கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-37



பக்தியின் சின்னமாக சுருட்டை ஏற்ற கந்தன்!

‘‘மாட்டேன்...’’ திட்டவட்டமாக பதில் அளித்தார் புதுக்கோட்டை மன்னர்.கந்தனையே மறுத்துப் பேச அவருக்கு எப்படித்தான் துணிவு வந்ததோ...? ‘‘உன்னால் நிறுத்தி வைக்கப் பட்ட சுருட்டு நிவேதனம் மீண்டும் விராலி மலையில் நிகழ்த்தப் பட வேண்டும்....’’ என்ற தனது கோரிக்கையைக் கேட்டு மன்னர் இப்படி பதில் சொல்வார் என்பதை கந்தனும் எதிர்பார்க்கவில்லை.

அவரது பன்னிரண்டு கண்களும் அகண்டு விரிந்தன. ‘‘உன் எதிரில் நிற்பது யார் என்பதை மறந்துவிட்டாயா..?’’ நிதானமாகக் கேட்டார் முருகன்.
‘‘என் எதிரில் நிற்பது ஈசனின் மகன் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. ஆகவேதான் சொல்கிறேன்! விராலி மலையில் மீண்டும் சுருட்டு நிவேதிக்கப் பட மாட்டாது. ஆம்! பரம்பொருளின் மகனே சுருட்டு பிடிக்கிறார் என்று உலகம் என் முருகனை கேலி பேச நான் அனுமதிக்க மாட்டேன்...’’

இந்த மொழியைக் கேட்டு கந்தன் புன்னகைத்தார். ‘‘மன்னா! உனது இந்த அபார பக்தியைக் காணும் போது எனக்கு கறுப்பு முத்துதான் நினைவுக்கு வருகிறான். அவனது பெயரை என் மனதில் பொன் எழுத்துக்களால் குறித்து வைத்துள்ளேன்...’’ கந்தன் பெருமிதத்தோடு சொன்னார். அவர் சொன்னதைக் கேட்ட மன்னருக்கு யார் அந்த கறுப்பு முத்து என்று அறிய வேண்டும் என்ற ஆவல் உந்தியது.

‘‘இப்படி தங்கள் மனதில் இடம் பெறும் அளவுக்கு அவன் செய்த புண்ணியம் யாது சுவாமி?’’
புன்னகைத்தபடியே கந்தன் கதை சொல்ல ஆரம்பித்தான்...கரைபுரண்டு ஓடியது அந்த காட்டாற்று வெள்ளம். அளவில் பெரிய மரங்களே அதில் அடித்துச் செல்லப்படும் போது, ஆறடி உயர மனிதனைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? கொட்டும் மழை வேறு. இடை இடையே மின்னல் மற்றும் இடியின் தலையீடு. கோர மிருகங்களின் கூச்சல்.

சிறிதளவும் வெளிச்சம் புக முடியாத அடர்ந்த வனப் பகுதி. அங்கே அந்த ஒற்றை மனிதர் மட்டும் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார்.
விராலிமலை முருகன் கோயிலை புனரமைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. அதற்கு பெரிதாக பொருளுதவி செய்ய முடியவில்லை என்றாலும் உடலால் உழைக்கவாவது வேண்டும் என்ற எண்ணத்தோடு நின்றிருந்தார் அந்த மனிதர்.

இப்படியே மழை பெய்தால் வெள்ளம் வற்றாது. வெள்ளம் வற்றா விட்டால் விராலி மலை போக முடியாது. விராலி மலை செல்லாவிட்டால் நம்மால் திருப்பணி செய்ய முடியாது. முருகா! உனக்கு திருப்பணி செய்ய நீ பொருள்தான் தரவில்லை. போகட்டும், அது என் கர்மவினை என்றால், இப்படி உன் திருப்பணிக்கு உடலால் உழைக்கலாம் என்ற என் எண்ணத்திலும் மண்ணை வாரி இறைக்கிறாயே... குமுறியது அந்த மனிதரின் உள்ளம்.
அப்போது, தன்னந்தனியான அந்தக் காட்டில் ஒருவன் பரிசலோடு வந்தான்.

அவனைக் கண்டவருக்கு புதுத் தெம்பு வந்தது. ‘‘அப்பா என் பெயர் கறுப்பு முத்து... என்னை மறு கரைக்குச் சென்று சேர்த்து விடு. உனக்கு புண்ணியமாகப் போகும். நான் விராலி மலைக்குச் சென்று திருப்பணி செய்ய வேண்டும்...’’ என்று அந்த புது மனிதரிடம் கறுப்பு முத்து கேட்டுக் கொண்டார். அவனும் இதற்காகவே காத்திருந்தவன் போல, அவரை பத்திரமாக மறு கரை சேர்த்தான்.

