உயிர்ப்பு



பணம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் வஸ்துவா? அதற்கு மீறிய பொருள்..? மாதவன் சிரித்தான். வஸ்துவிற்கு வடமொழியில் திரவியம் என்று பெயர். தமிழில் பொருள். பொருளை மீறி எதுவுமில்லை போல. தான் கொண்டு வந்த பென்-டிரைவை அப்படியே எடுத்துக் கொண்டான். நல்லவேளை அவனது கணினியின் டெஸ்க் டாப்பில் தனிக் கோப்பில் சேமித்து வைக்காததும் ஒருவிதத்தில் நல்லதற்குத்தான். மீண்டும் வேளச்சேரிக்குப் பேருந்து பிடித்து விஜயநகர் பேருந்து நிலையத்தில் இறங்கினான். மனம் எவ்வித சிந்தனையுமின்றிச் சலனமற்று இருந்ததைக் கண்டு அவனுக்கே வியப்பாக இருந்தது. வீட்டை நெருங்கியதும் அதன் கதவு மூடப்பட்டு நாதங்கியில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் சிறிது கலவரமானான்.

அடுத்த வீட்டு காமாக்‌ஷியின் மகன் அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்து அவனிடம் வீட்டுச் சாவியை நீட்டினான். “மாமிக்கு நீங்க போனவுடனே உடம்பு கொஞ்சம் முடியாமப் போயிடுத்து. மூச்சுத் திணறல்னு நினைக்கிறேன். என்னோட அம்மாதான் ஆட்டோவில் உங்கம்மாவை எப்பவும் போகும் கிளினிக்கிற்குக் கூட்டிண்டு போயிருக்கா. உங்களுக்கு நாலஞ்சு முறை மொபைலில் கூப்பிட்டாங்களாம். நீங்க எடுக்கலன்னு அம்மாவே மாமியைக் கூட்டிகிட்டு போயிருக்காங்க...”கதவைத் திறந்து பார்த்தான். கொடியில் காய்ந்து கொண்டிருந்த அம்மாவின் நைட்டி இரண்டு, படுக்கை விரிப்பு, கூடை போன்றவற்றைக் காணவில்லை.

தனது கைப்பேசியை பார்த்தான். நான்கைந்து முறையன்று, காமாக்‌ஷி மொத்தம் பதினொரு முறை அழைத்திருக்கிறாள். மடையன், கதை சொல்லும் மும்முரத்தில் சலனமற்ற நிலையில் கைப்பேசியை வைத்தது நினைவிற்கு வந்தது. வெளியில் வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.“அம்மாவுக்குத் தீரவும் முடியலை மாதவா. மூச்சு விட முடியலை. வாந்தி எடுக்க வர்றா மாதிரி இருக்குன்னு சொல்றா. ஆனா, வாந்தி வர மாட்டேங்கறது. முதுகுக்குக் கீழே வலிக்கறதுங்கறா. கால்ல நீர் சேர்ந்து போயிருக்கு. டாக்டர் ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்திருக்கார். எழுநூறு ரூபாய் பணம் கட்டணும்....” ஒரு தேர்ந்த ஆர்.ஜே போல நிறுத்தாமல் பேசினாள்.

“அம்மா என்ன சாப்பிட்டாங்க?’’“எது சாப்பிட்டாலும் வாந்தி வருதுன்னு சொல்றவங்களுக்கு என்ன கொடுக்க முடியும்..?” “டாக்டர் பார்த்துட்டாரா?” “பார்த்துட்டார். அவர்தான் ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்திருக்கார். பிளட் ரிப்போர்ட் வந்ததுக்கப்புறம்தான் சொல்ல முடியும்னு சொல்லிட்டார். சரி மாதவா. வீட்டில் போட்டது போட்டபடி இருக்கு. நான் கிளம்பிப் போயிட்டு வந்துடறேன். இந்தா இந்தப் பைசாவை வச்சுக்கோ. நான் பிளட் ரிப்போர்ட்டுக்குப் பைசா அடைச்சிட்டேன். மத்ததைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்...’’பதில் கூற விடாமல் நெடுகப் பேசி விட்டு காமாக்‌ஷி சென்ற திசையை அவன் மிரண்டு போய்ப் பார்த்துக் கொண்டான்.

