ரத்த மகுடம்-79



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘ம்...’’ முணுமுணுத்த சிவகாமி, அப்படியே கரிகாலனுடன் ஒன்றினாள்.வெந்து தணியும் உடலை சாந்தப்படுத்த இயலாமல் தன்னையும் மீறி கரிகாலன் மீண்டும் அழைத்தான். ‘‘சிவகாமி...’’‘‘ம்... சொல்லுங்கள்...’’தன் ஆதுரங்களை அவன் உதட்டில் தடவியபடியே சிவகாமி கேட்டாள். ‘‘என்ன..? எதற்காக என் பெயரை இப்படி மனனம் செய்கிறீர்கள்..?’’பதில் சொல்ல வாயைத் திறந்தவன், என்ன தோன்றியதோ அப்படியே மீண்டும் அவள் உதட்டைக் கடித்தான்.

உமிழ்நீரின் சங்கமத்தில் தன்னை மறந்த சிவகாமி அப்படியே அவன் முகத்தை தன் மார்பில் புதைக்கவிட்டு தொலை தூரத்தை வெறித்தாள்.
பார்வைதான் அங்கிருந்ததே தவிர பார்க்கும் இடம் எதுவும் மனதில் பதியவில்லை. பதிய வைக்க வேண்டும் என சிவகாமியும் முயற்சிக்கவில்லை. கரிகாலனும் அவளை முயற்சிக்கும்படி செய்யவில்லை.

செய்யத் தோன்றவில்லை என்பதே நிஜம். அந்த உண்மையை இருவருமே அக்கணத்தில் ஏற்றார்கள். கணத்துக்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள்.
இருவர் மனதிலும் சுற்றிச் சுழன்றது வனத்தில் நடந்த விசாரணை முறைதான். அது குறித்து இருவர் மனதிலும் பல்வேறு விதமான வினாக்கள் கிளைத்து எழுந்தன. இருவருக்கும் விடைகள் தேவைப்பட்டன. ஆனால், முடிந்த வரை இருவரும் அவற்றை அறியும் கணத்தை தள்ளிப்போட்டார்கள்.

இருவரும் இருவரையும் நம்பவில்லை என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. விசாரணையின் முடிவும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. மாறாக துணைக் கேள்விகளாக பல முளைக்கும்படியே வித்திட்டன. பேசினாலும் தீராதுதான். ஆனால், உரையாடுவதைத் தவிர வேறு தீர்வும் இதற்கு இல்லை. என்றாலும் சிவகாமியும் சரி... கரிகாலனும் சரி... பேசப் பயந்தார்கள். உரையாடாமல் இருப்பதே இப்போதைக்கு நல்லது என்ற முடிவுக்கு அவர்களாகவே வந்தார்கள்.

இந்த முடிவை இருவரது உடல்களும் ஏற்றன. ‘அப்பாடா...’ என சருமங்கள் விட்ட பெருமூச்சை இருவருமே தங்கள் அந்தராத்மாவில் உணர்ந்தார்கள். அதனாலேயே ஓர் உடலின் தாள கதிக்கு ஏற்ப மறு உடல் சப்தஸ்வரங்களை இசைத்தது.சிவகாமியின் கச்சையை மீறி திமிறிய கொங்கைக்குள் தன் வதனத்தைப் புரட்டியபடியே இவற்றை எல்லாம் யோசித்த கரிகாலனின் சிந்தனை இறுதியாக விசாரணையின் கட்டத்தில் தன் கழுத்தை, தானே அறுக்க முற்பட்ட சிவகாமியின் செயலில் வந்து நின்றது.

தன்னையும் அறியாமல் அவளது கொங்கைகளின் பிளவில் பதித்த தன் உதட்டை விலக்கி, அவள் கழுத்தை நாக்கால் தடவினான். காயங்கள் ஏதும் இல்லை என்பதை நூற்றியெட்டாவது முறையாக உணர்ந்ததும் பெருமூச்சுடன் தன் முகத்தை மீண்டும் அவள் கச்சையின் மேல் பதித்தான்.
கரிகாலனின் செய்கையை வைத்தே அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சிவகாமி மெல்ல நகைத்தாள்.

அந்தச் சிரிப்பில் நிம்மதிதான் பரிபூரணமாக வழிந்தது. ஒருவேளை அந்த வாள் தன் கழுத்தை சீவியிருந்தால் இந்நேரம் கரிகாலனின் நிலை என்னவாக இருக்கும்..?யோசித்தவள் தன்னையும் அறியாமல் பல்லவ இளவரசருக்கு மனதுக்குள் நன்றி சொன்னாள். இராஜசிம்ம பல்லவர் மட்டும் சமயோசிதமாக செயல்பட்டிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்..?பெருமூச்சு விட்டாள்.

