ரத்த மகுடம்-133



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

ஆனால், சிவகாமி புறப்படவில்லை.எழுந்து நின்றவள் கரிகாலனை ஒரு பார்வை பார்த்தாள்.புருவங்கள் சுருங்க அவள் பார்வையை எதிர் கொண்டான்.தன் வலது கையை நீட்டினாள்.கரிகாலன் அதைப் பற்றியபடி எழுந்தான்.கரங்களைக் கோர்த்தபடி சிவகாமி நடந்தாள்.தேகங்கள் உரசின. தீ பற்றியது. அணைக்கும் விதமாக முப்பதடி தொலைவில் இருந்த தடாகத்தை நெருங்கினாள். தன் கரத்தை விடுவிக்காமல் கரிகாலன் நின்றான். அவளையும் நிறுத்தினான். ‘‘இப்பொழுது ஸ்நானம் அவசியமா..?’’

‘‘இப்பொழுதுதான் அவசியம்..?’’அவள் நயனங்களை உற்றுப் பார்த்தான்.‘‘ராமபுண்ய வல்லபருக்கு சரியான அடி கொடுக்க வேண்டும் என்றீர்கள் அல்லவா..?’’‘‘ம்...’’‘‘கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டீர்களே தவிர கொடுத்ததைப் பார்க்கவில்லையே... அடுத்து கொடுக்க வேண்டிய அடியை குறித்துக் கொள்ளவில்லையே..?’’ ஆச்சர்யத்தின் ரேகைகள் கரிகாலனின் விழிகளில் படர்ந்தன. ‘‘வாருங்கள் காட்டுகிறேன்...’’

‘‘தடாகத்தில் எதற்கு..? முன்பு அமர்ந்த இடத்திலேயே அமர்வோம்... பார்க்கிறேன்...’’தன் இடது கை விரல்களால் அவன் நாசியை வலிக்காமல் திருகினாள். ‘‘அங்கு சென்றால் என்னை நான் மறந்துவிடுவேன்...’’‘‘தடாகத்தில் இறங்கினால் என் நிலையை நான் இழப்பேன்...’’
‘‘ஆனால், என் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இங்குதான் விழித்திருக்கும்... தவிர...’’‘‘தவிர..?’’

‘‘காண்பிக்கும் இடத்தை முதலில் நீரில் சுத்தம் செய்ய வேண்டும்...’’ ‘‘அப்படியா..?’’‘‘ஆம்... அப்படித்தான்!’’ கலகலவென நகைத்தவள் கரிகாலனை அழைத்துக்கொண்டு தடாகத்தில் இறங்கினாள்.இருவரும் இடுப்பளவு நீர் இருக்கும் வரை நடந்தார்கள். கரிகாலன் சுற்றிலும் பார்த்தான். வலுவான மரக்கிளை ஒன்று தடாகத்தை முத்தமிட்டபடி இருந்தது.அதை நோக்கி சிவகாமியை அழைத்துச் சென்றவன், அவள் இடுப்பைப் பிடித்துத் தூக்கி மரக்கிளையில் அவளை அமர வைத்தான்.தன் கால்களால் தடாக நீரை சிவகாமி அளக்க ஆரம்பித்தாள்.‘‘காட்டு...’’ ‘‘என்ன..?’’‘‘காண்பிக்கிறேன் என்றாயே... காட்டு...’’

சொன்னவனின் பார்வை சென்ற திக்கைக் கண்ட சிவகாமியின் முகம் சிவந்தது.தடாக நீரை தன் கால்களால் உதைத்தாள். சிதறிய நீர்த்துளிகள் அவன் முகத்தை அறைந்தன. ‘‘எப்பொழுதும் ஒரே நினைப்புதானா..?’’ சிவகாமியின் நாசி அதிர்ந்தது. ‘‘ஆம்... உன் சபதத்தை எப்படி முழுமையாக நிறைவேற்றுவது என்றுதான் எப்பொழுதும் யோசிக்கிறேன்... அதற்கான வழிமுறைகள் குறித்துதான் அலசுகிறேன்... தியானிக்கிறேன்... ஏனெனில் அதில் உன் மகிழ்ச்சி மட்டுமல்ல... பல்லவர்களின் பெருமையும் சோழர்களின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது...’’சிவகாமியின் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தாண்டவமாடின.

