திருமணமாகததுல எனக்குள் எந்த வருத்தமும் இல்ல...



இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் பேச்சுலர் லைஃப் அனுபவங்கள்...

கோலிவுட்டில் வெற்றிகரமாக 31வது ஆண்டைக் கொண்டாடுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்து சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து ஜெயித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அதில் ஜனாவுக்கு தனியிடமுண்டு. தன் முதல் படத்திலே ‘இயற்கை’யாகவே தேசிய விருதை வாங்கியவர். அடுத்தடுத்து ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு எனும் பொதுவுடமை’ என கவனம் ஈர்த்தவர், இப்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘லாபம்’ படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

அவரின் சக இயக்குநர் நண்பர்களே கூட அவரிடம், ‘இந்த வயசிலும் உனக்கு மட்டும் எப்படிப்பா டாப் ஹீரோக்கள் கால்ஷீட் கொடுக்கறாங்க’ என செல்லப் பொறாமையுடன் கேட்பதுண்டு. ஹீரோக்களில் இருந்து யூனிட்டில் சமையல் பரிமாறும் அசிஸ்டெண்ட் வரை அத்தனை பேரிடமும் ‘வாங்க போங்க’ என நட்பு பாராட்டுபவர். விஷயம் இதுவல்ல. திருமணம் செய்துகொள்ளாமல் இன்னமும் பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்
ஜனநாதன்.

சென்னை சிட்டி சென்டர் ரோட்டில் உள்ள மேன்ஷன் ஒன்றில் - அங்கே பல ஃபேமிலிகள் வசித்தாலும் இன்னமும் அந்த அப்பார்ட்மெண்ட்டின் பெயரில் மேன்ஷன் ஒட்டிக்கொண்டிருக்கிறது - மூன்றாவது மாடியில் வசிக்கிறார் ஜனா. மிடில் கிளாஸ் பேச்சுலர் ரூமைப் போல இருக்கிறது அவரது வீடு. காற்றுக்காக வாசல் கதவைத் திறந்து வைத்தபடி, லுங்கியும் வெள்ளைத் துண்டும் அணிந்தபடி நம்மை வரவேற்கிறார்.

‘‘எங்க பூர்வீக வீடு வேற இடத்துல இருக்கு. இது ஆரம்பத்துல வாடகைக்கு இருந்த வீடு. இயக்குநர் வஸந்த்தின் அண்ணன் வீடு இது. இந்த வீட்டை அவர் விற்கும்போது, சினிமாக்காரனான என்மீது ஏதோ ஒரு பாசத்துல குறைஞ்ச விலைக்கு கொடுத்தார். என்னை சொந்தவீடு வாங்க வச்ச பெருமை அவரையே சேரும்...’’ என கலகலக்கிறார். ஹாலில் இருந்த சோபாவில் போர்வைகள் சிதறிக் கிடக்கின்றன. டீப்பாயில் கிச்சன் பாத்திரங்கள்... டீ டம்ளர்கள்...

இன்னொரு அறையில் டாய்லெட் கதவு, பீரோக்கள் பளிச்சென மஞ்சள் கலரில் மின்னுகின்றன. ‘‘ஜனாவுக்கு கலர் சென்ஸ் கிடையாதுனு யாரும் நினைச்சிடக்கூடாது இல்லீங்களா?’’ எனச் சிரித்தவர் தொடர்கிறார்.‘‘பீரோனா, அழுக்கு தெரியாம இருக்கறதுக்காக அடர் பச்சைக் கலர்ல பெயிண்ட் அடிச்சு வச்சிருப்பாங்க.

அது என்ன யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலர்ல இருக்கறதுனு மஞ்சள் பெயிண்ட் அடிச்சுட்டேன். இதுவும் நல்லா இருக்கு. என்னோட ஆர்ட் டைரக்டர் கூட இதுக்காக என்னைப் பாராட்டியிருக்கார்...’’ குழந்தையாகப் புன்னகைத்தவர், ஹால் மேஜை மீதிருந்த ஆப்பிள் வாட்ச்சில் மணி பார்த்துவிட்டு, பெரிய சைஸ் ஆப்பிள் டாப்லெட்டை ஆஃப் செய்து வைக்கிறார்.

