20 வயதில் உலக சாம்பியன்!



சிலம்பாட்டத்தில் ஜொலிக்கும் தமிழக இளைஞர்

‘‘சிலம்பம் நம் வீர விளையாட்டு மட்டுமல்ல, தொன்மையான கலையும் கூட. அதை நான் கத்துகிட்டிருக்கேன்னு நினைக்கிறப்ப பெருமையா இருக்கு. இப்ப,  அந்தக் கலையால எனக்கு ஒரு மகுடம் கிடைச்சிருக்கு. இது இன்னும் சந்தோஷத்தை கொடுக்குது...’’ உற்சாகமும், நெகிழ்ச்சியுமாகப் பேச ஆரம்பித்தார்  சிலம்பாட்ட சாம்பியன் கௌசிக் பழனிச்சாமி. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு மைனிங் எஞ்சினியரிங் மாணவர்! சமீபத்தில்,  சீனாவில் நடந்த உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கத்துடன் நாடு திரும்பியிருக்கிறார் என்பது ஹைலைட்.

‘‘சொந்த ஊர் ஈரோடு பக்கத்துல வெள்ளாங்கோவில் கிராமம். அப்பா பழனிச்சாமி டெய்லரா இருக்கார். எங்க மாமா ராஜேந்திரன்தான் எனக்கு குரு. அவர்  சிலம்பத்துல மாஸ்டர். ஊர்ல இலவசமா சிலம்பம் கத்துக் கொடுக்கிறார். மூன்றாவது படிக்கிறப்பவே அவர்கிட்ட சேர்ந்துட்டேன். ஆரம்பத்துல முதல்கட்டம்னு  சொல்ற ‘காலடி’ பயிற்சிகளும், அப்புறம் கம்பு சுத்தவும் கத்துக்கிட்டேன். அந்நேரம் ஸ்கூல்ல சிலம்பாட்டம் ஒரு விளையாட்டா சேர்க்கப்பட்டுச்சு. சும்மாவே கம்பு  சுத்திட்டுத் திரிவேன். போட்டினு வந்துட்டா உட்டுட முடியுமா? மாவட்ட அளவுல நடந்த போட்டிகள்ல கலந்துகிட்டேன்.

பத்தாம் வகுப்புல மாநில அளவுல முதலாவதா வந்தேன். அப்புறம், பிளஸ் டூ படிக்கும்போது தேசிய அளவுலயும் நான்தான் ஃபர்ஸ்ட்...’’ தன்னைப் பற்றி  சின்னதாக இன்ட்ரோ கொடுக்கும் கெளசிக் பழனிச்சாமியின் அருகில் சில மாணவர்கள் வந்து நிற்க, ‘‘எல்லோரும் 5.50க்கு ஆஜராகிடணும்...’’ என உத்தரவு  போடுகிறார். எதற்காக? கேட்கும் முன்பே தொடர்ந்தார். ‘‘போன வருஷம் தெற்காசிய சாம்பியன் போட்டில கலந்துகிட்டேன். இலங்கை, ஆப்கானிஸ்தான்,  பாகிஸ்தான், பங்களாதேஷ்னு ஏழு நாடுகளோட மோதி ஃபர்ஸ்ட்டா வந்தேன். அதுதான் உலக சாம்பியன்ஷிப்புக்கு அழைச்சுட்டுப் போச்சு. காலேஜுலயும்  ஃபேமஸானேன்.