கரிகாலன் அவளது இரு கால்களுக்கும் இடையில் புகுந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். ‘‘ம்...’’‘‘என்ன ம்..?’’ கொஞ்சியபடியே தன் விரலால் அவனது பரந்த மார்பில் சிவகாமி கோலமிட்டாள்.‘‘காட்டு...’’தன் விரல்களால் அவனது மார்பு ரோமங்களைச் சுருட்டி இழுத்தாள். ‘‘தங்களைத் தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது என்றுதான் இப்படி என்னை மறைத்தபடி நிற்கிறீர்களா..?’’‘‘காவலனின் கடமையை சரிவர செய்கிறேன்...’’ புன்னகைத்தான். ‘‘பரஞ்சோதியின் அசுரப் போர் வியூகத்தை உன் கச்சையில் வரைந்து எடுத்து வந்தாய்... அதை எனக்கு காண்பித்தாய்...’’சிவகாமி தன் புருவத்தை உயர்த்தி இறக்கினாள்.

‘‘இப்பொழுது வேறு எதை வரைந்து வந்திருக்கிறாய்..? அதை எந்த இடத்தில் பதித்து... பதுக்கி வைத்திருக்கிறாய்..?’’ கேட்டவன் தன் பார்வையால் அவளது முழு உடலையும் மேய்ந்தான்.‘‘ஆசையைப் பார்...’’ தன்னிரு உள்ளங்கைகளையும் அவன் மார்பில் பதித்து அப்படியே தள்ளினாள்.மல்லாந்தபடி கரிகாலன் தடாகத்தில் விழுந்தான்.சமாளித்து நீருக்குள் தன் இரு கரங்களையும் ஊன்றினான். அமர்ந்தான்.

அவன் மார்பின் பாதி அளவு நீரில் மூழ்கியிருந்தது. ‘‘பார்த்து... பார்த்து...’’ சிவகாமி பதறினாள்.‘‘நீருக்கடியில் பாறை இருக்கிறது... அதன் மீதுதான் அமர்ந்திருக்கிறேன்... கவலைப்படாதே...’’ கரிகாலனின் நேர் எதிரே கிளைகள் மீது அமர்ந்திருந்த சிவகாமி தன் வலது கால் பாதத்தை உயர்த்தி கரிகாலனின் முகத்தின் மீது வைத்தாள்.பாதத்தை முத்தமிட்டபடி தன் நாவினால் கோடு கிழித்தான்.

கூச்சத்தில் சிவகாமி நெளிந்தாள். அவளது தேகத்தில் இருந்த ரோமக் கால்கள் அனைத்தும் குத்திட்டன.சட்டென கரிகாலன் அவள் கால்களை மடக்கினான். பாதத்தை தன் கண்களுக்கு எதிரே கொண்டு வந்தான்.இமைக்கவும் மறந்து ஆச்சர்யத்தில் மிதந்தான்.நீரில் நன்கு அலசப்பட்டிருந்ததால் அவளது பாதம் ஸ்படிகம் போல் காட்சியளித்தது.கரிகாலனின் கண் முன்னால் விரிந்தது அவளது பாத ரேகைகள் மட்டுமல்ல!

‘‘என் முதுகில் வரைபடம் வரைந்து பாகங்களைக் குறித்து அனுப்பினீர்கள்... கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து ஜெயத்துடன் திரும்பிவிட்டேன்... அத்துடன் சென்ற இடத்தில் கண்டதை...’’தன் பாதத்தின் கட்டை விரலை அவனது உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றாள்.கரிகாலன் அதைக் கவ்வினான்.

