COFFEE TABLE



வின்டர் யாமி

‘கௌரவம்’ படத்தின் ஹீரோயின் யாமி கௌதமை ஞாபகமிருக்கிறதா? இப்போது பாலிவுட்டில் பரபரக்கிறார். வின்டர் சீஸன்  துவங்கியிருப்பதால் அவரின் இன்ஸ்டா பதிவுகளும் ஜில்லென்று சிலிர்க்கின்றன. ‘‘குளிர்காலத்திற்கு ஏற்ற ஃபேஷன் ஆடைகளை வாங்க  தில்லிதான் சிறந்தது. நானும் வின்டருக்கான காஸ்ட்யூமை வாங்கிட்டேன்...’’ என புது டிரெஸ்ஸுடன் அவர் பதிவிட, ஆயிரக்கணக்கான  ஹார்ட்டின்கள் யாமியை நோக்கித் துடிக்கின்றன.

காற்று மாசுபாடு


‘‘இந்தியாவில் காற்று மாசுபாட்டால் இறப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு.‘‘இங்கே 8 பேர் இறந்தால் அதில் ஒருவர் மரணிக்க காரணம் காற்று மாசுபாடுதான். இது புகையிலை மற்றும் தொற்றுநோயால்  இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்...’’ என்று அடித்துச்சொல்கிறது அந்த ஆய்வு.  ‘‘காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தினால்  இந்தியர்கள் இன்னும் கூடுதலாக 1.7 வருடம் உயிர் வாழலாம்...’’ என்று ஆலோசனை தருகிறார்கள் நிபுணர்கள்.‘‘காற்று மாசுபாட்டால்  மூச்சுக்குழாய் தொற்று, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய் போன்றவை அதிகமாக ஏற்படுகிறது...’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

குங்ஃபூ சாகசம்


எருதுச் சண்டையுடன் குங்ஃபூவையும் கலந்துகட்டி விளையாடும் ஒரு சாகச விளையாட்டுதான் சீனாவில் இப்போது ஹாட் டாக். இந்தச் சண்டையில் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்பது முதல் விதி. எருது காயமடையக்கூடாது; உயிரிழக்கக்கூடாது  என்பது அடுத்த விதிகள்.தன்னைவிட பல மடங்கு வலிமையான எருதுடன் குங்ஃபூ வீரர்கள் மோதும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான  கண்கள் வேண்டும். இதை சர்வதேச அளவில் கொண்டுபோவதுதான் சீனாவின் அடுத்த திட்டம்.


மெகா கேமரா போன்

48 மெகா பிக்ஸல் கேமராவுடன் வெளிவரத் தயாராகிவிட்டது ‘ஷியோமி’ ஸ்மார்ட்போன். இதற்கு முன் ‘சோனி’ நிறுவனம் இதே திறன்  கொண்ட கேமராவுடன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால், அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.  காரணம் அதிகமான விலை. இந்நிலையில் ஷியோமியின் புது வரவு மலிவான விலையில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்  நிறுவனத்தினர். இந்தப் போனின் மற்ற தகவல்கள் ரகசியம் காக்கப்படுகின்றன.
தத்து பித்து

இன்ஸ்டாவில் தத்துவங்களை அள்ளி வீசுகிறார் அதிதி ராவ். ‘‘நாம் கனவு காணும் வாழ்க்கையை வாழுறதே பெரிய சாகசம் தான்...’’ என  சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்களை உற்சாகப்படுத்திய அதிதி, சமீபத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ‘‘ஒவ்வொரு பெண்ணுக்குமே ஒரு  மறுபக்கம் உண்டு...’’ என்ற கருத்துடன் உதடு திறக்காமல் மெலிதாகப் புன்னகையை அவர் படர விட, ஒன்றரை லட்சம் லைக்குகள்  குவிந்துவிட்டன.

-குங்குமம் டீம்