சாதாரண மனிதர்களின் சுவாரஸ்யங்களே இந்தப் படம்!



செம போத ஆகாதே சீக்ரெட்ஸ்

‘‘சினிமாவை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாகப் பார்ப்போம். ஒவ்வொரு வயதிலும் நாம் சினிமாவை அணுகுகிற முறை கூட மாறியிருக்கும். இது கலகலனு ஒரு சினிமா. யோசிக்கவிடாமல் அருமையாக பொழுதைக் கழிக்கிற சினிமாவா அது இருக்கும்போதே பளிச்னு ஒரு பிரச்னையை முன்னெடுத்துப் போனால் எப்படியிருக்கும்! அதுதான் ‘செம போத ஆகாதே’. சாதாரண மனிதர்களின் சுவாரஸ்யங்கள் எப்பவும் சுவை நிரம்பியது. அந்த வகையிலும் இது முழு என்டர்டெயின்மென்ட் படம்தான்...’’ நிதானமாகப் பேசுகிறார் பத்ரி வெங்கடேஷ். ‘பாணா காத்தாடி’யில் அறிய வந்தவர்.

உங்க தலைப்பே ஆர்வத்தை தூண்டுது...
போதையே கூடாது. அதிலும் செம போதை எப்படி சரியாகும்! ஆக்‌ஷன், காமெடி, த்ரில்லர் எல்லாம் சேர்ந்த வகை இது. நான் வச்சிருந்த கதையும் அப்படித்தான். இப்ப நடைமுறையில் இருக்கிற காமெடி படங்களின் பாதிப்பு எல்லாம் இல்லை. நான் ஒண்ணும் காவியத்தை படைக்கிற தீவிரத்தில் இல்லை. தலைப்பே கதையைச் சொல்லணும். உள்ளே இழுத்திட்டு வரணும்.

அமெரிக்கன் பிரின்சிபல்ஸ்ன்னு ஒண்ணு இருக்கு. கொடுத்த பணத்திற்கு உண்டான மதிப்புன்னு அதை சொல்வாங்க. அப்படி ஓர் இடத்திலும் படம் இருக்கணும். தியேட்டரில் இருக்கிற இரண்டு மணியை சார்ந்த நேரத்திற்கு அடிக்கொரு தடவை வாட்ச்சை பார்க்கக்கூடாது. படத்தில் உங்களை எங்கேஜ் பண்ண வைக்கிறது ஒரு இயக்குநரின் முதல் கடமை.

போதையே ஆகாத விஷயம். அதையும் கடந்து செம போதையில் ஒருத்தன் எடுக்கிற முடிவு நம்மை உலுக்கும். அப்படி எடுத்த ஒரு தவறான முடிவு அவனை இழுத்துப் போகிற விதம், அதிலிருந்து அதர்வா தப்பிச்சாரா... என்ன ஆச்சு! என்னவெல்லாம் நேரும்... இதில் உங்களைக் கொண்டு போய் இறுக்கமாக நிறுத்தும். அதுதான் விசேஷம்.

அதர்வா இதில் நடிக்கிறது சரி, தயாரிக்கிற அளவுக்கு எப்படி அவருக்கு அந்த எண்ணம் வந்தது?
இரண்டு பேருக்கும் ஏற்கனவே புரிதல் இருந்தது. அந்த புரிதல்தான் இதுவரைக்கும் எங்களைக் கொண்டுவந்து விட்டிருக்கு. இதை முன்னர் தயாரிக்க இருந்தவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக கொஞ்சம் தள்ளிப்போட விரும்பினார்கள். ஸ்கிரிப்ட் ரெடியாகி அதன் இறுதி வடிவம் கிடைத்த பிறகு எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது அதர்வாதான். இதையே அவரும் உணர முடிந்ததுதான் மகிழ்ச்சி.

படத்தோட ட்ராவலில் அவரால் தொடர்ந்து இருக்க முடிந்தது. எனக்கு அதர்வான்னா பிடிக்கும். டைரக்டர்கள் அவரை எடுத்துக்கிட்டு எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். யதார்த்தத்தில் நம்மைக் கட்டிப்போடுவார். இந்தக் கதைக்களம் புதுசு. நிறையப் பேருக்கு இந்தக் கதையைச் சொல்லணுமான்னு தோணும். அப்படி ஒரு கதையை எடுத்துக்கிட்டு செய்றது சினிமாவின் மேலான காதலின்றி வேறில்லை. நடிப்பதில், ரிஸ்க் எடுப்பதில் அவர் அசந்து இருந்து நான் பார்த்ததே கிடையாது.