கொட்டும் மழையில் காட்டாற்று வெள்ளத்தை கடந்ததால் இருவரும் குளிரில் நடுங்கினார்கள். குளிரை மறக்க கறுப்பு முத்து ஒரு சுருட்டை எடுத்து பற்ற வைத்தான். அவன் புகை பிடிப்பதை பரிசல் கொண்டு வந்த மனிதர் விழுங்கி விடுவதைப் போல பார்த்தார். அந்த புது மனிதர் குளிரில் நடுங்குவது கறுப்பு முத்துவை என்னவோ செய்தது. உடன் அந்த சுருட்டை நன்றாக ஒரு இழு இழுத்துவிட்டு அதன் புகையை ரசித்து ருசித்து உமிழ்ந்தபடியே மிச்சத்தை பரிசல்காரனிடம் நீட்டினார்.

பரிசல்காரரும் பதில் ஏதும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டார். அப்போதுதான் கறுப்பு முத்துவுக்கு விராலி மலைக்கு விரைந்து செல்ல வேண்டும் என்ற நினைப்பு வந்தது. இத்துணை நேரம் குளிரில் தன்னை மறந்து நின்றுவிட்டதை எண்ணி தன்னை நொந்து
கொண்டார். பிறகு சற்றும் தாமதிக்காமல் விறுவிறு என்று விராலி மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். செல்லும் முன்பு அந்த பரிசல்காரனுக்கு நன்றி சொல்ல அவர் மறக்கவில்லை.

கறுப்பு முத்து தந்த சுருட்டை வாங்கிய கையோடு அவர் மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் பரிசல்காரன். கறுப்பு முத்து விராலி மலை வந்து சேரவும், பொழுது விடியவும் சரியாக இருந்தது. குளித்து முடித்துவிட்டு சுத்த பத்தமாக முருகனை தரிசிக்க முதல் ஆளாக கோயிலுக்குள் நுழைந்தார் கறுப்பு முத்து.

பட்டர் வேத மந்திரங்கள் ஓதியபடியே நடை திறந்தார். உள்ளே கர்ப்பக்கிரகத்தில் அவர் கண்ட காட்சி அவரை மலைக்கச் செய்தது.
ஆம்; பாதி எரிந்து அணைந்து போன சுருட்டு ஒன்று, முருகனின் அபய ஹஸ்தத்தில் இருந்தது! ‘‘கறுப்பு முத்துவின் சுருட்டுதான் மன்னா அது. அவனது அபார பக்தியை மெச்சி, அவனுக்காக நான் பரிசல் ஓட்டினேன்! அதற்கு அவன் தந்த எச்சில் சுருட்டை மனமார ஏற்றேன்.

 குளிரில் நடுங்கும் ஒரு ஜீவனுக்கு உதவுவதாக எண்ணி அவன் தந்த சுருட்டு அது. அந்த சிறு உதவியின் நினைவாக என்றும் என் திருக் கோயிலில் சுருட்டு படைக்கப் பட வேண்டும். இந்த சுருட்டு படையலைக் காண்பவர்கள் எல்லாம் தன்னால் முடிந்த சிறு பொருளை எளியவர்களுக்கு தானம் செய்தாலும் அது அந்த தெய்வத்துக்கு கோடி நிவேதனம் செய்ததற்கு சமம் என்று உணர்வார்கள்.

ஞானியர்களோ கறுப்பு முத்துவின் தனிப் பெரும் அன்பின் சின்னமாக எனக்கு படைக்கப்படும் சுருட்டைக் கண்டு அக
மகிழ்ந்து போவார்கள். ஆகவே இந்த வழிபாட்டு முறை தங்கு தடையின்றி நடைபெற வேண்டும். புரிகிறதா?’’ என்று சொல்லிவிட்டு கந்தன் மர்மப் புன்னகை பூத்தார்.

‘‘இனி என்றும் கறுப்பு முத்துவின் நினைவாக உங்களுக்கு சுருட்டு படைக்கப்படும் கந்தா. இது நிச்சயம், நிச்சயம்...’’ உணர்ச்சி பொங்க மன்னர் வாக்குறுதி தந்தார். அதைக் கண்ட முருகன் வெற்றிக் களிப்புடன் ஒரு சிரிப்பு சிரித்தார். அதில் மன்னர் கரைந்து போனார். ஆனந்தத்தில் மன்னர் முழுகுவதைக் கண்ட குமரன், மின்னலைப் போல மறைந்தார்.

அவரைக் காணாது ‘‘முரு கா...
முருகா...’’ என்று அரற்றிய
படியே உறக்கம் விட்டு எழுந்தார் மன்னர்.

