முகம் மறுமுகம்-பிரைடல் அண்ட் டிசைனர்



‘கிளிஞ்சல்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘தங்கமகன்’, ‘விதி’ என 1980களில் கவனம் ஈர்த்த கதாநாயகி பூர்ணிமா பாக்யராஜ். இன்று சின்னத்திரையிலும் ‘கண்மணி’யாக கலக்குபவர். பாக்யராஜின் மனைவி, சாந்தனுவின் அம்மா, கீர்த்தியின் மாமியார் என குடும்ப பொறுப்புகளிலும் இன்முகமாக புன்னகைக்கும் பூர்ணிமா, பிரமாதமான ஒரு ஃபேஷன் டிசைனர்!

கோலிவுட், டோலிவுட் பிரபலங்களின் திருமணங்கள், விஐபி வீட்டுப் பெண்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் என பலரது பிரைடல் அண்ட் டிசைனர் ஆடைகள் பூர்ணிமாவின் கைவண்ணத்தில் அவரது ‘பூர்ணிமா ஸ்டோர்ஸி’ல்தான் ரெடியாகின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள பூர்ணிமாவின் வீட்டிற்குச் சென்றால், ஹாலில் பிரமாண்ட ஓவியம் வரவேற்கிறது.

‘‘‘பூர்ணிமா ஸ்டோர்ஸ்’னதும் ரொம்ப பெரிய யூனிட்டா இருக்கும்னு நினைக்காதீங்க. சின்ன அளவுலதான் பண்றேன். ஆர்டர் நிறைய வரும்போது, அவுட்சோர்ஸும் கொடுத்து பண்ணிப்பேன்...’’ எனச் சொல்லிக்கொண்டே, நான்காவது மாடியில் இருக்கும் தனது டெய்லரிங் யூனிட்டை அறிமுகப்படுத்தினார்.

‘‘என்னோட காஸ்ட்யூம்ஸ்ல எம்பிராய்டரிக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுப்பேன். நான் நடிக்க வந்த புதுசுல, ‘எம்பிராய்
டரி எல்லாம் அடுத்த அஞ்சு வருஷத்துல காணாமல் போயிடும்’னு சொன்னாங்க. ஆனா, அடுத்த அஞ்சு வருஷத்துல அதை விரும்புறவங்க எண்ணிக்கை டபுள், ட்ரிபிள்னு பெருகிடுச்சு!

என்கிட்ட எம்பிராய்டரிக்கு மெஷின் கிடையாது. கைலதான் பண்றோம்...’’ என கோல்டு அண்ட் ஸ்டோன்ஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு டிசைனர் பிளவுஸை சாம்பிள் காட்டியபடி பேச ஆரம்பிக்கிறார் பூர்ணிமா.

‘‘பூர்வீகம் மும்பை. சின்ன வயசில இருந்து ஃபைன் ஆர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். கலர் மிக்ஸிங், அதை மேட்ச் பண்றது, ஃபேப்ரிக்ஸோட ஃபீல் எல்லாமே பிடிக்கும். அப்ப நான் காஸ்ட்யூம் டிசைனிங் கோர்ஸ் படிக்கலாம்னு நினைச்சேன். ஆனா, ஈஸியா கிடைக்கற குரூப்பா பி.காம்ல சேர்ந்திட்டேன்.
காலேஜ்ல கல்ச்சுரல்ஸ்ல நிறைய கலந்துக்குவேன். டான்ஸ்ல கலக்கினேன். அப்புறம், விளம்பரப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்படியே சினிமா ஆஃபர் வந்துச்சு.

நான் நடிச்ச படங்கள்ல என்னோட காஸ்ட்யூம்ஸை நானே பண்ணிக்கறேன்னு சொல்லிடுவேன். அப்ப இன்டர்நெட், ஃபாரீன் மூவீஸ் எல்லாம் கிடையாது. அவ்ளோ ஏன்? இங்கே இந்தியாவுக்குள்ள இருக்கற லேட்டஸ்ட் டிரெண்டைக் கூட ஈஸியா தெரிஞ்சுக்க முடியாது.
எங்காவது ஏதாவது ஒரு ஃபேஷன் மேகஸின்ல வந்த டிசைன்ஸ் பார்த்து, ‘அதான் லேட்டஸ்ட் டிரெண்ட் போல’னு நினைச்சுக்க வேண்டியிருக்கும். அதுல என் ஐடியாஸ் கலந்து டிசைன் பண்ணிக்குவேன்.

