1000 ஆண்டு அதிசயம்மாலிக், சுல்தான், கோரி போன்ற மன்னர்கள் நிகழ்த்திய படையெடுப்புகள், கொள்ளைச் சம்பவங்களால் வட இந் தியாவில் எத்தனையோ பெருங்கோயில்கள் சுவடில்லாமல் அழிந்துபோய்விட்டன. அதே மாலிக்குகளும் நவாப்களும்  சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோயிலை சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் பீரங்கிகளை  வைத்து தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கு மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோயில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோயிலாகவே இருக்கிறது.

'பெரிதினும் பெரிது...’ - இதுதான் ராஜராஜனின் கொள்கை. பெரிய நாடு, பெரிய வெற்றிகள், பெரிய கோயில்...  மூலவராக உள்ள பெருவுடையார் திருமேனி 13 அடி உயரமும், ஆவுடையார் 54 அடி சுற்றளவும் கொண்டது. இந் தியாவில் உள்ள பழமையான லிங்கங்களில் மிகப்பெரியவர் இவர்தான்.

இங்குள்ள துவாரபாலகர் சிற்பங்கள் உலகிலேயே மிகப்பெரியவை. ராஜராஜன் திருவாயில், முகமண்டப வாயில்  மற்றும் விமான மேல்தளத்தின் உள்வாயிலில் அழகு மிளிர நிறுவப்பட்டுள்ள, 18 அடி உயரமுள்ள இந்த துவாரபாலகர்கள் மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறார்கள். காலடியில் கிடக்கும் பாம்பு ஒரு யானையை விழுங்கு கிறது. மிகப்பெரும் விலங்கான யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது என்றால் அதற்கு எவ்வளவு வலிமை வேண்டும்!  அவ்வளவு சக்தி மிகுந்த பாம்பையே தனது காலடியில் போட்டு நசுக்கிக்கொண்டிருக்கும் துவாரபாலகர்  சாதாரணமானவரா!

இவ்வளவு பேராற்றல் படைத்த துவாரபாலகரே வானை நோக்கி கையை உயர்த்தி, ‘எல்லாம்  அவனே’ என்று பெருவியப்பை வெளிப்படுத்துகிறார் என்றால், அந்த ஈசனின் சக்தியை எதனால் அளவிடுவது?  ‘இறைவன் எல்லா சக்திகளுக்கும் மேலான, ஈடு இணையற்றவன்’ என்பதை உணர்த்தவே இவ்வடிவில் து வாரபாலகர்களை படைத்தான் ராஜராஜன்.

216 அடி உயரமுள்ள விமானம். அதன் தென்புறத்தை உற்று நோக்கினால் சற்று புடைப்பான பகுதியொன்றை  பார்க்கலாம். ராஜராஜன், ‘மகாமேரு’ என்ற பொன்மலையின் வடிவமாகவே இக்கோயிலை வார்த்தான் என்பதை உ ண்மையாக்கும் வகையில், அந்த மகாமேருவின் வடிவத்தையே விமானத்தில் தனி புடைப்புச் சிற்பத்தொகுப்பாக வடி த்து வைத்திருக்கிறான்.

திருமதிலோடு இணைந்த திருச்சுற்று மாளிகை நாற்புறமும் சூழ்ந்து நிற்க, நடுவே கம்பீரமான பெருங்கோயில். வடபுறம்,  விமானத்துக்கு அருகே சண்டீசர் திருக்கோயில். இதுதவிர, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் திருவாயில்கள். இதுவே  ராஜராஜன் காலத்து பெரிய கோயிலின் அமைப்பு. மற்ற பரிவார தெய்வங்கள் அனைத்தும் திருச்சுற்று மாளிகையில் தான் இடம் பெற்றன. பிராகாரத்தில் உள்ள பிற கோயில்கள் அனைத்தும் பிற்காலத்தில் எழுப்பப்பட்டவை.

நீண்ட திருச்சுற்று மாளிகை இரண்டு தளங்களைக் கொண்டது. இப்போது ஒரு தளத்தின் கூரை மட்டுமே இருக்கிறது.  மேல்தளக்கூரை அழிந்து போயிருக்கலாம். இத்திருச்சுற்று மாளிகை மற்றும் அதோடு இணைந்த ராஜராஜன் திரு வாயிலில் 36 பரிவார ஆலயங்கள் இருந்துள்ளன. இவற்றில் 7 ஆலயங்களுக்கு விமான அமைப்பு உண்டு. அவற்றில்  அக்னி, வாயு, வருணன், ஈசானன் திருமேனிகள் தவிர மற்றவை அழிந்து விட்டன. 7 பரிவார தேவதைகளில்  வாராஹி, பைரவர் தவிர மற்ற திருமேனிகளின் நிலை தெரியவில்லை.