‘‘லொக்கேஷன் பார்க்கப் போன இடங்களை எல்லாம் இதுலதான் போட்டு வச்சிருக்கேன்.  நான் சினிமாவுக்குள் என்ட்ரி ஆன டைம்லயே கேமரா, லென்ஸ், எடிட்டிங்னு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள்லதான் கவனம் செலுத்தியிருக்கேன். ஸோ, நான் டெக்னாலஜில எப்பவும் அப்டேட்டடா இருக்கேன்; இருப்பேன்...’’ எனச் சொன்னபடி இன்னொரு அறைக்குச் சென்று துண்டைக் கடாசிவிட்டு கையில் கிடைத்த ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு வந்தார்.

அந்த சின்ன அறைதான் அவரது பர்சனல் ரூம். மீதி அறைகளில் அவரது அசிஸ்டெண்ட்ஸ் இருக்கிறார்கள்.அவரது பர்சனல் அறையை பெரிய சைஸ் டிவி அலங்கரிக்கிறது. அங்கேயே ரெஸ்ட் எடுக்க ஒரு கட்டில். ரைட்டிங் டேபிளில் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் (தமிழில் எஸ்.தோதாத்ரி) ‘உலகாயதம் - பண்டைய இந்திய பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு’ என்ற புத்தகம் படித்த பக்கங்களோடு கவிழ்ந்து கிடக்கிறது. அதனருகே காரல் மார்க்ஸின் அரிய கறுப்பு- வெள்ளை புகைப்படம் ஒன்று புன்னகைக்கிறது.

‘‘நான் டிவில படம் பார்க்க மாட்டேன். ரொம்ப ரேர். ஆனா, நியூஸ் பார்த்துடுவேன். சயின்ஸ் விஷயங்கள், நாட்டு நடப்புகள், டெக்னாலஜி விஷயங்கள்னு எல்லாத்தையும் பார்க்கப் பிடிக்கும்...’’ என அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் கிச்சனில் இருந்த சமையல்காரம்மா, ‘‘நான் கிளம்புறேனுங்க...’’ என சொல்லிவிட்டு கிளம்பினார்.

‘மூணு மாடி ஏறி வந்து அத்தனை பேருக்கும் சமைக்கறது அவங்களுக்கு கஷ்டம்தான். பாதி நாள் வரமாட்டாங்க. ரொம்ப நல்லவங்க...’’ என அவராக ஃபீலானவர் மொபைலை சைலண்ட்டில் போட்டுவிட்டு, பேச ஆரம்பித்தார்.ஜனா சென்னைவாசி என்றாலும், அவரது பூர்வீகம் தஞ்சாவூர். சென்னையில் மயிலைப் பகுதி திமுக இளைஞரணி செயலாளராக இருந்திருக்கிறார்.

‘‘தமிழ்நாட்ல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிறப்புண்டு. அதுல சென்னை ரொம்ப ஸ்பெஷல். இங்க அடிப்படை மக்கள்கிட்ட எந்த பாகுபாடும் பார்க்க முடியாது. கிராமத்துல பெரிய பஞ்சாயத்துல போய் முடியற பிரச்னைகள் கூட இங்க சாதாரணமா முடியும். நுட்பமான மாற்றங்களுக்கு உட்பட்ட இடம் சென்னைதான்.

குப்பம்னாலே அங்க மீனவர்கள்தான். கிராமத்துல நடக்கற பஞ்சாயத்தைவிட, குப்பத்துல நடக்கற பஞ்சாயத்து முறை, வாழ்க்கைமுறை என்னை அதிசயிக்க வைக்கும். அதை இன்னமும் கூட என் படங்கள்ல பதிவு பண்ணல. என் அடுத்த படத்துல அதைத் தொடுவேன். நான் சென்னைல டீக்கடை வச்சிருக்கேன். எங்க அண்ணன் செயின்ட்பீட்ஸ்ல படிக்கப் போனப்ப அங்க வழில இருந்த மீன் மார்க்கெட்ல அவருக்கு சில நண்பர்கள் கிடைச்சாங்க. ஒருநாள் படிப்பை பாதில விட்டுட்டு அண்ணனும் மீன் வெட்டப் போயிட்டார்.

தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு அறிமுகமானப்ப முதன்முதல்ல ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது எங்க அண்ணனுக்குத்தான்.  எங்க அப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா, முருக பக்தர். சிவ பக்தர். என்னோட மூணு வயசுலயே அவர் இறந்துட்டார். அவர் முகம் கூட எனக்கு நினைவில்லை. கைல ஒரு போட்டோவும் இல்ல.

எங்க அம்மாவுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. அம்மா வழியில் பூர்வீகம், தஞ்சாவூர் பக்கம் வடசேரி. நாலு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கச்சினு ரொம்ப பெரிய குடும்பம். அத்தனை பேரையும் சோறுபோட்டு வளர்த்து ஆளாக்கினது எங்க அம்மாதான். வீட்ல மத்தவங்க எல்லாம் மூணாவது நாலாவது படிப்பைத் தாண்டல.

நான் மட்டும்தான் பியூசி போனேன். பட்டப்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். மெடிக்கல் படிக்கணும்னு விரும்பினேன். ஆனா, அதுக்கான வசதி வாய்ப்புகளோ, வழிகாட்ட ஆட்களோ இல்ல. எங்க குடும்பமே திமுகதான். எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பிச்சப்ப, ரெண்டு அண்ணன்கள் அவர் பக்கமும், மீதி ரெண்டு அண்ணன்கள் திமுகவிலும் இருந்தாங்க. வீட்ல எப்பவுமே அரசியல் பேச்சுதான் ஓடும். அதனாலயே எனக்கும் அரசியல் நினைவுகள் கொஞ்சம் அதிகம்...’’ மலரும் நினைவுகளுக்குள் சுழன்றவர், கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதே, நேரில் பார்த்து ரசித்திருக்கிறார்.

‘‘எமர்ஜென்சி அப்ப எங்கண்ணன் பலமுறை சிறைக்கு போயிருக்கார். எமெர்ஜன்சியை கலைஞர் எதிர்த்ததால திமுகவினரை தொடர்ந்து போலீஸ் கைது செய்தது. பெரிய அண்ணன் கண்ணுதலை எட்டு பத்து முறையாவது அரெஸ்ட் பண்ணியிருப்பாங்க. நான் வீட்ல கடைசிப் பையன். சின்னப் பையன். நைட்டு ரெண்டு மணிக்கு வீட்டுக்கிட்ட பூட்ஸ் சத்தம் கேட்கும். போலீஸ் வந்து கைது பண்ணிட்டு போவாங்க. லோக்கல் ஸ்டேஷன் போலீஸா இருக்க மாட்டாங்க. காலைல ஸ்டேஷன்ல போய்க் கேட்டா அவங்களுக்கு எந்த விவரமும் தெரியாது.

எழுதப் படிக்கத் தெரியாத எங்கம்மா வீட்ல இருக்கற பணம், வேஷ்டி சட்டை எல்லாம் எடுத்துட்டு ஒவ்வொரு சிறைக்கா மகனைத் தேடிப் போவாங்க...’’ ஜனாவின் குரல் உடைந்து சன்னமாக தழுதழுக்கிறது. அவரது தலைக்கு மேலே இருந்த அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு தொடர்கிறார்.

‘‘சென்ட்ரல், வேலூர்னு ஒவ்வொரு சிறைக்கா போய், கடைசில ஒரு ஜெயில்ல எங்க அண்ணனைக் கண்டுபிடிப்பாங்க. சிறைல பீடிதான் பணத்துக்கு சமமானது. ரெண்டு பீடிக்கு ஒரு பொங்கல் கிடைக்கும். எங்க அம்மா சுருட்டு குடிப்பாங்க. அதனால பீடியைக் கொண்டு போய், எங்க அண்ணனுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்துட்டு, மகன் பத்திரமாகத்தான் இருக்கான்னு ஒரு நம்பிக்கையோடு வீட்டுக்கு வருவாங்க.

