நம்பிக்கை துரோகம் செய்த நயன்தாரா!மனம் திறக்கிறார் பிரபுதேவா மனைவி ரமலத்!

‘ராமன் வில்லு விட்டபோது சீதைக்குக் கிடைத்தது மணவாழ்க்கை;பிரபுதேவா ‘வில்லு’ விட்டபோது பறிபோனது ரமலத்தின் மணவாழ்க்கை..!’
‘பிரபுதேவா ஹீரோவா நடிக்க நயன்தாரா டைரக்ட் பண்ணுனா படத்துக்கு என்ன பேர் வைப்பாங்க..?’ ‘உன் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்...’
- இப்படிக் கும்மியடிக்கும் குறுந்தகவல்கள்;  ‘எல்லா டீலிங்கும் முடிஞ்சது. இனி கல்யாணம்தான் பாக்கி...’ ‘அதெல்லாம் இல்லப்பா. பொது இடங்களுக்கே ஜோடியா வர ஆரம்பிச்சிட்டாங்களே! நடக்க வேண்டியதெல்லாம் நடந்திடுச்சு’ என்று மெல்லக் கிடைக்கும் அவல்கள்...

இப்போது கோடம்பாக்கம் எங்கும் ஹாட் டாபிக் பிரபுதேவா - நயன்தாரா விவகாரம்தான். ஆரம்பத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு அமைதி காத்த பிரபுதேவாவின் மனைவி ரமலத், ‘கணவனை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும். பிரபுதேவா - நயன்தாரா திருமணத்துக்குத் தடை விதிக்க வேண்டும். அவர்கள் இருவரும் கணவன் & மனைவி போல போஸ் கொடுப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என கோர்ட் படி ஏறியிருப்பதுதான் இதில் லேட்டஸ்ட் திருப்பம்.

வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை ‘சார்’னும், என்னை ‘அக்கா’ன்னும் கூப்பிடும். ஆனா அது மனசுல இந்த மாதிரி நியாயத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான ஒரு ஆசை இருக்குங்கிறது எனக்குத் தெரியாமப் போச்சு.

ஹீரோ கம் டைரக்டரின் கதையின் ஃப்ளாஷ்பேக்...

டான்சில் பிரபுதேவா கலக்கிக்கொண்டிருந்த காலத்தில் நடனக்குழுவுக்கு வந்து சேர்ந்தார் ரமலத். ஒருவருக்கொருவர் காதல்வயப்பட, இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. மீறி திருமணம் செய்தார்கள். ‘லதா’ என பெயரை மாற்றி இந்துவாகவே வாழ்ந்தார் ரமலத். விஷால், ரிஷி, ஆதித் என மூன்று வாரிசுகள். இயக்குனர் அவதாரம் எடுத்தார் பிரபுதேவா. முதல் படமான ‘போக்கிரி’ போன போக்கு, அதே ஹீரோவை வைத்து ‘வில்லு’வுக்கு பூஜை போட வைத்தது. நயன்தாரா ஹீரோயின் ஆனார். ‘வில்லு’ நயனை ரமலத்தின் வில்லியாக்கியது. பிரபுதேவா வீட்டுக்கு வருவதே குறைந்தது. நயனுடன் அவர் வலம்வர, மீடியாவிலிருந்து சேதிகளும் றெக்கை கட்டின.

‘நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்’ என பிரபுதேவா வெளிப்படையாக பேட்டி கொடுத்ததுதான், ரமலத் இப்படி கோர்ட் படியேறக் காரணமானது. ரமலத்திடம் பேசினோம்... ‘‘நாங்க லவ் பண்ணுன காலத்துலகூட அது சம்பந்தமா எந்தவொரு தகவலும் வெளிய வந்திருக்காது. கல்யாணத்துக்குப் பிறகும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை அவர்கூட வரவேண்டாம்னுடுவார். கேட்டா, ‘சந்தோஷமா போற நம்ம வாழ்க்கைல கண்ணு போட்டுடப் போறாங்க’ம்பார். மூணு குழந்தைகளும் பிறந்த பிறகுதான் என்னை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்னா பாருங்க...

ஆனா இன்னிக்கு கோடம்பாக்கத்துல சினிமா தொடர்புடைய ரெண்டு பேர் சந்திச்சிக்கிட்டாலே, இந்தப் பேச்சுதான். தேவையா இந்த அவமானம்? என்னைக்கு அந்தப் பொண்ணுகூட ஒப்பந்தம் (படத்துக்குத்தான்)  போட்டாரோ... அன்னைக்கு பிடிச்சது சனி.

சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் யார் எங்க வீட்டுக்கு வந்தாலும், ஒரு பாசத்தோடதான் உபசரிப்பேன். எங்களுக்கு சோறு போடற தொழிலாச்சே! அந்த மாதிரிதான் அந்தப் பொண்ணையும் ஆரம்பத்துல பார்த்தேன். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை ‘சார்’னும், என்னை ‘அக்கா’ன்னும் கூப்பிடும். ஆனா அது மனசுல இந்த மாதிரி, நியாயத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான ஒரு ஆசை இருக்குங்கிறது எனக்குத் தெரியாமப் போச்சு. இல்லாட்டி, நேரா என் வீட்டுக்கே வந்து, என் புருஷனை விட்டுக்கொடுக்கச் சொல்லிக் கேக்கற வரைக்கும் அதை நம்பியிருப்பேனா?

உலகத்துல ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட கேக்கக்கூடாததை எங்கிட்ட கேட்டுடுச்சு. அன்னிக்குத்தான் வாழ்க்கையிலயே நான் தூங்காத முழு ராத்திரி. மூத்த பையன் விஷால் கேன்சர்ல இறந்த துக்கத்துல இருந்து முழுசா மீண்டுவராத நிலையில எங்கிட்ட வந்து இப்படிக் கேட்டாங்க. விஷால் விஷயத்துலகூட அவருக்கு எங்க இருந்திச்சு அக்கறை? உடலை அடக்கம் பண்ணிட்டு வந்ததோட சரி. மறுநாள் அந்தப் பொண்ணோட கிளம்பிட்டார். ‘பையன் போயிட்டானே’ங்கிற கவலையெல்லாம் நயன்தாரா வந்ததும் ரெண்டாந்தரமாப் போயிடுச்சு. மொத்தத்துல ‘அக்கா’ன்னு சொல்லி வீட்டுக்குள்ள வந்தவங்களை நம்புனதால நான் இப்ப சக்களத்தி சண்டை போட வேண்டியிருக்கு.

வர்றபோதெல்லாம் சாக்லெட், டிரஸ்னு வாங்கிட்டு வந்ததால பசங்களும் ‘ஆன்ட்டி’ன்னு பிரியமா பழகுனாங்க. எல்லாம் வேற நோக்கம்ங்கிறது அந்தப் பிஞ்சுகளுக்கே இன்னிக்குத் தெரிஞ்சிடுச்சு. பேப்பர்ல அந்தப் பொண்ணு போட்டோவைப் பாத்தா கிழிச்சிப் போடுறாங்க. டிவியில அது நடிக்கிற படம் வந்தா ஆஃப் பண்ணிடுறாங்க. ராத்திரி தூக்கத்துல பாதியில எழுந்து, ‘அப்பா எங்கம்மா’ன்னு கேக்குறான் கடைசிப்பையன் ஆதித். மனரீதியா அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க.

இப்படி என் பிள்ளைங்களுக்கும் எனக்கும் மன உளைச்சலைத் தந்துட்டு அவரை எங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டுப் போய் சந்தோஷமா வாழ நினைக்குது அந்தப் பொண்ணு. இன்னொருத்தி புருஷனை நினைக்கிறதே தப்புங்கிற கலாசாரம் நம்மது. இந்தப் பொண்ணு மூணு பசங்களுக்கு அப்பாவான ஒருத்தர் வேணும்னு அடம்பிடிக்குது. இந்த லட்சணத்துல இவங்களுக்கு ‘சிறந்த ஜோடி’ன்னு ஆந்திரால ஒரு பத்திரிகை அவார்டு கொடுத்திருக்கு. என்ன அர்த்தம் எடுத்துக்கிடறதோ தெரியலை.

ஆனா, நான் விட்டுக் கொடுக்க முடியுமா? என் புருஷன் எனக்கு மட்டும்தான். இதுல எந்த சமரசத்துக்கும் இடமில்லை. ரெண்டு பேரும் கோர்ட்டுக்கு வரட்டும். இன்னும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. அவங்ககிட்ட பேசிக்கிடுறேன்’’ என்கிறார் ரமலத்.

பிரபுதேவாவும் நயன்தாராவும் என்ன சொல்கிறார்கள்?

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் அவர்கள் சார்பாகக் கிடைத்த பதில்... ‘கோர்ட்டுக்கு வரும்போது சொல்றோம்!’

- அய்யனார் ராஜன்