கதையை உணர்ந்தவர், தயாரிப்பாளராகவும் இருந்து பக்கத்திலேயே இருக்கார். காட்சிகளின் காரணம், காரியம் அவருக்குப் புரியும். அதுவும் பெரிய விஷயம். படம் நல்லா வந்ததற்கு அவரது ஒத்துழைப்பும், புரிதலும் காரணம். ஜீனியஸ் டைரக்டர்களிடம் பணியாற்றி, சினிமாவைப் புரிந்து கொண்ட இயல்பு வேற அவரிடம் இருக்கு. ஆக்‌ஷன், காமெடி, த்ரில்லர் என்ற இந்த மூன்றுக்கும் ஒரே அதர்வா முப்பரிமாண வித்தையைக் கொண்டு வந்தார். யாரும் யூகிக்கும் வகையான சாதாரண சினிமாவா இல்லாமல் யதார்த்தமான வகையில் சொல்வதுதான் என் பாணி.

ஹீரோயின் மும்பை பக்கமிருந்து எடுத்து இருக்கீங்க...
சிருஷ்டி சக்ரவர்த்தி. இயக்குநர் சுபாஷ் கய் படத்தில் நடித்திருக்காங்க. ரொம்பவும் பொருத்தமாக கேரக்டரில் உள்வாங்கி நடிக்கிற பொண்ணு. அவர் முகத்தில் கொண்டு வந்து கொட்டியிருக்கிற உணர்ச்சிகளுக்கு அளவேயில்லை. அனைகா தெரியுமே... ‘காவியத்தலைவனி’ல் நடிச்ச பொண்ணு. ஒரு விலைமாது கேரக்டரில் நடிச்சிருக்காங்க. யாரும் நடிக்கத் தயங்குகிற கேரக்டர். தாக்கம் வருகிறமாதிரி செய்திருக்காங்க. பிரமாதமான நடிப்பு.

நல்லா கவனிச்சீங்கன்னா, எல்லா இடத்திலும் நாம் ஒரே மாதிரி இருக்கமாட்டோம். நண்பர்கள் கூட இருக்கும்போது இருக்கிற அகலச்சிரிப்பு வீட்ல சுட்டுப் போட்டாலும் வராது. உள்ளுணர்வுகளுக்கு கீழ்ப்படிஞ்சு சில நேரங்கள் மட்டுமே இருப்போம். அந்த மாதிரி என் படத்தில் நடிச்சவங்க எல்லோருமே என் படம் மட்டுமே அவர்களுக்கான படம் மாதிரி நடிச்சுக் கொடுத்திருக்காங்க. குறிப்பாக அதர்வா; இதற்கு முன் நீங்கள் பார்த்தவர் இல்லை.

யுவன் உங்களுக்கு அருமையான பாடல்கள் கொடுத்திருக்கார்...
என்னிக்கும் யுவன் ரொம்ப ஆத்மார்த்தமாக இசையைக் கையாளுகின்ற கலைஞன். பாட்டெல்லாம் ஆடம்பரமா கிடையாது. ஆனால், அதற்குள்ளே அவ்வளவு சங்கதிகளை உணர முடியும். இதிலும் அப்படியே. கோபி அமர்நாத் கேமரா. நல்ல கதையும், சொல்ற முறையும் போதும்னு நம்புறவன் நான். சினிமா ரசனைக்கு கொஞ்சமும் பழுது இல்லாமல் காட்சிகளை எடுத்துக் கொடுத்திருக்கார்.

எழுத்துக்கும், அதை காட்சி வடிவமாக்குவதற்கும் நடுவில் பெரிய கெமிஸ்ட்ரி இருக்கு. அதற்கு அமர்நாத்தின் உழைப்பு அருமையானது. ‘பாணா காத்தாடி’க்கும் இதற்குமான கால இடைவெளி ஒண்ணும் பெரிசா கிடையாது. அனுதினமும் சினிமாவை கவனிச்சுக்கிட்டே அதுக்கு உள்ளேயே இருந்து வந்திருக்கேன். இன்னமும் நான் சினிமா ரசிகன்தான்.

ஜனங்க மாறியிருக்காங்களா? ரசனை எப்படியிருக்கு?
ஒரு படத்தை ஏத்துக்கிற வேகம் எந்த விதத்தில் இருக்கு? எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டே இருக்கேன். அப்படி உணர்ந்து எடுத்திருப்பதில் நிச்சயம் சந்தோஷமாக உணர்கிறேன்.             

- நா.கதிர்வேலன்