IAS தேர்வில் வென்ற அறிஞர் அண்ணாவின் பேத்தி!நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வில் வென்று பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார் பிரித்திகா ராணி. காரணம், அவரது குடும்பப் பின்னணி. ஆம்; தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்திதான் பிரித்திகா ராணி.  அறிஞர் அண்ணாவிற்கு குழந்தையில்லை. தன் சகோதரியின் மகனான பரிமளத்தை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார். அந்த பரிமளம் அண்ணாதுரையின் மகள்தான் இளவரசி. முத்துக்குமார் - இளவரசி தம்பதியின் மூத்த மகள்தான் பிரித்திகா ராணி.

‘‘அப்பாவோட நண்பரின் மகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக எங்க வீட்டுல தங்கி இருந்தாங்க. அவங்க தேர்வுக்காக படிப்பதைப் பார்த்து எனக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மீது ஆர்வம் வந்துச்சு. சின்ன வயசுல இருந்தே டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் அதிகம். மாவட்ட, மாநில அளவில் நடந்த நிறைய போட்டிகளில் பங்குபெற்றிருக்கிறேன். பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கங்கள் பல பெற்றுள்ளேன்.

விளையாட்டு ஒருபுறம் இருந்தாலும் படிப்பில் ரொம்பவேஆர்வமா இருப்பேன். எப்பவும் நல்ல மதிப்பெண்தான். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் இடம் கிடைத்தாலும், பள்ளித்தேர்வில் 92% மதிப்பெண்கள் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்...’’ என்கிற பிரித்திகா ராணி, கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போதுதான், குடிமைப்பணியே தனது இலக்கு என முடிவு செய்திருக்கிறார்.

‘‘2018ம் ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிந்த அடுத்த தினமே சங்கர் அகாடமியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டேன். சரியான திட்டமிடல்தான் முதல் முறைத் தேர்விலேயே என்னை வெற்றி பெற வைத்தது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிப்பேன். படித்து முடித்ததை மனதில் பரிசீலிப்பேன். ஒரு தலைப்பைப் படித்தால் அது சார்ந்து 360 டிகிரி கோணத்தில் தகவல்களைத் தேடிப் படிப்பேன்.

பள்ளிப் பாடப்புத்தகங்களைச் சிறப்பாகப் படித்தால் சிவில் சர்வீஸஸ் தேர்வு எளிது. முக்கியமாக ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடங்களைத் திரும்பப் படிக்கவேண்டியது சிறப்பு.பாடப்பிரிவை எடுப்பதில் தெளிவாக இருந்தேன். ஆந்த்ரபாலஜி எனப்படும் மானுட
வியலே என் தேர்வு. ஒருசிலர் முதலில் இந்தப் பாடத்தை முயற்சித்துப் பார்ப்போம். சரிப்பட்டு வரவில்லை என்றால் பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என எடுத்துக்கொண்ட பாடப்பிரிவை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அது தவறான அணுகுமுறை.

ஒரு பாடப்பிரிவையே ஆழமாகப் படிப்பதன் மூலம் வெற்றி யை வசப்படுத்தலாம். அதுவே குடிமையியல் தேர்வுக்கான வெற்றிச் சூத்திரம். தேர்வுக்குத் தயாரான இரண்டு வருடங்களும் செல்போன், சமூகவலைத்தளங்கள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக படித்தேன்... ’’ என்கிற பிரித்திகா ராணி இந்தி தெரியாவிட்டாலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாயிலாகவே படித்து சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

‘‘எப்போதும் ஏழைகளின் குரலாக இருக்கவேண்டும். நாம் செய்யும் பணி அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கானதாக இருக்கவேண்டும். குரலற்றவரின் குரலாக எனது குடிமையியல் பணி இருக்கும். தாத்தா ஏழைகளுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் உழைத்தவர். எனினும் அவரது நிழலில் குளிர் காய விரும்பவில்லை. எனக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறேன்...’’ அழுத்தமாகச் சொல்கிறார்
அறிஞர் அண்ணாவின் பேத்தி.

பெயர் சூட்டிய கலைஞர்!

பிரித்திகாவிற்கு ‘ராணி’ என்ற பெயரை வைத்ததே மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிதான்.
அறிஞர் அண்ணாவின் மனைவி பெயரான ராணியைத்தான் பிரித்திகாவிற்கு அவர் வைத்துள்ளார். இந்தியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பிரித்திகாவுக்கு ஆர்வம் அதிகம். அதனாலேயே ஐநா அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்ற விரும்புகிறார்.அத்துடன் பெண்களின் உரிமைகள், சுகாதாரம் மற்றும் ஆரம்பக் கல்விக்காகப் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்.

இந்திய ஒன்றியத்துக்கு வழிகாட்டுங்கள்!

பிரித்திகாவிற்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ‘‘தமிழகத்தின் அரசியலுக்கு அடித்தளம் இட்டவர் அண்ணா. அவரின் கொள்ளுப்பேத்தி ஆட்சிப் பணிக்கு வருவது தமிழகத்திற்கே பெருமையான விஷயம்.
ஆட்சிப் பணியை அலங்கரிக்க உங்களுக்கு வாழ்த்துகள்.

அண்ணாவைப் போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் பல உயரங்களை அடைந்திட வேண்டும்...’’ என வாழ்த்து மடல் ஒன்றினையும் பிரித்திகாவுக்காக ஸ்டாலின் எழுதியுள்ளார்.

திலீபன் புகழேந்தி