எழுந்து தாழ்ந்த கொங்கைகளுடன் சேர்ந்து கரிகாலனின் முகமும் அசைந்தது.இருவரின் மனக்கண்ணிலும் அதே காட்சிதான் விரிந்தது.
தன் அருகில் இருந்த பல்லவ வீரனின் இடுப்பில் இருந்து இமைக்கும் நேரத்தில் வாளை உருவிய சிவகாமி, தன் சிரசை, தானே கொய்ய முற்பட்டாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கரிகாலன், அதிர்ந்தான். பல்லவ இளவரசரின் பின்னால் நின்றிருந்த அவனது இதயம் துடிக்கவும் மறந்தது.

அடுத்த கணம், சிவகாமியின் சிரசு தரையில் உருளும் என்றுதான் அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் நாள்
தோறும் வாள் பயிற்சி மேற்கொள்ளும் பல்லவ வீரர்கள் கையோடு வாளின் கூர்மையை தங்கள் கரங்களாலேயே பட்டை தீட்டுவார்கள்.
பயிற்சியின் ஓர் அங்கமாகவே இதுவும் இருந்தது. எனவேதான் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சியில் ஊசலாடினார்கள்.  

ஆனால், மனித எத்தனங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டதாகத்தானே வாழ்க்கை நகர்கிறது..? இந்த இயற்கையின் விதியிலிருந்து எந்த மனிதன் தப்பியிருக்கிறான்..? அந்த விதிதான் பல்லவ இளவரசர் இராஜசிம்மரின் உருவத்தில் இடி இடி என நகைக்க வைத்து அந்த இருப்பைக் காட்டியது!சிவகாமி தன் சிரசை அறுக்க முற்பட்டதும்... அவளது அந்திமக் காலம் முடிந்தே விட்டது என அங்கிருந்தவர்கள் நினைத்த நேரத்தில்தான் அந்த வனமே அதிரும்படி இராஜசிம்மர் நகைத்தார்.

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த உணர்வில் பல்லவ இளவரசரை அனைவரும் ஏறிட்டார்கள். அதிர்ச்சிக்குக் காரணம் அவரது நகைப்பு என்றால் ஆச்சர்யத்துக்குக் காரணம் சிவகாமியின் சிரசு வெட்டுப்படாத நிலை!‘‘சகோதரி! இப்படியொரு நிலையை ஊகிக்க முடியாதவன் பல்லவ நாட்டின் இளவரசனாக இருக்க முடியாது... பல உண்மைகளை சொல்லத் தயங்கி இந்த முடிவைத்தான் நீ எடுப்பாய் என்று  தெரியும். அதனால்தான் உன்னருகில் நிறுத்தப்பட்டிருந்த பல்லவ வீரனின் இடுப்பில் கூர் மழுங்கிய வாளை வைத்தேன்!’’

நிதானமாகச் சொன்ன இராஜசிம்மர், தான் அமர்ந்திருந்த பாறையில் இருந்து எழுந்தார். ‘‘வா சிவகாமி... என்ன அப்படிப் பார்க்கிறாய்..? என் தங்கை சிவகாமியின் தோற்றத்தில் வந்திருந்தாலும், உனது பெயர் என்னவாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நீ சிவகாமிதான்! எழுந்திரு. என்னுடன் வா... வீரர்களே, அவரவர் இடங்களுக்குச் செல்லுங்கள்... இந்த விசாரணையின் முடிவும், சிவகாமிக்கு நாம் அளிக்கும் தண்டனையும் இன்னும் சில நாழிகைகளில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்... கரிகாலா... என் தங்கையை அழைத்து வா...’’

சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென நடந்தார் இராஜசிம்மர்.சிவகாமியை எழுப்பி இனம் புரியாத உணர்வுடன் அவளை அழைத்துக்கொண்டு பல்லவ இளவரசரைப் பின்தொடர்ந்தான் கரிகாலன்.எந்த பர்ணசாலையில் அம்பு பாய்ந்த நிலையில் வந்த சிவகாமிக்கு மருத்துவச்சி சிகிச்சை அளித்தாளோ... அந்த பர்ணசாலையை நெருங்கியதும் இராஜசிம்மர் நின்றார்.

