ஆப்பிரிக்காவின் பணக்கார விவசாயி!ஆப்பிரிக்காவின்  முன்னணி தேசங்களில் ஒன்று, நைஜீரியா. இந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது விவசாயம். இதன் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் விவசாயத்திலும், விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே 70.8 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் நெல், கரும்பு, தக்காளி... என பலதரப்பட்ட விவசாயம் நடக்கிறது.
இத்தகைய நைஜீரியாவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரிய விவசாயியாகவும், தொழில் அதிபராகவும் வலம் வருகிறார் அலிக்கோ டாங்கோட்.

சிமெண்ட், சர்க்கரை, அரிசி, உப்பு, தக்காளி, சுரங்கம், உரம், ரியல் எஸ்டேட், லாஜிஸ்டிக்ஸ்... என பல துறைகளில் இயங்கி வரும் ‘டாங்கோட் குரூப்’பின் நிறுவனர் இவர். ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகின் கறுப்பினப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும் இவரே.
நைஜீரியாவில் நலிவடைந்த ஒரு தொழிலாக இருந்த விவசாயத்தை, மாபெரும் லாபம் ஈட்டும் பிசினஸாக மாற்றிக்காட்டிய அலிக்கோவின் தொழில் பயணமும், வாழ்க்கையும் புதிதாக தொழில் தொடங்கும் எல்லோருக்குமே ஒரு வழிகாட்டி.  
 
நைஜீரியாவில் உள்ள கனோ நகரத்தில் வசித்து வந்த ஒரு வசதியான  இஸ்லாமியக் குடும்பத்தில் 1957ம் வருடம் பிறந்தார் அலிக்கோ டாங்கோட். அவர் பிறந்தபோது நைஜீரியாவிலேயே பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தார் அவரது தாத்தா. அதனால் அலிக்கோ நினைப்பதை எல்லாம் நடத்திக்காட்டுவதற்கான சாத்தியங்கள் இருந்தன. ஆனால், அவர் பிசினஸைத் தேர்ந்தெடுத்தார்.

சிறு வயதில் கைச்செலவுக்காக தாத்தா கொடுக்கும் பணத்தில் மொத்தமாக மிட்டாய்களை வாங்கி, நண்பர்களிடம் விற்பனை செய்து லாபம் ஈட்டியிருக்கிறார் அலிக்கோ!
பள்ளிப்பருவத்திலிருந்தே அவருக்கு பிசினஸ் மீதான ஆர்வம் தொடங்கிவிட்டது. இந்த ஆர்வம் அவரைவிட்டு நீங்கவே இல்லை. அதனால் கல்லூரியிலும் பிசினஸ் தொடர்பாகவே படித்தார்.
1977ம் வருடம் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பிசினஸ் செய்வதற்காக தாத்தாவிடமிருந்து 3 ஆயிரம் டாலரைக் கடனாக வாங்கினார் அலிக்கோ. அப்போது 3 ஆயிரம் டாலர் என்பது பெரும் தொகை.

அந்தப் பணத்தை வைத்து பிரேசிலில் இருந்து சர்க்கரையையும், தாய்லாந்திலிருந்து அரிசியையும் இறக்குமதி செய்தார். அப்படி இறக்குமதி செய்த அரிசியையும், சர்க்கரையையும் கிராம் கணக்கில் பேக்கிங் செய்து தனது ஊரில் இருப்பவர்களிடம் விற்பனை செய்தார். அவர் ஊரிலேயே பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அலிக்கோவின் பிசினஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தவிர, அலிக்கோ போல விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய அங்கே யாருமில்லை.  

தாத்தாவிடம் வாங்கிய கடனை மூன்றே மாதத்தில் அடைத்துவிட்டார். கிடைத்த லாபத்தை பிசினஸிலேயே முதலீடு செய்தார். இப்போதும் கூட கிடைக்கும் லாபத்தை பிசினஸில்தான் முதலீடு செய்கிறார்; பெரிதாக வங்கியில் அவர் பணத்தை சேமிப்பதில்லை. நன்றாக பிசினஸ் சென்றது.