அப்புறமும் எம்ஜிஆர், இந்திராகாந்திக்கு ஆதரவா இருந்ததால, எங்க அண்ணனை தொடர்ச்சியா கைது பண்றதை போலீஸ் வாடிக்கையா வச்சிருந்தது. இது எங்க அம்மாவையும் எங்களையும் ரொம்ப பாதிச்சது.

‘அண்ணனை அடிக்கடி கைது பண்றாங்களே... இதையெல்லாம் தலைவர் தட்டிக்கேட்க மாட்டேங்கிறாரே’னு எம்ஜிஆர் கட்சி யில் இருந்த அண்ணன்களுக்கு சின்ன கோபம் வந்திடுச்சு. அப்புறம் மொத்த குடும்பமும் திமுகவுக்கே மாறிடுச்சு. திமுகவுல நாங்க தீவிரமா இருந்ததால, எங்க பகுதிலதான் பகுதி செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். ‘முரசொலி’யில் ‘இன்று கண்ணுதல் இல்லத்தில் பகுதி செயற்குழுக் கூட்டம் நடக்குது’னு நியூஸ் வர்றதெல்லாம் சகஜமா இருக்கும்.

அப்ப நான் சின்னப் பையன். வேடிக்கை பார்ப்பேன். ஒருமுறை எலெக்‌ஷன் டைம்ல கூட்டம் நடந்தப்ப, ஒவ்வொரு பகுதியாக விசிட் அடிச்சிட்டு வந்த கலைஞர், எங்க வீட்டுக்கும் வந்தார். அவரது பேச்சு, தோரணை, கட்சியினரிடம் அவர் காட்டிய அன்பு எல்லாம் பார்த்தேன். கலைஞர் என் அபிமானத்துக்குரியவரா மாறினார்.

அப்புறம் மார்க்ஸிய தோழர்கள் நட்பு கிடைக்கவே, லெனின், ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸின் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் திமுகவின் கொள்கைகள் எல்லாமே நேரடியா என் குடும்பத்தோடு கலந்திருந்ததால கலைஞர் மீதான அந்த ஈர்ப்பு இப்பவும் அப்படியேதான் இருக்கு.

அதன்பிறகு சினிமா ஆர்வம் வந்து ரொம்பவே கீழிருந்து படிப்படியா மேல வந்தேன். ‘சோலைக்குயில்’ ராஜன், எடிட்டர் லெனின், வி.டி.விஜயன், கேயார்னு பலர்கிட்ட வேலை பாத்திருக்கேன்...’’ நான்ஸ்டாப்பாக சொன்னவரின் டாபிக், திருமணம் குறித்து திரும்பியது.

‘‘கல்யாணத்துல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு படம் பண்ணி ஜெயிச்சுட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாம் நினைச்சதில்ல. என்னைச் சந்திக்க வர்ற உதவி இயக்குநர்கள்கிட்ட ‘60 வயசுலயும் படம் பண்ணி உலகப்புகழ் அடையலாம். ஆனா, அப்ப கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதனால இப்பவே செய்துக்கங்க’ன்னுதான் சொல்றேன்.

அதுக்கு அவங்க ‘மனைவிக்கு சோறு போடணுமே... அதான் கல்யாணம் பண்ணிக்கல’னு சொல்றாங்க. பெண்களுக்கும் ரெண்டு கை, ரெண்டு கால், மூளை எல்லாம் இருக்கு. அவங்க நமக்கு வழிகாட்டுவாங்க... உயர்த்துவாங்கன்னு நாம நம்பணும்.‘இதெல்லாம் சொல்றியே... நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்காம பேச்சுலரா இருக்க’னு நீங்க கேட்கலாம். சொல்றேன்.