‘‘கரிகாலா... யாரேனும் வருகிறார்களா என்று பார்...’’ கட்டளையிட்ட இராஜசிம்மர், சிவகாமியை அழைத்துக்கொண்டு பர்ண
சாலைக்குள் நுழைந்தார். கதவைத் தாழிட்டார்.நாழிகைகள் ஊர்ந்தன; தவழ்ந்தன; நகர்ந்தன.இருப்புக் கொள்ளாமல் பர்ணசாலையின் மூடிய கதவைப் பார்த்தபடியே கரிகாலன் நின்றான்.தன் பொறுமையை அவன் இழந்த சமயத்தில் பர்ணசாலையின் கதவு திறந்து இராஜசிம்மர் மட்டும் வெளியில்
வந்தார். கதவை மீண்டும் மூடினார்.

‘‘கரிகாலா...’’
‘‘இளவரசே...’’
‘‘உடனடியாக நீயும் சிவகாமியும் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும்...’’
‘‘தங்கள் கட்டளை இளவரசே...’’‘‘மதுரைக் கோட்டைக்குள் நுழைந்து பாண்டிய மன்னரிடம் இந்த ஓலையைத் தரவேண்டும்...’’ என்றபடி தன் இடுப்பில் இருந்த ஓலைக்குழலை எடுத்து கரிகாலனிடம் கொடுத்தார்.

பதில் சொல்லாமல் அதைப் பெற்றுக் கொண்டான்.‘‘திருமணத்துக்கு முன் எல்லை மீறாமல் நடந்துகொள் கரிகாலா...’’ முகமெல்லாம் மலர தன் நண்பனின் தோளைத் தட்டி கண்சிமிட்டிவிட்டு இராஜசிம்மர் சென்றார்.கரிகாலனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், தன் மனதை ஆக்கிரமித்த பெண், பல்லவர்களுக்கு எதிரானவள் அல்ல என்பது மட்டும் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. இல்லாவிட்டால் பல்லவ இளவரசர் இப்படி நடந்துகொள்ள மாட்டாரே...

ஆனால், உண்மையில் இவள் யார்..? நிஜமான பல்லவ இளவரசி எங்கிருக்கிறாள்..? சாளுக்கியர்களால் அனுப்பப்பட்ட ஒற்றர் படைத் தலைவியை இந்தப் பெண் எங்கு அடைத்து வைத்திருக்கிறாள்..? சிவகாமி என்னும் பெயரில் நடமாடும் இவளது உண்மையான பெயர்தான் என்ன..?
கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள்... விடை தெரியாத வினாக்கள் பதிலைத் தேடாமல் அப்படியே இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன...

இத்தனைக்கும் மத்தியில் தன் மனதில் நிம்மதி படர்வதை கரிகாலனால் உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது.தழுவிய தென்றலை அனுபவித்தபடி அவன் பெருமூச்சுவிட்டபோது -பர்ணசாலையின் கதவுகள் திறந்தன.மான் தோலும் புலித்தோலும் தன் உடலைத் தழுவ பூரண வேட்டுவ கோலத்தில் பர்ணசாலைக்குள் இருந்து சிவகாமி வெளியில் வந்தாள்.

கரிகாலன் அவளை இமைக்கவும் மறந்து பார்த்தான்.அவன் பார்வை தன் அங்கங்களை ஊடுருவுவதை இனம்புரியாத மகிழ்ச்சியுடன் சிவகாமி அனுபவித்தபோது, குதிரைகளின் குளம்பொலிகள் கேட்டன.பல்லவ வீரன் ஒருவன் இரு அஸ்வங்களை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நகர்ந்தான்.

இராஜசிம்மரின் ஏற்பாடு!
கரிகாலனும் சிவகாமியும் எதுவும் பேசாமல் தத்தம் புரவிகளில் ஏறினர். தெற்கு நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்.
இடையில் பயணக் களைப்பு நீங்க வேட்டுவ சத்திரத்துக்கு வந்ததும்... இதோ ஈருடல் ஓர் உயிராக பிணைந்தபடி கிடப்பதும்...  
‘‘விடை தெரிய வேண்டுமா..?’’ கரிகாலனின் இடுப்பில் அமர்ந்தபடியே தன் முகத்தை விலக்கியபடி சிவகாமி கேட்டாள்.

‘‘எதற்கு..?’’‘‘பர்ணசாலைக்குள் பல்லவ இளவரசர் என்னை விசாரித்ததையும், அதற்கு நான் சொன்ன பதிலையும்...’’
‘‘அவசியமில்லை...’’பட்டென்று சொன்ன கரிகாலனின் கண்களை சிவகாமி உற்றுப் பார்த்தாள். ‘‘ஏன்..?’’
‘‘இந்நிலையே சவுகரியமாக இருக்கிறது!’’தன்னை மறந்து கலகலவெனச் சிரித்தாள் சிவகாமி.

