காட்டிக் கொடுத்ததும், காப்பாற்றியதும் என் டைரிதான்!நெகிழ்கிறார் நெல்லை சதி வழக்கில் கைதான வாத்தியார்



தளர்ந்த நடை. தளராத பார்வை. மெல்லிய குரல். ஆனாலும், வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப்பின் பேச்சில் கம்பீரம் கொஞ்சமும் குறையவில்லை.
1950ம் ஆண்டு நெல்லை சதி வழக்கில் கைதாகி மதுரைச் சிறையில் இருந்த தமிழ் பண்டிட் இவர். நிச்சயம் தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என்ற நிலை. ஆனால், விடுதலையாகி இன்று அவ்வழக்கின் நேரடி சாட்சியாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மட்டுமல்ல. ‘மோசம் போன மோதிரம்’, ‘வாத்தியார்’, ‘பனையண்ணன்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியிருக்கிறார். இதில், ‘வாத்தியார்’ பரவலான கவனம் பெற்ற நாவல். கடந்த மாதம் 94வது வயதைத் தொட்டிருக்கும் ஆசிரியர், இப்போது பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசித்து வருகிறார்.

ஒரு ஆசிரியராக ஊர் பண்ணையாரை எதிர்த்து சமூக சீர்திருத்தம் செய்த சம்பவங்களில் தொடங்கி இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதத்துக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகப் போலீஸிடம் அடிவாங்கியது வரை நினைவில் வரும் சம்பவங்களை எல்லாம் நினைத்து புன்னகைக்கிறார்.

‘‘ஓட்டப்பிடாரம் பக்கத்துல ராஜாவின் கோவில்னு ஒரு கிராமம். அங்கதான் பிறந்தேன். எங்கப்பா பெயர் சந்தோஷம். அம்மா பொன்னம்மாள். மொத்தம் நாங்க 14 பிள்ளைகள். இதுல, நான் பத்தாவதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவன்!’’ சிரித்தபடியே தன் கதையைத் தொடர்ந்தார் ஜேக்கப்.

‘‘எப்படி இந்துக்கள்ல இரட்டைப் பிள்ளை பிறந்தா ராமர், லட்சுமணன்னுபேர் வைப்பாங்களோ அதுமாதிரி கிறிஸ்துவர்கள் ஏசா, யாக்கோபுனு வைப்பாங்க. பைபிள்ல ஓர் இடத்துல டுவின்ஸ் வர்றாங்க. அவங்க பெயர் ஏசா, யாக்கோபு. அதனால, எனக்கு யாக்கோபுனு வச்சாங்க. என் கூடப்பிறந்த ஏசா சில மாதங்கள்ல இறந்துட்டான். ‘ராஜாவின் கோவில் சந்தோஷம் ஜேக்கப்’ என்பதின் சுருக்கமே ஆர்.எஸ்.ஜேக்கப்.
எங்கப்பா விவசாயமும் வியாபாரமும் செய்திட்டு இருந்தார். எங்க ஏரியா பக்கம் பருத்தி நிறைய பயிரிடுவாங்க. அதிலிருந்து வர்ற பஞ்சை எடுத்திட்டுப் போய் தூத்துக்குடி ஹார்வி மில்ல விலைக்குக் கொடுப்பார்.

அவருக்கு நாங்க நல்லா படிக்கணும்னு ஆசை. அப்ப எங்க ஊர்ல ஐந்தாவது வரைதான் இருந்துச்சு. அங்க எல்லோருமே தொடக்கக் கல்வியை முடிச்சோம். பிறகு, நான் நடுநிலைக் கல்வியை புதியம்புத்தூர்ல படிச்சேன்.அப்புறம், ஆசிரியர் பயிற்சிக்காக திருநெல்வேலி டவுனுக்
குப் போனேன். 1943ல் இருந்து 1945 வரை ரெண்டு வருஷம் ஆசிரியர் பயிற்சி. தொடர்ந்து அங்கிருந்த சைவ சித்தாந்தக் கழகத்துல மூணு வருஷம் தமிழ் வித்துவான் படிப்பு. இதைப் படிக்கும் போதே எங்க ஊர் பக்கம் இருந்த நயினார்புரம் கிராமத்துல ஆசிரியர் வேலை கிடைச்சிடுச்சு. அது டிடிடிஏனு சொல்ற திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோஸியேஷன் பள்ளி. அதனால, படிச்சிட்டே ஆசிரியர் பணி செய்தேன்.

