மீன லக்னம் குரு - புதன் சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 116

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

குருவின் ஆதிக்கத்தில் இருப்பதால் இயல்பிலேயே இளகிய மனமிருக்கும். குருவும் புதனும் ஜீனியஸ்தான். ஆனால், கொஞ்சம் பகைவர்கள். குரு வேதம், உபநிடதங்கள் என்று எடுத்துக்காட்டுவார். புதன் எவ்வளவு கற்றாலும் தன்னளவில் உள்ளதை மட்டுமே சரி என்பார். சிறு வயதிலிருந்தே மாறுபட்ட சிந்தனையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்கள். எல்லா விஷயத்தையும் சொல்லலாமா, வேண்டாமா என்று ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருப்பார்கள். படித்தவுடனே வேலை கிடைக்கும். கிட்டிய வேலையை விடுத்து படிப்பைத் தொடருவார்கள்.

‘பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் தொடான்’ என்பது போல இருப்பார்கள்.  எந்த விஷயத்தையும் உடனே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தனக்கு அதிர்ஷ்டம் இல்லை போலிருக்கே என்று நினைத்துக்கொள்வார்கள். எதற்கெடுத்தாலும் தயங்கித் தயங்கி தனிமையில் இருப்பார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான குருவும் புதனும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?

மீன லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே ஏழாம் அதிபதியான புதனும், பத்தாம் அதிபதியான குருவும் ஒன்று சேருகிறது. இதுதவிர தாய் ஸ்தானத்திற்குரிய புதனாகவும் இது இருக்கிறது. எனவே, எப்போதுமே தாயா தாரமா என்கிற பட்டிமன்றம் உங்களுக்குள் நடப்பதை தவிர்க்க முடியாது. எதிலுமே ஒரு தடுமாற்றம் இருக்கும். முடிவெடுக்க முடியாமல் எல்லா விஷயங்களிலும் குழம்பியபடி இருப்பார்கள். நிறைய அறிவோடு இருப்பார்கள். ஆனால், எதுவும் பயன்படாது போகும். தன்னை ஆதரிக்கும், உற்சாகப்படுத்துபவர்களிடம் மட்டுமே உற்சாகமாகப் பேசுவார்கள். வாழ்க்கை சொகுசாகச் செல்லும்.

இரண்டாம் இடமான மேஷத்தில் குருவும் புதனும் நின்றால் சில குழந்தைகள் ஆரம்பத்தில் தாமதமாக பேசத் தொடங்குவார்கள். சிலருக்கு திக்குவாய் தொந்தரவு இருந்து பின்னாட்களில் விலகும். கண்ணில் அழுத்தம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் ஒட்டுமொத்த சமூகமும் எப்படி அமைய வேண்டும் என்கிற சிந்தனையை முன்னெடுப்பவர்களாக இருப்பார்கள். திடீரென்று கையில் காசு புரளும். அடுத்த நாளே செலவு செய்து விட்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் குருவும் புதனும் இருந்தால் எழுத்துத் திறமையும், பேச்சுத் திறமையும் பெற்று விளங்குவார்கள். இளைய சகோதர ஸ்தானத்திற்கு உரிய இடமாகவும் இது வருகிறது. அதனால், அவரால் பல நன்மைகள் நிச்சயம் நடைபெறும். இந்த உலகை விட பெரிய ஆசிரியர் வேறு எவருமில்லை என்று விட்டு விடுவார்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள்.

மற்றவர்கள் தாமாக எல்லாவற்றையும் புரிந்து கொள்ளட்டும் என்றிருப்பார்கள். நாலு பேருக்கு உபதேசமாக நிறைய விஷயங்கள் கூறுவார்கள். எல்லா விஷயங்களிலும் எல்லை மீறாது கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். நான்காம் இடமான மிதுனத்தில் குருவும் புதனும் இருந்தால் குரு கேந்திராதிபத்ய தோஷம் அடைகிறது. தாயாருக்கு நரம்புக் கோளாறு ஏற்பட்டு சரியாகும். தாயை பாராட்டிப் பேசினால் மனைவிக்குப் பிடிக்காது. தாயாரோடு இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும்.

