தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்! வெள்ளை யானை சுவாரஸ்யங்கள்



தனுஷின் ‘திருடா திருடி’, ‘சீடன்’ படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா, நீண்ட இடைவெளிக்குப்பின் சமுத்திரக்கனியுடன் கைகோர்த்து ‘வெள்ளை யானை’யுடன் வருகிறார்.
‘‘நான் வேற எங்கயும் போயிடல. இதே சினிமாலதான் அப்டேட்டடா இருக்கேன். வெற்றிமாறன், அமீர் அண்ணன்னு சக இயக்குநர் நண்பர்களின் படங்கள்ல ஒர்க் பண்ற வேலை ஒருபக்கம் போயிட்டிருந்தது.

இன்னொரு பக்கம், ஜெயமோகன் எழுத்தில் ‘உலோகம்’னு ஒரு படம் ஆரம்பிச்சோம். அதுல கதை நாயகனா நடிச்சிட்டிருக்கேன். இப்ப இருக்கற என் கெட்டப் அதுக்கானதுதான். அதோட படப்பிடிப்பும் கிட்டத்தட்ட ஓவர்.

இதுக்கிடைல விவசாயம் பத்தி அழகான ஒரு விஷயம் தோணுச்சு. அது கனி அண்ணனுக்கு பொருத்தமான கதையாவும் இருந்தது. இப்படித்தான் எங்க ‘வெள்ளை யானை’ உருவாச்சு...’’ சுறுசுறுப்பாக பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா.

‘‘‘வெள்ளை யானை’ ரெடியானதும் தனுஷ் சார்கிட்ட ஒரு நல்ல கதை இருக்குனு சொன்னேன். சந்தோஷமான அவர், ‘சொல்லுங்கண்ணே... நம்ம பேனர்லயே பண்ணிடுவோம்’ன்னார்.

சில சூழல்களால அவர்கிட்டகதையை சொல்ல முடியாமப்போயிடுச்சு. அந்த டைம்ல நான், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சமுத்திரக்கனி, நண்பர் வினோத்னு நாங்க மீட் பண்ணினோம். அப்ப, ‘நாமளே படத்தை ஆரம்பிச்சிடுவோம்’னு எதேச்சையாக பேசினோம். அது டேக் ஆஃப் ஆகி ஷூட்டும் போயிட்டோம்.

உடனே தனுஷ் சார், ‘உங்க படத்தைப் பத்தி நல்ல படம், நல்ல கதைனு டாக் வருதே... அந்த நல்ல படத்தை என் கம்பெனில பண்ணாம நீங்களே ஆரம்பிச்சிட்டீங்களே...’னு ஜாலியா கலாய்ச்சார். இப்பகூட ‘அசுரன்’ செட்ல அதை சொல்லியே என்னை கிண்டல் செய்றார்...’’ கலகலக்கிறார் சு.சி.

அதென்ன ‘வெள்ளை யானை’?அது ஒரு குறியீடு. உலக அரங்கில் இந்தியா ஒரு விவசாய நாடு. உணவு அரசியல்ல முக்கியமான இடத்துல நாம இருக்கோம். இங்க உள்ள 135 கோடி மக்களுக்கும் அன்றாடத் தேவைக்கான உணவு, தண்ணீரை கணக்கிட்டா, நம்ம நாடு மிகப்பெரிய உணவு சந்தையா மாறி இருக்கறது புரியும்.

இங்க 70% மக்கள் விவசாயத்தையே நம்பியிருக்காங்க. ஆனா, இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பொருட்களை விளைவிக்க முடியாம, நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அத்தனையையும் இறக்குமதி பண்ண ஆரம்பிச்சிட்டோம். எண்ணெய் வித்துக்களையும் அப்படித்தான் பண்றோம்.
இப்படி இங்கே விளைய வைக்கக்கூடிய எல்லாத்தையும் தவிர்த்துட்டு இறக்குமதி பண்ண ஆரம்பிச்சா, விவசாயத்தையே நம்பி வாழுற விவசாயிகள் நிலை என்னாகும்?

அதெல்லாம் உலகமயமாக்கலின் விளைவுனா... வெளிநாட்டுல இருந்து இங்க இறக்குமதி ஆகற மாதிரி இங்கிருக்கற பொருட்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகணுமில்லையா? இங்கு உள்ளவர்களின் வாழ்வாதாரமும் நல்லா இருக்கணுமில்லையா? அப்படி ஏன் இல்ல?

இப்படி சில விஷயங்களைத்தான் இந்த ‘வெள்ளை யானை’ல பேசியிருக்கேன். வறுமைல வாடினாலும் பயிரை நேசிச்சு இயற்கையான விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயி, அவன் வசதியானதும் ரசாயன உரத்துக்கு மாறும் நிலைமை ஏற்பட்டுடுது. அதனால வரும் பாதிப்புகளையும் சொல்லியிருக்கேன்.

சமுத்திரக்கனி ஹீரோ... சப்ஜெக்ட்டும் விவசாயம்... ரொம்பவே மெசேஜ் படமா இருக்கும் போலிருக்கே..?

அப்படியில்ல. விவசாயிகளைப் பத்தின உணர்வுபூர்வமான கதைனாலும் எல்லா சீன்லயும் நகைச்சுவை இழையோடும். ட்ரீட்மென்ட்டே காமெடியாதான் பண்ணியிருக்கேன்.

