கூர்கா



போலீஸ்காரனாக நினைத்து, அது முடியாமல் போனாலும் மக்களைக் காப்பவனே ‘கூர்கா’.யோகிபாபுவின் அப்பா கூர்கா பரம்பரையில் வந்தவர். தன் வீரதீரச் செயல்களினால் ஒரு திருமணத்தை நடத்தி, தன்னையே பலிகொடுத்தவர். அப்படிப்பட்ட சந்ததியில் வந்தாலும் யோகிபாபுவிற்கு அந்த வேலை பிடிக்கவில்லை. பதிலாக போலீஸ் வேலையில் சேர முயற்சி செய்து கடைசியில் தோல்வியில் முடிகிறது.

குடும்பத்தொழிலான கூர்கா வேலையையே தேர்ந்தெடுக்கிறார். ஒரு பெரிய மாலில் அவருக்கு செக்யூரிட்டியாக வேலை கிடைக்கிறது. நகரும் நாட்களில் ஒரு தீவிரவாதிகள் குழு, அங்கிருக்கும் மக்களைப் பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துவிட, நிலைமை சிக்கலாகிறது. போலீஸ் அங்கு சென்றடைவதற்கான சகல வழிகளும் அடைபட, அங்கே உள்ளேயிருக்கும் யோகிபாபு தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றினாரா என்ற கேள்வியின் விடையே பின்கதை.

யோகிபாபு வழக்கம்போல் சர்வ அலட்சியமாக கேரக்டரை சுமந்து செல்கிறார்.  எப்படியாவது நாம் சிரித்துவிட ரெடியாக இருந்தும், அதற்கான சந்தர்ப்பங்களை  யோகி நமக்கு அரிதாகவே வழங்குகிறார். அவரை இயக்குநர் கைப்பிடிக்குள் வைக்க முயலும்பொழுது மனிதர் சிரிக்க வைக்கிறார்.

கதையைக்கொண்டு செல்லும் போது குழப்பமும், அக்கறையின்மையும் அவ்வப்போது காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. படத்திற்காக மொத்த கனத்தையும் ஏற்றுக்கொள்வதில்  யோகி கவனம் தவறுவது கண்கூடு. தனக்கு சோறு சமைத்துப் போடும் பாட்டி வரை ‘போடி, வாடி’ என அழைக்கிற யோகியின் மாண்பு அபாரம்.

சார்லி தன் அனுபவத்தில் சில இடங்களில் கலகலப்பு ஊட்டுகிறார். சின்னச்சின்ன சேட்டைகளில் யோகியோடு சேர்ந்து கலகலப்பு தருகிறார். ரவிமரியா டென்ஷன் பேர்வழியாக வருவது ஆரம்பத்தில் நகைச்சுவை தந்தாலும், அப்புறம் எரிச்சல்படுத்துகிறார்.

ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன் என்று பலரும் கவர்கிறார்கள்கார்ப்பரேட் சாமியார்கள், பரபரப்பிலும் மிக்ஸர் சாப்பிடும் அரசியல் தலைவர், டிஆர்பியில் கவனமாக இருக்கும்  சிஇஓ என அத்தனை பேரையும் கிண்டல் செய்ய ஆசைப்பட்டும் அது ‘நச்’சென்று பொருந்தவில்லை. பழைய திரைக்கதை ஆங்காங்கே தரைதட்டி நிற்கும்போதெல்லாம், காமெடி பன்ச்களைத் தூவி கப்பலை கரை சேர்க்கப் பார்க்கிறார்கள்.

கிருஷ்ணன் வசந்தின் கேமரா இறுதிக்கட்ட பரபரப்பில் நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது. ராஜ் சூர்யனின் பின்னணி இசை டோன் மாற்றிக் காட்டி திறமை காட்டுகிறது.

யோகிக்கு ஒரு ஜோடி வேண்டுமே என ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைக் கொண்டு வந்து காட்டுகிறார்கள். க்ளிஷேதான் என்றாலும் சிரிக்க வைக்கிறது அந்த க்ளைமேக்ஸ். லாஜிக் மீறல்களுக்கு அளவேயில்லை. எண்ணப் புகுந்தால் விரல்களுக்கு எங்கே போவது?எதையும் யோசிக்காமல் இருந்தால் சிரிக்கலாம்.

குங்குமம் விமர்சனக் குழு