அமைதியைக் கொடுத்த அரபுத் தமிழ்!



‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்ற வார்த்தையைக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட வள்ளல் சீதக்காதி வரலாற்றை 1939லேயே ‘செய்தக்காதி நொண்டி நாடகம்’ எனும் தலைப்பில் முதன்முதலில் தமிழில் வெளியிட்டு தமிழுக்கும் இஸ்லாமுக்கும் புகழ் சேர்த்தவர் பேராசிரியர், டாக்டர் சையது முஹம்மது ஹுஸைன் நைனார்.

இது மட்டும் அல்லாமல்  கர்னாடக நவாப்புகள் தொடர்பான 5 தொகுதி நூல்கள், கேரளாவில் போர்ச்சுகீசிய காலனியின் வரலாற்று மொழிபெயர்ப்பு நூல், சீதக்காதி பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆய்வு நூல், தமிழ் முஸ்லிம் புலவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல், தமிழில் அரேபிய வார்த்தைகள் பற்றிய சிறு கட்டுரை... என பல பங்களிப்புகளை செய்திருப்பவர் ஹுஸைன் நைனார்.

அவரின் டாக்டர் பட்ட பிஎச்.டி ஆய்வு ‘தென் இந்தியா பற்றி அரேபிய நிலவியலாளர்கள் (ஜியோகிராஃபர்ஸ்) கொண்டிருந்த அறிவு’. இவற்றில் பல ஆங்கிலம், சில தமிழில் வந்தவை.
1899ல் மதுரை மாவட்டம் பழனியில் பிறந்த ஹுஸைன் நைனார் தந்தையின் பேச்சையும் தாண்டி போடிநாயக்கனூரில் பள்ளிப் படிப்பு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட், சென்னை மொகமதன் கல்லுரியில் பி.ஏ, அலிகார் முஸ்லிம்  பல்கலைக்கழகத்தில் பி.ஏ சட்டம் மற்றும் எம்.ஏ அராபிக் மற்றும் இஸ்லாம் வரலாறு படித்தவர்.

சென்னை பல்கலைக்கழகம் 1927ல் கீழைத்தேய ஆய்வு தொடர்பான ஒரு துறையை உருவாக்கியபோது அதில் அரேபிய, பாரசீக மற்றும் உருது மொழிக்கான துறைத் தலைவராக முதன்முதலில் நியமிக்கப்பட்டவர் ஹுஸைன் நைனார். இதுமட்டுமல்லாமல் 1936களில் சென்னை பல்கலைக்கழகமே பிரபல லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய ஆய்வு நிறுவனத்தில் அவரது பிஎச்.டி படிப்பை படிக்கவும் அனுப்பி வைத்த அதிசயம் ஹுஸைனுக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் இந்தோனேசியா, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் கடைசிக் காலத்தில் பணிபுரிந்தவர். ஏராளமான அரசு நிறுவனங்களிலும் அவரது துறை சார்பாக ஆலோசகராக இருந்தவர். 1963 செப்டம்பர் மாதம் காலமானார்.ஹுஸைன் நைனாரின் மகனான முனவ்வர் நைனாரும் ஒரு கல்வியாளர். எகிப்து தலைநகரான கெய்ரோ, தில்லி பல்கலைக்கழகங்களில் அரேபிய மொழி படித்த முனவ்வார் தன் தந்தை காட்டிய வழியிலேயே தன் ஆய்வை தொடர்ந்தவர்.

உதாரணமாக இந்திய மொழிகளில் அரேபிய மொழியின் புழக்கம் (கடன் வார்த்தைகள்.loan words) எனும் தலைப்பில் அவர் செய்த ஆய்வு தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் ஒரு பொக்கிஷம். திருச்சியில் மகளுடன் வாழும் 87 வயது நிரம்பிய  முனவ்வர் நைனாரிடம் தன் தந்தை குறித்தும் அரேபிய மொழி குறித்ததுமான சில சந்தேகங்களைக் கேட்டோம்.

