சம்மரில் ஸ்டார்கள் எங்கே போறாங்க?



* சென்னை வெயிலை சமாளிக்க முடியாமல் ஜில்லிக்க வைக்கும் ‘கூல்’ இடங்களுக்கு ஜாலி ட்ரிப் அடிப்பது பிரபலங்களின் ஆல் டைம் ஹாபி. இந்த சம்மருக்கு எங்கே ட்ரிப்? என்ன புரோக்ராம்? - விசாரித்தால் ஏகப்பட்ட நியூஸ்வேக்கள் அள்ளுது.



* இப்போது குடும்பத்தினருடன் லண்டனில் இருக்கும் அஜித், மே இரண்டாவது வாரத்தில்தான் சென்னை வரும் ஐடியாவில் இருக்கிறார். இதற்கிடையே மே ஒன்றாம் தேதி அவரது பிறந்த நாள் வருகிறது. ஆக, இந்த முறை தல பர்த் டே லண்டனில்தான்!

* மோகன்லால் இப்போது உலக டூரில் இருக்கிறார். இன்னதென்று அடையாளம் காண முடியாத வித்தியாச ஸ்பாட்களில் ஸ்கேட்டிங், போட்டிங் என ஜாலி ட்ரிப் அடித்து அசத்துகிறார். ‘இந்த சம்மர் முழுவதும் டூர்...’ என ட்வீட்டியும் இருக்கிறார் மோகன்லால்.

* ‘அரண்மனை 2’ முடித்த கையோடு பாரீஸ், கலிபோர்னியா என வின்டர் சீஸனை ரசித்துவிட்டு வந்தார் த்ரிஷா. சாகச விளையாட்டுப் பிரியையான த்ரிஷாவின் மறக்க முடியாத நாடு என்றால் அது நேபாளம்தானாம்!

* வழக்கமாக சம்மர் பிரேக்குகளில் மனைவியின் ஊரான லண்டனுக்கு குடும்பத்துடன் சென்றுவிடுவார் விஜய். ஆனால், பரதன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மே முதல் வாரத்தில் தொடங்குவதால், தற்சமயம் ஃபாரீன் ட்ரிப் பற்றி எதுவும் யோசிக்காமல் இருக்கிறார். இதனிடையே வெயிலில் இருந்து தப்பிக்க இப்போதெல்லாம் நீலாங்கரையில் இருந்து தினமும் காலையிலேயே வடபழனியில் இருக்கும் தன் அலுவலகத்திற்கு வந்துவிடுகிறார் விஜய்.

* ‘கபாலி’ டப்பிங்கை முடித்துவிட்டார் ரஜினி. அடுத்து ஷங்கரின் ‘2.0’ படப்பிடிப்பில் அவர் இந்த சம்மரில் பிஸி! ஷூட்டிங் ஸ்பாட் டெல்லியைத் தொடர்ந்து ஃபாரீனாகக் கூட இருக்கலாம் என்பதால், டூர் விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.



* குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ் என்பதால், சம்மரில் ஒரு நல்ல ட்ரிப் செல்ல திட்டமிட்டுள்ளார் சூர்யா. ‘24’ பட ரிலீஸுக்குப் பிறகு ஃப்ளைட் ஏறுகிறார்கள். அநேகமாக வெளிநாடுதான்.

* கௌதம் மேனனின் படத்திற்காக சமீபத்தில்தான் துருக்கியின் இஸ்தான்புல் சென்று வந்துள்ளார் தனுஷ். அதுவே கிட்டத்தட்ட டூர் மாதிரி ஆகிவிட்டதால், வேறு ப்ளான் எதுவும் இல்லை. அடுத்து கார்த்திக் சுப்புராஜின் படப்பிடிப்பில் பரபரத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

* சென்ற ஆண்டு சம்மர் முடிந்த கையோடு, தனது அரவணைப்பில் வளரும் ஆதரவற்ற குழந்தைகளுடன் குளு மணாலி சென்று வந்தார் ஹன்சிகா. இந்த ஆண்டு ஜெயம் ரவியின் ‘போகன்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் இருப்பதால் சுற்றுலா எண்ணத்தைக் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறார்.

* தெலுங்கில் நிதின், மகேஷ்பாபு படங்கள், தமிழில் சூர்யாவின் ‘24’ என இந்த மே மாதம் அடுத்தடுத்து தனது படங்களின் ரிலீஸ் இருப்பதால், ப்ரமோஷன்களுக்கு சென்னை, ஐதராபாத் என பறப்பதே வேலையாக இருக்கும். எனவே, ‘‘டூர் பத்தி யோசிக்கற ஐடியா இல்ல!’’ என்கிறார் சமந்தா.

* மாலைப் பொழுதுகளில் அழகான கடற்கரையோடு மனசைக் கரைப்பது காஜல் அகர்வாலுக்குப் பிடித்தமானது. அதை விட்டால் மும்பை வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மகிழ்வது பொண்ணுக்கு ரொம்பவே இஷ்டமானது. தெலுங்கில் ‘பிரமோற்சவம்’ தவிர, இந்தியில் ஜூன் மாத ரிலீஸான ‘தோ லஃப்சான் கி கஹானி’ படங்களின் வேலைகள் இருக்கிறதாம். ஸோ, இந்த சம்மருக்கு டூர், ட்ரிப் எதுவும் இல்லை!

* நட்சத்திர கிரிக்கெட் போட்டி முடித்த கையோடு ஃபாரின் சென்று டென்ஷன் குறைத்து, கொஞ்சம் ரெப்ஃரெஷ் ஆகி வரத் திட்டமிட்டிருந்தார் விஷால். எதிர்பாராத ‘மதகஜராஜா’ ரிலீஸ், திட்டமிட்ட ‘மருது’ ரிலீஸ் எல்லாம் அடுத்தடுத்து நெருங்குவதால் ட்ரிப்பைத் தள்ளி வைத்துவிட்டார்.



* ஜூன் வரை தனது படங்களின் ஃபங்ஷன், ரிலீஸ் எதுவும் இருக்காது என்பதால் ஃபேமிலியுடன் ஜாலியாக அட்லான்டா பறந்துவிட்டார் விக்ரம் பிரபு.

* மகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தாவுடன் நடித்த ‘பிரமோற்சவம்’ படம் மே 26ல் ரிலீஸ். அதற்கு முன்பே மகன்களுடன் பாரீஸ் சென்றிருக்கிறார் இந்த பிரின்ஸ்பாபு.

- மை.பாரதிராஜா