இந்த வருடம் வெயில் எப்படி இருக்கும்?எல்லோரது மனதிலும் இருக்கும் கேள்வி இதுதான்; இது மட்டும்தான்.ஏனெனில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி... என ஐந்து மாதங்களை மழை, பனி என்று சற்று குளிர்ச்சியாகக் கடந்துவிட்டோம்.இப்போது மார்ச் வந்திருக்கிறது. கூடவே வெப்பமும் வந்துவிட்டது. சென்னையில் வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. எனவேதான் இந்த வருடம் வெயில் கடுமையாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், மார்ச் மாதம் அத்தனை வெயில் இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வங்காள விரிகுடா கடலுக்கு அந்தப் பக்கம் ஏற்பட்டுள்ள வானிலை அமைப்புகள் சென்னைக்கு மழையைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதனால் வெப்பம் சற்று குறையலாம் என்கிறார்கள்.அதாவது மார்ச் மாதத்தில் பகலில் வெயில் அதிகமாகவும் இரவில் சற்று குளிர்ந்தும் இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு.

குளிர் காலத்துக்கும் கோடை காலத்துக்கும் பாலமாக இருப்பது மார்ச் மாதம். இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் போகும்போது குளிர் குறைந்து கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குவது இயற்கை.சரி, இந்த வருடம் வெயில் சென்னைக்கும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் எப்படி இருக்கும்?

இந்த வருடம் தமிழ்நாட்டில் லா நினா (La Nina) தாக்கம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த லா நினா தாக்கம்தான் அதிக குளிருக்கும் அதிக வெப்பத்துக்கும் காரணமாக அமையக் கூடியது. லா நினா தாக்கம் இல்லாமலிருந்தால் இயல்பான வெப்பம்தான் இருக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.ஆகவே இந்த முறை வழக்கமான வெப்ப அளவுதான் இருக்கும். வெயில் கடுமையாக சுட்டெரிக்காது.

வழக்கமான கோடை வெயிலே சுட்டெரிக்குமே... அப்படியென்றால் இந்த முறையும் வெயிலில் வாடத்தான் வேண்டுமா?

வேறு வழியில்லை. எப்பொழுதும் அக்னி எப்படி சுட்டெரிக்குமோ அப்படி இந்த முறையும் வாட்டும். அதாவது கடுமையாக இருக்காது; அதேநேரம் இருக்கும். என்ன செய்ய... இயற்கையின் டிசைன் அப்படி!

நிரஞ்சனா