லவ் ஸ்டோரி-சாதி மொழி நாடு கடந்தது எங்கள் காதல்!இயக்குநர் கரு.பழனியப்பன்

இயக்குநர் கரு.பழனியப்பன் இலக்கியம் தொடங்கி சினிமா வரைக்கும் கற்றுத் தேர்ந்தவர். செறிந்த உரையாடலில் கைதேர்ந்தவர். திராவிட அரசியலின் அத்தனை பரிமாணங்களும் அத்துபடி. அவரின் ‘பார்த்திபன் கனவு’ இன்னமும் ஞாபகமிருக்கும் புதுப்படைப்பு. இனி அவரது நாடு கடந்த லவ் ஸ்டோரியை அவர் வார்த்தைகளில் கேட்கலாம்.

பள்ளியில் ஆண், பெண் என சேர்ந்துதான் படித்தோம். என்னோடு படித்த ஷீலாவோடு விடுமுறை தினங்களில் சினிமாவிற்குப் போவோம். எங்க அப்பா ‘யாரை வேண்டுமானாலும் வீட்டுக்கு வரச்சொல்லு. இங்கிருந்து போங்க. நீங்க எங்க போறீங்கனு தெரியணும் இல்லையா’னு கேட்பார்.
அமெரிக்கன் கல்லூரிக்கு படிக்கப் போனதும் ‘பள்ளிக்கும், கல்லூரிக்கும் வேறுபாடு என்ன காண்கிறீர்கள்’ என பேராசிரியர் கேட்க, ‘கூட பெண்கள் இல்லாதது ஒரு மாதிரியாக இருக்கிறது’னு சொன்னேன்.

ஏதோ சிக்கல் இங்கிருக்கு. பெண்களை சக உயிரியாக பார்க்கணுமே தவிர வேறு எண்ணம் ஏன்? காதல் ரகசியமாக செய்ய வேண்டியதில்லை. பள்ளிப் பருவத்தில் ஏதோ ஒரு பெண்ணிடம் இரண்டு மணி நேரம் பேசியிருப்போம். காதலாக அதை மனசு நினைக்கும். அது காதல் இல்லை.

ஒரு மனிதனுக்கும், மனுஷிக்கும் இடையில் சம்பவிக்க முடிவது காதல் மட்டும்தானா? எத்தனையோ முகம் பிடிவாதமாக மனசை விட்டு அகல மறுக்கிறதே. அதுவா காதல்! அப்படியில்லையே. பட்டாம்பூச்சியைத் துரத்திட்டு ஓடினமாதிரி அது ஒரு நினைவுதானே!

இதோ என் மனைவி பியா, நாகர்கோவிலில் கூட படித்தவர்களின் ஒன்றுகூடலுக்கு போக வேண்டியது. பாழும் கொரோனாவினால் முடியவில்லை. அவங்க அவ்வளவு ஆர்வமாக இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு பையனை பிடிச்சிருக்கும். அவன் 40 வயசில எப்படியிருப்பான்னு பார்க்க ஆசையிருக்கும்தானே..! அவன் என்ன பேச்சு பேசியிருப்பான்… இப்ப பிள்ளையை தூக்கி வைச்சிட்டு நிக்கிறதைப் பார்க்க ஆசையாகத்தானே இருக்கும்? இதெல்லாம் ஒரு அழகுதானே! அவங்களுக்கும் பட்டாம்பூச்சியைத் துரத்திய ஒரு நினைவு இருக்கும்தானே!

காதலாக எட்டு வருஷம். கல்யாணமாகி 16 வருஷம் ஆச்சு. உலகத்தில் எல்லோரும் பார்த்து வியக்கிற நாடு சிங்கப்பூர். என் மனைவி பியா, உலகம் வியக்கும் சிங்கப்பூரை இத்தனை வருஷமாக எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறாள். சாதி கடந்து, மொழி கடந்து, நாடு கடந்தது எங்கள் காதல்.
நான் வீட்டில் ஒரு நாளும் என் வேலையைப் பற்றி பேசியது கிடையாது. இப்போது வரைக்கும் என் மனைவிக்கு நான் என்ன சம்பாதிக்கிறேன் எனத் தெரியாது. போன படத்தில் என்ன சம்பளம் எனவும் அறிய மாட்டாள். நமக்கு அவன் செய்வான், கேட்டு என்ன செய்யப் போகிறோம்னு நினைப்பு.
வீட்டில் செலவுக்கென்று பணம் இருக்கும். குறைந்தாலும் அந்தப்பணத்தை திரும்ப வைத்துவிடுவேன்.

இன்னமும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். புகார் கிடையாது. வீடா முக்கியம். வீட்டிற்குள்ளே எப்படி இருக்கோம்… அதுவல்லவா முக்கியம்!
இந்த வீட்டை ஏன் என் பெயரில் வாங்கவில்லையென சண்டை போட்டால், ஒரு வீடு வாங்கினாயே, அடுத்த வீடு வாங்கலையா என்று தொடர்ந்தால்… ஆக, இதற்கெல்லாம் இடமே இல்லை.