அந்த ஊர், ஒரு சமூகத்தைச் சேர்ந்த பண்ணையாரின் ஆதிக்கத்தில் இருந்துச்சு. சாதி அதிகம் பார்க்கிற ஊர். அங்க வாழ்ந்த பண்ணையார்கள், மக்கள் யாரும் படிச்சிடக் கூடாதுனு காலம் காலமா பள்ளிக்கூடம் அமைக்காமலே இருந்தாங்க. ஏன்னா, படிச்சிட்டா அவங்க மாடுகளை மேய்க்கிறதுக்கும், சாணி அள்ளுறதுக்கும் ஆட்கள் இருக்கமாட்டாங்க இல்லையா? இதனால, கிறிஸ்துவ ஸ்தாபனத்திலிருந்து ஸ்கூல் அமைக்கும்போது பயங்கர எதிர்ப்பு கிளம்புச்சு.

அந்தப் பள்ளி ரெண்டு கிறிஸ்துவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி. அப்ப தலித்துகள்தான் கிறிஸ்துவர்களாக இருந்தாங்க. ஆனாலும் மற்ற சாதியைச் சேர்ந்த எல்லோரும் அங்க படிக்கலாம்.

நான் அங்க ஆசிரியரா போனப்ப எனக்கு பத்தொன்பது வயசுதான் இருக்கும். எனக்கும் பண்ணையாருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டுச்சு. அவர், ‘உனக்கு இங்கிருந்து பொன்னோ, பெண்ணோ… என்னென்ன வேணுமோ எல்லாம் அனுபவிச்சுக்கோ. ஆனா, படிப்பு மட்டும் ெசால்லிக் கொடுத்திடாதே’னு மிரட்டினார்.

அவர் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் தூத்துக்குடி கான்வென்ட்ல படிச்சாங்க. நான் விடல. பிறகு, கொலை மிரட்டல் விட்டாங்க. ஆனா, எங்கப்பாவும், தாய்மாமாவும் அந்தப் பகுதியில செல்வாக்கா இருந்தாங்க. அப்ப நான் ஆசிரியராக மட்டும் இருக்கல. பள்ளி அருகே இருந்த வேதகோயிலின் பாதிரியாராகவும் இருந்தேன். அதனால, அவங்களால என்னை மிரட்டத்தான் முடிஞ்சது.

பிறகு, நான் எல்லா பிள்ளைகளையும் கோழி பிடிக்கிற மாதிரி பிடிச்சு பள்ளிக்குக் கொண்டு வந்தேன். அப்ப ஒரு ஆசிரியருக்கு 35 பிள்ளைகள் தேவை. நான், ஓராசிரியாக வந்து பிறகு மூணு ஆசிரியர் பள்ளியா மாத்தினேன். அந்தளவுக்கு பிள்ளைகளின் எண்ணிக்கையை உயர்த்தினேன்.

அப்ப மக்கள் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அந்நேரம் ஒட்டகப் பால்ல பண்ணிய பவுடர் அமெரிக்காவுல இருந்து வந்துச்சு. பள்ளிக் கூடத்திலேயே அடுப்புக் கூட்டி அந்தப் பவுடரைக் காய்ச்சி கொடுத்தேன். அதை ஒரு கிளாஸ் குடிச்சாலே போதும். பசிக்கவே பசிக்காது. இதனால, அந்த ஊர்ல எனக்கு செல்வாக்கு கூடிச்சு.