இந்த ஆஸ்பத்திரி வாசம் வேண்டாம் வேண்டாம் என்றுதான் அம்மா, பிள்ளை இருவரும் தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது இப்போது வேறு வழி எதுவுமின்றி முடிந்திருக்கிறது. அன்றைய இரவு முழுவதும் அவனுக்கும் அம்மாவிற்குமான இரவாக அமைந்தது. காமாக்‌ஷி ஒரு முறை வந்ததோ இரவு ரத்தப் பரிசோதனையின் முடிவுடன் டாக்டர் வந்ததோ எதுவும் நினைவில் இல்லாமல் அப்படி ஓர் இரவாக அமைந்தது. அம்மாவிற்குப் பெரிய சரித்திரப் பின்னணி எதுவுமில்லை. அப்பா ஒரு பெரிய சமையல் காண்டிராக்டரிடம் உதவியாளராக வேலையில் இருந்தார். குடி, சீட்டு, ரேஸ்-எல்லா கண்றாவிகளும் உண்டு.

அம்மா வீட்டில் ஐந்து பெண்கள். தாத்தாவுக்கும் அதிகப்படியான வருமானம் இல்லை. வலிய வந்த அப்பா வீட்டினரின் சம்பந்தத்தை உதறும் அளவிற்கு தாத்தாவிற்கு மனமில்லை என்பதால் வறுமையில் உழலும் ஒவ்வொரு இல்லத்தில் இருக்கும் பெண்களைப் போலவே அம்மாவும் பலியானாள். மூன்று பிள்ளைகள் என்ற கருணையைத் தவிர அப்பாவிடமிருந்து அம்மாவிற்கு வேறு எந்த சுகமும் இல்லை. அம்மா சமையல் வேலைகளுக்குப் போகத் தொடங்கினாள். அந்தப் பணத்தையும் அப்பா குடிப்பதற்கும் சூதாட்டத்திற்கும் எடுக்கப் போக அம்மா துணிந்து அப்பாவை, ‘‘வெளியே போயிடுங்கோ...” என்று கூறி விட்டாள்.

அன்று வெளியேறிய அப்பாவை வீட்டில் வேறு யாரும் பார்க்கவில்லை. அம்மா அது குறித்துப் பிறகு எதுவும் பேசவில்லை. “மாதவா வா, இப்படி பக்கத்தில் உட்காரு...” அம்மா அழைத்தாள். மாதவன் அவள் அருகில் அமர்ந்தான். “நீ அப்போ பொறக்கலை. கணேசனுக்கு நாலு வயசு. நாராயணனுக்கு ஒன்பது மாசம். ஓயாமல் கபம் அவனுக்கு இருந்துண்டே இருக்கும். ஒருநாளைக்குத் தூளியில் இருந்து குழந்தையை எடுத்தா நிக்கவே இல்லை காலு ரெண்டும் துணி மாதிரி துவளறது. உங்கப்பாவோ சீட்டு விளையாடப் போயிட்டார். இப்போ மாதிரி அப்போ டெலிபோன் வசதி எல்லாம் கிடையாது. ஒரு கையில் கணேசனைப் பிடிச்சிண்டு இன்னொரு கையில் நாராயணனை மாரோட அணைச்சிண்டு தர்மாஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போனேன்.

அவங்களே பயந்து போயி ராயப்பேட்டை கவர்ன்மென்ட் ஆசுபத்திரியில் காட்டச் சொல்லிட்டாங்க. எனக்கு அப்போ திக்கும் தெரியாது திசையும் தெரியாது. கற்பகாம்பா காப்பாத்திக் கொடுடி தாயே, செவ்வாய்க் கிழமை முழுப் பட்டினி இருக்கேன்னு வேண்டிண்டேன். கபாலீஸ்வரரை அவதான் அனுப்பி வச்சா மாதிரி ஒரு பெரியவர் வந்து என்னை ராயப்பேட்டா ஆஸ்பத்திரி வரை கொண்டுபோய் விட்டார். எமர்ஜென்சி கேஸ்னு நின்னப்போ டாக்டர் அரைமணிநேரம் காலதாமதமாயிருந்தா குழந்தையை உசிரோட பார்த்திருக்க முடியாதுனு சொன்னார்...’’