எதிரில் விராலிமலை ராஜகோபுரம் அழகாகக் காட்சி தந்தது. அதைக் கண்ட மன்னருக்கு, தான் கண்டது கனவு என்று உணர அதிக நேரம் பிடிக்கவில்லை. நடந்த விஷயங்களை ஜீரணிக்க மன்னர் திணறினார். ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு சற்றும் தாமதிக்காமல் விராலி மலை பட்டரிடம் ஓடினார்.உறங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி ‘‘பெரும் அபசாரம் செய்து விட்டேன் சுவாமி. கந்தன் விரும்புவது பக்தியே. அந்த பக்தியோடு எதை சமர்ப்பித்தாலும், அதை இதய பூர்வமாக அவர் ஏற்கிறார் என்பதை மறந்தேன். நான் மறந்ததை முருகன் எனக்கு கனவில் வந்து உணர்த்திவிட்டார்.

இனி ஒருபோதும் அந்த சுருட்டு நிவேதனம் நிற்கக் கூடாது...’’ படபடப்பாகச்சொன்ன மன்னனை வியப்பாகப்பார்த்தார் அந்த வேதியர்.‘‘மன்னா! விராலி மலை முருகன் கருணையின் பிறப்பிடம். எப்பேர்ப்பட்ட பாவத்தையும் மன்னிக்கும் கருணை உடையவர். பிரம்மாவுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் கர்வம் தலைக்கேறி தானும் ஈசனும் சமம்தான் என்று கொக்கரித்தார். அவரது ஆணவத்தை அடக்க ஈசன் அவரது ஒரு சிரத்தைக் கொய்தார்.

என்ன இருந்தாலும் பிரம்மா நாரதருக்கு தந்தை இல்லையா? தனது தந்தைக்கு ஈசன் அநீதி இழைத்து விட்டதாக நாரதர் நினைத்தார். ஈசனை வசை பாடினார். பரம்பொருளை சொல்லத் தகாத வார்த்தைகளால் ஏசினார். அவர் செய்த அநீதி பொறுக்க முடியாமல் அவரது கையில் இருந்த மகதி வீணை வளைந்தே போய் விட்டது. பாவம் அவர் அப்போதுதான் தனது தவறை உணர்ந்தார்.

தனது பாவத்தை எப்படி கழிப்பது என்று தெரியாமல் திண்டாடினார். அப்போது கருணையே வடிவான இந்த விராலி மலை முருகர்தான் நாரதருக்கு அபயம் அளித்தார். அதனால்தான் இன்றும் வளைந்த வீணையோடு இருக்கும் நாரதரை இங்கு தரிசிக்க முடியும். நாரதர் செய்த பெரும் குற்றத்தையே பொறுத்த கந்தன், தன் மீது கொண்ட அன்பால் நீங்கள் செய்த சிறு குற்றத்தை பொறுக்க மாட்டாரா? கவலையை விடுங்கள்...’’
வேதியரின் ஆறுதல் மன்னர் மனதை வெகுவாகக் குளிர வைத்தது. விராலிமலை முருகனது சன்னதியை நோக்கி பக்தியால் கரைந்தபடியே கை
குவித்தார் மன்னர்.

‘‘பக்தியோடு தந்த சுருட்டையே புனிதமாக மாற்றின முருகர், புகைப் பழக்கத்துல விழுந்த மனிதர்களைத்திருத்த மாட்டரா என்ன? ராகவா... நீ கவலையே படாம தைரியமா உன் மகனை அங்க கூட்டிட்டு போ. மிச்சத்தை அந்த முருகர் பார்த்துப்பார்...’’ நெகிழ்ச்சியுடன் சொன்ன நாகராஜனை மெய்மறந்து பார்த்தார் அவரது நண்பர் ராகவன்.

‘‘வேடுவர்கள் செய்த எளிமையான பூஜைக்கு மயங்கி தரிசனம் தந்தவர் அந்த முருகர். பக்தியோட சேவிச்சா எல்லா பாவமும் தொலையும். எல்லா நன்மையும் சேரும். நாரதர் விஷயத்துல அதுதான் நடந்தது...’’ ஆனந்தி தன் பங்கிற்கு சேர்ந்து கொண்டாள்.

‘‘பாட்டி! அருணகிரிநாதருக்காக அஷ்டமா சித்தியையே கொடுத்த முருகன், எப்படிப்பட்ட கோரிக்கையையும் நிறைவேத்தி கஷ்டங்களைத் தீர்ப்பார்னு தாத்தா சொன்னதுல இருந்து புரிஞ்சுகிட்டேன்... சரியா?’’
கேட்ட கண்ணனை அணைத்துக் கொண்டாள் ஆனந்தி!
‘‘ஓம் முருகா...’’ என கரம் கூப்பினார் நாகராஜன்!

(கஷ்டங்கள் தீரும்)

கோயில் பெயர்: விராலிமலை முருகன் கோயில்.
எப்படிச் செல்வது: மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 28 கி.மீ.யில் கோயில் அமைந்துள்ளது. (புதுக்கோட்டை மாவட்டம்)
நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் 8 மணி வரை

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்