நிலத்தடி நீர் மட்டம் பாலைவனமாகும் தமிழகம்!



தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலநூறு அடி ஆழ்துளைக் கிணறுகளில்கூட குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கிடைப்பதில்லை; பெருவாரியான பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது என பொதுப்பணித்துறை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் இருப்பு பூஜ்ஜியத்திற்கு சென்றுவிட்ட கேப்டவுன் போல்  நியாயவிலைக் கடைகளில் நீரை அளந்து விநியோகிக்கும் நிலைக்கு வந்துவிடும் என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுகுறித்து சேலம் டார்வின் சயின்ஸ் கிளப் சமூக செயற்பாட்டாளர் தினேஷ் செல்வராஜ் சொல்லும் தகவல்கள் அதிர வைக்கின்றன.

உலகத்தின் 70% பரப்பளவு நீரால் சூழ்ந்துள்ளது. எனவே தண்ணீர் பிரச்னை வந்துவிடவா போகிறது என மனிதர்கள் நினைக்கிறார்கள். நீரின்றி அமையாது உலகு என கற்றறிந்த இந்த அறிவார்ந்த சமூகத்திற்கு நீரின் சிக்கனம், நீர் பாதுகாப்பு மற்றும் மறை நீர் பற்றி தெரிந்திடாமல் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு!

இன்றைக்கு உலகத்தின் மக்கள்தொகை 800 கோடியைத் தாண்டிவிட்டது, ஆனால், 2.5% மட்டுமே நல்ல தண்ணீர் உள்ளது! மற்றடி உப்புநீர்தான்.

இந்த 2.5%ல் கூட 1 சதவிகிதம்தான் நாம் உபயோகப்படுத்தும் தண்ணீராக உள்ளது, மற்றவை பனிக்கட்டிகளாக உறைந்துள்ளன.நல்ல தண்ணீரை 10% உயர்த்துவதற்கு என்ன கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், 2.5% தண்ணீரும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாகத்திற்கு நாம் பணம் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொள்ளலாம். கொக்கு, குருவி, காக்கா, சிங்கம், புலி, கரடி, யானை, மான், ஆடு, மாடு போன்ற மற்ற உயிர்கள் என்ன செய்யும்? இவைகளும் வாழ்ந்தால்தானே மனிதன் வாழ முடியும்.

இன்றைக்கு உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அதுவும் தூய்மையான குடிநீருக்கு வழி இல்லாதவர்கள் ஏழைகளே. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து உயிரினங்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லை. பொதுவாக பூமியில் இருந்து ஆவியாக மேலே செல்லும் தண்ணீரின் அளவு 5 லட்சம் கன கிலோ லிட்டர். இதில் நிலத்திலிருந்து மட்டும் 70 ஆயிரம் கன கிலோ லிட்டர். மழையாகத் திரும்ப வருவது ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன கிலோ லிட்டர்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தென்மேற்குப் பருவ மழையின் சராசரி அளவீடு மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. அதற்காக மழையே பெய்யவில்லை என்ற பொருளும் இல்லை. மழை நீரைச் சேமித்து வைக்கத் தவறியதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மைனஸில் உள்ள மழை வளத்தை மீட்டெடுக்க இன்னும் சிலபல ஆண்டுகள் ஆகலாம்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் மறை நீர் ஒளிந்துள்ளது. மறை நீர் என்பது ஒரு பொருளின் உற்பத்திக்கென செலவிடப்பட்ட நீர் ஆகும்.
வருங்காலத்தில் நீர் வளம் உள்ள நாடே வல்லரசாக மாறும் எனத் தெரிந்த இஸ்ரேல் போன்ற பல நாடுகள் மறைநீர் கொள்கையைப் பின்பற்றுகின்றன.
எளிதாகக் கூறவேண்டும் என்றால், ஒரு மெட்ரிக் டன் கோதுமை விளைவித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர 1600 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை. எந்த நாட்டிற்கு கோதுமை அதிக தேவை உள்ளதோ அந்த நாடு தனது நீர் வளத்தைக் காக்க கோதுமையை விளைவிக்காமல் இறக்குமதி செய்துகொள்கிறது.

நாம் ஏற்றுமதியில் முதல் இடம்... தொழிற்சாலைகளால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது... என்றெல்லாம் நினைத்தால் தண்ணீர் இல்லாததால் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நோக்கியா மற்றும் குளிர்பான நிறுவனங்கள் நினைவிற்கு வர வேண்டும். நமது நாட்டில் தண்ணீரைச் சுரண்டும்வரை இந்த தொழிற்சாலைகள் இயங்கும், ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நீர் வளத்தை மொத்தமாக சுரண்டிய பின் இங்கு எந்த தொழிற்சாலைகளும் இயங்காது. இதன் பின் விவசாயம் செய்துகூட பிழைக்க வழியில்லாமல் இன்று மறைநீர் கொள்கையில் இறக்குமதி செய்யும் புத்திசாலி நாடுகளுக்கு கொத்தடிமைகளாகத்தான் நாம் வேலைக்குச் செல்ல வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதற்காக மென்பொருள் நிறுவனங்களை இங்கே வைத்து நம்மை கூலிக்கு மாரடிக்க வைக்கின்றன?

