பெயர் தெரியா நட்சத்திரங்கள்..!மேத்யூ வர்கீஸ்

பின்புலத்தோடு நடிக்க வருபவர்களே தடுமாறும் நிலையில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வருபவர்களின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. பெருங்கனவுகளுடன் வரும் இவர்களுக்குக் கிடைப்பது என்னவோ சின்னச் சின்ன வேடங்கள்தான். ஆனாலும் சினிமா மீதுள்ள காதலால் இவர்களும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தில் பயணித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பயணிகளில் சிலரைக் குறித்த டேட்டா இங்கே. இவர்களது முகம் நமக்குத் தெரியும்... பெயர் தெரியாது! இப்போது அறிவோம்!

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு கார்ப்பரேட் வில்லன் கேரக்டர் என்றால் இயக்குநர்களுக்கு இவர்தான் ஞாபகத்துக்கு வருகிறார்.
‘கத்தி’யில் ஆரம்பித்த இவருடைய சினிமா பயணம், ‘அச்சம் என்பது மடமையடா’, ‘அடங்க மறு’ என்று தொடர்கிறது. அதற்கு முன் ‘கணிதன்’, ‘ரோமியோ ஜூலியட்’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளாராம்.

‘‘சொந்த ஊர் சென்னை. ஹெல்த் கேர் சாஃப்ட்வேர் துறையில் பல வருடங்கள் இருந்துள்ளேன். அதனாலேயே கார்ப்பரேட் வேடங்களாக எனக்கு வருகின்றன! 2014ல் நடிக்க ஆரம்பித்தேன். முழுநேர நடிகனாக மாற்றிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’.ஆச்சாரமான அப்பா வேடத்தில் நடித்த ‘மேயாத மான்’ படமும், போலீஸ் ஆபீசராக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் என்னை வெர்சடைல் ஆர்ட்டிஸ்ட்டாக காண்பித்தது.

‘பிகில்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘கிராக்’ தெலுங்குப் படம் என்று போலீஸாக நிறைய படங்களில் நடித்துள்ளேன். தொடர்ந்து போலீஸ் வேடங்கள் வந்தாலும் வில்லேஜ் கேரக்டர், யூனிஃபார்ம் இல்லாத கேரக்டரில் நடிக்க ஆசை.

‘ராட்சசி’யில் நடித்தபோது ஜோதிகா மேடம் பாராட்டினார். ஓடிடியில் வெளியான ‘இக்ளூ’ படத்துக்கும் ஏராளமான பாராட்டு கிடைத்தது...’’ என்று சொல்லும் மேத்யூ வர்கீஸ் நடித்துள்ள ‘மாஸ்டர்’, ‘ராஜவம்சம்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘சின்ட்ரல்லா’ படங்கள் வெயிட்டிங் ஃபார் ரிலீஸ்.

மூணார் ரமேஷ்

‘அசுரன்’ படத்தில் முதல் காட்சியில் ஆட்டுக்குட்டியை ஆட்டையைப் போடும் போலீஸாக நடித்தவர். ‘புதுப்பேட்டை’ படத்தில் இவர் பேசிய ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற டயலாக், மீம்ஸ் வட்டாரத்தில் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறது. போலீஸ் கேரக்டருக்கு தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர்.

‘‘சொந்த ஊர் மூணார். சினிமாவுக்கு வந்தது தற்செயல். நண்பர் ஒருவரின் கொடுக்கல் வாங்கல் பிரச்னையை டீல் பண்ண சென்னை வந்தேன். அப்ப பாலுமகேந்திரா சார் டீம் அறிமுகம் கிடைக்கவே அவர் இயக்கிய ‘அது ஒரு கனாக்காலம்’ படத்துல நடிச்சேன்.தொடர்ந்து ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘புதுப்பேட்டை’, ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ உட்பட ஏராளமான படங்கள்ல நடிச்சு செஞ்சுரி அடிச்சுட்டேன்!  இப்ப சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, விதார்த் படம் தவிர வெப்சீரிஸும் பண்றேன். தொடர்ந்து போலீஸ் கேரக்டர்ல நடிப்பதை நெகடிவ்வா பார்க்கலை. எனக்கு கிடைச்ச அங்கீகாரம் இது.  

