1000 எபிசோடுகளைக் கடந்த அபூர்வ கூட்டுக் குடும்ப சீரியல்!



பொதுவாக ஒரு சீரியல் ஷூட்டிங்கில் சேர்ந்தாற்போல பல ஆர்ட்டிஸ்ட்டுகளைப் பார்ப்பதே அரிது. ஆனால், ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் ஆன்ஸ்கிரீனிலே எப்போதும் எட்டு பேர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பாண்டவர்கள் ஐவர் ப்ளஸ் அவர்களின் மனைவிமார்கள் ஐவர் என லீட் கேரக்டர்களே இதில் பத்து பேர். தவிர, துணை கதாபாத்திரங்கள் வேறு. இப்படி ஒரு பெரிய டீமை வைத்துக்கொண்டு 1000 எபிசோடுகளை இந்த சீரியல் கடந்திருப்பது உண்மையில் மேஜிக்தான்.

சென்னை ஆலந்தூரில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்த ‘பாண்டவர் இல்லம்’ ஷூட்டிங்கில் எங்களையும் இணைத்துக் கொண்டோம். தலையில் ‘விக்’கை மாட்டியபடி ஷாட்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தார் வீட்டின் தலைமகன் ராஜசுந்தரம் என்கிற நேசன்.‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஆயிரம் எபிசோடுகள் போனதே தெரியல. 2019ல் ஆரம்பிக்கும்போது கதைப்படி பெரிய பங்களாவுல வாழ்ற குடும்பம். அதனால, மாமல்லபுரம் பக்கத்துல ஒரு பங்களா டைப் வீட்டுல ஷூட்டிங் பண்ணினாங்க. அப்ப காலையில் 6 மணிக்கு ஷூட் கிளம்பணும். வீட்டுக்கு வர இரவு 11 மணி ஆகிடும். மறுபடியும் காலையில் 6 மணினு ஓடிட்டே இருந்தோம்.

அப்புறம், வீட்டை இழந்து வாடகை வீட்டுக்கு வர்ற மாதிரி கதை. இங்கயும் ஜாலியாக போயிட்டு இருக்கு...’’ என்ற நேசன், தன் சுந்தரத் தம்பிகள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.
‘‘இதுதான் கடைசி தம்பி, குட்டி. இவரின் நிஜப்பெயர் நரேஷ் ஈஸ்வர்...’’ என்றவர், ‘‘தம்பி, உனக்கு பிடிச்ச பெண் ஆர்ட்டிஸ்ட் யாருனு சொல்லு’’ என கிண்டலாய் ஒரு கேள்வியை எழுப்பினார்.
‘‘எல்லா பெண் ஆர்ட்டிஸ்ட்டையும் பிடிக்கும். அஞ்சு பேரும் சூப்பரா ஆக்ட் பண்றாங்க. இதுல என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட்னு கேட்டால் அது கயல் கேரக்டர்ல நடிக்கிற பாப்ரி கோஷ். அவங்கள ரொம்பப் பிடிக்கும். அதேமாதிரி அண்ணன்கள் நால்வரையும் பிடிக்கும்...’’ என கண்சிமிட்டிச் சிரிக்கும் நரேஷ், ‘‘இந்த சீரியல்ல எனக்கு நிறைய கேரக்டர்கள் பண்ற வாய்ப்பு கிடைச்சது பெரிய சந்தோஷம்.

ஒரு இடத்துல ராஜாவாக பண்ணுவேன். இன்னொரு இடத்துல பிச்சைகாரனாக வருவேன். ஒரு இடத்துல சுவாமிஜி வேடம். இப்படி பல கேரக்டர்கள். ராஜாவாக பண்ணும்போது ‘பாகுபலி 2’ படம் வந்த நேரம். அப்ப எனக்கு பிரபாஸ் லுக் கொஞ்சம் இருக்குனு சொல்லி செட்ல கலாய்ச்சாங்க.  எனக்கும் ஹீரோயின் கயலுக்கும் முதலிரவு நடக்கவிடாமல் அண்ணன்களும், தாத்தாவும் பண்ணுவாங்க. அந்த சீன்கள் காமெடியாக இருக்கும்.