அம்மா செவ்வாய்க் கிழமைகளில் உணவு எதுவும் சாப்பிட மாட்டாள் என்பது தெரியும். இது பொதுவாக எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்கும் விரதம் என்றுதான் நினைத்தான். ஆனால், காரணம் இன்றுதான் தெரிந்தது. “சும்மா இரும்மா. ஏற்கனவே உன்னால பேச முடியலை. டாக்டர் வந்தா சத்தம் போடப் போறார்...’’ அதட்டினான். அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். “மூத்தவன் ப்ளஸ் டூவில் கொள்ளை கொள்ளையா மார்க் வாங்கினான். கிண்டி இஞ்சினியரிங் காலேஜில் இடம் கிடைக்கும்னு சொன்னாங்க. அதே மாதிரி கிடைச்சுது. அவனும் ரொம்ப சிரத்தையா படிச்சான். அட்வகேட் ராமானுஜம் வீட்டில் சமையலுக்குப் போயிண்டிருந்தப்போ வக்கீல் கிட்ட சொல்லி மோட்டார் கம்பனியில் உத்தியோகம் வாங்கித் தரச் சொன்னேன்.

உன்னை யாரு சிபாரிசுக்குப் போய் நிக்கச் சொன்னாங்க என்று எப்பவும் போல வள்ளுன்னு விழுந்தான். அன்னிக்கு அப்படி கேட்டிருக்காட்டி இன்னிக்கு அதே கம்பனியில் இத்தனை உசரத்திற்கு அவனால போயிருக்க முடியுமா? நான் சொல்ல வந்தது அதில்லை...’’ அம்மா சுவாசத்தில் தடை ஏற்பட, பேசுவதை சற்று நிறுத்தினாள். “அம்மா நாளைக்குப் பேசிக்கலாம்மா. டாக்டர் வந்தா சத்தம் போடப் போறார்...”“சும்மா இருடா. நாளைக்குப் பேச முடியாமப் போயிட்டா? வக்கீல் மாமா வேலைக்குதான் சொன்னாரே ஒழிய கம்பனிக்காரன் ரொக்கமா இருபத்தையாயிரம் ரூபாய் கேட்டான். இந்தச் சமையல் கிழவிகிட்ட ஏது அவ்வளவு பணம்?

கல்யாணம் பண்ணி வந்த புதுசில் மூத்த அக்கா, உங்க பரிமளம் பெரியம்மா, எனக்கு ரெண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கிலி பண்ணிப் போட்டா. நான் உள்ளே ஏறின உடனே அப்பாவோட குணத்தைத் தெரிஞ்சிண்டுட்டேன். சத்தமே போடாம நகையைக் கழற்றி ஒரு பெருங்காய டப்பாவில் போட்டு பரணியில் எடுத்து வச்சேன். மூணு வீடு மாத்தினோம். டப்பாவும் மாறலை நகையும் மாறலை. அந்த ரெண்டு பவுன் சங்கிலியைத்தான் மார்வாடிகிட்டே மொத்தமாவே கொடுத்து பணம் பெரட்டிக் கொடுத்தேன். இப்போ மூணு பெட்ரூம் ஃப்ளாட்டில் இருக்கான். அதில் ஒரு பெட்ரூமில் கூட பெத்தவளுக்கு இடமில்லை...”

“நான்தான் உனக்கு ஆறாவது விரல் மாதிரி எவ்வித பிரயோஜனமும் இல்லாம ஒட்டிண்டு இருக்கேனே..?’’“என்னைப் பேச வேண்டாம்னு நீதானே சொன்னே?”அவன் பதில் சொல்லும் முன்னர் அம்மாவே தொடர்ந்தாள். ‘‘எனக்குதான் ரொம்ப அடிச்சுக்கறது. அவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்தது மாதிரி உனக்கு சரியான படிப்பைக் கொடுக்கலியோன்னு தோணும். எல்லா படிப்பும் சம்பாதிச்சுக் கொடுக்கற படிப்பாதான் இருக்கணும் என்பதில்லை. நீ இஷ்டப்பட்ட மாதிரி உன்னைப் படிக்க வச்சிருக்கலாம். ஆனா, மூத்தவங்க ரெண்டு பேரும் நீ உருப்படாத துறையைத் தேர்ந்து எடுத்துட்டன்னு சொல்லிக் காட்டிண்டே இருக்காங்க. அதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.

