11 வது படிக்கிறப்பவே காதலிக்க ஆரம்பிச்சுட்டான்...



- மை.பாரதிராஜா

‘‘சொந்த ஊர் விழுப்புரம். என் பேரு மொரீன் கன்சால்வேஸ். இதுல ‘கன்சால்வேஸ்’ எங்க குடும்பப் பேரு. அப்பா வில்ஃப்ரட் மார்ட்டின், ராணுவத்துல இருந்தாரு. அம்மா, ஹவுஸ் ஒய்ஃப். ஒரு தங்கச்சி, ரெண்டு தம்பிங்க...’’ நிதானமாக பேசத் தொடங்குகிறார் மொரீன். எடிட்டர் + டைரக்டர் ஆண்டனியின் அம்மா. 

‘‘அப்பா மிலிட்டரில இருந்ததால பங்ச்சுவாலிட்டில கண்டிப்பானவர். சந்தோஷமா வாழ்ந்தோம். இதுக்கு வேட்டு வைச்சது அப்பாவோட ரிட்டயர்மென்ட். அவர் வருமானத்தை நம்பித்தான் மொத்த குடும்பமும் இருந்தது. அதனால வேற வேலை தேட ஆரம்பிச்சார். எங்கயும் கிடைக்கலை. நல்ல வீட்டுல இருந்த நாங்க குடிசைக்கு மாறினோம். தங்கச்சி, தம்பிங்க, நானு... இப்படி நாலு பேரும் கான்வென்ட்டுல படிச்சதால ஸ்கூல் ஃபீசுக்கு அப்பா நிறைய கடன் வாங்கினார். ஒருவழியா அவருக்கு ஆர்பிஎஃப்-ல வேலை கிடைச்சது.

சம்பளம் கம்மிதான். ஆனா, வாங்கினதுமே அதை அப்படியே கொண்டு வந்து அம்மாகிட்ட கொடுத்துடுவார். வீட்டு நிர்வாகம் முழுக்க முழுக்க அவங்கதான். படிச்சு முடிச்சதும் கான்வென்ட்டுல டீச்சரா வேலைக்கு சேர்ந்தேன். அப்பா வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைச்சோம்...’’ என்று சொல்லும் மொரீனுக்கு இந்த நேரத்தில்தான் ருடோல்ஃப் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

‘‘எங்கூட வேலை பார்த்த ரோஸ்லினோட சொந்தக்காரர்தான் ருடோல்ஃப். சாதாரண பழக்கம் நட்பாகி காதலா மலர்ந்தது. இவர் ஸ்டீம் என்ஜின் டிரைவர். அதே டிரெயின்ல ருடோல்ஃப் அப்பா, மெயின் டிரைவர். எங்க காதலுக்கு ரெண்டு பேர் வீட்லயும் பச்சைக்கொடி காட்டினாங்க. 1971ல எங்க திருமணம் நடந்தது. எங்க மகிழ்ச்சிக்கு அடையாளமா ரெண்டு வருஷம் கழிச்சு லெவலின் பிறந்தான்...’’ என்று நிறுத்தியவர், சட்டென்று சிரித்தார்.

‘‘உங்களுக்கு லெவலின்னு சொன்னா புரியாதுல்ல... ஆண்டனியோட முழுப் பேரு லெவலின் ஆண்டனி கன்சால்வேஸ். நாங்க லெவலின்னுதான் கூப்பிடுவோம். அவன் பிறந்தப்ப விழுப்புரத்துல பயங்கரமான புயல். பிரசவ வலி ஏற்பட்டதும் எங்கம்மா என்னை ஆட்டோவுல ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனாங்க. காத்து சத்தம் ஈரக்குலைய அறுக்கற மாதிரி ஒலிச்சது. என் வாழ்க்கைல மறக்கவே முடியாத நாள் அது.

ஆஸ்பிட்டல்ல லெவலின் பிறந்ததும் அழவே இல்ல. பதறிப் போய் ஜெபிக்க ஆரம்பிச்சோம். அதுக்குப் பிறகுதான் அழுதான்...’’ என்று அசைபோட்ட மொரீன் இதன் பிறகு சென்னை வந்திருக்கிறார். ‘‘லெவலின் பிறந்த ஒரு வருஷம் கழிச்சு என் கணவருக்கு ப்ரொமோஷன் கிடைச்சது. அயனாவரத்துல குடியேறினோம். ரயில்வே காலனி. வாடகை பிரச்னை இல்ல. அங்கதான் பையன் ஆங்லோவும் மகள் பெலின்டாவும் பிறந்தாங்க. அவர் காலைல வேலைக்குப் போனார்னா நைட்டுதான் வருவார்.

