சிறுகதை-அம்மா என்றொரு தேவதை...



மானேஜருக்கான அறையை சாவி போட்டுத் திறக்கும்போதே, சுப்பையன் சுற்றுமுற்றும் பார்வையை ஓட விட்டார். முகத்தில் வெறுப்பும், மனத்தில் விரக்தியுமாக பல வயதானவர்கள் வெறித்து நோக்கிக் கொண்டிருந்த நிலையில், பாக்கியம்மாள் மட்டும் பளிச்சென்ற உடையில் கம்பீரமாக தோட்டக்காரர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தார். அந்த எழுபது வயதுப் பெண்மணியின் சுறுசுறுப்பும், அழகும், நிர்வாகத்திறமையும் வியக்கத்தான் வைத்தன.

முப்பத்தைந்து ஆண்டுக்கும் மேல் ஒரு இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்தில் ‘ரொடீன்’ வேலை செய்து பழகிய சுப்பையன், இந்த முதியோர் இல்லத்தின் மானேஜராக சேர்ந்த போது இந்த வேலை இவ்வளவு கஷ்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. திடீர்ச்சாவுகள், எதிர்பாராத நோய்கள், விரக்தியில் தோன்றும் சண்டைகள் என்று தினத்திற்கொரு புதிய பிரச்னையை சந்திக்க நேரிடும் போதெல்லாம் அவருக்கு உதவுவது பாக்கியத்தம்மாளின் அறிவும், திறமையும்தான். இல்லத்தின் முழு நிர்வாகமுமே அவர் கையில் இருந்தது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும், அவரும் இந்த முதியோர் இல்லவாசிகளில் ஒருவர்தான்.

எல்லா விளக்குகளையும் முழுவதுமாக அணைத்தாலும், பளபளப்பாக ஒளிரும் சருமம். வெள்ளை வெளேர் எனத் தும்பைப் பூவாய் கேசம். நல்ல உயரம், அந்த உயரத்திற்கேற்ற உடல்வாகு. ஏனோதானோ என்று உடை அணியமாட்டார். வெளிர் நிறத்தில் அழகாக, முடமுடவெனக் கஞ்சி போட்ட காட்டன் புடவை, மேட்ச்சாக ரவிக்கை. அவருடைய தோற்றத்தைப் பார்த்தாலே காலில் விழுந்து ஆசி பெறும் அவா யாருக்கும் தோன்றும்.

எதற்கும் ஒத்துவராமல் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் கிழவிகள் கூட பாக்கியம்மாவின் பேச்சுக்கும், ஆணைகளுக்கும் பயத்துடன் கட்டுப்படுவார்கள். அப்படி ஒரு பர்சனாலிடி. இப்படிப்பட்ட ஒரு பெண்மணியை எந்தக் குடும்பமும் கொண்டாடும். ஆனால், உள்ளூரில் இருந்துகொண்டே இந்தத் தாயை முதியோர் விடுதியில் சேர்த்திருக்கும், மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் திருடனைப் போல்விழித்துக் கொண்டு வரும் மகன்... தூ... இவர்களும் மனிதர்களா? சுப்பையனின் மனம் வெறுப்பில் மூழ்கியது.

“குட்மார்னிங் மிஸ்டர் சுப்பையன்...” பாக்கியம்மாள் எதிரே நின்றார். “புல் தரையில் கோரைப்புல் மண்டிக் கிடக்கிறது. அதுதான் தோட்டக்காரனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தேன். ம்... காலையில் அன்னம்மா சுகர் இன்ஜெக்‌ஷன் போட்டுக் கொள்ள ஒரே தகராறு. என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டார். சமாளித்து இன்ஜெக்‌ஷன் போட்டு விட்டேன்.

