முதுமையை மறைக்க புதிய சிகிச்சை அரை மணி நேரத்தில் இளமை திரும்புது!முதுமைத்தோற்றத்தை மறைக்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் லேட்டஸ்ட் ‘மைக்ரோ மீசோ தெரபி’! தொய்வடைந்த கன்னங்கள்... வயதாவதைக் காட்டிக்கொடுக்கிற உதடுகள் மற்றும் புருவங்கள்... இப்படி முதுமையின் அடையாளங்களைத் தற்காலிகமாக மறைக்க உதவுகிற அந்த லேட்டஸ்ட் அழகு சிகிச்சை இப்போது சென்னையிலும்!

அழகுக்கலை நிபுணர் வசுந்தராவின் ‘தி விசிபிள் டிஃபரன்ஸ்’ அழகு மையத்தில் மைக்ரோ மீசோ தெரபியை நேரடியாக செய்து காட்ட வந்திருந்தார் ‘கிளாப்’ என்கிற ஜெர்மன் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கிஷோர். அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் இருந்து...

‘‘இளமையைத் தக்கவைக்கிற பெரும்பாலான ட்ரீட்மென்ட்ஸ் வலி நிறைஞ்சது. நிறைய நேரமும் எடுக்கும். ஆனா, இந்த சிகிச்சையில வலியே கிடையாது. பக்க விளைவுகளும் இல்லை. அவசரமா ஒரு போட்டோ செஷன் எடுக்க வேண்டியிருக்கு... இல்ல, திடீர்னு ஒரு ஃபங்ஷன் போகணும்... முகம் சரியில்லைன்னு நினைக்கிறவங்களை அரை மணி நேரத்துல ஏழெட்டு வயசு குறைஞ்ச லுக்குக்கு திரும்ப வைக்கிற மேஜிக் இது. ஹாலிவுட், பாலிவுட்ல இப்ப இதுதான் ஹாட்! நடிகர் ஜான் ஆபிரஹாம்கூட தாடைப்பகுதிக்கு மட்டும் அடிக்கடி இதை செய்துக்கிறார்...’’ என்கிற கிஷோர், இந்த சிகிச்சையை முகம் முழுவதற்குமோ, அல்லது பார்ட் பார்ட்டாகவோகூட செய்துகொள்ளலாம் என்கிறார்.

புருவங்களையோ, உதடுகளையோ தூக்கி நிறுத்த, தொய்வடைந்த தாடைப்பகுதியைத் தூக்கிக்காட்ட என எதற்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிறார். மைக்ரோ நீடில் எனப்படுகிற நுண்ணிய ஊசிகளைக் கொண்டு செய்யப்பட்டாலும், இது துளியும் வலி தராத சிகிச்சை என்பது ஹைலைட்! ‘நோ பெயின் நோ கெயின்’ என யார் சொன்னது?

கையடக்க குட்டி மெஷினை சிகிச்சை தேவைப்படுகிற இடத்தில் வைத்து ஆபரேட் செய்கிறார் கிஷோர். அப்படிச் செய்கிறபோது, சருமத்தின் இளமைக்கும் பூரிப்புக்கும் காரணமான கொலாஜன் உடனடியாக அந்த இடத்துக்கு விரையுமாம். கொலாஜனே இல்லாத இடத்திலும், அது புதிதாக உற்பத்தி செய்யப்படுமாம். தவிர செயற்கையாகவும் ஊசி வழியே ஹயலாரோன் மற்றும் கொலாஜன் சேர்த்து சருமத்துக்குள் செலுத்தப்படுவதால், உடனடியாக முதுமையை உதிர்த்து, இளமைக்கு மாறுகிறது முகம்.

சரும நிறம் கூடுவதும் மென்மையாவதும் சிகிச்சையில் கிடைக்கிற போனஸ் விஷயங்கள்! ‘‘புருவங்களுக்கும் உதடுகளுக்கும் பத்து நிமிஷம் போதும். முகம் முழுக்க பண்றதுக்கு அரை மணி நேரம். அவசரத் தேவைக்கான சிகிச்சைன்னாலும், அடிக்கடி பண்ணிக்கிட்டா, நிரந்தரமான இளமையைத் தக்க வச்சுக்கவும் முடியும்’’ என்கிறார் கிஷோர். இளமை இதோ... இதோ..!

- ஆர்.வைதேகி