வசந்தபாலன் in Download மனசு!



அறம் எனப்படுவது
சிறிய தவறுகளுக்குக் கூட கடுமையான குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருக்கேன். அறத்தை மீறுவதும், துரோகம் செய்வதும் நம்மை அதல பாதாளத்திற்குக் கொண்டு போய்விடும் என்பதை வாழ்க்கை முழுவதும் நினைத்து வந்திருக்கேன். அறத்ைதத் தாண்டுவதற்கான அத்தனை வழிகளும் சினிமா இயக்குநரான என்னைக் கடந்து போய்க்கொண்டே இருக்கின்றன. நான் தவறு செய்வதற்கான பெண்களும், மற்ற சந்தர்ப்பங்களும் என் வழியில் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கின்றன. அதைத் தவிர்க்க கடுமையான மனப்பயிற்சியை எடுத்திருக்கேன். அதுவே என்னைப் பாதி நோயாளியாக ஆக்கிவிடத் துடிக்கிறது.



 மொத்த சமூகமும் அறத்திற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. கட்சிகளும், அரசும், தனி மனித ஒழுக்கமும் நகைப்பிற்கிடமாகி நிற்கிற சூழலில்... ஒரு கேடான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விழுமியங்கள் அனைத்தும் நொறுங்கிக் கொண்டிருக்கிற நிலையில், அறத்திற்கு, தியாகத்திற்கு, உண்மைக்கு ஆதரவாக யாரும் நிற்பதாகவே நினைக்க முடியவில்லை. எல்லா நன்மைகளும் அடித்து வெளித் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், பாதி அறத்தோடு வாழ்வதே பெரிய தவம். ஜீன்ஸ் போட்ட உலகத்தில் கோவணம் கட்டிக்கொண்டு இருப்பதைப் போல உணர்கிறேன்.

சினிமாவை எப்படிப் பார்ப்பது...
92ல் ‘ரோஜா’ திரைப்படத்தைப் பார்த்தேன். அன்றைக்குத்தான் ‘சூரியன்’ படமும் ரிலீஸ். எனக்கு ‘சூரியன்’ ரொம்பப் பிடித்தது. ‘ரோஜா’ க்ளைமேக்ஸில் இந்தப் பக்கம் ராணுவமும், மறுபக்கம் தீவிரவாதிகளும் நிற்கிறார்கள். ராணுவமும், தீவிரவாதிகளும் சண்டை போட்டு, துப்பாக்கிகள், குண்டுகள் வெடித்துச் சிதறி மதுபாலாவும், அரவிந்த்சாமியும் சேர்கிற தருணத்திற்காகக் காத்திருந்தேன். அப்படி எதுவும் நிகழாமல் இரண்டு பேரும் சேர்ந்துவிட்டார்கள். அது எனக்கு உவப்பானதாக இல்லை.

‘என்னய்யா இது க்ளைமேக்ஸ்! அடிச்சு, உதைச்சு, துவைச்சு பட்டையக் கிளப்பியிருக்க வேண்டாமா? என்னய்யா இந்த மணிரத்னம்... இப்படி சொதப்பிட்டாரு’ என நினைத்தேன். எங்க ஊரில் ‘ரோஜா’ நாலு நாள் போச்சு. சூரியன் 50 நாள் ஓடியது. ‘சூரிய’னில் பாபு ஆன்டனியோடு சரத்குமார் ரத்தம் கக்க கக்க போட்ட சண்டைதான் பிடிச்சது.