அதனால தம்பி, தங்கையை எழுப்பி, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போறதுனு எல்லாத்தையும் லெவலின் பொறுப்பா கவனிச்சுக்கிட்டான். என் வீட்டுக்காரர் ரொம்ப ரொம்ப கண்டிப்பானவர். ஸ்கூல் நாலரைக்கு விட்டதுனா நாலே முக்காலுக்குள்ள வீட்டுக்கு வந்துடணும். அஞ்சுக்கு விளையாடப் போகலாம். ஆனா, டாண்னு ஆறு மணிக்கு வீட்ல இருக்கணும். ஒரு நிமிஷம் லேட்டானா கூட சிமென்ட் தரைல முட்டி போடச் சொல்லி, இரண்டு கையையும் விரிக்கவிட்டு, ஒவ்வொரு கைலயும் வெயிட்டான கல்லை வைச்சுடுவார்.

வருஷத்துக்கு ஒருமுறை வேளாங்கண்ணி போயிட்டு வருவோம். தீபாவளி முடிஞ்சதும் கடைகள்ல கூட்டம் குறைவா இருக்கும். அப்ப கிறிஸ்துமஸுக்கு துணி எடுப்போம். பசங்களுக்கு மட்டும் வெளில கொடுப்போம். மத்தவங்களுக்கு நானே தைச்சுடுவேன். எப்பவும் மூணு செட்தான். வருஷம் பூரா இதையேதான் போட்டுக்கணும். பசங்க ஆறாவது படிக்கிறப்ப திரும்பவும் அவருக்கு பதவி உயர்வு கிடைச்சது. பெரம்பூர் லோகோவுக்கு வந்தோம்.

அங்க டபுள் பெட்ரூம்...’’ என்று சொன்ன மொரீன், தமிழில் ஆண்டனி நிறைய மதிப்பெண் எடுப்பார் என பெருமைப்படுகிறார். ‘‘பொதுவா ஆங்கிலோ இந்தியன் பசங்க செகண்ட் லேங்வேஜ் தமிழ் எடுத்தா 10வது தாண்ட மாட்டாங்க. லெவலின்... வேண்டாம், இனிமே நானும் ஆண்டனினே சொல்றேன்... இதுக்கு நேர் எதிர். தமிழ்ல நிறைய மார்க் வாங்குவான். 10வது அப்ப இங்கிலீஷ்ல 62தான் எடுத்தான். தமிழ்ல? 83 மார்க்! என் பேச்சை தட்டவே மாட்டான். காய்கறி நறுக்கித் தருவான். மார்க்கெட் போய் வருவான்.

நான் அவனை அடிக்கவே மாட்டேன். அவன் அப்பா அவனை அடிக்காம இருக்கவே மாட்டார்! ஒரு தடவை தெருவுலேந்து நாய்க்குட்டியை தூக்கிட்டு வந்து, ‘அப்பா... இனிமே இதை நான் வளர்க்கறேன்’னு சொன்னான். அவ்வளவுதான். பிரம்பை எடுத்து விளாசிட்டார். அதுக்கு அப்புறம் அவருக்கும் அந்த குட்டி மேல இரக்கம் வந்து சம்மதிச்சார்.

ஆனா, ஒண்ணு. பசங்க மேல அவருக்கு பாசம் அதிகம். அதை வெளில காட்டிக்க மாட்டார். பத்து ரூபா கடன் வாங்கக் கூட அவருக்குப் பிடிக்காது...’’ என்றவர், ‘‘இப்பதான் ரொமான்ஸ் எபிசோட் வருது...’’ கண்ணைச் சிமிட்டி விட்டு தொடர்ந்தார். ‘‘11வது படிக்கிறப்ப தன் கூட படிச்ச சப்ரினாவை லவ் பண்ண ஆரம்பிச்சான். அந்தப் பொண்ணோட வீடு அரக்கோணத்துல.