தனது 21வது வயதில் ‘டாங்கோட் குரூப்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி அரிசி, சர்க்கரை போன்ற விவசாயப் பொருட்களுடன்  உப்பு, சிமெண்ட்டையும் இறக்குமதி செய்து விற்பனை செய்தார் அலிக்கோ. அடுத்த இருபது வருடங்களில் நைஜீரியாவிலேயே முக்கிய வணிக நிறுவனமாக உயர்ந்தது ‘டாங்கோட் குரூப்’.

இந்நிலையில் ஒரு பொருளை யாரோ ஒருவரிடமிருந்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் இடைத்தரகராகத்தான் இருக்கிறோம் என்ற விஷயம் அவரை ரொம்பவே தொந்தரவு செய்தது. அதனால் இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களையும் தானே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

1997ம் வருடம் சர்க்கரை, அரிசி, தக்காளியை உற்பத்தி செய்யும் விவசாயியாக பரிணமித்தார் அலிக்கோ. அதுவரை அவர் சம்பாதித்த எல்லா பணத்தையும் விவசாயத்தில் முதலீடு செய்தார். இதனால் நைஜீரியாவில் உள்ள லட்சக்கணக்கானோருக்கு வேலையும் கிடைத்தது.

இன்று நைஜீரியாவில் உள்ள இடோ, ஜிகாவா, கெப்பி, க்வாரா ஆகிய மாநிலங்களில் 3.75 லட்சம்  ஏக்கர் பரப்பளவில் நெல்லை உற்பத்தி செய்கிறார் அலிக்கோ. அங்கே உற்பத்தியாகும் நெல்லை அரிசியாக மாற்ற பிரமாண்டமாக அரிசி ஆலைகளை நடத்துகிறார். வருடத்துக்கு சுமார் 20 லட்சம் டன் அரிசியை உற்பத்தி செய்கிறது அலிக்கோவின் அரிசி ஆலைகள்.

ஆப்பிரிக்காவிலேயே அதிகளவு அரிசியை உற்பத்தி செய்யும் நாடுளில் ஒன்று நைஜீரியா. மட்டுமல்ல, உலகளவில் அரிசி உற்பத்தியில் 14ம் இடத்தில் உள்ளது. இதற்கு மூல காரணம் அலிக்கோ.

அடுத்து நைஜீரியாவில் உள்ள கனோ மற்றும் கடுனா ஆகிய இடங்களில் 2,500 ஏக்கரில் தக்காளியைப் பயிரிட்டிருக்கிறார். இங்கே வருடத்துக்கு 10 லட்சம் டன் தக்காளி உற்பத்தியாகிறது.

தக்காளியை அளவு வாரியாக பிரித்து விற்பனை செய்வதற்காக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்துகிறார் அலிக்கோ. 50 கிலோ, 100 கிலோ, 200 கிலோ, 1000 கிலோ என பல வகைகளில் தக்காளிகள் பேக்கிங் செய்யப்பட்டு உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

வெறுமனே தக்காளியை மட்டும் விற்பனை செய்யாமல் அதை சாஸாக மாற்றியும் பணத்தை அள்ளுகிறார். உலகிலேயே அதிகளவில் தக்காளியை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா 11-ம் இடத்தில் உள்ளது. இதற்கும் மூலகாரணமே டாங்கோட்தான்.நைஜீரியாவில் உள்ள பல்வேறு இடங்களில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்புத் தோட்டங்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து உற்பத்தியாகும் கரும்பை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாக மாற்ற ‘டாங்கோட் சுகர்’ என்ற பெயரில் சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன.

வருடத்துக்கு 15 லட்சம் டன் சுத்திகரிப்பு செய்யப்பட்ட சர்க்கரையை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயங்கி வருகிறார் அலிக்கோ டாங்கோட். அரிசி, சர்க்கரை, தக்காளியை உற்பத்தியாக்கி, விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆப்பிரிக்க மக்களுக்கு இலவசமாகவும் கொடுக்கிறார். அதனால் ஆப்பிரிக்கா முழுவதும் தெரிந்த ஒரே மனிதராகத் திகழ்கிறார் அலிக்கோ டாங்கோட். அவரது இன்றைய சொத்து மதிப்பு 1.53 லட்சம் கோடி ரூபாய்.

த.சக்திவேல்