அணையா அடுப்பு-13அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

சங்கத் தமிழன்!

நாற்பது வயதைக் கடந்தபோது அதுநாள் வரையிலான ஆன்மீக ஞான வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினார் வள்ளலார்.மறுபிறப்பு, முக்தி மாதிரி யான புராதன சமய மரபு நோக்கங்கள் குறித்தெல்லாம் அவருக்கு சந்தேகங்கள் எழுந்தன.‘வாழையடி வாழை மரபில் வந்தவன் நான்’ என்று சொல்லிக் கொண்ட வள்ளலார், புதிய பாதையை உருவாக்கவும் தலைப்பட்டார்.அதுவே சமரச சுத்த சன்மார்க்க நெறி.இந்நெறியை பின்பற்றுபவர்களுக்காக ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்கிற அமைப்பையும் 1865ல் தன்னுடைய 41வது வயதில் நிறுவினார்.

பின்னர் சங்கத்தின் பெயரை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று மாற்றிக் கொண்டார்.அதுநாள் வரை தன் வாழ்வியல் அனுபவங்களில் உணர்ந்த பேருண்மைகள், கற்றுணர்ந்த ஞானம் ஆகியவற்றின் துணையால் தன்னுடைய அகத்தே ஒளிர்ந்த ஜோதியை குன்றிலிட்ட விளக்காய் உலகுக்கெல்லாம் ஒளிவீச வகை செய்தார்.

புத்தருக்குப் பிறகாக ஆன்மீகத் துறையில் சங்கம் கண்டவர் வள்ளலார் ஒருவரே.
இந்த புதிய நெறியை நடை முறைப்படுத்த வள்ளலாரை உந்தித் தள்ளியது எது?
சாதி...
சமயம்...
மொழி...
இனம்...

பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.இரு வெவ்வேறு மனிதர்களின் மனங்களுக்கு இடையே பாலம் அமையவிடாமல் தடுக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் - அது புனிதமானதாகக் கருதப்பட்டிருந்தாலும் - அதை மீறி பல்லாயிரம் மனிதர்கள் மனங்களால் இணைந்து கூட்டு மனமாக செயல்பட வேண்டும் என்பதே வள்ளலாரின் எதிர்பார்ப்பு.

தன்னுடைய சங்கத்தின் மூலம் அந்த அரிய பணியை நிகழ்த்திவிட முடியுமெனவும் நம்பினார்.சன்மார்க்க சங்கத்தில் சேருவதற்கு மூன்றே மூன்று நிபந்தனைகளை மட்டும் விதித்தார்.

* கொலை, புலை தவிர்த்தோர்...
* காமம், கோபம் போன்ற உணர்வுகளை ஞானத்தால் வெல்பவர்கள்...
* மதம், சமயம், மார்க்கம் போன்ற மரபுகளைக் கைவிடத் தயாராக இருப்பவர்கள்.
மூன்றாவது நிபந்தனை அக்காலத்தில் எத்தகைய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்குமென தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

சாதி, சமய வேறுபாடுகளை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்ட கட்டடமாகத்தான் அன்றைய நிலவுடைமை சமுதாயம் அமைந்திருந்தது.
வள்ளலாரின் சங்கம், ஆண்டை - அடிமை முறைக்கு முற்றிலும் எதிர்மாறான தன்மையைக் கொண்டிருந்தது.

ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு பொதுவுடமைக் கருத்துகளில் மக்கள் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கால கட்டம் அது.உலகம் முழுக்கவே தங்கள் உரிமைகளுக்காக மக்கள் திரண்டு போராடத் தொடங்கியிருந்தனர்.வள்ளலாரின் சன்மார்க்க சங்கம், அந்தஉணர்வுகளை தமிழகத்தில் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.சங்கத்துக்கு யார் தலைவர்?வள்ளலார் அல்ல.

இறைவனே நமக்கு தலைவன் என்று அறிவித்தார்.எனவேதான்-பெரும்பாலான மத அமைப்புகளுக்கு தலைவர்கள் பரம்பரையாக வருவதைப் போல சன்மார்க்க சங்கத்துக்கு அடுத்தடுத்து தலைவர்கள் யாரும் இல்லை.வள்ளலாரும் தன்னை தலைவன் என்று கூறிக் கொண்டதில்லை.தனக்குப் பிறகு எவரையும் தலைவன் என்று அடையாளம் காட்டியதுமில்லை.ஆகவே -சன்மார்க்க சங்கத்தில் பதவிச் சண்டையும் இல்லை.

