RGV பிசினஸ்மாடல்!உலகையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ். விமானங்கள் பறக்கவில்லை. பேருந்துகள் ஓடவில்லை. பள்ளிகளும் திரையரங்குகளும் கோயில்களும் மூடிக்கிடந்தன.
மனிதர்கள் கூட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடந்தனர். ஊரடங்கால் பாதிக்கப்படாத துறையே இல்லை. அந்தளவுக்கு அன்றாட வாழ்க்கையை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது கொரோனா. ஆனால், எதையுமே சட்டை செய்யாமல் தனது களத்தில் இறங்கி சிக்ஸர்களாக பறக்க விடுகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

பாலிவுட்டில் கால்பதித்து பெரும் வெற்றி கண்ட முதல் தென்னிந்திய இயக்குநர்; ஏ.ஆர்.ரஹ்மானை இந்திப் படவுலகுக்கு அறிமுகம் செய்தவர்; சர்ச்சையான டுவிட்டுகளைத் தட்டிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பும் விசித்திரமானவர் என இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பாக லாக்டவுன் காலத்தில் ‘Climax’, ‘Naked’, ‘Power Star’, ‘Thriller’ என்ற நான்கு படங்களை எடுத்து, தனது சொந்த தளத்தில் வெளியிட்டது அசத்தல். திரையரங்குகள் மூடிக்கிடக்கும் வேளையில் புது டிரெண்டை செட் செய்திருக்கும் வர்மாவை நாம் ஏற்கலாம்; ஏற்காமலும் போகலாம். ஆனால், அவரை நிராகரிக்க முடியாது.

‘‘இனிமேல் தியேட்டரை மறந்துவிடுங்கள். சினிமாவின் எதிர்காலம் OTTயில் கூட இல்லை. அது பர்சனல் தளத்தில் மட்டும்தான் இருக்கு. யார் வேண்டுமானாலும் கேமராவை எடுத்துக் கொண்டுபோய் படமெடுக்க முடியும். படத்தை தங்களின் சொந்த தியேட்டரிலே ரிலீஸ் செய்ய முடியும்...’’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டும் வர்மாவின் பிசினஸ் மாடல் ரொம்பவே சுலபமானது.

கொரோனா மட்டுமல்ல; எந்த கொடிய நோயாலும் இந்த பிசினஸை தடை செய்ய முடியாது. ‘https://rgvworldtheatre.com/’- என்ற இணையதளம்தான் அவரது தியேட்டர். இதில்தான் படங்களை ரிலீஸ் செய்கிறார். திரையரங்கைப் போல முன்பதிவு வசதி. படத்தை ஒரு முறை பார்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், லேப்டாப் என எதில் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். படத்தை டவுன்லோடு செய்ய முடியாது. இரண்டாவது முறை பார்க்க தனிக்கட்டணம்.

அவரது தளத்தில் ‘Naked’ படத்தின் முன்பதிவை அறிவித்த முதல் 30 நிமிடங்களிலேயே 23,560 டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.200. இப்போது ரூ.245. இத்தனைக்கும் 22 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய ‘அடல்ட் திரில்லர்’ படம் இது. கடந்த வாரம் அப்சரா ராணி நடித்த ‘Thriller’ஐ வெளியிட்டு வசூலை அள்ளியிருக்கிறார். திருமணத்துக்கு முன்பே காதலியை அடைய காதலன் தீட்டும் திரில்லிங் திட்டங்கள்தான் கதை. முழுக்க முழுக்க அப்சரா ராணியின் கவர்ச்சியை நம்பியே படம் நகர்கிறது. இந்தப் படமும் 23 நிமிடங்கள்தான்.

ஒருமுறை படத்தைப் பார்க்க கட்டணம் ரூ.245. தவிர, ஆபாசப் பட நாயகி மியா மால்கோவா நாயகியாக நடித்த ‘Climax’ம் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் ரன்னிங் டைம் கூட 52 நிமிடங்கள்தான். இந்தப் படங்களின் அனைத்து வகையான புரொமோஷன் மற்றும் விளம்பரங்களுக்கு டுவிட்டரையே அதிகமாகப் பயன்படுத்துகிறார் வர்மா.