என்னை மாதிரி நடிகர்களுக்கு சர்வைவல் பிரச்னை இருக்கு. என் மனைவி ஐடி துறைல இருக்கறதால வாழ்க்கை ஸ்மூத்தா போகுது!’’

கஜராஜ்

தமிழ் சினிமாவில் அப்பா, போலீஸ், வக்கீல் என்று விதவிதமான வேடங்களில் நடித்து மெல்ல மெல்ல மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இவர் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா! ‘‘சொந்தமா மெடிக்கல் சார்ந்த பிசினஸ் பண்றேன். இப்ப நடிப்பு, தயாரிப்பு, டைரக்‌ஷன்னு முழு கலைக்குடும்பமா எங்க ஃபேமிலி மாறியிருக்கு! குறும்படம் எடுத்தப்ப என் பையன் விளையாட்டா நடிக்க கூப்பிட்டான்.

அதுவே இப்ப என் அடையாளமாகிடுச்சு. ‘முண்டாசுப்பட்டி’ எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.  நானும் என் மகனும் தீவிர ரஜினி ரசிகர்கள். அகிலமே வியக்கும் சூப்பர் ஸ்டார் படத்தை என் மகன் இயக்க... அதுல நானும் நடிச்சது மேஜிக்தான்!’’ என்றவர் இப்போது பத்து பதினைந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

திலீபன்

‘‘சொந்த ஊர் கோவை. சினிமா ஆசையால படிப்புல கவனம் செலுத்தலை. பெரிய திரை ஆசைல சென்னைக்கு வந்தேன். சின்னத்திரை அடைக்கலம் கொடுத்தது. இயக்குநர் சுந்தர் கே.விஜயன் மூலமா நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி நட்பு கிடைத்தது.

இயக்குநர் விக்ரமன் சாரிடம் ‘வானத்தைப் போல’ படத்துல உதவியாளரா சேர்ந்தேன். இயக்குநராக விரும்பிய என்னை நடிகனா மாற்றியது விக்ரமன் சார்தான். அவர் இயக்கிய ‘உன்னை நினைத்து’ படத்துல ஆர்.சுந்தர்ராஜன் காம்பினேஷன்ல டெலிபோன் பூத் ஓனரா காமெடி சீன்ஸ்ல நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

சமுத்திரக்கனி ‘அப்பா’, ‘நிமிர்ந்து நில்’, ‘தொண்டன்’படங்கள்ல சான்ஸ் கொடுத்தார். ‘குட்டிப்புலி’, ‘தர்மபிரபு’, ‘நாடோடிகள் 2’ உட்பட சுமார் 30 படங்கள்லயும், ஏராளமான விளம்பரப் படங்கள்லயும் நடிச்சிருக்கேன்!’’ என்கிறார் திலீபன்.  

டிஎஸ்ஆர்

கறார் ஆபீஸர், நீதிபதி வேடங்களில் கலக்கும் இவரது நிஜப் பெயர், சீனிவாசன். ‘‘எம்ஜிஆர், ஒய்எஸ்ஆர் மாதிரி நம்ம பேரும் கம்பீரமா இருக்கட்டுமேன்னு டிஎஸ்ஆர்னு வைச்சுக்கிட்டேன். சொந்த ஊர் திருச்சி. மும்பைல இருபது வருஷங்கள் குளோபல் டெக்ஸ்டைல் டிரேடிங் துறைல இருந்தேன்.80, 90களில் ஆபாவாணன், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி... எல்லாம் பட்டையை கிளப்பினாங்க. இவங்க திரைப்படக் கல்லூரில படிச்சவங்கனு தெரிஞ்சதும் டிஎஃப்டி படிக்க ஆசை வந்தது. குடும்பச் சூழ்நிலை மிரட்டினதால அது நிறைவேறலை.

