும்.
* அரசுப்பணியில் காலியிடங்கள் நிரப்பப்படும். புதிய வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
* இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யாருக்கு ஓட்டு?

மின்னல், பெரம்பலூர்
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமா உயர்த்துவோம்னு பல இடங்கள்ல பேசினாங்க அந்த அம்மா. 5 வருஷம் கழிச்சும் ஒண்ணும் நடக்கலே. ஜெயிச்சு வந்தா திரும்பவும் செய்வோம்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை. அதிமுகவுக்கு வாக்களிச்சு என் ஓட்டை வீணாக்க விரும்பலே.

முகமது இலியாஸ், அரும்பாவூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு டவுன் ஹாஜி பணியிடத்தை நிரப்பக் கோரி பலமுறை மனு கொடுத்து ஓஞ்சுட்டோம். மார்க்க ரீதியான பிரச்னைகளுக்கு திருச்சி, சேலம் மாவட்டங்களுக்குச் சென்று அல்லல்பட்டு தீர்க்க வேண்டியிருக்கு. எங்களைக் கண்டுகொள்ளாத அதிமுகவுக்கு எதற்காக நாங்கள் வாக்களிக்கணும்?

பீட்டர்ராஜ், கத்தோலிக்க சங்கத் தலைவர், பெரம்பலூர்
தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் கடன்கள் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதை விடுத்து ‘ஜெருசலேம் செல்ல வாய்ப்பளிக்கிறோம்’ என்கிறார்கள். வாழ வழி சொல்லாமல், புனிதப்பயணத்திற்கு செல்லுங்கள் என்பது ஏற்கும்படி இல்லை. பின்னர் எதற்காக நாங்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்?

என்.ஏ.சர்புதீன், நல்ல கவுண்டன்பாளையம்
கடந்த 5 ஆண்டு காலம் வீதிக்கு வீதி மதுக்கடைகளைத் திறந்து பிள்ளைகளை எல்லாம் குடிகாரர்களாக மாற்றி விட்டார்கள். இனி எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டேன்.



முகமது சலீம், மரப்பேட்டை
இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியை புறக்கணிக்கத் தயாராகிவிட்டோம்.
 
அப்பாஸ், ஊட்டி
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. வாகன வரி குறைவாக இருந்தது. பால் விலை குறைவாக இருந்தது. மின் கட்டணம், பஸ் கட்டணம் குறைவாக இருந்தது. அதிமுக ஆட்சியில் எல்லாம் உயர்ந்துவிட்டது. சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித உதவிகளும் இல்லை. சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வது சிரமமாக உள்ளது.

நஜீமுதீன், சத்தியமங்கலம்
விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. நடுத்தரக் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். திறம்பட செயல்பட முடியாத அதிமுக ஆட்சி தேவையில்லை. இம்முறை அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்.

சுரேஷ்குமார், அன்னூர்
சிறுபான்மை சமுதாயத்துக்கு ஆதரவாக இருப்பேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சிறுபான்மை மக்களை அடியோடு மறந்துவிட்டார். எனவே, இந்தத் தேர்தலில் நாங்கள் அவரை மறந்துவிடுவோம்.

ெஜம் பாபு, குனியமுத்தூர்
110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எதுவும் நிறைவேறவில்லை. ஊழல் தலை விரித்தாடுகிறது. சட்டம் - ஒழுங்கு தலைகீழாக உள்ளது. இந்த சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
 
திருநங்கை சங்கீதா, கோவை
திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை. சமுதாயத்தில் உயர்ந்திடும் வகையில் திருநங்கைகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படவில்லை. எங்கள் மீது அக்கறை இல்லாத அதிமுகவுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம்.
 
அருண்குமார், திருப்பூர்
கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை எல்லா இடத்திலும் ஊழல். வறுமையில் வாடும் சிறுபான்மை மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். அதனால், இம்முறை அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
 
ஜீனைதீன், துடியலூர் 
எல்லா வணிகமும் படுத்து விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. அதனால், அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
 
துரைராஜ்,  துடியலூர்
சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதச்சார்பற்ற அரசு எனக்கூறிக்கொண்டு, அதிமுக அரசு மறைமுகமாக மதவாதத்திற்கு துணை போகிறது. இம்முறை அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
 
ஷபீர் அகமது, உடுமலை
தமிழகத்தில் சிறுபான்ைம மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்துத்துவா அமைப்புகளுடன் கைகோர்த்துக் கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரியாகச் செயல்படுகிறார். எனவே, ஜெயலலிதாவுக்கு சிறுபான்மை மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
 
மெர்லின் குமார், அழகியபாண்டியபுரம்
அதிமுக ஆட்சியில் பேருந்துகள் கூட ஒழுங்காக இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.

மஞ்சு, ஊட்டுவாழ்மடம்
மின்வெட்டு இல்லை என்கிறார்கள். ஆனால் பாதி நேரத்திற்கு கரன்ட் இல்லை. இந்த ஆட்சியை அகற்றினால்தான் விடிவு.

பிரட்ரிக் சேவியர், புதுக்குடியிருப்பு
ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் என்கிறார்கள். அதனைப் பெறச் சென்றால் பாதித்தொகையை லஞ்சமாக வழங்க வேண்டியுள்ளது.

ஜெயன், கோட்டாறு
ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கான முட்டுக்கட்டைகளைத் தளர்த்துவேன் எனக் கூறினார். அதனை இதுவரை செய்யவில்லை. 