பொதுவா, சீரியல்ல காமெடி பண்றது கஷ்டம். இதுல காமெடி நிறைய இருக்கும். ‘பாண்டவர் இல்லம்’ வெற்றியடைய காமெடியும் ஒரு காரணம். அப்புறம், இயக்குநர் ஓ.என்.ரத்னம் சார். அவருடன் ‘அழகு’ சீரியல் பண்ணினேன். ஆனா, இதுலதான் பக்கத்துல இருந்து சாரின் இயக்கத்தைப் பார்த்தேன். இப்ப சிவா சார் இயக்குறார். அவரும் சிறப்பாக செய்றார். அப்புறம், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் சார், எங்களைச் சிறப்பாகக் காட்டுபவர்.

இத்தனை ஆண்டுகள் சக்சஸ்ஃபுல்லா போனதுக்குக் காரணம் மக்கள்...’’ என அழகாய் நரேஷ் சொல்ல, மூன்றாவது பாண்டவரான சுரேந்தர் @ அழகுசுந்தரம் ஆஜரானார்.
‘‘இது என் மூணாவது தம்பி அழகு. இவருக்கு சொந்த ஊர் சூரக்கோட்டை பக்கம். நடிகர் திலகம் சிவாஜி சாருக்கு சொந்தக்காரர். அதனாலதான் நடிக்க வந்தீங்களா?’’ என நேசன் கேட்க, சுரேந்தர் தொடங்கினார்.

‘‘அதுவும் ஒரு காரணம். சின்ன வயசுலயே சினிமா ஃபீல்டுக்கு வந்துட்டேன். சான்ஸ் தேடி அலைஞ்சு இன்னைக்கு ‘பாண்டவர் இல்ல’த்துல நடிக்கிறேன். இப்ப என் கேரக்டர் செமயா ரீச்சாகியிருக்கு. எங்க போனாலும் அழகுனு அழைக்கிறாங்க...’’ என சுரேந்தர் நிறுத்த, ‘‘தம்பிக்கு அழகுசுந்தரம்னு பெயர் வச்சதைவிட அதிர்ஷ்ட சுந்தரம்னு வச்சிருக்கலாம். ஏன்னா, மற்ற நான்கு பேரும் ஆரம்பத்துல இருந்து ஒரு மனைவி கேரக்டருடன் வாழ்றோம். ஆனா, தம்பிக்கு மனைவியாக வர்ற கேரக்டர் ஆறுமுறை மாறியிருக்காங்க...’’ என நேசன் கலாய்க்க, வெட்கச் சிரிப்பு காட்டுகிறார் சுரேந்தர்.

‘‘நான் என்ன செய்ய? முதல்ல ஜோடியாக வந்தவங்க அமெரிக்கா போயிட்டாங்க. அடுத்து வந்தவங்க தேதி பிரச்னை. இடையில் ஒரு பொண்ணு வந்து அவங்களும் போயிட்டாங்க. இப்படி மாறி மாறி ஆறாவது கேரக்டராக ஐஸ்வர்யா வந்திருக்காங்க...’’ எனச் சிரிக்கிறார். ‘‘அடுத்து, இது என் ரெண்டாவது தம்பி நல்லசுந்தரம். நிஜப் பெயர் அப்சர். நாங்க சின்னத்திரையின் கூகுள்னு சொல்வோம். எங்க சீரியல் குடும்பத்தில் யாருக்காவது பிரச்னை, உடல்நிலை சரியில்லனா உடனே இவருக்குப் போன் பண்ணிடுவாங்க. அந்தளவுக்கு பலதரப்பட்ட அறிவுள்ளவர். ரொம்ப கேரிங் எடுத்துப்பார்...’’ என நேசன் அறிமுகப்படுத்த, அப்சர் தொடர்ந்தார்.  

‘‘இதன் தயாரிப்பாளர் குருபரன் சாரை எனக்கு 20 ஆண்டுகளாகத் தெரியும். சிறந்த தயாரிப்பாளர். திட்டமிடுதல் ஆகட்டும், அதை செயல்படுத்தும் விதமாகட்டும் ரொம்ப சிறப்பாக செய்யக்கூடியவர். திறமை இருக்கிறவங்களுக்கு தொடர்ந்து சான்ஸ் கொடுத்திட்டே இருப்பார். அடுத்து, இயக்குநர் ஓ.என்.ரத்னம் சார். நான் ‘அலைகள்’ சீரியல் பண்ணினப்ப என் குருநாதர் சுந்தர் கே விஜயன் சாரின் உதவியாளராக இருந்தார். பிறகு நிறைய சீரியல்கள் செய்து வெற்றிகரமான இயக்குநராக மாறியவர். இப்ப இருக்கிற இயக்குநர் சிவா சாரிடம் நிறைய புரொஜெக்ட் பண்ணியிருக்கேன். அதனால எளிதாக வொர்க் பண்ணமுடியுது.