நான் நினைக்கற டிசைனை அப்ப அணிய முடியும். யாரும் அது சரியில்லை, இது பிடிக்கலைனு சொல்ல மாட்டாங்க. எல்லாருமே என்கரேஜ் பண்ணுவாங்க. ஆனா, இப்ப அப்படியில்ல. ஸ்கூல் பசங்கள்ல இருந்து எல்லார்கிட்டேயும் டிரெஸ்ஸிங் சென்ஸ், ஃபேஷன் நாலேஜ் இருக்கு. ஸோ, பொருத்தமில்லாத காஸ்ட்யூமை நம்ம இஷ்டத்துக்கு அணிஞ்சுக்க முடியாது.

ஆரம்ப காலத்திலிருந்து இப்பவரை என்னோட காஸ்ட்யூம்ஸை நானே கவனிச்சுக்கறேன். அப்புறம் எனக்கு மேரேஜ் ஆச்சு. கல்யாணத்துக்குப்பிறகு சாருக்கு (பாக்யராஜ்) காஸ்ட்யூம்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். அவரது படங்களுக்கும் காஸ்ட்யூம் பண்ணுவேன். ‘ராசுக்குட்டி’ படத்துல ஹீரோயின் ஒரு லட்சம் ரூபாய் காஸ்ட்லி சேலை ஒண்ணு அணிவாங்க. அப்போ ரொம்ப ஃபேமஸ். அந்த சேலை ரெடி பண்றதே எனக்கு ஒரு பெரிய சவாலா இருந்துச்சு.

அப்பவெல்லாம் ரொம்ப அதிகபட்ச செலவே இருபதாயிரத்தை தாண்டாது. ஆனா, அந்த சேலைக்கு ஒரு லட்சம் செலவழிச்சு லுக்ல கொண்டு வரவே ரொம்ப மெனக்கெட்டோம். ‘ராசுக்குட்டி’ ரிலீஸான தியேட்டர்கள்ல அதை டிஸ்பிளேயாகவும் வச்சோம். அப்படி வித்தியாசமான ஒர்க் பண்றது எப்பவும் பிடிச்ச விஷயம்...’’ என பூரிக்கும் பூர்ணிமா, முழுநேர டிசைனராகவும், ஒரு ஏற்றுமதியாளராகவும் இருந்திருக்கிறார்.

‘‘ஆமா. அது என்னோட ஃப்ரெண்டோட ஷாப். ஸ்பென்சர் பிளாசா ஆரம்பிச்ச டைம்ல உள்ள கடை அது. அவங்களோட சேர்ந்து காஸ்ட்யூம்ஸ் டிசைனிங்ஸை கவனிச்சிருக்கேன். சில மாசங்கள்ல அந்த ஃப்ரெண்டுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க என்னை, ‘இந்தக் கடையை நீங்களே கவனிச்சுக்குங்க’னு கேட்டுக்கிட்டாங்க.

அதை வீட்ல சார்கிட்ட சொன்னேன். சார் சம்மதிக்கலை. கடைக்குப் போய் அங்கே நானே உட்கார்ந்து ஒர்க் பண்றதை அவர் விரும்பல. அதனால எனக்கு கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைச்சது. இடை இடையே சார் புரொடக்‌ஷன் போகும் போது, என்னை பார்த்துக்கச் சொல்லுவார். அங்கேயும் டிசைனிங்தான். அப்புறம், கொஞ்ச நாள்ல ஃப்ரீ டைம் கிடைச்சது. என்னோட டிசைனிங் ஒர்க் எல்லாத்தையும் சேர்த்து வச்சு, ஒரு ஃபேஷன் ஷோ வச்சேன். அது செம ரீச்.