‘பிள்ளைகளுக்கு எதுவும் செய்யவே இல்லை, வயசாகிட்டே போகுதே’ என்பாள். ‘பிள்ளைகளைப் படிக்க வைப்போம்... போதும்’ என்பேன். நான் கார் வாங்கும்போது பையன் ‘பெரிய கார் வாங்கு’னு சொன்னான். ‘உன் ஆசை பிரமாதம். அதை, நீ சம்பாதிச்சு வாங்கணும்’னு சொன்னேன். ‘நான் சம்பாதிச்சு வாங்கி, அதுல நீ போறதில் உனக்கென்னடா பெருமை’னு கேட்டேன்.  

அவளை சிங்கப்பூர் ஷூட்டிங் போய் பார்த்தறிந்துவிட்டு இங்கே வந்து அப்பாவைப் பார்த்தேன். ‘நீ வாழ்க்கையில் செய்றது எல்லாம் சரி, தப்புன்னு தெரியாது. நீயா ஒரு காரியத்தை செய்திட்டு என்கிட்டே வந்து சொல்ல முடியுமான்னு யோசி. சொல்ல முடியும்னா செய்த காரியம் சரி. முடியலைன்னா செய்த காரியம் தப்பு. அதை திருப்பிச் செய்யாதே’னு அவர் எப்போதும் சொல்வார்.

அவர்கிட்டே பியாவைப் பத்திச் சொன்னேன். என் பெற்றோரும், அவள் பெற்றோரும் சம்மதித்தால் மட்டுமே திருமணமென முடிவாக இருந்தோம்.  
நாளாக நாளாக ஒருவரைஒருவர் தெரிந்துகொள்ளவே இல்லை எனத் தெரிகிறது. இறுதி வரை ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயல்வதே வாழ்க்கை. துளி அந்தரங்கம், தனிமை, தனித்தனியாக இருப்பதே நலம். அவளுக்கு ஒரு நண்பர் இருக்கலாம். அவர் கூட போய் ஒரு காபி அருந்தலாம் என என் மனைவிக்கு ஆசையிருக்கும். என்கிட்டே சொன்னால் ‘பிள்ளைகளை ட்யூசன் கூட்டிப்போகணும். இப்ப போகணுமா’னு நான் கேட்கக்
கூடும்.

என்கிட்டே அதை சொல்லாமல் இருக்கட்டும். எது முக்கியம்னு அவளுக்கே தெரியட்டும். எனக்கிருக்கிற இடம் மாதிரி அவளுக்கும் இருக்கிறது.
என் போன் அடித்தால் அவளும், அவள் போன் அடித்தால் நானும் எடுத்ததே கிடையாது. நான் எடுக்க மாட்டேன்…

நீ எடுக்கக்கூடாது என சொல்லிக் கொண்டதே இல்லை. எங்களின் பின் நம்பர் பிள்ளைகளுக்கு மட்டுமே தெரியும். எல்லா நதிகளிலும் ஓடங்கள் கட்டப்பட்டு இருக்கும். கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கட்டும். நாங்கள் எல்லா வற்றையும் பகிர்ந்து கொள்கிறோம் என யாராவது சொல்லி பெருமைப்பட்டால்... Great. ஆனால், நாங்கள் அவ்வாறு இல்லை.

அவளுக்கு எனக்குத் தெரியாத நான்கு நண்பர்கள் இருப்பார்கள். அவளுக்குத் தெரியாத நாலு நண்பர்கள் எனக்கிருப்பார்கள். நாங்கள் இரண்டு பேரும் முகநூலில் நண்பர்கள் கிடையாது. அவளின் நண்பர்களை நான் என் வட்டத்தில் சேர்க்க மாட்டேன்.

என் சொந்தங்கள் எவரையும் அவள் முகநூலில் சேர்க்க மாட்டாள்!அவரவர்களுக்கு சொந்தமான இடத்தை வைத்துக் கொள்கிறோம். அறையில் தனிமையான இடம் இருக்கிறதோ இல்லையோ, மனதில் அப்படியொரு இடம் வேண்டும். அது மனைவிக்குத் தெரியாத இடம். அப்படி மனைவிக்கும் இருக்கணும். எல்லாமே கணவனுக்குத் தெரியணும் என அவசியம் கிடையாது.

பஸ்ல போறீங்க. பதினெட்டு பேர் உட்கார்ந்திருக்காங்க. ஒவ்வொருத்தர் பக்கத்திலும் ஒரு இருக்கை காலியாக இருக்கு. அத்தனை பேர்ல ஒருத்தர் பக்கத்தில் உட்கார தேர்ந்தெடுக்கிறோம் இல்லையா! அது போலவே வாழ்க்கை. எல்லாப் பயணங்களும் சிறக்கும் என்பதே நம்பிக்கை.
ஆக, அனுபவம்தான் அது. காதலின் எதிர்பார்ப்புகளும், கல்யாணத்தின் தேவைகளும் வேறு… வேறு… காதலோடு உலகம் எங்கேயும்  முடிந்து விடுவதில்லை!

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்