COFFEE TABLE



சைலன்ட் கார்னர்

உலகின் நாக்கு
ம. நவீன்
[கடற்குதிரை, 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. விலை ரூ.100/- தொடர்புக்கு: 94428 90626]. நவீனின் இறுக்கமும், பொருளும் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு. தீவிர தமிழ் உணர்வும், அக்கறையும் தமிழகத்துக்கு வெளியேதான் வாழும் என்பார்கள். அது நவீன் விஷயத்தில் நடந்திருக்கிறது. தமிழ் இலக்கியப்பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளை எடுத்துக் கொண்டு அவர்களின் பக்குவச் சிறப்பை சொல்லியிருக்கிறார். அலுப்பூட்டும் விவாதங்கள் இல்லை.

ஆராதிப்பும் இல்லை. பொருள் தரும் விசாரணைகள் மட்டுமே நடக்கிறது. கச்சிதமான கூரிய வாளினைப் போன்ற உரைநடைதான் நவீனின் அடையாளம். இதுமாதிரி சமயங்களில் மேதைமைத்தனம் எட்டிப் பார்த்துவிடுவது நடந்துவிடும். இதில் இல்லை. கையில் எடுத்துவிட்டால் விடாமல் படிக்க முடிகிற நடை. இலக்கியப் பாங்கை நுட்பமாக எடுத்துரைப்பதில் நவீன், நவீனமானவரே என்பதை முரசறைந்து சொல்கிறது ‘உலகின் நாக்கு’.

ஐ லவ் யூ ப்ரியங்கா!

FBI ஏஜென்ட்டாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கும் டிவி சீரியல் ‘குவான்டிகோ’வுக்கு அமெரிக்காவில் வரவேற்பு குவிந்து வருகிறது. முழுக்க முழுக்க நியூயார்க்கில் எடுக்கப்பட்ட சீரியலின் மினி டீஸரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ப்ரியங்கா தட்டிவிட, 6 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து வைரலாக்கி விட்டார்கள்.

‘‘There’s a lot going on and a lot going down in this episode of #Quantico... you don’t want to miss this!’’ #QuanticoMondays என்ற ப்ரியங்காவின் ஸ்டேட்டஸுக்கு - ‘‘Looking to gud PC I love you’’ என செல்ல கமென்ட்டுகள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன. ப்ரியங்கா படு கிளாமராக நடித்து வரும் ‘பே வாட்ச்’ வருகிற மே மாதம் ரிலீஸ் ஆகிறதாம்.

ரீடிங் கார்னர்

குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட கோர வடிவங்கள் ரானா அயூப் / தமிழில்: ச.வீரமணி [பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. விலை ரூ. 170. தொடர்புக்கு : 044 - 24332424]. ‘குஜராத் கோப்புகள்’ வெளியானபோதே இந்திய அளவில் அதிரடியை ஏற்படுத்தியது. பளிச்சென ‘இதுதான் நடந்தது, இது மட்டுமே நடந்தது’ என அறுதியிட்டு சொன்னது. படித்தவர்கள் பதறிப்போய் நிலை குலைந்தார்கள். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களின் ரகசிய முடிவுகளின்படியே குஜராத் கலவரங்கள் நடந்தது.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் பரிவோடு ஆட்டினார்கள். பத்திரிகையாளர் ரானா அயூப், மனிதகுலத்துக்கு மகத்தான பணியை செய்திருக்கிறார். உயர்ந்த இடத்தில் இருந்த தலைவர்கள் உண்மையின் சூடு தாங்காமல் சிறைக்குச் செல்ல வேண்டி வந்தது. வெறும் புலனாய்வுப் பணி அல்லாது, மனிதர்களின் மேல் தீராத அன்பு வைத்திருக்கிறார் ரானா. நிறைய பெரிய மனிதர்களின் முகங்கள் கிழிபடுகின்றன.

‘Gujarat Files’ என ஆங்கிலத்தில் வந்த புத்தகமே தமிழ் வடிவம் அடைந்திருக்கிறது. வீரமணியின் தமிழாக்கம் சிறப்பு. எங்கே மனிதம் சிதைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ரானாக்கள் தோன்றிவிடுகிறார்கள். கட்டுரைகளின் அடிநாதம் கசப்புதான். ஆனால், விழுங்கித்தான் ஆக வேண்டும். மிக முக்கியமான புத்தகம்.

பாகுபலி வெளியிட்ட தமிழ் ஆடியோ!

ஹீரோ பரத்துக்கே இது ஸ்வீட் சர்ப்ரைஸ்தான். தான் நடித்த படத்தின் ஆடியோவை எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுவார் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அவர் நடித்த ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தின் ஆடியோவை ஹைதராபாத்தில் ‘பாகுபலி’ இயக்குநர் வெளியிட, இசையமைப்பாளர் மரகதமணி பெற்றுக்கொண்டார். அனுஷ்காவும் இதில் பங்கேற்றது விழாவின் ஹைலைட்.

பெண் தலைமை இல்லாத உச்ச நீதிமன்றம்!

‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகின்றன. ஆனாலும் இதுவரை உச்ச நீதிமன்றத்தில் வெறும் 6 பெண் நீதிபதிகள்தான் இடம் பெற்றிருக்கிறார்கள்...’’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. கடந்த சனிக்கிழமை புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளில் ஒரு பெண் கூட இல்லை என்பதுதான் சோகம். மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் 5 நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் அமைப்பிலும் ஒரு பெண் கூட இல்லை.

3 வாரங்களுக்கு சார்ஜ்!

சீன நிறுவனம் ஆண்டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து பட்டையைக் கிளப்பி வருகிறது. ஏடிஎம் கார்டு வடிவில் காணப்படும் இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும். மூன்று வாரங்கள் வரை தாக்குப் பிடித்து நிற்கும். இதை  நமது ஸ்மார்ட் போனுடன் லிங்க் செய்துகொள்ள முடியும். ஸ்மார்ட் போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்ஸை இதில் படிக்கலாம். ஆனால், எம்எம்எஸ் அனுப்ப முடியாது. இந்த போன் மூலம் மற்றவர்களுடன் பேச மட்டுமே முடியும். இதன் விலை ரூ.6700.