இன்னைக்கு ப்ரேக்ஃபாஸ்ட் தோசையானதாலே, காரக்குழம்பும், பருப்பு ரசமும் செய்யச் சொல்லி விட்டேன். சரிதானே... அப்புறம் ஸார், டெலிபோன் பில் கட்ட நாளைக்கு கடைசி நாள்...”
“தேங்க்ஸ்...  நல்ல வேளை ஞாபகப்படுத்தினீர்கள்...”“நமக்கு பெரிய அளவில் டொனேஷன் தருவதாகச் சொன்னாரே அந்த கம்ப்யூட்டர் கம்பெனி முதலாளி... அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். இன்று மதியம் மூன்று மணிக்கு...”“பாக்யம்மா... நீங்களும் கட்டாயம் கூட வரணும். எனக்கு உங்களை மாதிரி இங்கிலீஷ் பேச வராது...”“ஓ... எஸ்...” சிரித்தபடியே பாக்கியம்மாள் அறையை விட்டு வெளியேறினாள்.

பெண்களுக்கான இந்த முதியோர் இல்லத்தில்தான் எத்தனைவிதமான சோகக் கதைகள். தந்தை இறந்தபிறகு, சாமர்த்தியமாகப் பேசி, வீட்டை விற்று, பணத்தை அபகரித்து, தாயை நடுத் தெருவில் விடும் பிள்ளைகள்; தாயாருக்கு புற்று நோய் வந்து குணமான பின்பும், தன் குழந்தைகளுக்கும் நோய் தொற்றும் என்று நம்பும் பட்டதாரிப் பிள்ளை; ‘என் புக்கக மனிதர்கள் உன்னை என்னுடன் வைத்துக்கொண்டால் பிறந்த வீட்டுக்குச் செய்வதாக புரளி பேசுவார்கள்’ என்று வைரத்தோடு, மூக்குத்தி, நகைகள் என அத்தனையும் கழட்டி வாங்கிக் கொண்டு தாயாரை முதியோர் விடுதியில் சேர்த்த பெண்; கணவன், பிள்ளை, பெண்கள் என அனைவரையும் பல காலகட்டங்களில் இழந்து, இன்று தனியே தன் தொண்ணூற்று நாலாவது வயதில் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மூதாட்டி... மனித வாழ்வின் விகாரங்களையும், சோகங்களையும் நிதர்சனமாய் பார்க்க ஓர் இடம் தேவையென்றால் அவை முதியோர் இல்லங்களாகத்தான் இருக்கக் கூடும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் சில மூதாட்டிகளைச் சந்திக்க பெண், பிள்ளைகள், உறவினர் என்று வருவார்கள். அந்த ஒரு தினத்துக்காகப் பெரும்பாலானவர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். சிலர் தேடி வருபவர்களிடம் முகம் கொடுத்துப் பேசாமல் முறுக்கிக் கொள்வார்கள். நோயும், மூப்பும், இயலாமையும் சேரும்போது மனித மனங்களும் விகாரமாகத்தான் மாறிவிடுகின்றன.சுப்பையனுக்கு ஞாயிற்றுக்கிழமை மிக பிஸியான டியூட்டி நாள். அதோ ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மனைவி, பிள்ளைகள் சகிதம் இறங்கி வருவது பாக்கியம்மாளின் மகன்தான்.
 
பாக்கியம்மாளின் பர்சனாலிடிக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் கறுப்பாக, ஒடிசலாக, ஏதாவது கேட்டாலே மிரட்சியுடன், பயப் பார்வை பார்க்கும் இவனுக்கும் நாற்பது வயதுக்கு மேலிருக்கும். இவன் அழகுதான் இப்படி என்றால், அவன் மனைவியின் தோற்றமும், பேச்சும் பாக்கியம்மாள் வீட்டு வேலைக்காரி என்றுதான் இவர்களைப் பற்றி எண்ண வைக்கும்.
ஒருமுறை இதைப் பற்றி பாக்கியம்மாளிடம் நாசுக்காகக் கேட்டபோது அவர் சிரித்தார். “It takes two to make a baby. என் கணவர் இப்படித்தான் கன்னங்கரேல் என்று பர்சனாலிடி இல்லாமல் இருப்பார். சுகுமார் அப்படியே அவன் அப்பாவை உரித்து வைத்திருக்கிறான்...” “உங்கள் கணவர் மிலிட்ரியில் வேலையில் இருந்தவர். அவர் எப்படி...” சுப்பையன் தயக்கத்துடன் இழுத்தபோது, “அதுக்கென்ன செய்யறது. மிலிட்ரியில் எல்லோரும் அழகா இருக்கணும்னு சட்டமில்லை...” என்றார்.