சன்மார்க்க சங்கம், இன்னுமொரு மதமல்ல.அதுஓர் இயக்கம்.எல்லா உயிர்களிடமும் கடவுள் இருக்கிறார். எனவே, எந்த உயிரும் சக உயிரை எவ்
வகையிலும் அச்சுறுத்தக் கூடாது என்பது அவரது அடிப்படைக் கொள்கை.வெறும் பக்தி யில் மட்டுமே ஒருவனுக்கு மனநிறைவு கிடைத்துவிடாது.வாடுகின்ற பயிரைக் காணும்போதெல்லாம் வாடுவதோடு நம்முடைய கடமை முடிந்துவிடவில்லை. அதற்கு நீரூற்ற வேண்டும்.

ஓர் உயிர் மீது ஒருவனுக்கு இரக்கம் பிறக்கிறது என்றால் இரக்கப்படுபவனும், இரக்கத்துக்கு உள்ளாகும் உயிரும் என்று இருதரப்பும் பயனடைகின்றன. ஒரு தரப்புக்கு மன ஆறுதல். மறுதரப்புக்கு பொருள் ஆறுதல்.எனவே -எந்தஒரு சன்மார்க்கியும், எவரொருவரும் பசியாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்றார் வள்ளலார்.இந்த உடல் இருக்கும்போதே இறைவனோடு கலக்க முடியும். அதற்கு  தொண்டுநெறிதான் ஒரே வழி என்றும் வழிகாட்டினார்.

வள்ளலாரின் புதிய நெறிக்கு அப்போது சனாதனிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு தோன்றியது.வருணாசிரம தர்மத்துக்கு எதிராக தமிழ்ச் சூழலில் முதலில் ஓங்கி ஒலித்த குரலாக வள்ளலாரின் குரலே இருந்தது.வெறுமனே புரட்சிக் குரலாக மட்டுமின்றி வள்ளலாரிடம், வாழ்வுக்கான தீர்வும் இருந்தது கண்டு ஏராளமான எளிய மக்கள் அவர் பின்னால் திரளத் தொடங்கினர்.

வள்ளலார் - ஏழை, பணக்காரன் பாகுபாடு பார்க்க மாட்டார்.உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி பார்க்க மாட்டார்.நன்மையை மட்டுமே உபதேசிக்கிறார்.இது போதாதா?சாமானிய மக்கள் மட்டுமின்றி சாமியார்கள் சிலரும் கூட அவருடன் அணிவகுத்தார்கள்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் -கல்பட்டு அய்யா.திருநறுங்குன்றம் என்கிற ஊரில் இராமலிங்க மூர்த்திகள் என்கிற சுவாமிகள் இருந்தார்கள்.
சன்மார்க்க சங்கத்தின் புகழை காதுகுளிரக் கேட்டுக் கொண்டிருந்தவர், வள்ளலாரைச் சந்திக்க பெரும் ஆவல் கொண்டிருந்தார்.

ஒருநாள் -திருநறுங்குன்றத்துக்கு விஜயம் செய்தார் வள்ளலார்.வெள்ளுடை வேந்தனைக் கண்ட இராமலிங்கமூர்த்தி களின் மனசுக்குள் நல்லொளி பரவியது.தன்னுடைய சீடனை அழைத்தார்.“இனி எல்லாம் உனதே. நான் கிளம்புகிறேன்...” என்றார்.

குழம்பிப்போன சீடனிடம் சொன்னார்.“இனி நான் உன் குருவல்ல. நீயே குரு. நான் என் குருநாதனைக் கண்டுவிட்டேன். அவருடன் செல்கிறேன்...” என்று சொல்லியவாறே, கட்டிய துணியோடு வள்ளலாருடன் கிளம்பி வந்துவிட்டார்.

அவருக்கு தீட்சை அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார் வள்ளலார்.வள்ளலாரின் பக்தர்கள் ‘கல்பட்டு அய்யா’ என்று அன்போடு அழைத்தது இந்த இராமலிங்கம் சுவாமிகளைத்தான்.இவரைப் போலவே பல சாமியார்களும்கூட வள்ளலாரின் புதிய நெறியை ஏற்றுக்கொண்டார்கள்.
மனதுக்குள் பழம் பஞ்சாங்கங்களாக இருந்த சிலர் அவரை விட்டு விலகியும் சென்றார்கள்.பித்தச்சாமி அவர்களில் ஒருவர்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்