உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!



மினி தொடர் 18

பெரியம்மை என்னும் விகார அரக்கன்!


மனித குலம் தன் பயணத்தில் எண்ணற்ற கொள்ளை நோய்களோடு போராடித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. கொடூர காட்டு மிருகங்களால் வேட்டையாடப்பட்டு இறந்ததைவிட பல கோடி மடங்கு அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் கொடூரமான நுண்ணுயிரிகள் தாக்குதலால் அழிந்திருக்கிறார்கள்.
இன்று எஞ்சியிருக்கும் நாம் அனைவரும் வரலாறு முழுக்க நம்மைத் தாக்கிய கொடூரமான, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடமிருந்து எப்படியோ தப்பி உயிர் பிழைத்த தாத்தன் பாட்டிகளின் வாரிசுகள்தான்.

சில கொள்ளை நோய்கள் எப்படி ஒட்டுடுமொத்த மக்கள் தொகையில் பாதிப் பேரை இரக்கமின்றி அழித்தது என்பதை எல்லாம் இதுவரை பார்த்தோம்.
கொள்ளைநோய்களில் சில குரூரமானவை என்றால் சில விகாரமானவை. அம்மை என்னும் கொள்ளை நோய் அப்படியான விகாரமானவற்றில் ஒன்று.
அதிலும் பெரியம்மை என்னும் கொள்ளை நோய் விகாரமும் குரூரமும் கொடூரமும் ஒன்றான பயங்கரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று வாழும் நமக்கு பெரியம்மை என்றால் என்னவென்று தெரியாதுதான். இப்போது முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு கை புஜத்தில் வட்ட வடிவத் தழும்பு இருப்பதைப் பார்க்கலாம். அந்தத் தழும்பு மனித குலத்தின் ஆழமான காயம் ஒன்றுக்கு மெளன சாட்சியாய் இருந்து, ஒரு பழங்கதையைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது.

பெரியம்மை தடுப்பூசியால் உருவான தழும்புதான் அது. இன்றும் குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குள் போடப்படும் தோள் ஊசி என்ற தடுப்பூசி அம்மைத் தடுப்பூசிதான். ஆனால், இன்று மருத்துவத்தின் வளர்ச்சியால் தழும்பு பெரிதாகத் தெரிவதில்லை. அவ்வளவு தான்.

பெரியம்மை நோய் வேரியோலா மேஜர் (Variola Major) மற்றும் வேரியோலா மைனர் (Variola Minor) என்ற இருவகை வைரஸ் தாக்குதலால் உருவாகிறது.
இதில் வேரியோலா மேஜர் என்ற நோய்க் கிருமிதான் கொடூரமானது. இதன் உயிர்ப் பலி விகிதமும் மிக அதிகம். இந்த நோய் தாக்கினால் நாற்பது சதவீதத்தினர் இறந்துவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. வேரியோலா மைனர் தாக்கத்தால் சுமார் ஒரு சதவீதம் பேர் இறக்க வாய்ப்புள்ளது.

உடல் முழுதும் கொப்புளங்கள் வந்து அவதிப்படும் இந்த நோய் தாக்கியவர்கள், உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுதும் முகம் உட்பட உடலெங்கும் தழும்புகளோடு வாழ நேரிடும். மேலும் பெரும்பாலானவர்களுக்கு ஒன்று அல்லது இரு கண்களுமே பார்வைத் திறனை இழக்கவும் நேரிடும்.
மனிதர்களை பெரியம்மை முதன் முதலாக எப்போது தாக்கியது என்பதைச் சொல்வது கடினம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேகூட இந்த நோயின் தாக்குதல் இருந்திருக்கிறது. ஆனால், இதற்கு மிக உறுதியான ஆதாரங்கள் இல்லை.

கிமு 1500களில் எழுதப்பட்ட இந்திய மருத்துவக் குறிப்புகளில் பெரியம்மை நோய் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட சில சீன மருத்துவ நூல்களிலும் இதற்கான குறிப்புகள் உள்ளன.

சுமார் மூன்றாயிரம் வருடங்களுக்கு முன்பு (கிமு 1145) எகிப்தில் வாழ்ந்த பாராவோ மன்னன் ராம்சேயின் மம்மியில் பெரியம்மையின் தடயங்கள் தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இப்போதைக்கு இதுதான் நிரூபிக்கப்பட்ட முதல் ஆதாரம்.மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய வணிகர்கள் இந்தியாவுக்கு இந்தப் பெரியம்மையைக் கொண்டு வந்திருக்கலாம் என்று கணிக்கிறார்கள். அப்போது முதல் இப்போது வரை இந்தியாவின் மிகப் பெரிய நோய்களில் ஒன்றாக அம்மை நீடித்துவருகிறது. இங்கிருந்து சீனாவுக்கும் பெரியம்மை செல்கிறது. பிறகு அங்கிருந்து பல நூற்றாண்டுகள் கழித்துதான் கிபி ஆறாம் நூற்றாண்டு போல ஜப்பானுக்குச் சென்றது.  

கிபி 735 - 737ம் ஆண்டு ஜப்பானைச் சூறையாடிய பெரியம்மை அப்போதிருந்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரை அழித்தது என்கிறார்கள்.
பழங்காலங்களில் பெரியம்மையின் தாக்கத்துக்கு பயந்து உலகம் முழுதும் பல கலாசாரங்களில் அம்மையைக் கடவுளாக்கி அதனை வணங்கத் தொடங்கினார்கள்.