‘‘1650 மற்றும் 1720க்கு இடைப்பட்ட காலத்தில் சீதக்காதி வாழ்ந்ததாக சில சான்றுகள் கொண்டு அப்பா தன் ‘சீதக்காதி வள்ளல்’ என்ற நூலில் நிறுவுகிறார். அதுவரை சீதக்காதி பற்றி தமிழில் ஒரு நூலுமே இல்லை. முதலில் சீதக்காதி பற்றிய ‘நொண்டி நாடகம்’ (1939), பிறகு ‘சீதக்காதி வள்ளல்’ (1953) ஆராய்ச்சி நூலை அப்பா சில பிரதிகளைச் சரிபார்த்து எழுதுகிறார்.

வள்ளல் புத்தகத்தில் ஷைகு அப்துல் காதிறு எனும் ஒரிஜினல் பெயர் எப்படி மருவி செய்தக் காதிறு, செய்தக்காதி, சைதகாதி, கடைசியாக சீதக்காதி என்று வந்ததாக அப்பா மொழிவழி விளக்கம் தறுகிறார். அதுபோல சீதக்காதி பிறந்தது காயல்பட்டினமா, கீழக்கரையா எனும் ஒரு குழப்பமும் அப்பா காலத்தைப் போலவே இன்றும் நிலவுகிறது...’’ என்று சொல்லும் முனவ்வர் நைனாரிடம் இந்திய மொழிகளில் அராபிய சொற்கள் பற்றிய அவரின் பி.எச்.டி ஆய்வைப் பற்றிக் கேட்டோம்.

‘‘அப்பா ஒரு சிறு கட்டுரையில் அரேபிய சொற்களின் இந்தியக் கலப்பு பற்றி எழுதியிருப்பார். நான் சுமார் 250 இந்திய அரேபிய சொற்களை எடுத்து ஆய்வு செய்திருப்பேன். அதிலும் வடநாட்டைவிட தென் இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் அரபுச் சொற்கள் அதிகம் காணக் கிடைக்கிறது. இந்த அரபுச் சொற்களின் தென் இந்திய ஆதிக்கத்தைப் பற்றிய செல்வாக்கை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்...’’ என்று சொல்லும் முனவ்வர் அதைப் பற்றியும் விவரித்தார்.

‘‘வட இந்தியாவில் முகலாயர்கள் ஆண்டபோது அவர்களின் அரண்மனை மற்றும் அரசு மொழியாக பெர்ஷியன் எனப்படும் பாரசீக மொழி திகழ்ந்தது. பாரசீகம் என்றால் ஈரான். அப்போது இஸ்லாமின் நாகரிகத் தொட்டிலாக பாரசீகம் திகழ்ந்தது. முகலாய ஆட்சி முதலில் போராலும் அது தந்த வெற்றிகளாலும் நிறுவப்பட்டது. ஆனால், அவர்களுக்கு முன்பும் அவர்கள் காலத்திலும் அரேபிய வர்த்தகர்கள் இந்தியாவுடன் வர்த்தகமும் சில குட்டிப் போர்களையும் மேற்கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் அரேபியர்கள் பாரசீகத்தின் மொழியை தங்கள் மொழியுடன் கலந்து பேசுவதில் ஒரு தயக்கமும் காட்டவில்லை. காரணம், அப்போது பாரசீக மொழியில்தான் பெரிய சொற்குவியலே இருந்தது. புதிய சொற்கள் அங்கே இருந்துதான் அதிகம் கிடைத்தது. உதாரணமாக தாசில்தார் என்று நாம் இப்போது தமிழில் சொல்வோமே... அந்த வார்த்தையை எடுத்துக்கொண்டால் ‘தேஸில்’ என்பது அரேபிய வார்த்தை. ‘தார்’ என்பது பாரசீக வார்த்தை. இந்த இரண்டும் கலந்துதான் ‘தேஸில்தார்’. அதுவே தாசில்தார் என்று மாறியது.

