ஓர் இந்தியனின் கனவு!



-ரோனி

மண்ணில் மழைத்துளி விழுமா என்ற கவலையை புறந்தள்ளிவிட்டு பிரேக்கிங் நியூஸை இந்தியர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது - அந்த மிராக்கிள் நடந்தது. ஒன்றல்ல இரண்டல்ல... மொத்தம் 104 செயற்கைக்கோள்களை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு அனுப்பி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது, இஸ்ரோ.

இதில் 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுக்கும், 3 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கும் மற்றவை நெதர்லாந்து, கஜகஸ்தான், இஸ்‌ரேல், ஸ்விட்சர்லாந்து, அரபு நாடுகளுக்கும் சொந்தம். 2014ம் ஆண்டு ஒரே நேரத்தில் 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியதே நேற்றைய சாதனையாக இருந்தது. அதை இன்று இஸ்ரோ சிம்பிளாக நொறுக்கிவிட்டது. 

இந்த கனவின் விதையை 1962ம் ஆண்டு தூவியவர், அகமதாபாத்தின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி கமிட்டி(NCSR)யின் விஞ்ஞானியான விக்ரம் சாராபாய். அக்கமிட்டியின் சந்திப்புகளில் டாக்டர் பிரஃபுல் பாவ்ஸர், டாக்டர் சத்யபிரகாஷ், பேராசிரியர் யுடி தேசாய் ஆகியோரும் கலந்துகொண்டனர். அவர்களிடம் நாசா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு திருவனந்தபுரத்தில் தும்பா ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முயற்சியை விக்ரம் சாராபாய் முன்மொழிந்தார்.

1963ம் ஆண்டு நவம்பர் 21 அன்று, அமெரிக்காவின் 725 கிலோ நைக் அபாச்சி ராக்கெட்டை ஏவுவதற்கு பேராசிரியர் பாவ்ஸர், டாக்டர் மூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்று வெற்றிகரமாக செயல்படுத்தினர். இந்நிகழ்வுதான் இஸ்‌ரோவுக்கு பிள்ளையார் சுழி. பிற நாட்டின் தோள்களிலேயே பயணித்த இஸ்‌ரோ, 1967 நவம்பர் 20 அன்று ரோஹிணி RH-75 என்ற உள்நாட்டு ராக்கெட்டை தயாரித்து தும்பா ஏவுதளத்திலிருந்து ஏவி, எங்களாலும் தனித்து செயல்பட முடியும் என நிரூபித்தது.

1999 முதல் இதுவரை இந்தியா அனுப்பியுள்ள வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 180. இதில் அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் மட்டுமே 114. 1980ல் 6வது நாடாக ராக்கெட்டை வானில் ஏவிய இந்தியா, இன்று குறைவான விலையில் லைட்வெயிட் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்புவதில் தன்னிகரற்றுத் திகழ்கிறது. செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் நாசா செய்யும் செலவில் 10% மட்டுமே பயன்படுத்தி இதை சாதித்துள்ளதுதான் முக்கியமானது!