இது நான்-ப்ரைம் டைம் சீரியல். இதுக்கும் நல்ல வரவேற்பு தந்து எங்க ஐந்து பேரையும் அங்கீகரிச்சிருக்காங்க. இன்று கூட்டுக்குடும்பம் என்கிற கான்செப்ட் பல காரணங்களால் இல்ல. அதனால, நாங்க கூட்டுக்குடும்பமா ஒற்றுமையாக இருப்பது மக்களுக்கு பிடிச்சிருக்கு. இதை எடுத்திட்டு போகிற எங்க சன்டிவி சேனலுக்கும் பெரிய நன்றி...’’ என அப்சர் நெகிழ்ந்து சொல்ல, நான்காவது தம்பி அன்பு என்கிற குகன் சண்முகம் வந்து சேர்ந்தார்.

‘‘முதல்ல மக்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்த வெற்றிக்கு அவங்கதான் காரணம். இவ்வளவு நாட்கள் போனதே தெரியல...’’ என்றார். தொடர்ந்து, ‘பாண்டவர் இல்ல’த்தின் மூத்த மருமகள் ரேவதியிடம் பேசினோம். இவரின் நிஜப்பெயர் கிருத்திகா அண்ணாமலை. ‘‘என் ஜர்னியை ‘மெட்டி ஒலி’யில் இருந்து தொடங்கினேன். இன்னைக்கு ‘பாண்டவர் இல்லம்’ வரை அதிகபட்சம் சன் டிவியுடனே பயணிச்சிருக்கேன்...’’ என்கிறவரை தொடர்ந்தார், ஆர்த்தி சுபாஷ்.

‘‘இப்ப என்னை, ‘பாண்டவர் இல்ல’த்தின் மல்லிகானு சொன்னாதான் தெரியுது. சன் டிவி என் தாய்வீடு. அங்க ஆங்கரிங் பண்ணினேன். அதன்பிறகு வந்ததுதான் நடிக்கிற வாய்ப்பு. நான் சின்ன வயசுல கூட்டுக்குடும்பம் எதுவும் பார்த்தது கிடையாது. இப்ப எப்படி ஒரு கூட்டுக்குடும்பம் இருக்கும் என்பதை இந்த நவீன உலகத்துல இந்த சீரியல் மூலம் தெரிஞ்சுகிட்டேன். இங்க எனக்கு கிருத்திகா அண்ணாமலை பெஸ்ட் ஃப்ரண்டாக கிடைச்சிருக்காங்க...’’ என ஆர்த்தி முடிக்கவும், ஹீரோயின் பாப்ரி கோஷிடம் பேசினோம்.

அப்போது, ‘‘வெயிட்... வெயிட்...’’ என்றொரு குரல். திரும்பினால் ஹீரோ நரேஷ். ‘‘‘பாண்டவர் இல்ல’த்தின் பில்லரான என் ஜோடி பாப்ரியை நானே இன்டர்வியூ பண்றேன்...’’ என கேள்வி கேட்கத் தொடங்கினார்.  ‘‘பாப்ரி, ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியிருக்கோம். எப்படி ஃபீல் பண்ற...’’ என நரேஷ் ஆரம்பித்தார்.

‘‘இதுக்கு முன்னாடி சன் டிவியில் ‘நாயகி’ பண்ணினேன். இப்ப ‘பாண்டவர் இல்லம்’. இந்த சான்ஸ் கொடுத்த சன் டிவிக்கு நன்றி. இதுக்குப் பின்னாடி பெரிய உழைப்பு இருக்கு. எல்லோருமே ஆஃப் ஸ்கிரீன்ல ரொம்ப ஜாலியா இருப்பாங்க. அதனாலதான் ஆன் ஸ்கிரீன்ல சிறப்பாக பண்ண முடியுதுனு நினைக்கிறேன்...’’ என பாப்ரி கோஷ் சொல்ல, ‘‘ஏதாவது மறக்கமுடியாத சம்பவம் இருக்கா?’’ என நரேஷ் கேட்டார்.