‘சேதுபதி’ எனக்கு திருப்புமுனையைக் கொடுத்தது. ‘சண்டக்கோழி 2’, ‘சிங்கம் 3’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘பிகில்’, ‘கனா’, ‘ஆடை’ ‘காட்டேரி’, ‘மான்ஸ்டர்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’னு 50க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கேன்.

இப்ப ‘சூரரைப் போற்று’, ‘பேச்சுலர்’, ‘அண்ணாத்தே’, ‘இந்தியன் 2’, ‘காடன்’, ‘கோப்ரா’, ‘பன்னிகுட்டி’, ‘வெள்ளை யானை’, ‘குட்லு’, ‘பகீரா’, சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படம், ‘கும்கி 2’ உட்பட ஏராளமான படங்கள்ல நடிச்சுட்டிருக்கேன்...’’ என்று சொல்லும் டிஎஸ்ஆருக்கு நூறு, நூற்றைம்பது வரன்களுக்குப் பிறகே இல்லத்தரசி கிடைத்தாராம்.

தீபா சங்கர்

‘‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல கார்த்தி என்னை ‘அக்கா’னு அழைச்சபிறகு இப்ப தமிழ்நாட்டுக்கே நான் அக்காவாகிட்டேன்...’’ புன்னகைக்கும் தீபா சங்கரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் முத்தையாபுரம். ‘‘அப்பா தமிழ் ஆசிரியர். மாணவர்களுக்கு நடிப்பும் சொல்லித் தருவார். அப்படித்தான் எனக்கு சினிமா ஆர்வம் வந்தது. பானுப்ரியா, ரேவதி நடிப்பு பிடிக்கும். அவர்களைப் பார்த்துதான் நடிக்க வந்தேன்.
பரதநாட்டியத்துல டீச்சர் டிரைனிங் முடிச்சிருக்கேன். என் தோழி விஜிதாதான் சினிமால நடிக்கச் சொல்லி ஊக்குவிச்சா.

‘மெட்டிஒலி’ சீரியல்ல முதன்முதல்ல அரிதாரம் பூசினேன். சினிமால ‘வெடிகுண்டு முருகேசன்’தான் முதல் படம். அப்புறம் திருமணம், குழந்தைகள்னு ஆனதால நடிப்புல கவனம் செலுத்தலை. பாண்டிராஜ் சார் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்’ செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிச்சு வைச்சது. தொடர்ந்து ‘சங்கத் தமிழன்’, ‘மகாமுனி’ படங்கள்.

இப்ப ‘டாக்டர்’, ‘லாக்கப்’, சசிகுமார், ஜோதிகா இணைந்து நடிக்கும் படம், ‘அறம்’ கோபி நயினார் படம், சாந்தனு படம்னு பத்து பதினைந்து படங்கள் கைவசம் இருக்கு. ‘பொம்பள நம்பியார்’னு சொல்ற அளவுக்கு டெரர் கேரக்டர் பண்ண உள்ளூர ஆசை. என் சினிமா கனவுக்கு கணவர் முழு ஆதரவு தர்றார்...’’ என்கிறார் தீபா சங்கர்.

