குஷ்பூ பதில்கள்



10 வருஷங்கள் ஃபிட்ஸை எதிர்த்து போராடி இருக்கேன்!

பணம் பாதாளம் வரை பாயுமென்றால் அன்பு எதுவரை?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அன்புக்கு எல்லையே இல்லையே! நான் என் கணவர்கிட்ட எப்பவும் சொல்ற ஒரு வார்த்தை, உங்களுக்கு முன்னேயே நான் போயிடணும். அப்புறமா, ‘அரண்மனை’ பேயாகி உங்களோடவே சுத்தணும்பேன்!இதுதான் அன்பின் எல்லை. நம்மளோட பாசமா பழகினவங்க நம்மள விட்டு பிரிஞ்சாலும், அவங்க போனாலும் அவங்கள பத்தி நாம பேசிட்டுத்தானே இருப்போம்! மனசுல எப்பவும் அவங்க நினைப்பு ஓடிக்கிட்டேதானே இருக்கும்!

மோடி ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கடந்துவிட்டதே?
- மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம்;  பிரபாவதி, திண்டுக்கல்.

நூறாவது நாள் கொண்டாடுற அளவுக்கு ஒண்ணும் நடக்கல. இந்த நூறு நாட்கள்ல எவ்வளவோ பிரச்னைகளைப் பாத்துட்டோம். காஷ்மீர்ல பிரச்னை நடந்திருக்கு. அசாம்லயும் பிரச்னை. பெரிய நிறுவனங்களிலிருந்து சின்ன கம்பெனிகள் வரை எல்லா இடங்கள்லேயும் வேலை நிறுத்தம் நடந்திருக்கு.
வேலை வாய்ப்புகள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்குனு எல்லாருக்குமே தெரியும். அசோக் லேலண்ட்ல எல்லா நாட்களும் தொழில் உற்பத்தி நடக்கலை. ஸ்விகி மாதிரி கம்பெனிகள்ல ஒரே நாள்ல பலநூறு பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்காங்க. ஜி.டி.பி. (இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி இந்தளவுக்கு குறைஞ்சதில்லைனு உலகமே சொல்லுது.

இவ்ளோ தவறுகள் நடக்கும்போது, இவர் மட்டும் நூறுநாள் கொண்டாடிட்டு இருக்கார். மக்கள்தானே அவரை கொண்டாடணும்? செல்ஃப் பப்ளிசிட்டியில் இருந்து மோடி அவர்கள் இன்னும் மாறவே இல்ல. ஜிடிபி இவ்வளவு சரிவுக்குக் காரணம் என்ன? தெரியாமல் இம்ப்ளிமென்ட் பண்ணின ஜிஎஸ்டி, தெரியாமல் இம்ப்ளிமென்ட் பண்ணின வரிகள், டிமானிடைசேஷன்... இதெல்லாம்தான் காரணம்.  மன்மோகன்சிங் அப்பவே சொன்னார்... ‘இதுக்கான விளைவுகள் இப்ப தெரியாது.

பிறகுதான் தெரியும்’னு. அதைத்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் சொல்லிட்டு தன் பதவியை ராஜினாமா செய்தார்.இப்ப பல ஐஏஎஸ் ஆபீசர்ஸ் தங்கள் வேலையை ரிசைன் பண்ணிட்டிருக்காங்க. ஜனநாயக ரீதியாக எதுவும் நடக்கல. நாடகம் மட்டும்தான் அரங்கேறிக்கிட்டு இருக்கு!

ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஆச்சி மனோரமாவைப் பற்றி..?
- ல.பாலாஜி. பெங்களூரு;  பி.சேவியர், பாளையங்கோட்டை.

ஆச்சி ஒரு லெஜண்ட். அவங்களோடு பழகிய தருணங்களை மறக்கவே முடியாது. பர்சனலாவும் அவங்களைப் பிடிக்கும். அன்பும் அக்கறையுமா என்னைப் பார்த்துக்கிட்டாங்க. எந்தவொரு ஆர்ட்டிஸ்ட்டும் ஆச்சி அளவுக்கு வரமுடியாது. நடிகர் திலகம் சிவாஜி சாரைப் பார்க்கும்போது எல்லா நடிகர்களுக்குமே அவரை கைகூப்பி வணங்கத் தோணும். அப்படி ஒரு சிறப்பு ஆச்சிக்கும் உண்டு.

ஆச்சி நடிச்சதுல ‘தில்லானா மோகனாம்பாள்’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். ஒரு பக்கம் சிவாஜியப்பா. இன்னொரு பக்கம் பப்பிம்மா. இதுக்கு நடுவுல ஆச்சி பண்ணின கேரக்டர் பிரமாதமா இருக்கும்.நான் எந்த ஆர்ட்டிஸ்ட் கூட நடிக்கும்போதும் பயப்பட மாட்டேன். ஆனா, ஆச்சி கூட ஒர்க் பண்றப்ப, அதுவும் ‘நடிகன்’ல முதல் முறையா அவங்க கூட நடிச்சப்ப ரொம்ப பயந்தேன். அந்தப் படத்துல காமெடிலயும் அவங்க அசத்தியிருப்பாங்க. அவங்க பர்ஃபாமென்ஸ் முன்னாடி நிச்சயம் நாம காணாமப் போயிடுவோம்.

‘நடிகன்’ல அவங்க யூத் லுக்ல வரும்போது அந்த ஃப்ரேம்ல நாமும் இருப்போம். ஆனா, மக்கள் கண்டிப்பா நம்மைப் பார்க்க மாட்டாங்கனு தெரியும்! அந்த ஃப்ரேம்ல ஆச்சியையும் சத்யராஜ் சாரையும்தான் எல்லாரும் கவனிப்பாங்க.இது தெரிஞ்சும் அந்த ஃப்ரேம்ல நாம இருப்பதே மகிழ்ச்சிதான்னு சந்தோஷப்பட்டேன். இவங்க ரெண்டு பேரையும் தாண்டி மக்கள் அந்த ஃப்ரேம்ல பார்த்த ஒரே முகம் கவுண்டமணி சார்!