விளையாட்டுத் துறை பேராசிரியர்கள் கூப்பிட்டுப் பேசினாங்க. அடுத்த வருஷம் சிலம்பத்தை கல்லூரில சேர்க்கிறதா சொன்னதோடு, சிலம்பம் கிளாஸ் எடுக்கவும்  பர்மிஷன் தந்தாங்க. இப்ப ஐம்பது மாணவ - மாணவிகளுக்கு சிலம்பம் கத்துக் கொடுக்கறேன். தினமும் மாலை கிளாஸ் நடக்கும். அதுக்குத்தான் ரெடியாகச்  சொன்னேன்...’’ என்றபடியே மைதானம் பக்கமாக அழைத்துச் சென்றார். ‘‘முதல்ல பெண்களுக்கு ஒரு மணி நேரம் வகுப்பு. அப்புறம் பசங்களுக்கு. நானும்  கூடவே பயிற்சி எடுத்துப்பேன். என் எதிர்காலக் கனவே சிலம்பாட்ட அகடமி ஆரம்பிக்கிறதுதான்...’’ என்றபடியே மாணவிகளின் ஸ்டெப்ஸை கரெக்ட் செய்தார்.

‘‘சிலம்பத்துல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைனு அஞ்சு திணைகளையும் குறிக்கிற முறைகள் இருக்கு. ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு  முறை ஃபேவரிட்டா இருக்கும். சின்னச் சின்ன வேறுபாடுகள் தவிர, மத்தபடி சிலம்பம் ஒண்ணுதான். எங்க ஊரு பக்கம் குறிஞ்சி முறை அதிகம். இதுல நான்கு  அடிப்படை ஸ்டெப்ேஸாடு இருபத்தஞ்சுக்கும் மேற்பட்ட கம்பு சுத்துற முறைகள் இருக்கு. நான் இந்தக் குறிஞ்சி ஸ்டைல்ல சிறப்பா ஆடுவேன்...’’ என்ற கெளசிக் பழனிச்சாமி, போட்டிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.‘‘இந்தப் போட்டிகள் ஓபன் காம்படிஷன் பிரிவுல வரும்.

இதை தனியார் அமைப்புகள் நடத்துவாங்க. முதல் பரிசு கோல்டுனு சொன்னாலும் பதக்கம் கிடையாது. பணம்தான் கொடுப்பாங்க.  தெற்காசிய சாம்பியன்ஷிப்  போட்டிக்கு என் செலவுலதான் போனேன். அதுல ஜெயிச்சு வந்த பணத்தை வச்சுதான் சீனாவுக்குப் போக முடிஞ்சது.

இந்த விளையாட்டைப் பொறுத்தவரை  இரண்டு வட்டம் போட்டிருப்பாங்க. அதுக்குள்ள நின்னு அடிக்கணும். முதல்ல, கம்பு சுத்திக் காட்டணும். இதுக்கு தனியா மார்க் உண்டு. அப்புறம், ரெண்டு பேர்  மோதும்போது எதிராளியை முதல் கோட்டுல மிதிக்க வைச்சா ஒரு பாயின்ட்டும், ரெண்டாவது கோட்டை தொட வச்சி கோட்டைவிட்டே வெளியேற்றினா  இன்னொரு பாயின்ட்டும் கிடைக்கும்.

எல்லாத்தையும் மொத்தமா கணக்கிட்டு ரிசல்ட் சொல்வாங்க. நான், ஒவ்வொரு நாட்டு வீரர்கள் கூடவும் மோதிய பிறகு அரையிறுதி, இறுதிப் போட்டினு வந்து  ஜெயிச்சேன்...’’ என்றவர் கம்பெடுத்துச் சில முறைகளை விறுவிறுவெனச் செய்து காட்டினார்.

‘சிலம்பத்தை மற்ற நாடுகள் ஒரு விளையாட்டாத்தான்  பார்க்கறாங்க. அதனால போட்ட ஸ்டெப்ஸையே திரும்பத் திரும்ப செய்து காட்டுவாங்க. ஆனா, நமக்கு அப்படியில்ல. இது நம்ம பாரம்பரிய கலை. தவிர,  நம்மகிட்ட நிறைய வெரைட்டியும் இருக்கு. சுத்துற முறையிலயும் நம்மை யாராலயும் நெருங்க முடியாது. அதனாலயே இந்த வெற்றி எனக்கு சாத்தியமாச்சு...’’ சொல்லும்போதே கெளசிக் பழனிச்சாமியின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்!

- பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்