ஒருகட்டத்துல பண்ணையார் வெறுப்பாகி தூத்துக்குடியில இருந்த வீட்டுல தங்க ஆரம்பிச்சிட்டார். இதுக்கிடையில இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சது. அந்நேரம், மத்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது.அரசைக் கவிழ்க்க சதி செய்ஞ்சாங்கனு எல்லா பகுதியிலும் கம்யூனிஸ்ட்டுகளைக் கைது செய்தாங்க. நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவங்க நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டாங்க. இதனால, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலதண்டா
யுதத்தை போலீஸ் தேடியது. நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இல்லை. ஆனா, அதில் தீவிர பற்றுள்ளவன்.

அப்ப, திம்மு ெரட்டியார், சுப்பா ரெட்டியார்னு என்னுடைய உயிர் நண்பர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தாங்க. அவங்க கூட சேர்ந்து கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்குப் போவேன். அதனால, வேத கோயில் உள்ளே வசதியா இருக்கும்னு பாலதண்டாயுதத்தை ஒளிச்சு வச்சிருந்தேன். அங்க இருபது நாட்கள் இருந்தார்.

இந்நேரம் வெங்கடகிருஷ்ணன்னு ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் போலீஸ்கிட்ட அப்ரூவர் ஆகி, ‘இப்ப வாத்தியார்கிட்ட போனா பாலதண்டாயுதத்தைப் பிடிச்சிடலாம்’னு சொல்லியிருக்கார்.நான் பள்ளியில பாடம் நடத்திட்டு இருந்தேன். ஒரு லாரி நிறைய போலீஸ் வந்தாங்க. பள்ளிக்குள்ளே என்னை அடிச்சாங்க. மக்கள் எல்லாம் எனக்கு ஆதரவாக நின்னு போலீஸ் மேல கல்லை வீசினாங்க. ஒரே கலவரமாகிடுச்சு. அப்புறம், தடியடி நடத்திட்டு என்னை கைது பண்ணினாங்க.

பிறகு, தூத்துக்குடி சப் ஜெயில்ல வச்சு இரண்டு நாள் சித்திரவதை செய்தாங்க. அதுல, ஒரு போலீஸ்காரன், ‘கல்யாணம் கில்யாணம் கட்டிறாதலே… அப்புறம் பிள்ளை பொறக்காது’னு சொன்னான். அந்தளவுக்குச் சித்திரவதை. அப்புறம், என்னை நேரா படுக்க வச்சு, கால் மேல உருட்டுக்கட்டை போட்டு அதுல ஏறி நின்னு டான்ஸ் ஆடினான். வலி, உயிர் போச்சு.  

பிறகு, ஒரு சிரட்டையில புள்ளப்பூச்சியை வச்சு அதை என் தொப்புள் மேல கவிழ்த்தி இறுகக் கட்டிட்டான். ஆனாலும், பாலதண்டாயுதம் எங்க இருக்கார்னு சொல்லல. மூணு நாளைக்குப் பிறகு கொக்கிரகுளம் ஜெயில்ல வச்சிருந்தாங்க. பிறகு, மதுரை ஜெயிலுக்கு மாத்தினாங்க.

அங்க 1950ல் இருந்து 1953 ஆகஸ்ட் வரை மூன்றரை வருஷம் இருந்தேன். என்னை கைது செய்யும்போது நிறைய புத்தகங்களை அள்ளினாங்க. அதுல ஒரு புக்ல ‘மார்க் சுவிசேஷம்’னு இருந்தது. பைபிள்ல 66 புத்தகங்கள்ல மார்க் இரண்டாவது புத்தகம். அதைப் பார்த்த போலீஸ்காரன் ‘இதுதான்ப்பா மார்க்ஸ் புக்கு. முக்கியமான ஆவணம்’னு சொன்னான். அதைக் கேட்டதும், அந்த வலியிலும் என்னால சிரிக்காம இருக்க
முடியல!