தினமும் டிரெயின்ல சென்னைக்கு வந்து படிச்சுட்டு போவா. சப்ரினாவுக்கும் இவன் மேல லவ். ரெண்டு பேரும் மாறி மாறி லவ் லெட்டர் எழுத ஆரம்பிச்சிருக்காங்க. தனக்கு சப்ரினா எழுதின லெட்டர்ஸை எல்லாம் தன் மேஜை டிராயர்ல ஆண்டனி வைச்சிருந்தான். ஒருநாள் அவங்கப்பா அதை பார்த்துட்டார். இந்த விஷயம் ஆண்டனிக்கு தெரிஞ்சுடுச்சு. நிச்சயம் அடிப்பார்னு வீட்டை விட்டே போயிட்டான்.

நைட்டு பசி எடுத்ததும் திரும்பி வந்தான். ‘சாப்பிட்டு தூங்கு’னு சொன்னார். சரி... அப்பா நம்மை எதுவும் செய்ய மாட்டார்னு இவனும் வயிறு நிறைய சாப்பிட்டு தூங்கினான். காலைல ஆண்டனி எழுந்ததுமே அவர் பிரம்பை கைல எடுத்து பின்னியெடுத்தார். இந்த இடத்துல இதை சொன்னாதான் பொருத்தமா இருக்கும். அந்த சப்ரினாதான் இப்ப ஆண்டனியோட மனைவி!’’ கடகடவென்று சிரித்த மொரீன், திரும்பவும் ஃப்ளாஷ்பேக்குக்கு சென்றார்.

‘‘சப்ரினா பக்கம் போகாம படிப்புல கவனம் செலுத்தினான். எம்சிசில பிஏ முடிச்சதும் அனிமேஷன் படிக்க விரும்பினான். அவன் அப்பாவை சமாதானப்படுத்தி பணம் வாங்கிக் கொடுத்தேன். நாலு மாச கோர்ஸை இரண்டே மாசத்துல முடிச்சுட்டான். இந்த நேரத்துல அவனோட காலேஜ் ஃப்ரெண்ட் மூலமா டாக்குமென்டரி ஃபிலிம் மேக்கர் அனலாக் அறிமுகம் கிடைச்சது. எடிட்டிங் ஆசையை ஆண்டனிக்குள்ள தூண்டிவிட்டது அவர்தான். ஒரு நிறுவனத்துல அவனை அசிஸ்டென்ட்டா சேர்க்கச் சொல்லி சிபாரிசு செஞ்சாரு.

ஆனா, என் பையன் தொழிலை ஆர்வமா கத்துக்கறான்னு தெரிஞ்சு வேலையை விட்டு நீக்கிட்டாங்க. அழுதுகிட்டே அனலாக்கோட நண்பரான செந்தில்கிட்ட விஷயத்தை சொல்லியிருக்கான். ‘கவலைப்படாத’னு தட்டிக் கொடுத்து எடிட் பாயின்ட் அருண்மூர்த்திகிட்ட அனுப்பினாரு. அங்க போனதும் வீட்டையே மறந்துட்டான். வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருப்பான். ரூ.2,500 சம்பளம். ஒரு மணி நேரத்துக்கு ரூ.75 பேட்டா. இதுதான் இவன்கிட்ட சொல்லப்பட்டது.

ஆனா, ஆண்டனியோட வேலையைப் பார்த்துட்டு ஒரே மாசத்துல அவன் சம்பளத்தை ரூ.45 ஆயிரமா உயர்த்தினாங்க. படிக்க வைச்சதைத் தவிர வேற எந்த வழிகாட்டலையும் நாங்க செய்யலை. அவனாதான் இந்தளவுக்கு முன்னேறியிருக்கான். சம்பாதிக்க ஆரம்பிச்சதும் பொறுப்பா சப்ரினாவை திருமணம் செஞ்சுகிட்டான். இப்ப எனக்கு இன்னொரு மகளா அவ இருக்கா.

ஆங்கிலோ இந்தியன் வழக்கப்படி தனிக்குடித்தனம் வைச்சுட்டோம். எங்க பேத்தி ஜோயி அதிகம் பேச மாட்டா. இப்ப எட்டாவது படிக்கறா. எல்லா விஷயத்துலயும் ஆண்டனி வேகமா முடிவெடுப்பான். அதனாலயே இந்தத் துறை அவனுக்கு பொருந்தியிருக்கு...’’ சொல்லி முடித்த மொரீனின் முகத்தில் பெருமை சுடர்விட்டது.                       

