Artificial Intelligence!



எளிமையா... தெளிவா... சுருக்கமா...

மனித மூளையின் செயல்பாடுகளைவிட பல மடங்கு வீரியமுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பற்றி சரியாக புரிதல் இல்லாமல் பலரும்  குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இந்த உலகை ஆளப்போவது Artificial Intelligence (AI) என்று சொல்லக்கூடிய  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த தொழில் நுட்பத்தின் அபரிமித வளர்ச்சி, இந்த உலகை நான்காம் தொழில்  புரட்சியை நோக்கி பயணிக்க வைக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 1942ம் ஆண்டில் மெதுவாக பேசப்பட்டது, அதற்குப் பிறகு 60களில் பேசப்பட்டது.  ஆனால், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மீண்டும் 1980ம் ஆண்டில் லேசான சீற்றத்துடன் சீற ஆரம்பித்தது. அப்போதும் அதன் செயல் பெரிய வளர்ச்சி அடையாமல் இருந்தது. ஆனால் 2010ம் ஆண்டுக்குப்  பிறகு இந்தத் தொழில் நுட்பம் அசுர வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு இணையத்தின் (Internet) பரவலால் உற்பத்தியாகும் அபரிமிதமான மின் தரவுகளே (Data) நான்காம் தொழில் புரட்சியை தனித்து அடையாளம் காட்டுகிறது. கணினி தொழில் நுட்பத்திலும், உற்பத்தித்  துறையிலும் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சி இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டு அதன் காரணமாக மின் தரவுகள் (Data) உற்பத்தி செய்து  குவிக்கப்படுகிறது. இப்படி மலை மலையாகக் குவியும் மின் தரவுகள், மீப்பெரும் மின் தரவுகள் (BIG-DATA) என்றழைக்கப்படுகிறது.

இப்படி குவிக்கப்பட்ட மின் தரவுகளை துல்லியமாக பகுப்பாய்வு (Analytical) செய்யும்போது, சந்தையை சரியாகப் புரிந்துகொள்ளவும், இன்றைய தொழில்  நுட்பத்தின் துல்லியத்தைப் புரிந்து கொண்டு அதன் மூலம் சந்தையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு வெற்றி பெறுவதற்காகவும் பல முன்னணி  நிறுவனங்கள், குறிப்பாக கூகுள், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், ஆப்பிள், யூபெர் (Uber), நெட்ஃபிலிக்ஸ் (Netflix), முகநூல் (Facebook) அமேசான்,  இன்டெல், Ebay போன்ற அமெரிக்க நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்  துறையில் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 203 பில்லியன்  அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்போவதாக, ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனத்தின் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தைப் பற்றி அறிவதற்கு முன்னர், அதற்கு மூலதனமாக உள்ள மனிதனுடைய மூளையின் செயல்பாடுகள்  பற்றியும், எப்படி மனித மூளையிலிருந்து நுண்ணறிவு (Intelligence) வெளிப்படுகிறது என்பதைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு மனிதனுடைய மூளையின் அடிப்படை செயல்களை வைத்து எப்படி செயற்கையாக நுண்ணறிவு எந்திரத்தை உருவாக்குகிறார்கள் என்று அறியவேண்டும்.  ஒவ்வொரு நாளும் நம் மூளைக்கு ஏதாவது ஒரு வழியில் தகவல்கள் (Information) வந்து கொண்டே இருக்கிறது. ஏன், நாம் கருவில் இருந்தபோதும் நமது மூளைக்கு தகவல் பரிமாற்றம் நடந்து கொண்டே இருந்தது.

அப்படி மூளைக்குச் சென்ற தகவல்களை எல்லாம் தக்க வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் சேமித்த தகவல்களை அலசி ஆராய்ந்து உடனடியாக ஒரு  தீர்வை நம் மூளை தருகிறது. இந்தச் செயல்கள் அனைத்தும் தன்னிச்சையாக நடைபெறுகிறது. அதைத்தான் நாம் அறிவு என்கிறோம். இந்த நுண்ணறிவே  Intelligence என்றழைக்கப்படுகிறது.  அதாவது நம்முடைய மூளையில் நடக்கிற நியூரோலாஜிக்கல் செயல்முறைகளினால் (Neural network  process) நம் நுண்ணறிவு (Intelligence) வெளிப்படுகிறது. இதுபோன்று நடக்கும் செயல்களை அறிவாற்றல் (Cognition) என்கிறோம்.