‘‘...மூலிகைத் தைலத்தால் பாதத்தில் வரைபடம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறேன்... அதனால்தான் இக்கணம் வரை அவை அழியாமல் இருக்கின்றன... இம்முறை கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு...’’அவள் பாதத்தில் இருந்த ஐந்து விரல்களையும் மாறி மாறிக் கவ்வி உறிஞ்சினான். ‘‘கட்டளையை நிறைவேற்றுகிறேன் சிவகாமி...’’ உணர்ச்சி பொங்கச் சொன்ன கரிகாலன், அவள் பாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளி முழுமையாக அதைப் பார்த்தான். தனக்குள் உள்வாங்கினான்.

எழுந்தவன் சிவகாமியின் இடுப்பைப் பிடித்து தடாகத்தில் இறக்கினான். ‘‘புறப்படு... இப்பொழுது நீ கொடுக்கும் அடியில் ஸ்ரீராமபுண்ய வல்லபரின் தலை சுழலவேண்டும்... நீ சுட்டிக்காட்டிய இடங்களுக்குச் சென்று நான் கொடுக்கும் அடியில் சாளுக்கிய தேசமே அலற வேண்டும்...’’

கரிகாலனை நெருங்கினாள். அவள் கொங்கைகள் அவன் மார்பை அழுத்தின. அவன் உதட்டைக் கவ்வியவள் அதைக் கடித்துச் சுவைத்தாள். பூத்த குருதியை தன் நாவினால் எடுத்தவள் சப்புக் கொட்டினாள். நிமிர்ந்து கரிகாலனின் கருவிழிகளைப் பார்த்தாள். சட்டென விலகி தடாகத்தை விட்டு வெளியேறி தென் திசையை நோக்கி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

அவளைப் பின்தொடர்ந்து தடாகத்தை விட்டு வந்த கரிகாலன் வட திசையை நோக்கி நடந்தான்.சிவகாமியின் பாத ரேகைகள் அவனுக்கு வழிகாட்டின!‘‘இரணதீரா... உன் உணர்வுகள் புரிகின்றன... ஆனால், அதை வெளிப்படுத்தவும் செயல்படுத்தவும் இது நேரமல்ல. பாண்டியர்களின் ரத்தம் உனக்குள் ஓடுகிறது. பாண்டிய அரியணையில் அமர்பவர்களின் கனவும் இப்பொழுதே உன்னைத் துரத்துகிறது. அதனால்தான் பாண்டிய நாட்டை விஸ்தரிக்க நினைக்கிறாய்.உன் எண்ணமும் நினைப்பும் சரிதான். அதில் பிழையோ தவறோ எதுவும் இல்லை.

ஆனால், அதே கனவும் உணர்ச்சியும் உணர்வும் இப்போதைய பாண்டிய மன்னனான எனக்குள் இருக்காது என நினைத்திருக்கிறாயே... நினைத்துவிட்டாயே... அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.ஒன்றை புரிந்து கொள்... நம்மிடம் வீரம் இருக்கிறது. பாண்டியர்களின் வீரம் எந்த தேசத்தின் வீரத்துக்கும் குறைச்சலில்லை.

ஆனால், வீரம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது... படை பலமும் பொறிகளின் வல்லமையும் சேரும்போதே வீரம் பேசு பொருளாகும்.அதனால்தான் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நடைபெறப் போகும் போரை சற்றே விலகியிருந்து வேடிக்கை பார்க்கச் சொல்கிறேன். அந்த அவகாசத்துக்குள் நம் படைபலத்தை அதிகரிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன்... இதுதான் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக நாம் எடுத்திருக்கும் முடிவு.

பல்லவ இளவரசன் ராஜசிம்மனின் நண்பனும் சோழ இளவரசன் கரிகாலனின் தோழனுமான சீனன் இப்பொழுது மதுரையில்தான் இருக்கிறான். பாண்டிய நாட்டின் பெரும் மரத்தச்சரை வைத்து சீனர்களின் எந்திரப் பொறிகளை அவன் உருவாக்கப் போகிறான்.இது நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு.

சீனனின் வேண்டுகோளை ஏற்று மரப் பொறிகளை அவர் உருவாக்கும் அதேநேரம் பாண்டியர்களுக்கும் பொறிகளை தயாரிக்கப் போகிறார். சாளுக்கியர்களுடன் மோதப் போகும் பல்லவப் படைகள் என்ன பொறிகளைப் பயன்படுத்தப் போகிறதோ அதே பொறிகள் பாண்டியர் வசமும் இருக்கப் போகிறது.