டி.எம்.கார்த்திக்

சில நடிகர்களுக்கு உடல்மொழி கைகொடுக்கும். ஆனால், இவருக்கு உடல்மொழியோடு சேர்ந்து உடலும் கைகொடுக்குமளவுக்கு வசீகரமான தோற்றம்!
‘‘பக்கா சென்னைவாசி. படிச்சது எம்பிஏ. சினிமா பின்னணி எதுவும் கிடையாது. நாடகம், சினிமா ரொம்ப பிடிக்கும். என் நாடகங்கள் மூலமா சினிமா வாய்ப்பு கிடைச்சது. ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ படத்துல அறிமுகமானேன். தொடர்ந்து ‘குரு’, ‘மதராஸப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘சவாரி’, ஆடை’, ‘ஜாம்பி’, ‘பிகில்’, ஹாலிவுட் திரைப்படம் ‘லைஃப் ஆஃப் பை’ உட்பட குறுகிய காலத்துல 25க்கும் மேற்பட்ட படங்கள் பண்ணிட்டேன்.

என் நடிப்பை யார் பாராட்டினாலும் அது கே.பாலசந்தர் சாரைத்தான் போய்ச் சேரணும். அவருடைய ‘பெளர்ணமி’, ‘ஒரு கூடை பாசம்’ நாடகங்கள்ல நடிச்சுதான் பட்டை தீட்டப்பட்டேன். எம்.ஆர்.ராதா, நாகேஷ், ரகுவரன், சாவித்திரி, பானுமதி போன்ற ஜாம்பவான்களைப் பிடிக்கும். அவங்களை மாதிரி வித்தியாசமான வேடங்கள் செய்ய ஆசை...’’ என்று சொல்லும் கார்த்திக், ஆதரவற்ற மூன்று குழந்தைகளின் கல்விப் பொறுப்பை ஏற்றுள்ளார். நாடகம், சினிமா தவிர கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், பிசினஸ் ஸ்கில்ஸ் ஆலோசனைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருவதோடு ‘டயரி ஆஃப் தி மேட் ஹேட்டர்’ என்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.

சம்பத்ராம்

போலீஸ், வில்லனின் அடியாள் போன்ற கேரக்டர்கள் என்றால் இவர் கண்டிப்பாக இடம்பிடித்திருப்பார். ‘‘சென்னை பழைய வண்ணாரப்பேட்டைதான் நான் பிறந்த பூமி. தனியார் வங்கில கிரெடிட் கார்ட் செக்‌ஷன்ல எக்ஸிகியூட்டிவ்வா இருந்தேன். 98ல கலைப் பயணத்தை ஆரம்பிச்சேன்.முதல் படம் ‘முதல்வன்’. இப்ப என் 200வது படமான ‘கசகசா’ல முதன்மை கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.

அட்மாஸ்ஃபியர் ஆர்டிஸ்ட்டா நடித்து வந்த என் முகம் அஜித் நடிச்ச ‘தீனா’லதான் வெளில தெரிய ஆரம்பிச்சது. ஜீவா நடிச்ச ‘ராமேஸ்வரம்’ படத்துல அகதி, ‘காஞ்சனா 3’ படத்துல அகோரி போன்ற கேரக்டர்கள் ஒரு நடிகனா எனக்கு திருப்தியளிச்சது. இப்ப ‘காடன்’, ராணா நடிக்கும் ‘1945’, ‘பெல்பாட்டம்’, சூர்ப்பனகை’ உட்பட ஏராளமான படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்.  

பொதுவா எனக்கு போலீஸ் கேரக்டர்ஸ்தான் அதிகம் வரும். அதையும் தாண்டி சில படங்களில் பால்காரனா, டீச்சரா நடிச்சிருக்கேன். நாசர், பிரகாஷ்ராஜ் மாதிரி பெயர் வாங்க ஆசை...’’ என்கிறார் சம்பத்ராம்.

ரேகா சுரேஷ்

தமிழ் சினிமாவின் இளம் நாயகன், நாயகிகளுக்கு இவர்தான் சினிமா அம்மா! ‘‘நடிகையாவேன்னு கனவுல கூட நினைக்கலை. மின்பிம்பங்கள் தயாரிச்ச ஒரு சீரியல்ல ஆடிஷனுக்கு என் கணவரை கூப்பிட்டாங்க. அவர் கூட நானும் போனேன். ஜோடியா எங்களைப் பார்த்தவங்க, சீரியல்ல ஜோடியா நடிக்க வைச்சாங்க. ஆனா, ஆடிஷன்ல நான் மட்டுமே செலக்டானேன்.

