பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டுள்ளன!



நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன. ஒருவரையொருவர் பார்த்தால், புன்முறுவல் கூட செய்ய நேரம் இல்லாத அளவுக்கு ஒவ்வொருவரும் தத்தம் செல்போன்களில் மூழ்கி இருக்கிறோம்.

வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக உருமாறி இருக்கும் இந்த சமூக வலைத்தளங்களினால் சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லை. சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டவர்களின் விவரமும் வெளியானது.

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ கால், வாய்ஸ் - கால், மெசேஜ், தகவல் பரிமாற்றம், புகைப்படம், வீடியோ காட்சிகள் பரிமாற்றம் உள்ளிட்ட இதன் வசதிகள் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விளைவு... இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடிப் பேர் இதனை பயன்படுத்துகின்றனர்.

அக்டோபர் 29ம் தேதி வாட்ஸ் அப் நிறுவனம், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அவ்வழக்கில், இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ, உலகம் முழுவதுமுள்ள மூத்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் 1,400 பேரின் மொபைல் போனை ஹேக் செய்து, அவர்களது வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிர்வாகத் தலைவர் வில் கேட்ச்காரட், “இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் வாட்ஸ் அப்பில் வைரஸை பரப்பி மனித உரிமைகள் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை கண்காணித்துள்ளது. அமெரிக்க கணினி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம்...” என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அக்டோபர் 31ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “இதுபற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம். இந்திய மக்களின் உரிமை சட்டபூர்வமாக பாதுகாக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். குடிமக்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாப்பதை அரசு உறுதி செய்யும்...” எனக் கூறியுள்ளது.

என்எஸ்ஓ வைரஸ் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு உளவு, கண்காணிப்பு சார்ந்த தொழில்நுட்ப வசதிகளை வழங்குகிறது. பெகாசஸ் என்பது என்எஸ்ஓ குழுமம் உருவாக்கிய ஒரு மால்வேர் வைரஸ். இது ஒரு தொலைபேசியில் நிறுவப்படும்போது, அனைத்து தகவல் தொடர்புகளையும் (ஐமேசேஜ், வாட்ஸ்அப், ஜிமெயில், வைபர், ஃபேஸ்புக், ஸ்கைப்) மற்றும் லொகேஷன்களையும் ஹேக் செய்கிறது.

இது இலக்கு வைக்கப்பட்ட தொலைபேசியில் வேறுபட்ட சில வழிகளிலும் நிறுவப்படலாம். வாட்ஸ்அப் போன்ற செயலிகளுக்கு வைரஸ் அதிகமுள்ள லிங்க்குகளை அனுப்புவது (spear phishing), வாட்ஸ் அப்பை முடக்குவது அல்லது தகவல்களை திருடுவது போன்ற வழிகளில் இது இலக்கு வைக்கப்பட்ட தொலைபேசிகளைத் தாக்கக்கூடும்.

2016ம் ஆண்டு முதல் இந்த வைரஸ் செயல்பாட்டில் உள்ளது. இந்த வைரஸைத்தான் இப்போது வாட்ஸ் அப் மூலம் என்எஸ்ஓ பரப்பியுள்ளது.
கண்காணிப்பில் பிரியங்கா! காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, பெகாசஸைப் பயன்படுத்தி பிரியங்கா காந்தியின் செல்போனும் வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.“ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளத்திலிருந்து பிரியங்காவுக்கு ஒரு செய்தி வந்துள்ளது. ஃபேஸ்புக்குக்கு சொந்தமான செய்தித் தளத்திலிருந்து பிரபுல் படேல் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் செய்திகள் வந்துள்ளன.

ஆளும் பாஜகவை எதிர்க்கும் தலைவர்களை இதுபோன்ற உளவு மென்பொருளால் குறிவைத்துள்ளார்கள். பல மூத்த அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் உளவு பார்த்ததாக கட்சி சந்தேகிக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்...” என்று கூறியவர், ‘‘கடந்த மே மாதத்தில் இருந்தே இந்த உளவு மென்பொருள் செயல்பாட்டில் இருப்பது அரசுக்கு தெரியுமா?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தனது செல்போனும் உளவு பார்க்கப்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் குற்றம்சாட்டியுள்ளார். உளவு பார்த்த நிறுவனம் தனிநபர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கி இருப்பது தவறான நடவடிக்கை என சாடியுள்ள மம்தா இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, இதுபோன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லாமே கடந்து போகிறோம் லிபியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளில் வெடித்த புரட்சிக்கு பெரும் பங்கு சமூக வலைத்தளங்களுக்கும் உண்டு. இதேபோல் டுவிட்டரில் நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை நாடலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது. வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சவுதியிலிருந்தும், லிபியாவிலிருந்தும் காப்பாற்றப்பட்டது; உயிருக்குப் போராடிய சவுதி அரேபிய பணிப்பெண்ணின் நிலையை, வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன், அவரை நல்லபடியாக தாய்நாடு திரும்பவும் வைத்தது என சமூக வலைத்தளங்களினால்  பல விஷயங்கள் நல்லதாக நடந்தாலும், சில பாதகமான சூழல்களும் ஏற்படுவது உண்டு.

குறிப்பாக, ஆதாரமற்ற, மேம்போக்கான தவறான தகவல்கள் இடம் பெறுகிறது. அவற்றை உண்மை என்று நம்பிவிடும் அபாயமும் உள்ளது. எளிதில் யார் மீதும் அவதூறு பரப்பும் செயலுக்கும் சமூக வலைத்தளங்கள் அடிபணிகின்றன. இப்பொழுதும் மதுரை மீனாட்சி அம்மன், மோடி, ஜனகணமன, வந்தே மாதரம், புதிய 2000 ரூபாய் நோட்டு… என்று பல வதந்திகள் உலவிக்கொண்டேதான்இருக்கச் செய்கிறது.