ரீகன், நாகர்கோவில்
பால்விலை முதல் மின் கட்டணம் வரை அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்து விட்டன. எங்கும் எதிலும் லஞ்சம் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. குமரியில் அனைத்து பஸ்களும் பழுதான நிலையில் உள்ளன. தரமற்ற சாலைகளால் வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. இந்த அராஜக ஆட்சி மாற்றப்பட வேண்டும்.

செய்யது, மாதவலாயம்
காவல் நிலையங்கள் அனைத்தும் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடமாகிவிட்டன. சிறுபான்மை மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அதிமுகவுக்கு பாடம் புகட்டுவோம்.

ஜனனி, புத்தேரி
எங்கள் பகுதியில் அனைவருக்கும் பயன்பட்ட பெரியகுளம் தற்போது கழிவுநீர் கலந்து மாசுபட்டு உள்ளது. இதே நிலைதான் பல குளங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் நிதி அனைத்தையும் அதிமுககாரர்களும் அதிகாரிகளும் வாரிக்கொண்டு போய்விடுகிறார்கள். இந்த ஆட்சி அகற்றப்படவேண்டும்.

நிஷார், இடலாக்குடி
பொய் வழக்குகளில் சிறையில் அப்பாவிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைவிடுவிக்காத அரசுக்கு பாடம் புகட்டுவோம்.

ஹனிபா, மணிமேடை
அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சாமானிய நடுத்தர மக்கள் நிலைமை மிகவும் மோசம். மக்கள் விரோத அதிமுக அரசு துரத்தி அடிக்கப்பட வேண்டும்.

ரஃபீக், காரியக்காரவிளை
ரேஷன் கடைகளில் பருப்பு, உளுந்து, பாமாயிலை நிறுத்தி விட்டார்கள் அதிமுகவினர். இவற்றை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்.

தமீம் அன்சாரி. தேவகோட்டை
இட ஒதுக்கீடு விஷயத்தில் எங்களை ஏமாற்றிய அதிமுகவுக்கு நாங்கள் வாக்களிக்கப்போவதில்லை.

பாத்திமா கனி, தேவகோட்டை
ரேஷன் கடைக்கு எப்போது போனாலும் அலைக்கழிக்கிறார்கள். எது கேட்டாலும் இல்லை என்கிற வார்த்தைதான் வருகிறது. ரேஷனில் கொடுக்கும் இலவச அரிசியை எங்கள் வீட்டுக் கோழி கூட சாப்பிட மறுக்கிறது. அதிமுகவிற்கு எங்கள் ஓட்டு இல்லை.

மனுவேல், சீகூரணி
சிறுபான்மையினர் மத்தியில் ஒருவித பய உணர்வு நிலவி வருகிறது. அடிக்கடி தாக்குதல்கள் நிகழ்கின்றன. இந்த தாக்குதல் குறித்து மாநில முதல்வர் எந்த கருத்தையும் தெரிவிக்காதது அச்சம் தருகிறது. 

பீர்ஒலி, உத்தமபாளையம்
தமிழகத்தில் 2 சதவீத முஸ்லிம்கள் வசதியாக இருந்தாலும், 98 சதவீதம் பேர் கல்வியில், வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கி உள்ளனர். 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தித் தாருங்கள் என்ற கோரிக்கையை ஏற்காத அதிமுக அரசுக்கு வாக்களிக்கப் போவதில்லை.

ஆரோக்கியராஜ், உத்தமபாளையம்
மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்ததை மறந்து விடமுடியாது. மரியன்னையை ஜெ. வடிவில் போட்டவர்கள்தானே அ.தி.மு.க.வினர். என்னைப் போன்ற சிறுபான்மை பட்டதாரிகளின் ஓட்டு அதிமுகவிற்கு இல்லை.

செய்யது அபுதாகிர், வேடசந்தூர்
கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டதற்காக இப்போது வருத்தப்படுகிறேன். ஊழல் அதிகரித்து விட்டது. கவுன்சிலரைக் கூட நேரில் போய் பார்க்கமுடியவில்லை.

ஜாஸ்மின், திருமங்கலம்
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பே இல்லை. எனவே இந்த முறை அதிமுகவிற்கு ஓட்டு இல்லை.

பாவா பகுருதீன், தொண்டி
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுதொழில் புரிவோர் நலன் காக்க அதிமுக அரசு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அதனால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. வளர்ச்சியில் தவறிய அதிமுகவிற்கு ஓட்டு போடமாட்டேன்.

நாகூர், பரமக்குடி
பா.ஜ.கவுடன் மறைமுகமாக உறவு வைத்துக்கொண்டு சிறுபான்மையினரைப் பழிவாங்குகிறது அதிமுக அரசு. ஹஜ் பயணம் உள்ளிட்ட பல நிலைகளில் பாதிக்கப்பட்டோம். அதிமுகவிற்கு ஒருபோதும் ஓட்டு இல்லை.

திருநங்கை சோனா, விருதுநகர்
அதிமுக அரசு திருநங்கைளை மூன்றாம் பாலினமாக அறிவிக்கவில்லை. எங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்த திட்டமும் இல்லை. தேர்தல் வருகிறது என்பதற்காக சிலருக்கு மட்டும் சென்னையில் வீடுகள் தந்துள்ளனர். மலர்க் கொத்து கொடுக்கச் சென்ற திருநங்கையை ‘கீழே வைத்து விட்டு’ போகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா. திருநங்கைகள் என்ன தீண்டத்தகாதவர்களா?

செய்யது இப்ராஹிம், விருதுநகர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாத இந்த அரசு திரும்ப வரக் கூடாது. கண்டிப்பாக அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
   

- தினகரன் செய்தியாளர்கள் உதவியுடன்
வெ.நீலகண்டன்