இப்படித்தான் என் கலைப்பிரவேசம் ஆரம்பிச்சது. ‘எந்திரன்’ நான் பண்ணின முதல் சினிமா. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது கோல்டன் சான்ஸ்.
அப்புறம் ‘பீட்சா’, ‘கோவா’, ‘கோ’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘முப்பரிமாணம்’, ‘மாஃபியா’, ‘நான் சிரித்தால்...’னு 50க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சுட்டேன்.இப்ப ராணா நடிக்கும் படம், ‘சினம்’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2’, ‘கமலி’ படங்கள்ல நடிக்கறேன்...’’ என்கிறார் ரேகா சுரேஷ்.

ஆர்.எஸ்.ஜி. செல்லத்துரை

வாட்ச்மேன், அப்பாவி முதியவர் என்றால் இவர்தான் கோலிவுட் இயக்குநர்களின் சாய்ஸ். ‘‘பிறந்தது மதுரை. சின்ன வயசுலயே ஓரங்க நாடகம், கவிதைப் போட்டினு கலை மேல ஆர்வம். நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். சுருளிராஜன், ‘ஓமக்குச்சி’ நரசிம்மன் எல்லாம் என் செட்.

‘நல்லதும் கெட்டதும்’ என்ற என் நாடகத்தை ரசிகர்களோடு ரசிகரா அறிஞர் அண்ணா தரைல அமர்ந்து பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.
1963ல எம்ஜிஆர் நடிச்ச ‘பணக்காரக் குடும்பம்’ படத்துல அறிமுகமானேன். ‘அருணகிரிநாதர்’, ‘லட்சுமி கல்யாணம்’, ‘உயர்ந்த மனிதன்’, கலைஞரின் ‘தூக்குமேடை’, ‘இதயக்கோயில்’, ‘உதயகீதம்’ உட்பட ஏராளமான படங்கள்ல நடிச்சிருக்கேன்.  

சிவாஜி, ஜெய்சங்கர், சந்திரபாபு, ஜெயலலிதானு அன்றைய பிரபலங்களின் படங்கள்ல எல்லாம் நடிச்ச நான், ஒரு சீன் ரெண்டு சீன்ல தலை காட்டுகிற வேடங்களாவே கிடைச்சதால சில காலம் நடிப்பை விட்டு விலகியிருந்தேன். நீண்ட இடைவெளிக்கு அப்புறமா ‘என் கணவருடைய மனைவி’ நாடகத்தை 125வது முறையா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்துல போட்டோம். அப்ப இன்றைய பிரபல இயக்குநரான ஷங்கர் அந்த நாடகத்துல நடிக்க வந்தார். அவரோட நட்பு கிடைச்சது.

அவர் இயக்குநரானதும் தன் படங்கள்ல என்னை நடிக்க வைச்சார். ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘நண்பன்’ படங்கள் மூலமா மீண்டும் என் சினிமா பயணம் தொடங்கிச்சு.தொடர்ந்து ‘கருப்பம்பட்டி’, ‘ராஜாராணி’, ‘கத்தி’, ‘தெறி’, ‘நட்பே துணை’, ‘ஐரா’ உட்பட ஏராளமான படங்கள்ல நடிச்சேன். இப்ப ‘பூமி’, ‘பாஞ்சாலி’ உட்பட சில படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்.நான் வாய்ப்பு தேடி அலைஞ்ச காலம் மாறி இப்ப என்னைத் தேடி வாய்ப்புகள் வருது...’’ நெகிழ்கிறார் ஆர்.எஸ்.ஜி.செல்லத்துரை.

தொகுப்பு: சுரேஷ் ராஜா