செழிப்பான ஒரு கிராமம். அங்க நிறைவோடு வாழும் மக்களிடையே ஒரு திருடனும் இருக்கான். ஊர்ல முப்போகமும் விளைஞ்சு, மக்கள் சந்தோஷமா இருக்கிறப்ப திருடனை அடிச்சுத் துரத்திடறாங்க.

சில காலத்துக்குப்பிறகு அந்த கிராமம் வறட்சியின் பிடியில சிக்குது. இந்த நேரத்துல அவங்களால அடிச்சு விரட்டப்பட்ட விவசாயி வேற ஊர்ல வசதியா வாழ்வதா கேள்விப்படறாங்க. இப்ப அவங்க அத்தனை பேரும் அந்த திருடன்கிட்டயே போய் தீர்வு கேட்கறாங்க.

அதுக்கு அந்த திருடன் விதிக்கும் நிபந்தனை என்ன? கிராமத்து மக்கள் அவன் கண்டிஷனுக்கு சம்மதிச்சாங்களா... என்பதெல்லாம் மீதிக்கதை. திருடனா யோகிபாபு நடிச்சிருக்கார். சமுத்திரக்கனி, ‘மனம் கொத்திப்பறவை’ ஆத்மிகா, இயக்குநர்கள் மூர்த்தி, செந்தில், இ.ராமதாஸ்னு பலரும் நடிச்சிருக்காங்க.

கிராமத்தின் அழகையும், எளிய மக்களின் வாழ்க்கையையும் அப்படியே அள்ளிக்கொண்டு வந்திருக்கார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி. வேல்ராஜின் உதவியாளர் அவர். எடிட்டிங்கை ஏஎல்.ரமேஷ் செய்திருக்கார். அவர் இதுக்கு முன்னாடி சமுத்திரக்கனி படங்கள்ல ஒர்க் பண்ணினவர்.

படத்துக்கான இசையமைப்பாளரை ஏன் சஸ்பென்ஸா வச்சிருந்தீங்க?

அது ஒரு சுவாரஸ்யமான விஷயம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கறார். எங்க ‘வெள்ளை யானை’ திடீர்னு ஆரம்பிச்ச படம். இசையமைப்பாளர் இல்லாமல்தான் ஷூட் கிளம்பினோம். கதைக்கு பொருத்தமான சூழல்களுக்கு ஏற்கெனவே உள்ள ஒரு மலையாள பாடல், ரெண்டு தெலுங்கு பாடல்கள், ஓர் இந்திப் பாட்டுனு போட்டு ஷூட் பண்ணிட்டு வந்துட்டோம். அப்புறம் படத்தை சந்தோஷ் நாராயணன்கிட்ட காட்டினதும், அவருக்கு மொத்த படமுமே பிடிச்சிருந்தது. இசையமைக்க சம்மதிச்சார்.

இப்ப ஷூட் பண்ணினதுக்கு ஏற்ப ட்யூன்ஸ் போடுறார். தமிழ் சினிமாவுல இதுக்கு முன்னாடி இப்படி யாரும் பண்ணினதா தெரியல. நானும் கேள்விப்பட்டதில்ல. ஒரு புது முயற்சியா பண்ணியிருக்கேன்.இயக்குநரான நீங்க இப்ப தனுஷ் ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கீங்க. வேறொரு ஹீரோவை நீங்க டைரக்ட் பண்ணும்போது அவருக்கு சாதகமா நீங்க ஒர்க் பண்ணுவீங்களானு அந்த ஹீரோவுக்கே ஒரு டவுட் வருமே?

நியாமான கேள்வி. தனுஷ்கிட்ட ஒருத்தர் கதை சொல்லும் போது அது அவருக்கான கதையாக இருந்தால் ‘நல்லா இருக்கு... நல்லா இல்ல’னு அப்பவே தன் முடிவை சொல்லிடுவார். அதேபோல அந்தக் கதை வேறொரு ஹீரோவுக்கு பொருத்தமானதா இருந்தா, ‘இந்தக் கதை அவருக்குத்தான் செட் ஆகும்... அதுல அவர் நடிக்கறதுதான் சரியா இருக்கும்’னும் தன் கருத்தை சொல்லிடுவார். அது நூறு சதவிகிதம் சரியான கணிப்பாகவும் இருக்கும்.

அவர் சொல்ற ஹீரோவை நாம அப்ரோச் பண்றதுல சிரமம் இருந்தா தனுஷே சம்பந்தப்பட்டவருக்கு போன் செஞ்சு நமக்காக சிபாரிசு பண்ணவும் செய்வார். அதனால வேற ஹீரோவுக்கு பண்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்ல. எப்படி வந்திருக்கு உங்க
‘உலோகம்’?

நல்லா வந்திருக்கு. இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஓர் உளவாளியின் கதை. ஜெயமோகன் கதை, வசனம் எழுதியிருக்கார். ஹீரோ உளவாளி என்பதால், முகம் தெரியாத ஆளா இருக்கணும். ஸோ, நானே நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அந்த உளவாளி வேலை பார்க்கறது ‘ரா’ நிறுவனத்துக்கா இல்ல வெளிநாட்டுக்கா என்பதை துப்பறியறதுதான் கதை. இன்னும் ஒரு வாரம் ஷூட் போயிட்டு வந்தா மொத்த படமும் ரெடியாகிடும்.            

மை.பாரதிராஜா