எனக்கு சின்ன வயசுல இருந்தே டைரி எழுதுற பழக்கம் இருந்தது. அதுல, ‘இன்றிரவு கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் தலைமையில் எம் பள்ளியில் ரகசியக் கூட்டம் நடந்தது’னு எழுதியிருந்தேன். அடுத்து, ‘மீளாவிட்டானில் ரயில் அப்பளம் போல் நொறுங்கிக் கிடந்தது’னு குறிப்பிட்டிருந்தேன்.

இதையெல்லாம் பார்த்த போலீஸ்காரன், ‘ஏய் வாத்தியான்… உன் தலையில தூக்குக் கயித்தை நீயே போட்டுக்கிட்டியே’னு கிண்டலா சொன்னான். எல்லா வழக்கையும் என்மேல போட்டான்.இந்த டைரி மாட்டிக்கிட்டதால அது ரிக்கார்ட் ஆவணமாகிடுச்சு. இதனால, வக்கீல்கள் என்.டி.வானமாமலையும், சண்முகமும், ‘வீட்டுல எந்த நம்பிக்கையும் கொடுத்துடாதீங்க’னு சொன்னாங்க.

இந்நேரம், தீர்ப்பை ஒத்தி வச்சிட்டு நீதிபதி சுப்ரமணியன், கொடைக்கானல் போயிட்டார். ேபாகும்போது என் டைரியைக் கேட்டு வாங்கிட்டு போயிருக்கார். அதைப் படிச்சுப் பார்த்தவர், ‘இவர் ஒரு நேர்மையான ஆசிரியர்’னு கண்டுபிடிச்சிருக்கார்.

அந்த டைரியில பாலதண்டாயுதம் ரகசியக் கூட்டம் நடத்தினார். ஆனால், நான் அதில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியையும் பதிவு செய்திருந்தேன். ஏன்னா, நான் கட்சி உறுப்பினர் இல்லை. அதனால, நீதிபதி என்னை விடுதலை செய்தார். எந்த டைரியால் கைது செய்யப்பட்டேனோ அந்த டைரியே எனக்கு விடுதலை வாங்கித் தந்தது.

இந்த சதி வழக்குல 96 பேர் மேல் வழக்கு பதிஞ்சாங்க. இதுல மொத்தம் 9 பேருக்கு தூக்குத் தண்டனையும், 17 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிச்சாங்க. தோழர் நல்லகண்ணு, மாயாண்டி பாரதி எல்லாம் இந்த வழக்குல இருந்த என் நண்பர்கள்...’’ என நெல்லை சதி வழக்கைப் பற்றி விரிவாக விளக்கிய ஜேக்கப், விடுதலையான பிறகும் பிரச்னை தொடர்ந்தது என்கிறார்.

‘‘வெளியே வந்ததும் என்னுடைய சான்றிதழ், ஆசிரியர் சர்வீஸ் ரிக்கார்ட் எல்லாம் கேன்சல் ஆகிடுச்சு. வேலையும் போயிடுச்சு. இதனால, முழு நேர கட்சி ஊழியரா வந்திடுறேன்னு கம்யூனிஸ்ட் கட்சியில சொன்னேன். அப்ப தூத்துக்குடியில முருகானந்தம், ஐசக்னு ரெண்டு பேர் முழுநேர ஊழியரா இருந்தாங்க. ‘அவங்களுக்கே எங்களால சம்பளம் கொடுக்க முடியல. நீ எந்த பாதிரியார் கால்ல விழுவியோ தெரியாது. போய் வாத்தியாரா மறுபடியும் சேர்ந்திடு’னு மாநிலச் செயலாளர் அறிவுரை சொன்னார்.

அப்ப டி.எஸ்.கேரட் என்பவர் புதியம்புத்தூர் ஏரியாவுக்கான டிடிடிஏ பள்ளிக் கூட நிர்வாகியாக இருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவர்தான் மறுபடியும் எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார். என்னுடைய சான்றிதழ்களையும் வாங்கித் தந்தார்.