ஆப்பிரிக்காவில் பல்வேறு இனக்குழுக்களில் ஏழுக்கும் மேற்பட்ட அம்மைக் கடவுள்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, யோருபா மதத்தவரின் சோபோனா கடவுள் அம்மையிலிருந்து மக்களைக் காப்பவர்தான். இந்தியாவில் அம்மை நோய் கடவுள்கள் சாக்தம் என்னும் சக்தி வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறார்கள். சீதளா என்று வட இந்தியாவிலும் அம்மை, அம்மன், அம்மே, அம்மரு என்று தென்னிந்தியாவிலும் பல்வேறு பெயர்களில் உள்ள பெண் கடவுள்கள் அனைவரும் அம்மை நோய்களில் இருந்து மக்களைக் காப்பதற்காகவே அவதரித்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் துர்க்கையின் வடிவமாகவே கருதப்படுகிறார்கள்.  

ஐரோப்பாவில் அம்மை எப்போது நுழைந்தது என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை. பைபிளில் இந்த நோய் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லை. அதுபோலவே கிரேக்க, லத்தீன் இலக்கியங்களிலும் குறிப்புகள் இல்லை. மத்தியதரைக்கடல் பகுதிகளில் அம்மை இருந்திருந்தால், ஏதென்ஸ் பிளேக் போன்ற கிமு நான்காம் நூற்றாண்டு கொள்ளை நோய்களை எல்லாம் விரிவாகப் பதிவு செய்திருக்கும் ஹிப்போகிரிட்டஸ் போன்றவர்கள் அதைப் பதிந்திருப்பார்கள்.

எனவே, அந்நாட்களில் ஐரோப்பாவில் அம்மை இல்லை என்பது ஒருசில அறிஞர்களின் வாதமாக இருக்கிறது. அம்மை உஷ்ணமான சூழ்நிலையில் உருவாகும் நோய்க் கிருமி என்பதால் ஐரோப்பாவில் இயல்பாக உருவாகாமலோ, பரவாமலோ போயிருக்கலாம்தான். ஆனால், நீண்ட காலம் அவர்களால் அம்மையிடமிருந்து தப்ப இயலவில்லை. ரோமானிய பேரரசில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் பரவியது அம்மைதான்.

ஆப்பிரிக்காவிலிருந்து அரேபிய வீரர்கள்தான் ஐரோப்பாவுக்கு அம்மையைக் கொண்டு சென்றார்கள் என்ற கருத்தும் உள்ளது.
அம்மை அமெரிக்க கண்டத்துக்குள் ஐரோப்பியர்களின் நுழைவுக்குப் பிறகே பரவியது. கிட்டத்தட்ட பதினைந்தாம் நூற்றாண்டு போலவே உலகம் முழுதுமே அம்மை பரவிவிட்டது என்று சொல்ல வேண்டும். உலகில் அம்மை பரவாத ஒரே கண்டம் இருந்தது என்றால் அது ஆஸ்திரேலியா மட்டும்தான்.

கிபி பதினொன்றாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் அம்மை கொடூர தாண்டவமாடியது. சிலுவைப் போர்கள் இவ்விரு நிலப்
பகுதிகளிலும் அம்மை ஊடுருவ காரணமாக இருந்தன. பதினாறாம் நூற்றாண் டிலேயே அம்மைத் தடுப்பு முறைகளை இந்திய, சீன, ஓட்டோமான் சாம்ராஜ்யங்கள் ஓரளவு உருவாக்கியிருந்தாலும் இவை பெரிதாகப் பலனிக்கவில்லை. எட்வர்டு ஜென்னர் 1796ம் ஆண்டு அம்மைத் தடுப்பூசியை உருவாக்கினாலும் அதன்பிறகு இரண்டு நூற்றாண்டுகளுக்கு பெரியம்மை பரவிக் கொண்டுதான் இருந்தது.

கடந்த நூற்றாண்டில் மட்டும் பெரியம்மையால் ஐந்து கோடிப் பேர் வரை இறந்திருக்கிறார்கள். கடந்த 1967ம் ஆண்டு கூட ஒன்றரைக் கோடிப் பேர் பாதிக்கப்பட்டு அதில் இருபது லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதன் பிறகுதான் அம்மையை ஒழிக்க வேண்டும் என்ற உத்வேகம் உலக சுகாதார அமைப்புக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்பட்டது.

நடவடிக்கைகள் முழு மூச்சில் இயங்க, தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டன. பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு, உலகம் முழுதும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மைத் தடுப்பூசி போடுவது அவசியம் என்ற நிலை உருவாக்கப்பட்டு ஒருவழியாக பெரியம்மை உலகிலிருந்து அழித்தொழிக்கப்பட்டது.

கடைசியாக, 1978ம் ஆண்டு இங்கிலாந்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் பெரியம்மையால் இறந்தார். அதன் பிறகு ஒரே ஒரு பெரியம்மை மரணம்கூட இல்லாமல் அழிக்கப்பட்டாயிற்று.

இன்று இக்கிருமி இவ்வுலகில் எங்கும் இல்லை. உலகின் மிக முக்கியமான சில ஆய்வகங்களில், ஆராய்ச்சிக் காரணத்துக்காக மட்டுமே மிக அதிகபட்ச பாதுகாப்போடு இந்த வைரஸ் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இத்தொடர் இந்த இடத்தில் முடிகிறது. ஆனால், உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் மனிதன் வாழும் வரை தொடரும்!

இளங்கோ கிருஷ்ணன்