அப்பல்லாம் நினைச்சுப்பேன். சாதாரணமா வாழ்க்கையில் முன்னேறணும்னா எத்தனை பேரோட கையைக் காலைப் பிடிச்சு முன்னுக்கு வர வேண்டியிருக்கு? சினிமான்னா சும்மாவா? போட்டி பொறாமை, அவனை இவனுக்கு ஆகாது, இவனை அவனுக்கு ஆகாது, தலைக்கனம், பின்னாடி குழி பறிக்கிறதுன்னு எவ்வளவோ இருக்கும். அத்தனையும் தாண்டித்தானே நீ மேல வர வேண்டியிருக்கும்?”நர்ஸ் ஒருத்தி உள்ளே வந்தாள். இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியை அம்மாவின் தோளில் சுற்றி அதனை அழுத்தி பாதரச அளவைப் பார்த்தாள்.“பாட்டிம்மா பிரஷரு எகிறிப் போயி இருக்கு. இப்படி ராத்திரி முச்சூடும் எதுனா புலம்பிக்கிட்டு இருந்தா எப்படி? நிம்மதியா தூங்குங்க. நாளைக்கு டாக்டர் வந்தா சத்தம் போடப் போறாரு...”

நர்ஸ் சொன்னதற்காக அம்மா சற்று நேரம் கண்மூடிக் கிறங்கிக் கிடந்தாள். அவன் வெளியில் கிளம்பி அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகரட் வாங்கிப் பற்றவைத்தான். நாளை டாக்டர் பெரிதாக எதுவும் சொல்லப் போவதில்லை. இரத்தப் பரிசோதனையை நாள் கடத்தியதன் காரணம் கூட அவர் மனதளவில் போட்டு வைத்திருந்த கணக்கு தவறியதால் கூட இருக்கலாம். ஸ்க்ரிப்டின் முப்பத்தேழாவது காட்சியில் ஒரு சின்ன லாஜிகல் தவறு நிகழ்ந்திருக்கிறது. சட்டென்று தனது சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். பென்-டிரைவ் தட்டுப்பட்டது. அந்த இடத்தை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். சிகரட்டை அணைத்து விட்டு உள்ளே போனபோது அம்மா விழித்துக் கொண்டிருந்தாள்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்றாள். மெல்ல அவளை எழுப்பிக் கட்டிலிலிருந்து இறக்கி - வீட்டு நார்க் கட்டிலை விட இது கொஞ்சம் அதிக உயரம் இருந்தது - கழிப்பறையில் கொண்டு விட்டான். அம்மா வெளியில் வரும்போது, ‘‘சிகரட் பிடிப்பியா?’’ என்று கேட்டாள். “ம்...’’ என்றபடி அம்மாவை மெல்ல படுக்கையில் கிடத்தினான்.“எனக்குத் தெரிஞ்சே உங்கப்பாவுக்கு சூளையில் ஒரு பெண்ணோட தொடர்பு இருந்தது. சம்பாதிக்கறதைக் குடிச்சா பரவாயில்லை. கடன் வாங்கிக் குடிக்கணுமா? மாசம் பொறந்தா முதல் பத்து தேதிக்கு ஊரில் இருக்க மாட்டார். நானும் எத்தனை கடன்காரனுக்கு பதில் சொல்ல முடியும்? இதை உனக்கு எதுக்கு சொல்றேன்னா... நீ போற இடம் அப்படி. குடி, போதை, பொம்மனாட்டி எல்லாம் இருக்கும். அதையும் தாண்டி வர்றவங்களாலதான் ஜெயிக்க முடியும்.