‘‘நிறைய இருக்கு. இப்ப சீரியல்ல கயல் மாசமாக இருக்கா. ஆனா, வெளியில் போகும்போது நான் பாப்ரி கோஷா மாறிடுவேன் இல்லையா? அப்ப, எல்லோரும் ‘உங்க குழந்தை எங்க போச்சு’னு கேட்கிறாங்க!’’ பாப்ரி அழகாய் சொல்லி முடிக்க, நரேஷ் தம்ஸ் அப் காட்டியபடி விடைபெற்றார். அப்போது மல்லிகாவின் அம்மாவாக நடிக்கும் கே.எஸ்.ஜெயலட்சுமி, ‘‘பல படங்கள் நடிச்சிருக்கேன். பல சீரியல்களும் பண்ணியிருக்கேன். ஆனா, இப்படியொரு சீரியலை நான் பார்க்கல. இவ்வளவு பேர்களுடன் ஒரு குடும்பமாக ஒத்துழைப்புடன் இருந்து பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என்றார்.   

தொடர்ந்து சீரியலின் மூன்றாவது மருமகள் தேன்மொழியிடம் பேசினோம். ‘‘எனக்கு தமிழ்ல இது முதல் புரொஜெக்ட். நான் கர்நாடகா. என் பெயர் ஐஸ்வர்யா. எனக்கு இந்த டீம் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. நிறைய கேரிங் எடுத்து பார்த்துக்கிறாங்க. ஏதாச்சும் தப்பு செய்தால் எல்லோருமே சொல்லித் தர்றாங்க. ஒண்ணுமே தெரியாமல் வந்து இன்னைக்கு நடிக்கிறேன்னா அதுக்குக் காரணம் என் இயக்குநர்கள், என் சக நடிகர், நடிகைகள்தான்...’’ என்றார்.

இதனையடுத்து ‘பாண்டவர் இல்ல’த்தின் இயக்குநர் சிவாவை சந்தித்தோம். ‘‘இது ரொம்ப பெரிய ஜர்னி. 2019ல் தொடங்கி இப்ப வரை போயிட்டு இருக்கோம். ஆயிரம் எபிசோடுகள் கடந்திருக்கோம். இப்படியொரு லைனை - அதாவது கூட்டுக்குடும்பமாக இருக்கணும், அண்ணன் தம்பிகள் முட்டாள்களாக இருக்கணும், பெண்களைப் பிடிக்காத வீட்டுல தாத்தா வளர்ப்புல இருக்கிற பசங்க, கொஞ்சம் காமெடி கலந்து சொன்னா நல்லாயிருக்கும்னு ஐடியா தந்தது சன் டிவி தூரன் சார்தான்.

பிறகு ரைட்டர் செல்வம் சார் இதை மேற்கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டரை உருவாக்கினார். முதல்ல எல்லோருக்கும் ‘விக்’ வைக்க ரொம்பவே தேடி அலைஞ்சோம். பெரிய ஹோம்வொர்க்கே பண்ணினோம். இப்ப நான்-ப்ரைம் டைம்ல ரெண்டாவது இடத்துல ‘பாண்டவர் இல்லம்’ சீரியல் இருக்குது. இதுக்கு மக்களுக்கும், சன் டிவிக்கும்,  தயாரிப்பாளர் குருபரன் சாருக்கும்தான் நன்றி சொல்லணும்.

கொரோனா நேரம் என்பதால் தாத்தாவாக நடிக்கிற டில்லிகுமார் சாரால் வரமுடியல. இப்ப டில்லிகுமார் சார் திரும்பவும் வர கேட்டுக்கிட்டு இருக்கோம். சீக்கிரமே வந்திடுவாங்க. அப்புறம்,  ராணினு வேதா கேரக்டர் பண்ணியிருப்பாங்க. அவங்களும் ரீ என்ட்ரி ஆகியிருக்காங்க. அதனால எங்க சீரியல் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கு...’’ என்கிறார் சிவா.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்