இங்கே கூலி குறைவு என்பது மட்டுமில்லை, சென்னையில் ஒரு நபருக்கு பிபிஓ பணியைத் தருவதன் மூலம் அந்த நாடுகள் சேமித்துக்கொள்ளும் மறைநீரின் அளவு நாளொன்றுக்கு 7,500 லிட்டர்!

இப்படி நம் நாட்டின் மறைநீரைச் சுரண்டுவதால்தான் அந்த நாடுகளில் ஒரு நபரின் தினசரி மறை நீர் நுகர்வு 4000 லிட்டராக இருக்கிறது. இங்கு ஒரு நபருக்கு 1,400 லிட்டர் மறைநீருக்கே திண்டாட்டமாக இருக்கிறது.அரபு நாடுகளில் தண்ணீர் காண்பதே அரிது. ஆனால் அங்கு பழ மரங்களை உற்பத்தி செய்கின்றனர். இஸ்ரேல் நாட்டில் சொட்டு நீர் பாசனம் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

நமது நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் தவுலா கிராமத்தில் உள்ள ராஜேந்திர சிங் என்பவர் தனி மனிதனாக தனது கிராம மக்களின் உதவியோடு ஏழு நதிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்து ஜீவநதிகளாக மாற்றியுள்ளார். ‘பாலைவனமான எங்களது மாநிலத்தை சோலைவனமாக மாற்றிட 33 ஆண்டுகள் போராடினோம். ஆனால், தமிழகத்தை சோலைவனமாக மாற்றிட 10 ஆண்டுகள் போதுமானது...’ என்றும் கூறியுள்ளார்.

நமது நாட்டில் உள்ளவர்களுக்கு குடிக்க நீர் உள்ளதோ இல்லைேயா வெளிநாட்டுக் கார் தொழிற்சாலைகளுக்கும், குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கும் தடையே இல்லாமல் நீர் கிடைக்கிறது. இருக்கும் நீரையாவது பாதுகாத்திட நம் நாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும். அல்லது நாமும் இறக்குமதி செய்து நமது நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும். அல்லது மறை நீருக்கு சமமாக அதற்குரிய விலையில் ஏற்றுமதி செய்தால் விவசாயிக்கு நல்ல லாபம் கிடைக்கும், இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவார்கள்.

வீட்டிற்கு வீடு மழைநீர் சேமிக்க வேண்டும் என அறிவுறுத்தும் அரசாங்கம் மழைநீர் சேமிப்பிற்காக என்ன திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை எனலாம். மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்களின் தேவைக்காக ஊருக்கு நடுவே கோயிலைக் கட்டி அருகே ஒரு குளத்தை அமைத்தார்கள். ஊரின் மத்தியில் உள்ள தெப்பக்குளத்தின் நீர் அவ்வூரின் மொத்த நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக இருந்தது. விவசாயத்திற்காக ஆறு, குளம், ஏரிகளை அமைத்தார்கள்.

ஆனால் இன்று ஆற்றில் மணல் அள்ளியும், மலைகளை உடைத்து விற்றும் காடுகளை அழித்தும், ஏரி, குளங்களை அழித்து வீட்டுமனைகளாக மாற்றியும் வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், நாளை சோற்றுக்கும் ஒரு டம்ளர் நீருக்கும் ஓடுவோம். கையில் பணமிருக்கும். ஆனால், குடிக்க ஒரு சொட்டு நீர் இருக்காது! ஆற்றைப் பார்த்து ஓடுவோம். ஆறு இருந்த இடம் சாலையாக மாறியிருக்கும். குளத்தைப் பார்த்து ஓடுவோம். அந்த இடம் பேருந்து நிலையமாக காட்சி தரும்!

காட்டைப் பார்த்து ஓடுவோம்; அங்கு பல மாடிக் கட்டடங்கள் நின்றுகொண்டிருக்கும். மலையைப் பார்த்து ஓடுவோம்; அங்கு கல்வி நிறுவனங்களும் சாமியார் மடங்களும் மட்டுமே இருக்கும்! அப்போது யோசிப்போம் இதுவா வளர்ச்சி... இயற்கையை அழிக்காமலே இருந்திருக்கலாமே என்று! அந்நிலை வருவதற்குள் இப்பொழுதே விழித்துக் கொள்வோம்!       

தோ.திருத்துவராஜ்