பியூசி முடிச்சதும் அரசியல்ல தீவிரமா ஈடுபட ஆரம்பிச்சேன். என் வாழ்க்கையிலும் காதல் காத்து வீசியிருக்கு. என்னையும் விரும்பினவங்க இருக்காங்க. அதெல்லாம் ரொம்ப லேட்டாதான் எனக்கே தெரிய வந்துச்சு. நான் கல்யாணம் பண்ணிக்காம போனதுக்கு என் குடும்ப சூழல்தான் காரணம். அப்பா, அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நாங்க சென்னைல பிறந்தாலும் எங்க வீட்ல ஏழு பேரும் சரியா படிக்கல. அத்தனை பேர் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் இல்ல. இதுல லவ் பத்தி சிந்திக்க முடியல.

பெரியாரிஸ்ட்டாகவும் இருந்தேன். அப்ப சினிமாகூட ரெண்டாம் பட்சமாதான் இருந்துச்சு. அரசியலுக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். எல்லாம் செட்டில் ஆனபிறகு திரும்பிப் பார்த்தா, எனக்கு கல்யாண வயசு கடந்திருச்சு. அதுல வருத்தமுமில்ல. வாழ்க்கைல சோறு ஆக்கத் தெரியும். சோறு பொங்கி, தண்ணியை ஊத்தியோ இல்ல, தயிர் வச்சோ சாப்பிடுவேன். எனக்கான தேவைகள் குறைவு. இயக்குநர் ஆன பிறகு சமையலுக்கு ஆள் வச்சாச்சு. ‘இயற்கை’யில் இருந்து இன்னிக்கு ‘லாபம்’ வரை என்னோட ஒர்க் பண்ணின - பண்ற அசிஸ்டெண்ட்ஸ் எல்லாருமே இப்ப வரை என்கூடத்தான் இருக்காங்க. சிலர் வெளியே போய் படம் பண்ணினாலும் மறுபடியும் என்னோடுதான் தங்கியிருக்காங்க.

தினமும் நாலு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சுடுவேன். சின்னதா ஒரு வாக். ரெகுலரா போவேன்னு சொல்ல முடியாது. புத்தகம் படிக்கிறப்பவும் ஒரே டைம்ல நாலஞ்சு புக்ஸ் படிப்பேன். சில டைம்ல ஒரு புத்தகத்தை முடிச்சிட்டு அடுத்த புத்தகத்தைத் தொடுவேன். ரொம்பவும் செலக்ட் பண்ணிதான் படிப்பேன். ஒரு எழுத்தாளரின் பிரபலமான புத்தகம் பிடிச்சிருந்தாதான் அவரோட மத்த புக்ஸை வாங்கிப் படிப்பேன்.

பேச்சுலர் லைஃப் எனக்கு செட் ஆகிடுச்சு. நமக்குனு காத்திருக்க ஆள் கிடையாது. ஷூட் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா ‘சாப்பிட்டியா’னு கேட்கவோ... இல்ல, ‘நீ சாப்பிட்டியா... தூங்குனியா’னு நான் கேட்கவோ ஆள் கிடையாது.

நல்ல அசிஸ்டெண்ட் டீம் அமைஞ்சிருக்கு. எனக்கு உடம்பு சரியில்லாம போனப்ப என்னை ஆஸ்பத்திரில சேர்த்து பாத்துக்கிட்டதும் அவங்கதான். எந்த கட்டத்திலும் ‘கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டோமே’னு வருந்தினதில்ல. திருமணம் என்பது அந்தந்த டைம்ல பண்றது நல்லது. இயற்கையின் நியதி. இயற்கை சொல்றதுதான் விஞ்ஞானம்.

இப்ப எங்க அண்ணன் பையன் ஒருத்தனை மெடிக்கல் காலேஜ்ல சேர்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்து நல்லா படிக்கறவன். அண்ணன் இல்லாததால, அவனைப் படிக்க வைக்க நினைக்கறேன். நான் படிக்க ஆசைப்பட்ட மெடிக்கல் கல்வி அவனுக்காவது கிடைக்கட்டும்...’’ திருப்தியாகிறார் ஜனநாதன்.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்