கிராமம்… காதல்… அண்ணன் தங்கச்சி பாசம்!



நம்ம வீட்டுப் பிள்ளை பாண்டிராஜ் பளீர்

‘‘‘சன் பிக்சர்ஸ்…’
இந்த ஒருவார்த்தை என்னைக் கட்டிப்போட்டது. எல்லா வீடுகளுக்கும் சுலபமா போய்ச் சேர்ந்திடலாம்னு ஓர் உண்மை இருக்குல்ல... அதுக்குத்தான் அத்தனை ஹீரோக்களும், இயக்குநர்களும் ஆசைப்படுவாங்க!

கிராமம், காமெடி, சென்டிமென்ட், ஃபேமிலி டிராமான்னு பத்து நிமிஷத்திற்குள்ளே ஒரு லைனைச் சொன்னேன். சிரிச்சு ரசிச்சு கேட்டுட்டு படத்தை ஆரம்பிச்சிடலாம்னு ெசான்னாங்க. கிராமத்துப் பக்கம்னு சொல்றது சாதாரண விஷயம் இல்லை.
நம்ம எல்லோரும் சிட்டிக்குள்ளே வந்து அடைஞ்சிட்டாலும், ஒரு கிராமத்து மனுஷன் இன்னும் எல்லோர் மனகக்குள்ளும் இருக்கான். ஜல்லிக்கட்டு, பதநீர், ஈசல் பிடிக்கிறது, திருவிழாவிற்கு வருகிற பெண்களை ஜனங்களோட ஜனங்களாகப் பார்த்து கண் வெட்டுறது எல்லாமே அப்படியே மனசுக்குள்ளே கிடக்கு.

காதல், பாசம், நேசம், காமெடி, துயரம், சடங்கு, திருவிழா, எல்லாத்தையும் அசலாகச் சொல்லப் பார்த்திருக்கேன். நிச்சயம் எதுவும் தூக்கலா இருக்காது. மக்கமாருகளோட கூடி வாழ்றதுதானே நம்ம பழக்கம்லாம்.

கோபப்பட்டு முறைச்சுக்கறதும், அப்புறம் கண்ணீர் விட்டுக் கட்டிப்புடிச்சு அழுறதும்தானே நம்ம அழகு. இப்படியான இடங்கள் அமைகிற சூழ்நிலைகள்தான் கதை...’’ பக்குவமும் புன்னகையுமாகப் பேசுகிறார் இயக்குநர் பாண்டிராஜ். தனக்கான மைதானத்தில் எப்போதும் ஜெயிக்கிற குதிரை. ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ பாய்ச்சலுக்கு ரெடி.

எதிர்பார்ப்பு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’க்கு எக்கச்சக்கமா ஏறிக்கிடக்கு!‘கடைக்குட்டி சிங்கம்’ முடிச்சதும், இன்னொரு குடும்பப்படம் அடுத்ததாக வேண்டாம்கிற முடிவில் இருந்தேன். இதுவரைக்கும் ஒரு படத்தை முடிச்சிட்டு ஊர்ப்பக்கம் போனால் ஒருவித ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

இந்தப்படம் பண்ணிட்டுப் போகும்போது வேற ரெஸ்பான்ஸ். கூப்பிட்டு பேசுற விதம், கண்ணில் அப்படியே நீர் ததும்ப பேசிட்டு, கர்ச்சீப்பை எடுத்து முகம் துடைக்கிற மாதிரி அப்படியே கண்ணையும் துடைக்கிற அழகு என்னைக் கட்டிப்போட்டது.

படம் ரொம்ப குளோசா குடும்பங்களில் போய்ச் சேர்ந்திருக்கு. பேசிக்காத அண்ணன் தங்கச்சிகள் கட்டிப்புடிச்சு அழுது ஒண்ணு சேர்ந்திருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து இன்னும் வீர்யமா, மனசோட ஆழத்திற்குப் போய் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ பேசுவான்.ஏழு வருஷங்களுக்குப் பிறகு சிவாவுடன் படம் செய்கிற அனுபவம்…

சதா சிரிப்பும், பணிவுமா வந்து நின்னு கிராமத்துல சிலர் வேலை பார்த்திட்டு இருப்பாங்களே, அப்படியான இளைஞன் சிவா. ஒரு வீட்டில் தகப்பன் செத்தா அந்தக் குடும்பம் பத்து வருஷம் பின்னாடிப் போகும்பாங்க. அப்படி விட்டுவிடாமல் மகனும், அம்மாவுமாக தாங்கிப் பிடிக்கிற கதை.