ஆனால், வாழ்க்கைச்சூழல் சேர்ந்திருக்க விடாது. இவர்கள் சொல்வதைக் கேட்கும் நல்ல வேலையாட்கள் அமைவார்கள். தன் பெயரில் வீட்டை வைத்துக் கொள்ளக்கூடாது. ஐந்தாமிடமான கடகத்தில் குருவும் புதனும் நின்றிருந்தால், காலதாமதமாகத்தான் குழந்தை பாக்கியம் கிட்டும். ஆனால், அழகும், விவேகமும், புத்திசாலித்தனமும் நிறைந்த குழந்தைகள் அமைவார்கள். புதனும் குருவும் கிரக யுத்தத்தில் இல்லையெனில் பிள்ளைகள் பெரியளவில் பிரகாசிப்பார்கள். அத்தை, மாமன் உறவுகள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நடுவில் மனக்கசப்புகளால் பிரிந்து ஒன்று சேருவார்கள்.

ஆறாம் இடமான சிம்மத்தில் குருவும் புதனும் இருந்தால் இவர்கள் கடன்மேல் கடன் வாங்கி கடனை அடைக்கக்கூடாது. பெரியளவில் சிக்கிக்கொள்வார்கள். தேவையில்லாமல் எல்லோரையும் நம்பி கெடுவார்கள். அரசாங்கத்திற்குக் கட்ட வேண்டிய வரிகளால் அவ்வப்போது தொந்தரவு வந்த வண்ணம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் இவரை முடக்க நினைப்பார்கள்.

மேலே மேலே முன்னேறுவதில் மட்டும் கவனம் வைத்து விமர்சனங்களைப் புறந்தள்ள வேண்டும். ‘‘நீங்க சொல்லிக் கொடுத்தீங்க அவரு பெரியாளு ஆயிட்டாரு’’ என்று இவர்களைச் சுட்டுவார்கள். எவ்வளவு பெரிதாக சாதித்தாலும் ‘‘ஒண்ணுமே இல்லை. எனக்கென்னமோ இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்’’ என்பார்கள். தான் எத்தனை சரியாக யோசித்தாலும் சரியில்லையோ என்கிற தடுமாற்றத்தை தவிர்க்க முடியாது.

ஏழாம் இடமான கன்னியில் குருவும் புதனும் இருந்தால் தன்னைவிட அதிகம் படித்த வாழ்க்கைத் துணைவர் அமைவார். கலையுணர்வு மிக்கவராக இருப்பார். இங்கும் குருவிற்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது. எனவே, அவ்வப்போது கருத்து மோதல்களும் இருக்கத்தான் செய்யும். கூட்டுத் தொழிலை அறவே தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு கூட்டுக் குடும்பம் கூடாது.

எட்டாமிடமான துலா ராசியில் குருவும் புதனும் இடம் பெற்றிருந்தால் வீடு, மனை என்று எல்லா வசதிகளும் எளிதில் கிட்டும். ஆனால், மனதில் திருப்தியற்ற ஒரு வெறுமை இருப்பதை தவிர்க்க முடியாது. திடீரென்று ஏதேனும் சாதிக்க வேண்டுமென்று நினைத்து சுறுசுறுப்பாவார்கள். மீண்டும் சோம்பலோடு இருப்பார்கள். பாசாங்காகவும், பாவனையாகவும் எதையும் பேச முடியாது. அங்கீகரிக்கப்படாத காலி மனைகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குருவும் புதனும் இருந்தால் முன்னோர்களைக் குறித்து அதிகமாக யோசிப்பார்கள். அவர்கள் விட்டதை தாங்கள் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். தனக்குப் பிறகு நடக்க வேண்டிய காரியங்கள் என்று தர்ம காரியங்களை விட்டுத்தான் செல்வார்கள். ‘‘நிறைய சேர்த்து வைக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா, வந்த வேகத்துல காலியாகுது’’ என்று அலுத்துக் கொள்வார்கள். எதையுமே இவர்களிடம் திணிக்கவும் முடியாது. தந்தையை நேசித்தாலும் அவரிடம் ஒட்டாமல்தான் இருப்பார்கள்.