2012ம் ஆண்டு என்று குறிப்பிட்டு ‘அவசரம், உடனே ரத்தம் தேவை’ என்று வருகிறது; ஒரு ஷேர் செய்வதன் மூலம் நாம் உண்மையான மனிதனாக, இந்தியனாக, தமிழனாக, ஆணாக, பெண்ணாக என, எல்லாம் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. ஐந்து நொடியில் ஷேர் செய்பவர்களுக்கு கடவுள் என்னென்னமோ தருகிறார்; ஒரு பள்ளிப் பேருந்து விபத்தில் சிக்கியதாக அந்தப் பள்ளியின் அருகில் இருப்பவரே ‘செய்தி உண்மைதானா?’ என்று விசாரிக்காமல் பகிர்கிறார்; ஏடிஎம் நம்பர் 2442 என்றிருந்தாலும் ரிவர்ஸில் அடித்தால் திருடர்களிடமிருந்து தப்பிக்கலாம்; இப்படி இன்னும்... இன்னும்...
எதையும் பகிர்வதற்கு முன் ஒரு அலைபேசி அழைப்பின்மூலம் அதை உறுதி செய்து கொள்ளலாம். இதை யாரோ சொன்னதுக்கு ‘Not verified’, ‘Just Forwarded’ என்றெல்லாம் போட்டு அதே வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம். இதை விட கொடுமையாக, எந்த ஒரு செயலையும், நிகழ்வையும் மீம்ஸ் போட்டு அதை எளிதில் கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

வெறுப்புணர்வு கலாசாரத்தில் வாழ்ந்து வரும் நமக்கு நிகராக குழந்தைகளும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். வாழ்க்கையில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை விட இன்னும் பல விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளது என்பதை சொல்லக் கூடிய நேரம் இது.

இந்தியாவில் கண்காணிக்கப்படும் 17 பேர்!

பழங்குடியினர் பகுதிகளில்  பணிபுரியும் மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், எல்கர் பரிஷத் வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டவர், பீமா கோரேகான் வழக்கு வழக்கறிஞர், ஒரு தலித்  ஆர்வலர், பாதுகாப்பு மற்றும் மூலோபாயம் குறித்து அறிக்கை அளிக்கும்  ஊடகவியலாளர்கள், தில்லி பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உள்ளிட்ட 17 பேர்களின் வாட்ஸ் அப் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.  

1. ரவீந்திரநாத் பல்லா: தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழுவின் பொதுச் செயலாளர்.

2. ஷாலினி கெரா: சிறையில் உள்ள சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜின் வழக்கறிஞர் மற்றும் ஜகதல்பூர் சட்ட உதவி குழுவின் இணை நிறுவனர்.

3.  ஆனந்த் டெல்டும்ப்டே: சிவில் மற்றும் தலித் உரிமை ஆர்வலர் மற்றும் அறிஞர்.  கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பேராசிரியர். எல்கர் பரிஷத் வழக்கில்  தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் இவர்.

4. பெலா சோமாரி: பஸ்தாரை தளமாகக் கொண்ட மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர்.

5. நிஹால் சிங் ரத்தோட்: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்.

6. ஜெகதீஷ் மெஷ்ரம்: கச்சிரோலியைச் சேர்ந்த வழக்கறிஞர். இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்.

7. அங்கித் க்ரூவால்: சண்டிகரை தளமாகக் கொண்ட மனித உரிமை வழக்கறிஞரும், இந்திய மக்கள் சங்கத்தின் இணைச் செயலாளருமானவர் இவர்.
8. விவேக் சுந்தரா: மும்பையைச் சேர்ந்த சிவில் மற்றும் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்.

9. டிகிரி பிரசாத் சவுகான்: சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடியினர், தலித் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.

10. சீமா ஆசாத்: மனித உரிமை ஆர்வலர் . அலகாபாத்தில் இருந்து தஸ்தக் நயே சமய்கி என்ற இந்தி பத்திரிகையை வெளியிடுகிறார்.

11. டாக்டர் சரோஜ் கிரி: டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் விரிவுரையாளர்.

12. அமர் சிங் சாஹல்: சண்டிகரைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரும், மனித உரிமைகளுக்கான சர்வதேச வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினரு மாவார்.

13. ராஜீவ் சர்மா: டெல்லியைச் சேர்ந்த கட்டுரையாளர் மற்றும் மூலோபாய விவகார ஆய்வாளர்.

14.  சுப்ரான்ஷு சவுத்ரி: முன்னர் பிபிசி உலக சேவையில் பணிபுரிந்த இவர்,  இப்போது சத்தீஸ்கரில் Peace journalism செய்து வருகின்றார். மேலும்,  அங்குள்ள ஆதிவாசிகளுக்கு புளூடூத் வானொலி சேவையையும் செய்து வருகின்றார்.

15. சந்தோஷ் பாரதியா: டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர். சவுதி துனியா என்ற  ஆன்லைன் செய்தி இணையதளத்தின் தலைமை
ஆசிரியர். முன்னாள் ஜனதா தள எம்.பி.

16. ஆஷிஷ் குப்தா: அசோமியா பிரதிடின் பணியகத்தின் தலைவரான டெல்லியைச் சேர்ந்த  பத்திரிகையாளர் இவர். ஜனநாயக உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் சிவில்  உரிமை ஆர்வலராகவும் பணியாற்றி வருகின்றார்.

17. சித்தாந்த் சிபல்: தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர். WION செய்தி சானலில் முதன்மை பாதுகாப்பு நிருபர்.

அன்னம் அரசு