மூளையில் அறிவாற்றல் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி எண்ணற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டேதான்  இருக்கிறது. ஆனால், இன்றைய தேதி  வரை மனித மூளையில் எப்படி அறிவாற்றல் வெளிப்படுகிறது, எப்படி நியூரோலாஜிக்கல் செயல்முறை (Neural network process) நடை பெறுகிறது  என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்மில் பெரும்பாலோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது ரோபோடிக் மட்டுமே என்று  நினைக்கிறார்கள். அது தவறு. ரோபோடிக் என்பது ஓர் இயந்திரம். அதனால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதனுடன் ஒரு கணினி அமைப்பை  (Computer System) இணைத்து செயல்படுத்தினால் அதனால் இயங்க முடியும்.

அப்படி இயங்க வைக்கும் ஆற்றல் உள்ள ஒரு திறனை மனிதனுடைய மூளையின் நியூரல் ப்ரோக்ராமை அடிப்படையாக வைத்து அதன் உதவியுடன் செயற்கையாக உருவாக்கி, அதன் மூலம் பகுப்பாய்வு செய்வதே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (AI). நீங்கள் 1990களில்  கேள்விப்பட்டிருப்பீர்கள். உலக செஸ் சாம்பியனை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பொருந்திய கணினி வென்றது என்று. இது எப்படி சாத்தியமானது?  பல்வேறு செஸ் ஆட்டங்களில் உள்ள செயல்களை கணினி (Computer program) சேகரித்துக் கொண்டு, ‘இப்படி நடந்தால் என்ன செய்வது, இந்த  செயலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்’ என்று மாறி மாறி எல்லா தகவல்களையும் உள்ளே வாங்கி, ஒரு கணினிக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை  மட்டும் செய்து வெற்றி கண்டது.

ஆனால், இது போன்ற கணினி நிரல்களால் கொடுக்கப்படாத கட்டளைகளை அதனால் செய்ய முடியாது. இந்தக் குறைகளைப் போக்கத்தான் இப்போது செயற்கை  நுண்ணறிவு இயந்திரங்கள் வந்துள்ளன. இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஏன் அசுர வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது? எப்படி அது  சாத்தியமாகிறது? 90களின் தொடக்கத்தில் உலகத்தில் உள்ள வலைப்பின்னலின் (webpages) மூலம் ஒவ்வொரு நொடியிலும் சுமார் 100 ஜி.பி. அளவுக்கான  மின் தரவுகளே (Data) உற்பத்தியாயின. இன்றைக்கு ஒவ்வொரு நொடியும் ஐம்பதாயிரம் ஜி.பி. டேட்டா உற்பத்தியாவதாக கார்ட்னர் என்னும் ஆய்வு நிறுவனம்  வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

இந்த ஜி.பி. கணக்குகளை சுலபமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் மின் தரவுகளை காணொளியாக ஓடவிட்டால் 92  ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருக்கும்! இந்த உதாரணத்தை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். சரி. எப்படி மின் தரவுகள் உற்பத்தியாகிறது? நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அலைபேசி, ஸ்மார்ட் தொலைக்காட்சி, யு டியூப் வீடியோ பார்ப்பது, இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களால் மின்  அஞ்சல் தகவல் பரிமாற்றம், வாட்ஸ் அப், முகநூல், ஆன்லைன் வங்கி பணப் பரிவர்த்தனை மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் நடவடிக்கை மூலமாகவும்  இணையத்தின் உதவியோடு பொருட்கள் வாங்குவது அல்லது சேவைகள் நிறைவேற்றுவது, ட்விட்டர், டெலிக்ராம் தகவல் செய்வது மற்றும் மேகக் கணிமை

(cloud computing)... இது போன்று பலப்பல வழிகளில் இணையத்தின் வழியே ஒவ்வொரு நிமிடமும் மின் தரவுகள் அன்றாடம் விழுந்து கொண்டே  இருக்கிறது. இதில் 10% கட்டமைவான மின் தரவுகள் (Structured Data) என்றும் 90% கட்டமைவற்ற மின் தரவுகள் (unstructured-data)  என்றும் அறியப்படுகிறது. இப்படி குப்பையாக விழுந்துள்ள கட்டமைவற்ற மின் தரவுகளை, மிகப்பெரிய அண்டாவில் போட்டு அலசி ஆராய்வதே மீப்பெரும் மின்  தரவு கள் (Big-Data) என்ற தொழில் நுட்பம். அப்படி சேமித்த மின்தரவுகளை துல்லியமாகப் பகுத்தாராய்ந்து, தேவையானவற்றை சலித்து அவற்றை  பகுத்தாய்வுக்கு உட்படுத்துவதன் வழியே நுண்ணறிவு இயந்திரங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்கின்றன (Machine learning).