அதுல எக்ஸ்போர்ட் ஆர்டர் கிடைச்சது. ஏற்றுமதி வியாபாரத்துல இறங்கினேன். எக்ஸ்போர்ட்ல இறங்கினா, அதையே முழு வேலையா எடுத்து பண்ணியாகணும். அப்படி இருக்க முடியல. ஏன்னா சார் புரொடக்‌ஷன் ஒர்க்கை கவனிக்க சொல்லிடுவார். அதில் எக்ஸ்போர்ட் ஒர்க் கொஞ்சம் மிஸ் ஆக ஆரம்பிச்சது.

அதுல கொஞ்சம் நஷ்டமாகிடுச்சு. எக்ஸ்போர்ட் பிசினஸ் கையைக் கடிச்சதால, இனிமே துணி வியாபாரமே வேண்டாம்னு விட்டுட்டேன். நமக்கு எதுல passion இருக்கோ.. அது நம்மள விடாது. நம்மையே சுத்தி சுத்தி வரும். ஸோ, திருப்பி கொஞ்ச நாள்ல வேற ஒரு யூனிட் ஆரம்பிச்சேன்.

ரெண்டு பேர்ல ஆரம்பிச்ச அந்த யூனிட் பெரிய லெவல்ல ஆச்சு. பதினெட்டு வருஷங்கள் அதுல இருந்திருப்பேன். கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அந்த யூனிட்ல இருந்து வெளியே வந்துட்டேன். மறுபடியும் சின்ன இடைவெளி. ஒரு வருஷமா எதுவும் பண்ணல.

வீட்ல சார்கிட்ட பேசும்போதெல்லாம் ஃபேப்ரிக்ஸ், கலர்மிக்ஸிங், அவுட்ஃபிட்ஸ்னு பேசினதுல அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ‘நீ வேணா மறுபடியும் துணி பிசினஸை பண்ணிக்கோ’னுக்ரீன் சிக்னல் காட்டினார். சந்தோஷமாகிடுச்சு. உடனே, ‘பூர்ணிமா ஸ்டோர்ஸ்’னுசின்னதா யூனிட் ஒண்ணு ஆரம்பிச்சேன். என்னோட நெருங்கிய நட்பு வட்டத்துல உள்ளவங்களுக்காக ஆரம்பிச்சேன். பிரைடல் காஸ்ட்யூம்ஸ், டிசைனிங் பிளவுஸ், பார்ட்டி ஃபங்ஷன் காஸ்ட்யூம்னு எல்லாமே எங்க டெய்லரிங் யூனிட்ல பண்றோம்.

இந்த டைம்ல ‘கண்மணி’ சீரியல்ல நடிக்க கேட்டாங்க. டிவி சீரியலுக்கும் டைம் ஒதுக்கறதால, டிசைனிங் கொஞ்சம் டைட் ஷெட்யூலா போயிட்டிருக்கு. இதை இப்போதைக்கு ஒரு ஹாபியாகத்தான் பண்ணிட்டிருக்கேன். நான் பிரைடல் டிரெஸ்ஸிங், டிசைனர் பிளவுஸிங்ல நல்ல பெயர் வாங்கியிருக்கேன்.
இப்ப கொஞ்சம் வெஸ்டர்ன், கேஷுவல் வியர்ஸும் பண்றேன். முன்னாடியெல்லாம் மும்பையில் இருந்து துணி, மெட்டீரியல்ஸ் எல்லாம் வாங்கிட்டு வருவேன். இப்ப நம்ம சென்னையிலயே வெரைட்டி நிறைய கிடைக்குது. தென்னிந்தியாவில் கிடைக்கற சில்க் சாரீஸின் ரீச்னஸ் வேற எங்கேயும் கிடைக்கறதில்ல. ஸோ, கிடைக்கற ஃபேப்ரிக்ஸே நமக்கு போதுமானதா இருக்கு.