அண்ணன் வாழ்க்கைக்காக தங்கச்சி எடுக்கிற முடிவு, தங்கச்சி வாழ்க்கைக்காக அண்ணன் எடுக்கிற முடிவு இருக்குல… அதுவும் இதுல பெரிய விஷயம்.நான் அறிமுகப்படுத்தின ஹீரோதான். சிவா நல்லா வருவார்னு தெரியும். ஆனால், இவ்வளவு நல்லா வருவார்னு சத்தியமாகத் தெரியாது. 25 படங்களுக்குப் பிறகுதான் ஒரு ஹீரோவுக்கு இப்படி ஓர் இடம் கிடைக்கும்.

ஆனால், சிவாவுக்கு பத்துப் படங்கள்ல கிடைச்சிருக்கு!
ஒரு சீன்ல, ‘ஏன் என்னை தப்பாகப் பார்க்கிறீங்க’னு நீளமா பெரியப்பா கிட்டே பேசுற சீன். அப்படியே அவர் பேசிக் கேட்டதும் கண்ணுல தண்ணீர் வந்துடுச்சு. அதுல டப்பிங்ல பேசும்போது இன்னும் ‘டப்டப்னு’ பேசுறார்.

வெளியே வந்ததும் ‘என்ன சிவா இப்படி மாறிட்டிங்க’ன்னு கேட்டேன். ‘நாம ஏழு வருஷம் பார்க்கலை சார்… அதுக்குள்ளே கத்துக்கிட்டது’ன்னு சொன்னார். இதுதான் அவரை டாப் 5 ஹீரோக்குள்ளே கொண்டு போய் வைச்சிருக்கு!பாரதிராஜா வேறு…   இதுல மூணு பையன், ஒரு பொண்ணோட, 80 வயது தாத்தா. யார் கையையும் நம்பிப் பிழைக்காமல், தானே சம்பாதிச்சு பிள்ளைகளுக்கும் கொடுக்கிற ஆளு.

அவருக்கும் எனக்கும் ஸ்பாட்ல பயங்கர சண்டையெல்லாம் வரும். இப்படித்தான் நடிப்பேன்னு சொல்வார். நானெல்லாம் கிராமத்துல கிடந்து அவர் படங்களை பாடமாக படிச்சு வந்த பையன்தான். அவருக்குக் கொடுக்கிற மரியாதைக்கு அளவே கிடையாது.

ஆனால், என் டைரக்‌ஷனில் அவர் டைரக்டரா மூக்கை நுழைச்சால் விடமாட்டேன். யாராக இருந்தாலும் சரி, இது பாண்டிராஜ் படம். வெளியே பார்த்தால் அப்பா, அப்பான்னு கொஞ்சுவோம்.

உள்ளே நுழைஞ்சால் ‘பேசாமல் அருண்மொழிவர்மனா நடிச்சிட்டுப் போயிடுங்க அப்பா’ன்னு செல்லமாக மிரட்டுவேன்!அவர்கிட்டே ஷூட்டிங் முடிச்சிட்டா நடந்த பழைய சம்பவங்கள், ரகசியங்கள்னு அவர் வாயை நானும், சிவாவும் சேர்ந்து புடுங்கிடுவோம். அவர்கிட்டே பேசுறதும், பழகுறதும் தித்திப்பான அனுபவம்.அனு இமானுவேல் அழகில் நிற்கிறாங்க…

அட, நடிப்பிலும்தாங்க! சிவாவிற்கு மாமன் பொண்ணு. ஒரு சடங்கு, திருவிழா, திருமணம்னு நடக்கும்போது நட்ட நடுவில் இவங்க காதல் ஒரு தினுசா, ஜாடை பார்த்து, ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு புது ஜோடினு இளமை அப்படியே பூத்து நிற்குது.