பிறகு சென்னைக்கு வந்து சினிமாவைப் படிக்க ஆரம்பிச்சேன். ‘தீவிரவாதிகளிடமும் மனிதம் இருப்பதை எதில் ஒருவன் காட்ட முனைகிறானோ அதுவே நல்ல சினிமா’னு அப்புறம்தான் புரிஞ்சது. சண்டைப் படங்களை விட ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவ’னில் அந்தக் குழந்தைகளின் அபூர்வ உலகம், அவர்களின் பெருவலி, துக்கம், கசப்பு மனதைத் தொட்டது. ‘பாகுபலி’ைய சிறந்த படம்னு கொண்டாடுவதை விட நம்மூரில் மேற்கண்ட குணங்களோடு எடுத்த ‘காக்கா முட்டை’யை சிறந்த படத்திற்கான இடத்தில் வைக்கத் ேதாணுது.

நல்ல படத்தைப் பார்ப்பதற்கான பயிற்சியே இங்கே இல்லை. தொடர்ந்து நல்ல சினிமாவைப் பார்ப்பதிலேயே அதை அடைய முடியும். டேவிட்  லீன் ‘டாக்டர் ஷிவாகோ’னு படம் எடுத்தார். அதில் கிறித்துவ முறைப்படி சவப் பெட்டியில் பிணத்தை வைத்து புதைப்பாங்க. மேலே மரத்திலிருந்து ஒரு காய்ந்த இலை அந்தச் சவப்பெட்டி மேலே விழும். ஒரு சின்னப் பையன் இலை உதிர்வதைப் பார்ப்பான்.



‘இலை உதிர்வது எவ்வளவு சாதாரணமோ அதைப் போலத்தான் மரணமும். ஏன் மரணத்திற்கு இவ்வளவு விலை கொடுக்கறீங்க’னு அந்தக் காட்சியில் உணர்த்திப் போவார். தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது அல்ல திரைமொழி. காட்சியின் பேரின்பத்தைக் கடத்துவதே சினிமா.

வாழ்க்கையை எதிர்கொள்வது
அலுப்பும், வேம்பின் கசப்பும், துயரமும் நிரம்பி வழிவதாக வாழ்க்கை இருக்கு. தினம் தினம் எச்சில் விழுங்குவது போல கசப்பையும், வலியையும் விழுங்கிக் கொண்டு வாழ்கிறேன். ‘சாதாரண பணம் சம்பாதிக்கிற மனிதனாக என்னை ஏன் படைத்தாய்’ என்ற கேள்விதான் என்னைத் துளைத்துக்கொண்டே இருக்கிறது. வழக்கமான கமர்ஷியல் படம் எடுக்கும் டைரக்டராக நான் ஆகிவிடக் கூடாதே எனும் பயமும் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது.

வீட்டிற்குப் போனதும் குழந்தைகள் இருவரும் ‘அப்ப்ப்ப்பா’ என அலறிக்கொண்டு மடியில் விழுந்து, முத்தம் கொடுக்கும்போது இந்த வாழ்க்கை சடுதியில் கொண்டாட்டமாக மாறிவிடுகிறது. ‘தோல்வியோ, வீழ்ச்சியோ, சரிவோ... அது கொஞ்ச காலத்திற்குத்தான்’ என மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

எடுக்க நினைக்கிற சினிமா...
ஒடுக்கப்பட்ட மக்களின் வலி இன்னும் பதிவாகவேயில்லை. ஒடுக்கப்பட்ட பெண்களின் வலியை ‘அங்காடித் தெரு’வில் எடுத்தாண்டது கொஞ்சம் நிம்மதியளிக்கிறது. இன்னும் இங்கே தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. சாதியப் பெருமை உச்சத்தில் இருக்கிறது. நடுரோட்டில் குழந்தைகளும், பெண்களும், பார்த்து விக்கித்து நிற்க ஆணவக் கொலை செய்கிறார்கள். ரோகித் வெமுலா தற்கொலை செய்துகொள்கிறார். பிரசாரம் இல்லாத சினிமாவை, ‘துலாபாரம்’ மாதிரி அழ வைக்காமல், நக்கலும், நையாண்டியுமாக ஆதிக்க சக்திகளை முன்வைத்து
ஒரு சினிமாவை எடுக்க நினைக்கிறேன்.