TSRனு சொல்லப்படுற டீச்சர்ஸ் சர்வீஸ் ரிஜிஸ்டரை திரும்பக் கொடுத்ததும் அவர்தான். அவர் இங்கிலாந்து திரும்பும் போது, ‘நானும் உன்னை மாதிரி கம்யூனிஸ்ட்டாக இருந்தவன். உன் கஷ்டங்கள புரிஞ்சுகிட்டேன்’னு சொன்னார்.

பிறகு, திருநெல்வேலி டயோசீசன்ல சில்ட்ரன்ஸ் மிஷனரில பணியாற்றினேன். ஒவ்வொரு கிராமப் பள்ளிக்கும் போய் குழந்தைகளுக்கு நீதிபோதனை கதைகள் சொல்ற வேலை. அதுல 16 வருஷம் பணி செய்தேன். அந்த அனுபவம் என்னை, ‘ஊரும் பேரும்’னு நூல் எழுத வச்சது. ஒவ்வொரு ஊருக்கான பெயர்க் காரணத்தை அதில் தொகுத்தேன்.

என் மனைவி வயலட்டை 1956ல் திருமணம் முடிச்சேன். அவங்களும் ஆசிரியர். அவங்க குடும்பத்துல அத்தை, சித்தினு யாருக்கும் குழந்தை கிடையாது. அதனால, அவங்களுக்கும் குழந்தை பிறக்காதுனு எல்லாரும் சொன்னாங்க.  

ஆனா, பைபிள்ல மலடி எனப்பட்டவள் ஏழு பெற்றாள்னு இருக்கு. நான் ஏழு பிள்ளைகள் பெற்றேன். ெஜயபாரதி, ெஜயரதி, ஜெயராஜ், ஜெயதாஸ், ஜெயபாலன், ஜெயவீரன், ஜெயடாரதினு அந்த ஏழு பேரும் இன்னைக்கு நட்சத்திரங்களா மின்னுறாங்க.

1950 களில் எழுத்தாளர் ஜி.நாகராஜனும் நானும் ெநருங்கிய நண்பர்களா இருந்ேதாம். தமிழறிஞர் நா.வானமாமலை பாளை முருகன்குறிச்சியில் டியூட்டோரியல் நடத்திட்டு வந்தார். அதுல, ஜி.நாகராஜன் வேலை பார்த்தார். அதுக்கு எதிர்லதான் என் வீடு இருந்துச்சு. இதனால, ரெண்டு பேரும் நட்பாகிட்டோம்.

அவர் டவுன்ல மாடத்தெருவுல இருந்த ஒரு பாலியல் தொழில் செய்கிற பெண்ணை திருமணம் செய்யப் போறேன்னார். ஆனா, அந்தப் பெண், ‘இதெல்லாம் சரிவராது’னு ஒதுங்கிப் போயிடுச்சு. அதைத்தான் ‘குறத்தி முடுக்கு’னு நாவலா எழுதினார். அந்த நாவல் பற்றி என்னிடம் தாமிரபரணி ஆத்துமணல்ல நிறைய விவாதிச்சு இருக்கார். அப்புறம், அவர் மதுரை போயிட்டார்.

நான் 1985ல் ஓய்வு பெற்றேன். பிறகு, டயோசீசன்ல இருந்து 170 வருஷமா வெளிவரும் ‘நற்போதகம்’ பத்திரிகைக்கு ஆசிரியரா 12 வருஷம் வேலை பார்த்தேன். இப்ப, செய்தித்தாள் வாசிக்கிறதும், டைரி எழுதுறதுமா என் வாழ்க்கை நகர்ந்திட்டு இருக்கு...’’ மாறாத மலர்ச்சியுடன் நெகிழ்ந்தபடி புன்னகைக்கிறார் ஜேக்கப்.

பேராச்சி கண்ணன்