கொரியர் பாய்

கல்லூரி முடித்த புதிதில் கொரியர் டெலிவரி பாயாக ஆண்டனி இருந்திருக்கிறார். சம்பளம் ரூ.800. முதல் ஊதியத்தை அப்படியே தன் அப்பாவிடம் கொடுத்திருக்கிறார். ‘ரொம்ப சம்பாதிச்சிட்டோம்னு பெருமை பட்டுக்காத’ என்று சொன்ன ருடோல்ஃப், அந்தப் பணத்தை இன்றுவரை செலவழிக்காமல் பாதுகாக்கிறார்.

மசால் வடை

காலேஜ் படிக்கும் போது ஆண்டனியின் பாக்கெட் மணி வெறும் ஐந்து ரூபாய். சென்ட்ரலில் இருந்து தாம்பரம் செல்லும் வழியில் - சப்வே ஒன்றில் சூடான மசால் வடை கடை இருக்குமாம். ஏக்கத்துடன் நாள்தோறும் அதை பார்ப்பாராம். எடிட் பாயின் ட்டில் முதல் மாத சம்பளமாக ரூ.45 ஆயிரம் கிடைத்ததும் அந்த மசால் வடை கடைக்கு விரைந்திருக்கிறார். ஆசை தீர 15 வடைகளைச் சாப்பிட்டபிறகே ஆண்டுக்கணக்கான ஏக்கம் தீர்ந்திருக்கிறது!

ஷூட்டிங் டூ எடிட்டர்

முதன் முதலில் பார்த்திபன் - ரோஜா நடித்த ‘சரிகமபதநீ’ படப்பிடிப்பை ஆண்டனி வேடிக்கை பார்த்திருக்கிறார். எடிட்டிங் பயிற்சியாளராக இருந்தபோது விளம்பரப் பட கிளையன்ட்ஸ் அறிமுகம் கிடைத்திருக்கிறது. எடிட் பாயின்ட்டுக்குப் பிறகு ஏவி.எம்.மில் நான்கு வருடம் பணிபுரிந்திருக்கிறார். ராஜீவ்மேனனின் ‘மின்சாரக் கனவு’ படத்துக்கு டிரெய்லர் கட் செய்தது இவர்தான். அப்போதுதான் கவுதம் வாசுதேவ் மேனன் பழக்கம்.

‘காக்க காக்க’ படத்துக்கு முதலில் மும்பையைச் சேர்ந்த எடிட்டர் ஒருவர்தான் ஒப்பந்தமாகி இருந்தார். அப்படத்தின் ஆடியோ ஃபங்ஷன் அன்று அவசரமாக பாடல் ஒன்றை எடிட் செய்ய வேண்டும் என கவுதம் கேட்க... கதை, ஸ்கிரிப்ட் எதுவும் தெரியாமல் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி...’ பாடலை ஆல்பம் போல கட் செய்து கொடுத்திருக்கிறார். அசந்துபோன கவுதம், ‘முழுப் படத்துக்கும் நீதான் எடிட்டர்’ என்று அறிவித்துவிட்டார்! ‘காக்க காக்க’க்கு முன் ‘நிலைக்கண்ணாடி’ படத்தை ஆண்டனி எடிட் செய்திருக்கிறார்.

லவ் சீக்ரெட்

கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்ததும் பள்ளித்தோழி ப்ளஸ் காதலியான சப்ரினாவிடம், ‘மூணு வருஷத்துக்குப் பிறகு உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன். அதுவரை நாம காதலிக்கலாமா?’ என பொக்கே கொடுத்து கேட்டிருக்கிறார் ஆண்டனி. ‘அப்பாகிட்ட வந்து பேசுங்க’ என சப்ரினா சொல்ல, அந்த பொக்கேயுடன் தன் வருங்கால மாமனாரை அன்றே சந்தித்து ‘உங்க பொண்ணை லவ் பண்ணப் போறேன்’ என தில்லாக சொல்லியிருக்கிறார். அந்த நேர்மை பிடித்துவிட, உடனே சப்ரினாவின் அப்பா க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

நள மகாராஜா

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க ஆண்டனி கேரம் ஆடுகிறார். முருங்கைக்காய்/ மாங்காய் சாம்பார், இறால் பிரியாணி, சிக்கன் குழம்பு என வெஜ், நான்வெஜ் சமைப்பதில் இவர் கில்லாடி. முதன்முதலில் வாங்கியது யமஹா. இப்போது Harley Davidson பைக் வைத்திருக்கிறார். அலுவலகத்தில் வண்ண மீன்களையும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளையும் வளர்க்கிறார்.