அவன் மீது, தான் அமர்ந்திருக்கும் நிலையை எவ்வளவு நாசுக்காகக் குறிப்பிடுகிறான்..?‘‘ம்... ம்... இருக்கும்... இருக்கும்...’’நெகிழ்ந்த சிவகாமியை தன் இடுப்பில் இருந்து இறக்கினான் கரிகாலன்.

‘‘ஏன்..?’’ என்பதை தன் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.‘‘தலைவர் வரும்போது இப்படி நாம் இருப்பது மரியாதைக்குரிய செயல் அல்ல சிவகாமி!’’
‘‘தலைவரா... யார்..?’’ என்றபடி கரிகாலனின் கண்கள் சென்ற திசையை நோக்கித் திரும்பிய சிவகாமியின் முகத்தில் புன்னகை பூத்தது.
வாளை உருவியபடி அங்கு கடிகையின் பாலகன் நின்றிருந்தான்!

‘‘வாருங்கள் தலைவரே...’’ மரியாதையுடன் கடிகை பாலகனை கரிகாலன் வரவேற்றான். ‘‘பயணம் எல்லாம் சவுகரியமாக இருந்ததா..?’’
இப்படியொரு வரவேற்பை, தான் எதிர்பார்க்கவில்லை என்பதற்கு அறிகுறியாக கடிகை பாலகனின் முகம் மாறியது. கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தவன், பிறகு கரிகாலனை உற்றுப் பார்த்தான். ‘‘தலைவரா..? யாரைச் சொல்கிறீர்கள் அண்ணா..?’’

‘‘தங்களைத்தான்! புதையுண்டு போய்விட்டதாகக் கருதப்படும் வேளிர் குலத்துக்கு உயிர் கொடுக்க வந்திருக்கும் தலைவர் தாங்கள்தானே..? இந்த சிறியவனை அண்ணனாக அழைக்கும் தங்கள் பெருஞ் செயலில் இருந்தே தங்கள் இயல்பு எங்களுக்குப் புரிகிறதே!’’

உருவிய வாளை தன் இடையில் புகுத்தியபடியே கரிகாலனை ஆராய்ந்தான் கடிகையின் பாலகன். சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தன்னை வேளிர்களின் தலைவனாக நியமித்து செய்த ரகசிய காப்பு பிரமாணத்தை கரிகாலனும் அறிந்திருக்கிறான் என்பது அவனுக்கு வியப்பாக இல்லை. ஓரளவு இதை எதிர்பார்க்கவே செய்தான்.

எனவே, சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்குமாக அந்த வேட்டுவ சத்திரத்தில் நடந்த கடிகையின் பாலகன், சாளரத்தை ஏறிட்டபடி திரும்பிப் பார்க்காமல் கேட்டான். ‘‘என்ன செய்வதாக உத்தேசம் அண்ணா..?’’ ‘‘தங்களுடன் மதுரைக்கு வர எண்ணுகிறோம் தலைவரே...’’கரிகாலனின் இந்த பதில் கடிகையின் பாலகனை அதிர்ச்சி அடைய வைத்தது. சட்டென்று திரும்பினான்.

‘‘எங்கள் இருவருக்கும் எதிர்க்கும் எண்ணமில்லை... வேட்டுவ சத்திரத்தைச் சுற்றிலும் நீங்கள் நிறுத்தியிருக்கும் சாளுக்கிய வீரர்களை வந்த வழியே திரும்பிப் போகச் சொல்லுங்கள். பாண்டிய மன்னருக்கு நீங்கள் வாக்களித்தபடி எங்கள் இருவரையும் மதுரைக்கு அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படையுங்கள்!’’

சொன்ன கரிகாலன், கடிகை பாலகனை மேற்கொண்டு பேச விடவில்லை. ‘‘சிவகாமி... சாதாரண தமிழ்ப் பெண்ணாக உடை அணிந்து கொள். நாங்கள் இருவரும் சத்திரத்துக்கு வெளியில் நிற்கிறோம்...’’அடுத்த ஒரு நாழிகை கால்நடையாக கடிகை பாலகனைப் பின்தொடர்ந்து பயணம் செய்த கரிகாலனும் சிவகாமியும் மதுரைக் கோட்டையை நெருங்கினார்கள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்