மட்டுமல்ல, ஜூலையில் ‘பவர் ஸ்டார்’ டிரெய்லரை வெளியிட்டார். உலகின் முதல் கட்டண டிரெய்லர் இதுதான்! டிரெய்லரை ஒருமுறை பார்க்க ரூ.25 கட்டணம். 37 நிமிடங்கள் ஓடக்கூடிய முழுப்படமும் அவரது தளத்தில் வெளியானது. முன்பதிவுக் கட்டணம் ரூ.150. வெளியான பிறகு ரூ.250. இப்போது ரூ.295.இந்தப் படம் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணைக் கேலி செய்கிறது என்று கோபமான பவனின் ரசிகர்கள் வர்மாவின் அலுவலகத்தை தாக்கினார்கள். இந்தச் சம்பவத்தை ‘பவர் ஸ்டாரு’க்குக் கிடைத்த பப்ளிசிட்டியாகக் கருதி அலுவலகத்தை தாக்கியவர்களுக்கு நன்றி சொன்ன விசித்திரமானவர் வர்மா.

இயக்குநர் ஆவதற்கு முன்பு ஹைதராபாத்தில் வீடியோ கடை நடத்தி வந்தார். கல்லூரி நாட்களில் தேவியின் வெறியனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது அறை முழுவதுமே தேவியின் புகைப்படங்கள்தான் அலங்கரித்திருந்தன. தேவியின் படம் ரிலீசான முதல் நாள் முதல் ஷோவை பார்த்துவிடுவார். தேவியின் வாழ்க்கையைப் படமாக்கப் போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அதை எடுக்கவில்லை. இப்படி அறிவிப்புகளை மட்டுமே கொடுத்து அவர் எடுக்காமல் இருக்கும் படங்களும் ஏராளம்.

‘Enter the Girl Dragon’, ‘Guns and Thighs (TV Series)’, ‘Single X ’, ‘Kidnapping of Katrina Kaif ’, ‘Patta Pagalu’, ‘Rai ’, ‘Secret’, ‘The Man Who Killed Gandhi’, ‘Arnab: The News Prostitute’, ‘Coronavirus’, ‘Dangerous’, ‘Mogali Puvvu’, ‘Murder’, ‘Nuclear’, ‘12 O’ Clock’ - இவையெல்லாம் அவர் சமீபத்தில் அறிவித்த படங்கள்.

இவற்றில் சிலவற்றை எடுத்து முடித்துவிட்டார். இன்னும் சில படங்கள் அவரது தளத்தில் ரிலீசுக்குக் காத்திருக்கிறது. இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் ஆக்‌ஷன் படமாக, ‘Dangerous’ இருக்கும் என்று அவர் சொல்லி யிருப்பது எதிர்பார்ப்புகளைக் கிளறியிருக்கிறது.

‘Arnab: The News Prostitute’ என்ற படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உண்டாக்கிய சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.
சர்ச்சைகள், விசித்திரங்களைத் தாண்டி  லாக்டவுன் காலத்தில் வர்மா உருவாக்கியிருக்கும் பிசினஸ் மாடல், சினிமா எடுக்க ஆர்வமாக இருப்பவர்களுக்கு உத்வேகத்தைத் தந்திருக்கிறது.

புது இயக்குநர்கள் தியேட்டர் கிடைக்கவில்லை என்று யாரிடமும் போய் கெஞ்ச வேண்டிய அவசியமிருக்காது. அத்துடன் நிரந்தரமாகவே திரையரங்குகள் மூடிக்கிடந்தாலும் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு எந்த தடையும் இருக்காது. குறைந்த செலவில் குறைந்த நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு படத்தை எடுத்து சொந்த தியேட்டரிலேயே ரிலீஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறார் வர்மா.l

த.சக்திவேல்