வாழ்க்கை தந்த பாடம்...
நேர்மையாக ஒரு விஷயத்திற்குப் போராடினால், கண்டிப்பாக அது கிடைக்கும்னு நினைக்கிறேன். போலித்தனமோ, ஜிகினாவாகவோ இல்லாமல் சினிமாவில் இருந்தால், அந்த வெற்றி நமக்கு உண்டுதான். சினிமாவை ஒரு சாமியாக நினைத்தால், இதயத்தை ஆத்ம சுத்தியோடு எடுத்து வைத்தால், வெற்றி பெறலாம் என நம்புகிறேன். வசந்தபாலன் என்ற பெயர் கிடைத்ததற்கும் இதுவே காரணம். கடும் உழைப்பு, உண்மை, நேர்மைக்கு இன்னும் இடமிருப்பதாகவே தோன்றுகிறது.

படித்த புத்தகம்...
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘என்ன சொல்கிறாய் சுடரே’ - சிறுகதைத் தொகுப்பு... 25 கதைகள் அடங்கியது. அதில், மனதிற்கு மிகவும் நெருக்கமான மூன்று சிறுகதைகளை மறக்க முடியவில்லை. ‘ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்கும் ஆன இடைவெளி’ என்றொரு கதை... எப்படி ஒரு விஷயத்தை கவிதையாகப் பார்க்க வேண்டும் என்பதை இவ்வளவு உணர்வுபூர்வமாக சொல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்து... உடனே, ‘அடடா சொல்லிவிட்டாரே எஸ்.ரா.’ என ஆராதிக்கவும் தோன்றியது. பறவையின் சிறகொன்று உங்களுக்கு என்ன விதமான உணர்வுகளை எழுப்பித் தரக்கூடும் என்பதைப் படிப்பது பேரனுபவம்.

எதிர்பார்ப்பு...
கேன்ஸ் திரையிடலில் பால்டிமோர் விருது வாங்க வேண்டும். அதற்குத் தகுதியாக ஒரு படம் எடுக்க வேண்டும்.

கடைசியாக அழுதது...
‘காவியத்தலைவன்’ தோல்வி அடைந்தபோது. நான் உண்மையாக ஒரு படைப்பைக் கொண்டு வைத்தபோது, காரணமே இல்லாமல் அந்தப் படம் தோல்வி அடைந்தது மன அழுத்தத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அதுதான் அந்த அழுகைக்குக் காரணம். உழைக்கலையா, ஸ்கிரிப்ட் சரியா பண்ணலையா, சரியா டைரக்ட் செய்யலையா என திடீரென்று ஆயிரம் கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டபோது, எல்லா கேள்விகளுக்கும் நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்பதே என் பதில்.

மறக்க முடியாத நண்பன்
என் நண்பன் முருகன். சினிமாவிற்கு வந்த புதிதில் நான்கு வருடங்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவன் எனக்கு நாலு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு லட்சம் ரூபாய் அனுப்புவான். என் பள்ளித்தோழன். எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்த உதவி இது. எந்தச் சூழ்நிலையில் அவன் இப்படி கொடுத்துக்கொண்டே இருந்தான் என்பது இன்று வரை அவனால் சொல்லப்பட்டதே இல்லை.

நான் பணத்தைத் திருப்பித் தரும் வேளையில், ‘உன்னிடமே இருக்கட்டும்’ எனப் பிடிவாதமாக மறுத்து வந்திருக்கிறான். அப்படி ஒரு பெருந்தன்மை. ‘கடவுளின் குணம் மிக்க மனிதன் சாத்தியமா’ என வியந்துகொண்டு இருக்கிறேன். அந்தப் பெருந்தன்மை எனக்கு இல்லையே என வெட்கித் தலைகுனிகிறேன். ‘என்னைக் கொன்று போட்டுவிடு’ என அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு சொல்லத் தோன்றுகிறது!
 

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்