தொண்ணூறுகளில் நிறுவனங்களுக்கு மின் தரவுகள் அதிகம் கிடைக்காததால் சந்தையை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது நிலைமை  முற்றிலும் மாறி விட்டது. இன்றைக்கு மின் தரவுகள் (Data) அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதாலும் இப்போதுள்ள கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தாலும்,  எண்ணற்ற மின் தரவுகளை முன்னர் உபயோகித்த CPU ப்ரோசெஸ்ஸை விட 100 மடங்கு கூடுதலாக கிராபிக் செயல்முறை (Graphics Processing  Unit) வழியே தரவிறக்கம் மூலம் சாத்தியப்படுகிறது. இந்த கிராபிக் செயல்முறை தரவிறக்கம், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கு கிடைத்த  மிகப்பெரிய வரப்பிரசாதம்.

நமது GST மின் தரவுகளை வைத்துக் கொண்டு ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள  முடியும். அந்த நாட்டினுடைய சந்தை எதை விரும்புகிறது, அந்த நாட்டு மக்கள் எதை அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என்று அறிய முடியும். இதன் மூலம்  அந்த நாட்டினுடைய சந்தையை கட்டுக்குள் வைக்க முடியும். இந்த தொழில் நுட்பத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும்? ஒரு மருத்துவரால் சராசரியாக நூறு  மருத்துவ ஆராய்ச்சி நூல்களைப் படித்து அவற்றை நினைவு வைத்துக்கொள்ள முடியும் என்றால், செயற்கை நுண்ணறிவு கணினி உலகில் ஆதி முதல் தோன்றிய  அனைத்து மருத்துவ நூல்களையும் அலசி ஆராய்ந்து விவரங்களையும், மருத்துவ குறிப்புகளையும் ஓர் எழுத்து கூட விடாமல் சேமிக்கும்.

சேமித்த அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து நவீன மருத்துவர்களை விட பலமடங்கு தீர்க்கமான தீர்வைக் கொடுக்கும். போலவே எந்த நாட்டின் சட்டத்தையும்  அலசி ஆராய்ந்து மக்களுக்கு ஏற்படுகின்ற சகல விதமான சட்ட சந்தேகங்களையும் உடனடியாகத் தீர்க்க முடியும். AI எந்திரத்தின் மூலம் வழங்கப்படும் சட்ட  ஆலோசனை இன்றைய சட்ட ஆலோசகர்கள் வாங்கும் கட்டணத்தை விட 80 சதவிகிதம் குறைவாகவும், பயனுள்ளதாகவும் அமையும். அதேபோன்று கணக்கர்கள்  (Accountants) செய்யும் பல நடுத்தர வேலைகளை, மனிதர்கள் உதவி இல்லாமலே AI இயந்திரங்கள் செய்யுமாம். இதனால் வளர்ந்த நாடுகளில் உள்ள  தணிக்கையாளர்களும் (Auditors) கணக்கர்களும் அச்சத்தில் உள்ளதாக ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஓட்டுநர் உதவி இல்லாமல் ஒரு மின் ஊர்தியை (Driverless Car) சாதாரணமாக 360 டிகிரி வரை இயக்க முடியும். AI தொழில் நுட்பத்தின் வாய்ஸ்  ரெகக்னிஷன் உதவியோடு யாருடைய குரலையும் கண்டுபிடிக்க முடியும், யார் பேசுகிறார்கள் என்று அறிய முடியும். இன்றைக்கு சில விமான நிலையங்களில்  இந்த AI தொழில் நுட்பம் நடைமுறையில் உள்ளது. அதன் மூலமாக விமானம் எந்த வழியாக தரை இறங்க வேண்டும், எந்த வழியில் செல்ல வேண்டும் என  தீர்மானிக்க முடியும். போதாதா? விமான ஊடுருவலை (navigation) தானாகவே செயல்படுத்த முடிகிறது. யாருடைய உதவியும் இல்லாமல் வருங்  காலங்களில் AI உதவியோடு பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்ட முடியும்.