அவங்க இரண்டு பேரையும் திரையில பார்க்கும்போது மக்கள் சொக்கிப் போய் நிற்பாங்க.சூரி, யோகிபாபுன்னு சேர்த்திட்டிங்களே…நண்பர்களாக நடிச்சிட்டு இருந்த சூரி - சிவாவை அண்ணன் தம்பியா மாத்திட்டேன். நண்பர்களாகவே அலப்பறை பண்ற கலரை மாத்தி, என் மகன் அன்புக்கரசையும் சேர்த்து விட்டிருக்கேன். இந்த மூணு பேரின் டிராவல் இருக்கு.

யோகிபாபுவை வில்லன் குரூப்போட இணைச்சு விட்டிருக்கேன். ஆளாளுக்கு ஒரு பக்கம் அதகளம் பண்ணிட்டு இருப்பாங்க. ஒரு பெரியப்பா இருந்துக்கிட்டு வீட்ல நம்ம முடிவுதான் சிறந்ததுனு நிற்குமே, அப்படி வேல.ராமமூர்த்தி வருகிறார். சமுத்திரக்கனி ஒரு ஃபிளாஷ்பேக்கில் சிவாவுக்கு அப்பாவாக வாழ்ந்திட்டுப் போவார். எல்லா கேரக்டரையும் குணநலன், மேனரிசம்னு பார்த்துப் பார்த்து இழைச்சிருக்கோம்.

இந்தப் பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷ்... திறமையில் பின்னி எடுக்குது. சுப்பு பஞ்சு, ஆர்.கே.சுரேஷ், நரேன், சண்முகராஜா இவங்கெல்லாம் சித்தப்பா, பெரியப்பாவா வாழ்ந்திருக்காங்க. நட்டி நடராஜ் படம் முழுக்க வர்றார். மொத்தம் 32 கேரக்டர்ஸ் சார்.... பார்த்துக்கங்க!

இந்த 11 வருட பயணத்தை எப்படிப் பார்க்கிறீங்க..?நான் பெரிசா படிக்கலை. படம் பார்த்திட்டு படம் செய்கிற ஆளும் கிடையாது. ஆனால், படிப்பினை இருக்கு. பொறந்ததுல இருந்து ‘பசங்க’ படம் பண்ற வரைக்கும் கஷ்டம் கஷ்டம்னு பட்டுத் தொலைஞ்சிருக்கேன். பழசை மறக்காம இருக்கிற மூட் எனக்குள்ளே அணையாமல் எரிஞ்சுகிட்டே இருக்கு.

சந்தோஷப்பட்டதையும், கரைஞ்சு அழுததையும் ஞாபகமாக வைச்சிருக்கேன். வாழ்க்கையின் சகல கஷ்டங்களையும் அனுபவித்துத் தீர்த்தவனுக்கு இதெல்லாம் அதிகம்தான். நினைச்சதைவிட நல்லா இருக்கேன். பொதுவா நான் எங்கே இருக்குறது, என்னென்ன சாதிக்கணும்னு எதையும் என் பொறுப்பில் எடுத்துக்கிறதில்லை. காலையில் குளிச்சிட்டு, சாமியை கும்பிட்டுட்டு விபூதியை எடுத்து நெத்தியில் பூசும்போது வந்த அமைதிதான் என்னிடம் அடுத்த நாள் வரைக்கும் ஓடுது.

மத்தபடி சினிமாங்கிறது டைரக்‌டர் மட்டுமே இல்லை. அது 24 கலைகளோட கூட்டாஞ்சோறு! கைப்பக்குவம் போல இந்த கலைப்பக்குவம் பழகணும்! யார்கிட்டே என்ன விஷயம் வாங்கணும், எப்படி வாங்கணும்னு பழகணும். சினிமாவில் எனக்கு சிறிசும், பெரிசுமா அவமானங்கள் கிடைச்சிருக்கு. அப்படி வாங்கி, தாங்கி, வளைஞ்சு, நெளிஞ்சு வடிவம் பழகினால் இங்கே கொஞ்சம் நிற்கலாம். எனக்கு அந்தத் திறமை கொஞ்சம் கூடி வந்திருக்கு.
எல்லாம் ஆண்டவன் அருள்.                   

நா.கதிர்வேலன்