அடிப்படையா மனுஷ குலத்துக்குன்னு ஒரு நேர்மை, தர்மம் இருக்கு. அதை விட்டுடாதே. அதர்மமும் பொய்யும் பீடத்தில் உட்கார்ந்திண்டு இருக்கறப்போ இது என்ன புது வியாக்கியானம்னு நினைக்காதே. தோணித்து...”மறுநாள் டாக்டர் காலையில் பத்து மணிக்கு கையில் இரண்டு மூன்று ரிப்போர்ட்டுகளுடன் நுழைந்தார். முதல் கட்ட பரிசோதனைகளைக் கடந்து அவனைத் தனியாக அழைத்துச் சென்றார்.“அம்மாவோட நிலைமையை வச்சுப் பார்க்கறப்போ அவங்களுக்கு சிறுநீரகம் பழுதாக வாய்ப்பு அதிகம். சிடி ஸ்கேன்  ஒண்ணு எடுக்கணும். என் கிளினிக்கில் இதற்கான வசதி கிடையாது. ஒண்ணு செய்யி, மத்யானம் ரெண்டு மணிக்கு பணத்தோட வா. நான் முழு மெடிகல் ஹிஸ்டரி எழுதி வைக்கிறேன்.

மைலாப்பூரில் ஒரு பெரிய நர்சிங் ஹோம் இருக்கு. வசதியில்லாதவங்களுக்கு கிட்டத்தட்ட இலவசமா பார்க்கறாங்க. இருந்தாலும் நீயும் கொஞ்சம் பணம் தயார் பண்ணி வச்சுக்கணும். முடியுமா?” என்று கேட்டார். மாதவன் உற்சாகமாக ‘‘முடியும் டாக்டர்...” என்றான். காலையில் காமாக்‌ஷி வந்திருந்தாள். அவளை அங்கே அம்மாவிற்குத் துணையாக வைத்துவிட்டு அவசர அவசரமாக சாலிகிராமம் நோக்கிப் பயணித்தான். வழி நெடுகிலும் ஒரு மனம் இன்னொரு மனதை சமாதானம் செய்தபடி வந்தது. ஒரு கணத்தைத் தீர்மானிப்பது தர்மங்களோ, நெறிகளோ இல்லை.

பணம்தான் தீர்மானம் செய்கிறது. அந்தத் தீர்மானத்திற்கு அவன் வெறும் கருவி மட்டும்தான். அவனது பிறப்பு, வாழ்க்கை, படிப்பு, அவன் பெற்றோர், அவன் உடன்பிறப்புகள், அவனது கல்யாணம், கொண்டாட்டம் எல்லாவற்றையும் அந்த ஒரு கணம்தான் கட்டமைக்கிறது. அந்த ஒரு கணத்திற்கு என்று தனியாக வரைமுறைகள் உள்ளதா? இருக்கலாம். நெறிகளுக்கு உட்பட்டதா இல்லையா என்பதெல்லாம் அந்த ஒரு கணத்திற்குத் தெரியாது. அந்தக் கணம் இயங்கச் சொல்வதற்கு ஏற்பவே மொத்த பிரபஞ்ச இயக்கமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை மீறுவதற்கு அவன் யார்? சில்வர் ஷங்கர் அவனது அலுவலக அறையில் இருந்தான்.

“நானே உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன் மாதவா. அம்மா எப்படி இருக்காங்க?”“க்ரானிக் ரீனல் ஃபெயில்யூரா இருக்கலாம்னு டாக்டர் சந்தேகப்படறார். கூடை கூடையா பணம் வேணும்னு சொல்றார்...”“அதுக்கென்ன? நான் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைக்குப் பத்து இலட்சம் கேட்டிருக்கேன். அவரு மட்டும் தயாரிப்பாளர் இல்லையே? அதையும் சொல்லி மிரட்டியிருக்கேன். சரின்னு சொல்லிடுவார்னு நினைக்கிறேன். மொத்தமா உனக்கு மூணு இலட்சம் கொடுக்கறேன். உனக்கும் அம்மாவுக்கு வசதியா மருத்துவம் பார்த்த சமாதானம் இருக்கும்...”சில்வர் ஷங்கர் பேச்சில் இரக்கத்தை விட வியாபாரம்தான் கூடுதலாகத் தெரிந்தது.