பத்தாம் இடமான தனுசில் குருவும் புதனும் இடம் பெற்றிருந்தால் நல்ல வேலை அமைந்து முன்னேறும்போதே வாழ்க்கைத் துணையுடன் சங்கடங்களும் பிரச்னைகளும் வந்தபடி இருக்கும். வேலை பார்க்கும் மனைவியை இந்த அமைப்புள்ள ஆண்கள் திருமணம் செய்யாதிருந்தால் கேந்திராதிபத்ய தோஷத்தை தவிர்க்கலாம்.  ‘‘ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற முடிகிறது’’ என்று புலம்புவார்கள்.

தூண்டிவிட்டால் போதும் கடலையும் தாண்டுவார்கள். சிறியதாக மரியாதைக் குறைவு ஏற்பட்டாலே வேலை மாறுவார்கள். இன்ஷூரன்ஸ் கம்பெனி, கெமிக்கல் கம்பெனி, மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பு கம்பெனிகள், பொருளாதாரத்துறை பற்றி போதிக்கும் ஆசிரியர், விவசாயத்துறையில் அதிகாரி, கால்நடை மருத்துவர் போன்ற வேலைகள் கிடைத்தால் பெரியளவில் முன்னேற்றம் இருக்கும்.

பதினோராம் இடமான மகர ராசியில் குருவும் புதனும் சேர்க்கை பெற்றால் சொத்து சேர்க்கையில் ஈடு இணையற்ற அளவுக்கு பெருக்குவார்கள். சேர்த்த சொத்துகளை சரியானபடி பாதுகாத்து பலமடங்கு பெருக்குவார்கள். மூத்த சகோதர, சகோதரிகளோடு ஒற்றுமையாக இருப்பார்கள். ரொக்கமாக பணம் இருக்காது. ஆனால், தேவையானபோது உடனே வரும். பணம் சம்பாதிப்பதை விட அறிவுத் தேடல்தான் அதிகமிருக்கும்.

30 வயதிலிருந்து 45 வரையுள்ள வயதில் குருவின் அருளால் புத்தி யில் தெளிவும், செம்மையும் ஏற்படும். பன்னிரெண்டாம் இடமான கும்ப ராசியில் குருவும் புதனும் இருந்தால் ஏதேனும் ஒரு தத்துவ நூலை ஆராய்ச்சி செய்தபடி இருப்பார்கள். பழைய மொழிகளை மிகுந்த ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்வார்கள். பழைய கோயில்களுக்குச் செல்வதை தவறாமல் செய்வார்கள். எக்காரணம் கொண்டும் தூக்கத்தை தியாகம் செய்ய மாட்டார்கள். புத்தியில் சூட்சுமம் அதிகரிக்கும்.

ஆனால், நடைமுறையில் அது ஒத்துவராது என்று புறக்கணிக்கப்படுவார்கள். பெரிய விழாக்களுக்கு மாஸ்டர் பிளான் இவர்கள்தான் போட்டுத் தருவார்கள். ‘‘இந்நேரம் அவரு இருந்திருந்தா ஈசியா இந்தப் பிரச்னையை தீர்த்து வச்சிருப்பாரு’’ எனும் அளவிற்கு ஒப்புயர்வற்றவராக விளங்குவார்கள். இந்த குருவும் புதனும் சேர்ந்த அமைப்பு என்பது விசித்திரமானது.

ஒன்றையொன்று விழுங்கிச் செல்லும் அமைப்பு கொண்டது. குருவை புதன் தோற்கடிக்க முயற்சிக்கும். மீண்டும் குருவே முன்னால் வந்து சண்டைக்கு நிற்கும். எனவே, இவர்கள் தாம் சொன்ன விஷயத்தை முற்றிலும் விட்டுவிட்டு புதியதாக வேறொரு விஷயத்தை முன்வைப்பார்கள். இதனால் எல்லா இடங்களிலும் மெல்லிய குழப்பங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

புத்தியில் நிதானமும், அறிவில் அலைபாயும் தன்மையும் இல்லாமலிருக்க மகான்களின் ஜீவசமாதியைத் தேடிச் சென்று தரிசிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மகானின் ஜீவசமாதியானது கும்பகோணத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மௌன சுவாமிகள் எனும் பெரும் மகானின் ஜீவசமாதியானது கும்பகோணம் - தாராசுரம் பாதையில் நகரிலேயே அமைந்துள்ளது. மௌனசுவாமி மடமெனில் எல்லோருக்கும் தெரியும். இயன்றபோதெல்லாம் அங்கு சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்