‘ராஜராஜன் போருக்குப் புறப்படும் முன்பாக வாராஹிக்கு நரபலி கொடுப்பார்’ என்றொரு புனைகதை நிலவுகிறது.  இது அப்பட்டமான பொய். சோழர் வரலாற்றில் நரபலி கொடுத்ததற்கான சிறிய சான்று கூட எங்கும் கிடைக்கவில்லை. திருச்சுற்று மாளிகையின் வடக்குப்பகுதியில் அம்மனுக்கென தனித்த ஒரு கோயில் இருந்துள்ளது. அக்கோயில்  சூறையாடலுக்கு உட்பட்டு அழிந்திருக்கலாம். ராஜராஜன் காலத்துக்கு முன் வரை அம்மனுக்குத் தனித்து கோவில்  அமைக்கும் வழக்கம் இல்லை. அந்த மரபை முதன்முதலில் தொடங்கி வைத்தவன் அவன்தான்!

இப்போது நந்தி மண்டபத்துக்கு வடபுறம் காணப்படும் அம்மன் கோயில் 700 ஆண்டுகளுக்கு முன் ஒரு பாண்டிய  மன்னனால் எடுக்கப்பட்டது. ஆனால், அம்மன்னனின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இக்கோயிலும் சோழர்  கலைக்கு நிகராக எழிலோடு உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 7 அடி உயரமுள்ள அம்மனுக்கு பாண்டியன் சூட்டிய  பெயர், ‘உலகு முழுதும் உடைய நாச்சியார்’.

விமானத்தில் மூலவருக்கு முன்பான மகாமண்டபம், முகமண்டபம் இரண்டும் பச்சையா நாயக்கர் கட்டியது. இவர்,  1541-ல் அச்சுத தேவராயரின் அதிகாரியாகப் பணியாற்றியவர். வடமேற்கில் உள்ள சுப்ரமணியர் ஆலயம் விஜயநகரப்  பேரரசு காலத்தில் எடுக்கப்பட்டது. பெரிய கோயிலில் உள்ள சிற்பக்களஞ்சியங்களில் இது சிறப்பிடம் பெறுகிறது.  தேர் ஊர்ந்து செல்வது போன்ற வடிவிலான இக்கோயில், பெரிய கோயிலின் கம்பீரத்தைக் கூட்டுகிறது.  

12 அடி உயர நந்திச் சிற்பம் பற்றி சுவாரஸ்யமான கட்டுக்கதை உண்டு. ராஜராஜன் செய்த நந்தியில் ஒரு தேரைப்பூச்சி  இருந்ததால் அதைத் தவிர்த்துவிட்டு இந்த புதிய நந்தியை உருவாக்கியதாகவும், இந்த நந்தி நாள்தோறும் வளர்ந்ததாக வும், ஒரு ஆணியை அதன் தலையில் அடித்து, வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதாகவும் சொல்வார்கள். இதில் எதுவுமே  உண்மை இல்லை!

இந்த நந்தி சிற்பமும் மண்டபமும் நாயக்க மன்னர்கள் அளித்த கொடை. செவ்வப்ப நாயக்கரும் அச்சுதப்ப நாயக்கரும்  பெரியகோயிலை திருப்பணி செய்த நேரத்தில் இந்த நந்தியுருவம் நிறுவப்பட்டிருக்கலாம். பெருவுடையாருக்கு  இணையான அளவில் ராஜராஜன் வடித்த நந்தி இல்லை என்ற எண்ணத்தில் நாயக்கர்கள் இந்த நந்தியை நிறுவியுள் ளார்கள். ராஜராஜன் நிறுவிய நந்தி, இப்போது சற்று சிதைந்த நிலையில் வாராஹி அம்மன் கோவிலுக்கு அருகில்  வைக்கப்பட்டுள்ளது.

இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் போற்றி வளர்த்த பெருமகனான ராஜராஜனின் மரணம் பற்றியும் பல  புனைகதைகள் உண்டு. அதை அடுத்த வாரம் அலசுவோம்.

- குடவாயில் பாலசுப்பிரமணியன்