அதே போல IBM வாட்சன் என்ற AI தொழில் நுட்பத்தின் மூலமாக கேன்சர் நோய் பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு புகைப்படத்தை  நீங்கள் முகநூலில் வெளியிடுகிறீர்கள் என்றால் அசுர வேகத்தில் அப்படத்தில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று முகநூலின் AI ப்ரோக்ராம் சொல்லி  விடுகிறது. அதாவது சராசரி மனிதன் 97.55% இந்த வகையில் சரியாக கணிப்பதாகவும், முகநூலுடைய Deep-Face என்ற ஒரு AI ப்ரோக்ராம் 97.25% சரியாக  சொல்வதாகவும் முகநூல் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. சென்றாண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் உள்ள கே.எப்.சி கடைகளில் புதிய ஸ்மைல்-டு-பே  (Smile-to-pay) சேவையை கொண்டு வந்துள்ளார்கள்.

இதன் மூலம் உங்கள் முகத்தை ஒரு நவீன புகைப்படக் கருவி படம் பிடித்து உடனடியாக உங்கள் வங்கியுடன் தொடர்பு கொள்ளும். நீங்கள் வாங்கிய உணவுக்கு  30 வினாடிக்குள் பணத்தை எடுத்துக் கொள்ளும்! வீட்டில் இருந்தே ஆடைகளை ஆன்லைன் மூலம் போட்டுப் பார்ப்பதற்கு வசதியாக பல கருவிகள் வந்துள்ளன.  உங்கள் உடல் அளவுகளை கணினியில் குறித்தால் போதும். நுண்ணறிவு இயந்திரம் உங்கள் புகைப்படத்தையும் அளவுகளையும் குறித்து வைத்து உங்களுக்கு  எந்த ஆடை சரியாக இருக்கும் என்று நிஜ வடிவில் உங்களுக்கு திரையில் காண்பிக்கும்! அவ்வளவு ஏன், உங்கள் காதலி உங்களைக் காதலிக்கிறாரா, இல்லையா  என்பதைக் கூட ஒரு AI கருவி மூலமாக ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும்!

உங்கள் காதலியின் அலைபேசி, சமூக வலைத்தளங்கள் தொடர்பு மூலம் சேகரித்த மின் தரவுகள் உதவியோடு - உங்கள் காதலி எத்தனை நபர்களோடு  தொடர்பில் இருக்கிறார், அவருடைய இப்போதைய நிலை என்ன? நம்மை காதலிப்பாரா, மாட்டாரா என்று பகுத்தாராய்ந்து ஒரு தீர்வை A1 கொடுக்குமாம்.  அதாவது ஓரளவுக்கு மட்டுமே! இந்த AI தொழில் நுட்பத்தின் மூலம் 2030ம் வருடம் குறைந்தபட்சம் 30 முதல் 35 சதவிகித மக்களுக்கு வேலை பறிபோகும்...  வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், ஆடிட்டர்களும், வங்கி ஊழியர்களும், கட்டடப் பணியாளர்களும், பொறியாளர்களும், தொழிலாளர்களும் பெருமளவில்  பாதிக்கப்படலாம் என்கிறது ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை.

மனித மூளையின் தனிச்சிறப்புகள் அனைத்தையுமே செயற்கை நுண்ணறிவு இயந்திர மூளை இதுவரை அடையவில்லை. இனி வருங்காலங்களில் ஒருவேளை  இதுவும் சாத்தியமாகலாம். அதே சமயம் குறிப்பாக சேமிக்கும் கொள்ளளவு, மின் தரவுகளைப் பகுப்பாயும் திறன் மற்றும் துரித செயலாக்க ஆற்றல் உள்ளிட்ட  இயந்திர மூளையின் ஆற்றல்கள்  மனித மூளையின் ஆற்றலுக்கு அப்பால் உள்ளது. மனிதனால் படைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவினால் மனிதனின் அறிவை வெல்ல முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.                 


- ஆஸ்திரேலியாவிலிருந்து கோவிந்தராஜன் அப்பு B.com, MBA, ACA, CPA