இதுமாதிரி பெர்ஷிய மொழியும் அரேபிய மொழியும் கலந்துதான் இந்திய மொழிகள் பலவற்றில் இடம்பிடித்தன. அதுவும் வட நாட்டைவிட தென் இந்தியா மிகவும் அமைதியான பிரதேசமாக இருந்ததால் அரேபிய வர்த்தகர்கள் மூலம் பல அரேபிய சொற்கள் தமிழ் போன்ற தென் இந்தியாவில் இடம்பிடித்தது. அதிலும் ரெவன்யு எனப்படும் வரி - வருமானம், நிலம், நிர்வாகத்தில், நீதித்துறைகளில் இந்த சொல் அதிகம் இடம்பெற்றது. உதாரணமாக தாலுகா, ஜவாப்தாரி, வகையறா, பாக்கி, பதில், அலாதி, ஆஜர், ஆபத்து, வசூல்... போன்ற ஏராளமான சொற்கள்...’’ என்று சொல்லும் முனவ்வர் வடநாட்டில் ஒரு காலத்தில் கோலோச்சிய உருது மொழி பற்றியும் பேசினார்.

‘‘சமஸ்கிருதத்தில் இருந்து இந்தி கிளைத்தபோது உருது கைவிடப்பட்டது. ஆனாலும் உருது மொழியின் பயன்பாட்டை இந்தியாவால் முழுதும் புறக்கணிக்க முடியவில்லை. ஆனால், உருதுவின் காலமே வெறும் 500 அல்லது 600 ஆண்டு காலமாகத்தான் இருக்கும். உருது என்ற வார்த்தை கேம்ப் என்ற பதத்தில் இருந்து வந்தது. இராணுவ கூடாரத்தை இது குறிக்கும். ஒருகாலத்தில் துருக்கியைச் சேர்ந்த கூலிப் போராளிகள் நாடு முழுவதும் படையெடுத்தனர். இவர்கள் பேசிய மொழிதான் உருது.

உருது மொழியானது பாரசீகம், அரேபிய மொழி மற்றும் துருக்கி மொழியின் கலவையாக இருந்தது. பாரசீகம் ஆட்சியாளர்களாலும், உருது போர் வீரர்களாலும் வளர அரேபிய மொழி சாதாரண வணிகர்களால் பேசப்பட்டதால் அது மற்ற மொழி பேசும் மக்களிடையே இலகுவாகக் கலந்தது. அதாவது பாரசீகத்தையும், உருதுவையும் தாண்டி ஒரு மக்கள் மொழியாக மாறியது. இதை தென் இந்தியாவில் அதிகம் காணலாம். காரணம், ஒரு மொழி மக்களுடன் கலக்கவேண்டுமென்றால் அந்தப் பிரதேசம் அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும். போரும், ஆட்சி அதிகாரங்களும் இதற்கு தடையாக இருக்கும்.

இதனால்தான் அரேபிய மொழியின் கலப்பு தென் இந்திய மொழிகளில் அதிகம். இதனால்தான் இஸ்லாமிய நாடுகளில் பலவித எழுத்துக்கள் இருந்தாலும் அரேபிய எழுத்து முறை பல இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது...’’ என்று சொல்லும் முனவ்வர், அப்பாவின் கர்நாடக நாவாபுகள் பற்றிய மெகா தொகுப்பு பற்றியும் விவரித்தார்.‘‘1749ல் ஆம்பூரில் நடந்த முதல் நவாப் போரில் இருந்து பிறகு வந்த பல நாவாப்புகள் பற்றி அவர்கள் அரண்மனைகளில் பாதுகாக்கப்பட்ட பாரசீக மொழியிலான ஆவணங்களை அந்த மொழி தெரிந்த அறிஞர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 5 தொகுதிகள் இவை.

இவற்றை முழுவதுமாக வரலாறாகக் கருத முடியாவிட்டாலும் அதிலும் சில வரலாற்றுத் தன்மைகளை அறிஞர்கள் தேடினால் கிடைக்கக்கூடிய தொகுதிகள் இவை...’’ என்று சொல்லும் முனவ்வார், அப்பா மொழிபெயர்த்த, எழுதிய, தொகுத்த முழுமையான புத்தகங்கள் மற்றும் முழுமையடையாத எழுத்துக்களை வெளியிட அல்லது பாதுகாக்க ஓர் அமைப்பு இருந்தால் அது தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷமாகத்தான் இருக்கும் என நம்பிக்கையுடன் சொல்கிறார்.

டி.ரஞ்சித்