காஸ்ட்யூம் டிசைனிங்ல ரிதுகுமார் அண்ட் சபியாசாஷி டிசைனர்களின் ஒர்க் பிடிக்கும். என்னோட ரோல் மாடல், இன்ஸ்பிரேஷன்ஸ் அவங்கதான். அவங்க ரெண்டு பேருமே கல்கத்தா டிசைனர்ஸ். அதுவும் ரிதுகுமாரின் ஒர்க் அவ்ளோ பிரமிக்க வைக்கும். ‘இதெல்லாம் டிசைனிங்கிற்கு செட் ஆகாத கலர்’னு நாம நினைக்கற ஒரு டல் கலரை, அவர் கைபட்டதும் அவ்ளோ பிரமாதமான டிசைனா மாத்திக் காட்டியிருப்பார். சபியாசாஷி ‘பத்மாவதி’க்குக் கூட காஸ்ட்யூம் பண்ணி அசத்தினவர்.

என் மருமகளுக்கும் டிசைனிங் நாலேஜ் நிறைய உண்டு. நிறைய இன்புட்ஸ் கொடுப்பாங்க. நான் அவங்களுக்கும் டிசைன் பண்ணியிருக்கேன். ஆனா, பையனுக்கு டிசைன் பண்ணினதில்ல. குஷ்புவுக்கு என் ஒர்க் ரொம்ப பிடிக்கும். அவங்க பிளவுஸ் மெட்டீரியல்ஸ் கொடுத்தால், ‘உங்களுக்கு எப்படி வேணும்’னு கேட்பேன். ‘நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படி பண்ணிக் கொடுங்க’னு முழு சுதந்திரம் குடுப்பாங்க.

சிவகார்த்திகேயனுக்கு திருமணம் ஆன புதுசுல அவங்க மனைவி, ‘எங்கிட்டத்தான் டிசைன் பண்ணிக்கணும்’னு விரும்பி வந்து, பண்ணிக்கிட்டாங்க. சார் (பாக்யராஜ்) வெளியே செல்லும்போது அவரோட காஸ்ட்யூம்ஸை கவனிக்க சொல்வார். ஏன்னா மிக்ஸ் அண்ட் மேட்ச் செட் ஆகலைனா நான் எதாவது சொல்லிடுவேன்னு, என்னையே காஸ்ட்யூம் பண்ண சொல்லிடுவார்.

இதுவரைக்கும் ‘பூர்ணிமா ஸ்டோர்ஸ்’ பத்தி யார்கிட்டேயும் விளம்பரமே பண்ணினதில்ல. எல்லாருமே டிசைன்ஸ், ஒர்க் பிடிச்சு கேள்விப்பட்டுத்தான் வந்திருக்காங்க. எல்லாமே மவுத் டாக் பப்ளிசிட்டிதான். இப்ப இருக்கற யூனிட் ரொம்ப சின்னது. அதை பெரிய அளவில் பண்றது பத்தி இன்னும் யோசிக்கல...’’ என புன்னகைக்கும் பூர்ணிமா, சின்னத்திரை அனுபவத்தையும் பகிர்ந்தார்.

‘‘சன் டிவியில் வரும் ‘கண்மணி’யில் நடிச்சிட்டிருக்கேன். முதல் முறையா சின்னத்திரை பக்கம் வந்திருக்கேன். இதோட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்னோட ஃப்ரெண்ட். அவங்க ஒருநாள் என்கிட்ட ‘உனக்கொரு நல்ல ரோல் இருக்கு’னு சொல்லி சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க.

அவங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்னு நம்பி கமிட் ஆனேன். என் நம்பிக்கை வீண்போகல. ஆனா, டிவி சீரியல்தானேனு நினைச்சு போனா, சினிமாவை விட பிரமிக்கற ஒர்க்கிங் ஸ்டைல்ல போகுது. கேமராவுல இருந்து லைட்டிங் வரை பார்த்து பார்த்து பண்றாங்க.

‘கண்மணி’யில எனக்கு கிடைக்கற வரவேற்பை பார்க்கும் போது ஆச்சரியமா இருக்கு. இன்னொரு விஷயமும் தோணுச்சு. இவ்ளோ நாள் சீரியல் பக்கம் வராமல் இருந்துட்டோமேனு நினைச்சேன். ஆனாலும் என்ன,லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டேனே!’’ கலகலவென சிரிக்கிறார் டிசைனர் பூர்ணிமா!

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்