‘‘மங்களம்! இன்னைக்கு ராத்திரி பன்னண்டு மணிக்கு ஒரு கிராக்கி வருது. ‘ஜெயில்லேர்ந்து இன்னைக்குத் திரும்பி வந்திருக்குமே, அந்தப் பொண்ணு மங்களம்தான் வேணும்’னு அந்தாளு சொன்னாரு. ஒருக்கா, உன்னோட கேஸ் நடந்துக்கிட்டு இருந்தப்ப கோர்ட்டுக்கு வந்து போயிக்கிட்டு இருந்த ஆளோ என்னமோ! கரெக்ட்டா நாளை எண்ணிட்டு வந்துட்டான், ரேட் பேச!’’
அன்றிரவு அந்த ஆள் வந்தான். பம்மென இருந்த தலைமுடி பார்த்த மாத்திரத்திலேயே செயற்கை என்பது தெரிந்தது. பெரிய கடா மீசையும் செயற்கைதான் என்று அவளுக்கு உடனேயே தெரிந்து போயிற்று. எத்தனை ஆண்களைப் பார்த்திருப்பாள்!
அவனோடு நெருக்கமாக இருந்த ஒருகணத்தில் பொய் முடி நழுவ, துணிச்சலுடன் அந்த மீசையைப் பிடித்து இழுத்தவள் அதிர்ந்தாள்.
‘‘அடப்பாவி! நீயா? எனக்கு ரெண்டு வாரம் ஜெயில்னு தண்டனை விதிச்சதோட, இந்த சமுதாயத்தையே நாங்க கெடுக்குறோம்னு வேற சொன்னியேய்யா! வீட்டுச்சாப்பாடு போர் அடிச்சு, ஓட்டல் சாப்பாடு எப்பிடி ருசிக்குதுன்னு பாக்குறதுக்கு வர்ற உங்களாலதானேய்யா நிறையப் பொண்ணுங்க சீரழிஞ்சு போகுதுங்க?
எந்திரிய்யா! ஜட்ஜாம் ஜட்ஜு! மொகரையப் பாரு! எல்லாரையும் கூட்டி நான் உன்னை அவமானப்படுத்துறதுக்கு முந்தி ஓடிடு!’’
- ஜோதிர்லதா கிரிஜா