மாதவன் கணினி முன்பு அமர்ந்தான். தனது சட்டைப் பையிலிருந்த பென் டிரைவை எடுத்தான். சில்வர் ஷங்கர் மிக முன்னேற்பாட்டுடன் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருப்பான். ஆனால் இவனுக்கு எவ்வித ஒப்பந்தமும் கிடையாது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையையும், வல்லூர் தேவராச பிள்ளையையும் நினைத்துக் கொண்டான். சில்வர் ஷங்கர் தனிக் கணினி யில் டெஸ்க் டாப்பில் தனி கோப்பில் திரைக்கதையை ஏற்றி விடலாம் என்று எண்ணினான். பிறகு அவன் பாடு.“என்ன பண்ற?’’ சில்வர் ஷங்கர் கேட்டான். சொன்னான்.“நீ என்னோட மெயிலுக்கு ஒரு நகல் அனுப்பிடு...’’ தனது விசிட்டிங் கார்டை நீட்டினான்.

“உனக்கு வருத்தம் இல்லையே?” ஒரு சமாதானக் கேள்வியும் வந்தது.“வருத்தப்பட என்ன இருக்கு? ஆனால், ஒரே ஒரு குறை. எனது முதல் நுழைவிற்கே நான் இப்படி வளைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டால் இது தொடருமோ என்ற குறை. வேறு வழிகளையெல்லாம் மூடிவிட்ட இந்தக் கணத்தை நம்மில் வேறு யாரால் தடுக்க முடியும்?’’ என்று கேட்டான். சில்வர் ஷங்கர் பதிலே சொல்லவில்லை. ஒரே ஒரு க்ளிக்தான். அவனது மொத்த திரைக்கதையும் ஒரு கோப்பின் மூலம் சிவர் ஷங்கரின் மின்னஞ்சலுக்குப் போயிருக்கும். அதற்குள் அவனது கைப்பேசி அவனை அழைத்தது. யார் என்று பார்த்தான். காமாக்‌ஷி. “சொல்லுங்க...’’“எங்கேயிருந்தாலும் கிளம்பி வா மாதவா. அம்மா காலமாயிட்டாங்க...”

பேன்ட் இன்றி பயணம்!
நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டிற்கான பேன்ட் இன்றி ட்ரெய்ன்களில் பயணிக்கும் விழா தொடங்கியுள்ளது. 2002ம் ஆண்டு இதனை தொடங்கிய Improv Everywhere குழுவினரால், இந்த வினோத வழக்கம் இன்று 60 சிட்டிகளில் கொண்டாடப்படுகிறது. இப்போது நியூயார்க்கில் 17 டிகிரி குளிர். என்றாலும் பேன்ட் இன்றி மக்கள் ட்ரெய்ன்களில் உலா வருகின்றனர்.

பனிஷ்மென்ட் பந்தயம்!
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஜஸ்டின் போலியாசிக், இரவு ஏழு மணிக்கு வேஃபில் ஹவுஸ் ஹோட்டலின் சேரில் அமர்ந்தார். 24 மணி நேரத்துக்கு எழவேயில்லை. ஏன்? ஃபுட்பால் மேட்ச்சில் பந்தயம் கட்டி தோற்றுப்போனதற்கான பனிஷ்மென்ட்டாம். தன் சேரின் கீழேயே போர்டு வைத்து அமர்ந்திருந்த போலியாசிக் இந்த வார இணைய வைரல் மனிதர்.

பனியில் திருடன்!
அமெரிக்காவின் வடக்கு டகோடாவில், ஹாபி லாபி கடையிலிருந்து போலீசுக்கு போன். திருடனைப் பிடிக்க பாய்ந்த போலீஸ், கடையின் பார்க்கிங்கிலேயே சிம்பிளாக திருடனை அமுக்கியது. எப்படி? திருடிய சரக்குகள் பனியில் மாட்டியதுதான் காரணம். பர்சை பதற்றத்தில் தவறவிட்ட சொதப்பல் திருடர் ஜான்சன், சிறையில் கம்பி எண்ணிவருகிறார்.

பனிச்சறுக்கு!
அமெரிக்காவின் சவுத் கரோலினாவைச் சேர்ந்த அன்னா ஷீலெய் என்ற லேடி, யாரும் செய்யாத காரியத்தைச் செய்து இணையத்தில் தன் வீடியோவை ஹைப்பர் ஹிட்டாக்கியுள்ளார். வேறொன்றுமில்லை. ஸ்கேட்டிங் போர்டை காலில் மாட்டி, கயிறால் செல்ல நாய் கோடக்கை பிடித்துக்கொண்டு, பனியில் சறுக்கி ஜர்னி செய்து உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

- சத்தியப்ரியன்