‘மைக்கேல் மதன காமராசன்’, ‘முறைமாமன்’, ‘உத்தமராசா’, ‘சிங்காரவேலன்’னு ஒரு காலத்துல எல்லா படத்திலும் ஆச்சியோட நடிச்சிருக்கேன். டே அண்ட் நைட் ஷூட் அப்ப ஆச்சி மடியில தூங்கியிருக்கேன். ஆச்சி எனக்கு சோறு ஊட்டியிருக்காங்க. ஒருதடவ என் கை விரல்ல நகசுத்தி வந்திடுச்சு. தினமும் அந்த விரலுக்கு எலுமிச்சம்பழம் வச்சுவிட்டாங்க. ராத்திரியும் பகலுமா இடைவிடாம படப்பிடிப்பில் இருந்ததால ஒருமுறை நான் ஷூட்டிங்கில் மயக்கம் போட்டு விழுந்திட்டேன்.

ஆஸ்பிட்டல்ல கண்விழிச்சுப் பார்த்தா... ஆச்சி என் கையைப் பிடிச்சு தேம்பித் தேம்பி அழுதிட்டிருந்தாங்க. ‘என்ன கண்ணு...’னு எனக்கு ஆறுதல் சொல்லி  பக்கத்துலயே இருந்தாங்க. கோபிச்செட்டிப்பாளையம் ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப ஒரு நிமிஷம் கூட என்னைவிட்டு அவங்க நகரலை.
அப்ப எனக்கு ஃபிட்ஸ் வரும். ஷூட்டிங் அசதில எனக்கே தெரியாம செட்லயே அன்னிக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு. எனக்கு ஃபிட்ஸ் வரும்னு அதுவரை ஆச்சிக்கும் தெரியாது.

என்னோட 19 வயசிலதான் எனக்கு முதல்முறையா ஃபிட்ஸ் வந்தது. அப்ப நான் சினிமாவில் என் கேரியர் உச்சத்துல இருக்கேன். ரெண்டு தடவை சாப்பிட வேண்டிய மருந்தைக்கூட நேரமில்லாததால ஒருமுறைதான் சாப்பிடுவேன். பத்து வருஷங்கள்கிட்ட ஃபிட்ஸ் கூட போராடினேன். எனக்கு
மகள்கள் பிறந்த பிறகுதான் ஃபிட்ஸ் வர்றது நின்னது!

சிங்காரச் சென்னையில் ஆட்டோவில் பயணித்தது உண்டா?
- வடிவுடையான், திருவண்ணாமலை.

ஓயெஸ். நிறைய தடவை பயணிச்சிருக்கோம். எனக்கு மட்டுமில்ல. எங்க எல்லாருக்குமே ஆட்டோ ரொம்ப பிடிக்கும். அதுவும் மழைக்காலத்துல ஆட்டோவில் பயணிக்க சூப்பரா இருக்கும். நனைஞ்சு போகலாம். சமீபத்துல கூட யூ.எஸ். விசா வாங்க போயிருந்தோம். நாங்க வெளியே வரும்போது எங்க வண்டி பக்கத்துல இல்ல. உடனே, ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வந்துட்டோம். என் பசங்க கூட வீட்ல வண்டி இல்லைனா சட்னு ஆட்டோவில் ஏறிப் போயிடுவாங்க.

பாப்பா, ஒன்பதாவது படிக்கும் வரை ஆட்டோவில்தான் ஸ்கூலுக்கு போயிருக்கா. அவளே பேரம் பேசி ஆட்டோல ஏறி வீட்டுக்கு வந்திடுவா. எங்க அம்மா எப்பவும் ஆட்டோவில்தான் ட்ராவல் பண்றாங்க. கால் வலி இருந்தா மட்டும்தான் கார். இல்லைனா, ‘நான் ரங்கநாதன் தெருவில் ஷாப்பிங் பண்ணப்போறேன்’னு ஆட்டோ பிடிச்சு கிளம்பிடுவாங்க!

நேரமே இல்லையென்று நீங்கள் சலித்துக்கொண்டதுண்டா?
- ஆ.மாலதி, கரூர்; சுப்ரமணியன், சென்னை.

சில நேரங்கள்ல அப்படித் தோணும். அந்த டைம்ல ஒர்க் இருக்கும். பசங்களுக்கும் ஸ்கூல், காலேஜ் இருக்கும். அவங்களுக்கும் ஒர்க் இருக்கும். எனக்காக நேரம் செலவழிக்க நினைக்கறப்ப டைம் இருக்காது!ஆனா, சலிச்சுக்க மாட்டேன். ஏன்னா, இப்படி ஒரு சூழல் எனக்கு மட்டுமில்ல... எல்லா பெண்களுக்குமே அப்பப்ப வரக்கூடியதுதான். ஓடியாடி வீட்டு வேலை செய்யறது... பசங்கள ஸ்கூலுக்கு அனுப்புறது... கணவர், மாமனார், மாமியாரை கவனிச்சுக்கறதுனு நாள் முழுக்க இல்லத்தரசிகள் சுத்திக்கிட்டு இருக்காங்க.

ஆனாலும் இப்படி உழைக்கறதுல ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுதுனு கடக்கறாங்க இல்லையா... அப்படி நானும் கடக்கறேன். ஏன்னா, உழைக்கறதுல இருக்கும் சந்தோஷத்தை நானும் அனுபவிக்கறேன்!   

(பதில்கள் தொடரும்)