ஒவ்வொரு எந்திரப் பொறியும் ஆயிரம் வீரர்களுக்கு சமம் என்பதை இளவரசனாக அல்ல... வீரனாகவே நீ உணர்வாய் என்று தெரியும்... அதனால்தான் இந்த உண்மையை அழுத்திச் சொல்கிறேன்.ஒரு தந்தையாக உன்னை கொற்கைக்கு போகச் சொன்னேன்... மகனுக்குரிய துடிப்புடன் அதை மீறி மதுரையிலேயே மாறு வேடத்தில் சுற்றுகிறாய். ரகசியமாக வந்த சாளுக்கிய மன்னரையும் சந்தித்துப் பேச முற்படுகிறாய்.

ஒரு தந்தையாக உனது துடிப்பு புரிந்து உன் செய்கைகளை நான் அனுமதித்தாலும் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மனாக உனது நடமாட்டத்தை ஏற்க முடியாது. அது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு நாட்டின் மன்னனே தலைவணங்கித்தான் ஆக வேண்டும் என்னும்போது இளவரசன் மட்டும் அதை எப்படி மீற முடியும்..?எப்படி சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் ரகசியமாக மதுரைக்கு வந்தாரோ அதே ரகசியத்துடன் அவரைச் சந்தித்து பாதுகாப்பாக காஞ்சிக்கும் அனுப்பி வைத்துவிட்டேன்.

பாண்டிய ஒற்றர்கள் சாளுக்கிய தேசத்திலிருந்து கொண்டு வரும் செய்திகள் மலைக்க வைக்கின்றன. இன்னமும் அச்செய்திகள் காஞ்சியில் இருக்கும் சாளுக்கிய மன்னரைச் சென்றடையவில்லை. அடையும்போது நிச்சயம் எரிமலையாக வெடிப்பார். அந்தளவுக்கு சாளுக்கியர்களை நிலைகுலைய வைக்கும் காரியத்தை சிவகாமி சாதித்திருக்கிறாள்.அறிந்த பிறகு தனது ஒற்றர் படைத் தலைவியாக இருக்கும் சிவகாமியை கண்டிப்பாக சாளுக்கிய மன்னர் சிரச்சேதம் செய்வார். போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் அதைச் செய்ய வைப்பார்.

நினைத்தது, கணித்ததை விட கரிகாலன் ஆபத்தானவனாக இருக்கிறான்.யோசித்துப் பார்... பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரும் பல்லவ இளவல் இராஜசிம்மனும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒற்று அறிவதில் பெயர்போன பாண்டிய ஒற்றர்களாலும் அவர்கள் இருவரது இருப்பிடத்தையும் அறிய முடியவில்லை.வலைகள் பின்னப்பட்டு விரிக்கப்படுகின்றன ரணதீரா... ஒருபோதும் மீன் அதில் சிக்கக் கூடாது.
முதலும் இறுதியுமாகச் சொல்கிறேன்... கொற்கைக்குச் செல். இது உன் தந்தையின் வேண்டுகோள் அல்ல. பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மரின் ஆணை!’’

காற்றைக் கிழித்தபடி தென் திசையை நோக்கி புரவியில் சென்று கொண்டிருந்த கோச்சடையன் இரணதீரனின் மனதில் ஓலையில் கண்ட தன் தந்தையின் எழுத்துக்களே அலை அலையாக மேலெழும்பின. மோதின. பாண்டிய இளவல் கொற்கை நோக்கிச் செல்வதை மறைந்திருந்து பார்த்த சீனன் தனக்குள் புன்னகைத்தான்.ஒரேயொரு புறாவைப் பறக்கவிட்டான்!‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள்...’’ என்றபடி புயலென ஸ்ரீராமபுண்ய வல்லபரின் மாளிகைக்குள் நுழைந்தாள் சிவகாமி!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்