பாக்கியம்மாள் பிள்ளை சுகுமாரும், மருமகளும் அவரிடம் டப்பாவில் ஏதோ கொடுப்பதையும், அதை அவர் இரண்டு கவளம் சாப்பிட்டு விட்டு திருப்பிக் கொடுப்பதையும் சுப்பையாவினால் அறையில் இருந்து பார்க்க முடிந்தது. தாயாருக்கும், மகனுக்கும் இடையில் கலகலப்பான பேச்சோ, சிரிப்போ இல்லாமல், ஒரு இறுக்கம் நிலவுவதையும் உணர முடிந்தது.
உள்ளூரில் மகன் வசிக்க, தான் முதியோர் இல்லத்தில் வசிப்பது பற்றி ஒரு தாய் எவ்வளவு மன வேதனைப்படுவாள் என்று நடுத்தர வயது மனிதர்கள் கூட உணராமல் இருப்பது எத்தனை பரிதாபகரமான விஷயம்.

அதுவும் பாக்கியம்மாள் போன்ற ஒரு சிறந்த பெண்மணியை வீட்டில் வைத்துக் கொள்வதை தன் முன்வினை பாக்யம் என்றல்லவா நினைக்க வேண்டும். எப்படியாவது இந்த சுகுமாரை ஒரு நாள் தனியே சந்தித்து அறிவுரை சொல்லியாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.அவர் எதிர்பாராத வகையில் அந்த வாய்ப்பு அடுத்த நாளே கிடைத்தது.
எலெக்ட்ரிசிடி ஆபீஸில் பில் கட்டச் சென்றபோது, “ஸார், குட்மார்னிங்... நான் இங்கதான் லைன் சூபர்வைஸரா இருக்கேன்...” என்று சுகுமாரே தேடி வந்தான்.
“நான் உங்க கூடத் தனியாப் பேசணும்னு இருந்தேன்... எப்ப சந்திக்கலாம்?” என்று சுப்பையன் ஆரம்பித்தார்.

“ஸார், அம்மாவால ஏதாவது பிரச்னையா?” சுகுமார் தயங்கினான். “ஸார், இது லஞ்ச் அவர்தான்... பக்கத்தில் ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாமா?”
பழம் நழுவிப் பாலில் விழுந்தது.சுகுமார் ஒரு ப்ளேட் தக்காளி சாதத்தை ஆர்டர் செய்ய, சுப்பையன் காபியை உறிஞ்சியபடியே பொதுவாக முதியோர் இல்லம் நடத்துவதிலுள்ள பிரச்னைகள், முதியோரின் மனநிலை, அவர்கள் அன்புக்காக ஏங்குவது என்றெல்லாம் பேசினார். அதன்பின் மிக இயல்பாக, “ஏன் சுகுமார், நீங்கள் சென்னையிலேயே வசிக்கிறபோது, பேசாம உங்க அம்மாவை வீட்டுடன் வைத்துக் கொள்ளலாமே...” என்று கேட்டார்.

“ஸார், அதை நீங்களாவது அவங்ககிட்ட எடுத்துச் சொல்லுங்க சார். நானும் சீதாவும் எவ்வளவோ சொல்லிவிட்டோம். கேக்க மாட்டேங்கறாங்க. வீட்டுலே பேரன், பேத்தின்னு இருக்கு. அவங்களோட சந்தோஷமா பேசிப் பழகி வாழலாம் சார். அவங்க சுபாவத்தை புரிஞ்சிட்டு என் மனைவி கூட ரொம்ப அனுசரிச்சுப் போறவதான்... ஆனா, அவங்க ஆசை வேற மாதிரி இருக்கே...”“புரியலையே சுகுமார்... உங்கம்மா உங்க கூட வாழ விரும்பாததற்கு காரணம் ஏதாவது இருக்கணுமே... நீங்களும், உங்க மனைவியும், குழந்தைகளும் அன்பா இருந்தா அவங்க ஏன் உங்க கூடத் தங்க மறுக்கிறாங்க?”

சுகுமார் சில நிமிடங்கள் மௌனம் காத்தான். “இதற்கு நான் விளக்கம் கொடுக்கணும்னா நான் உங்களுக்கு என்னோட வாழ்க்கைச் சரித்திரத்தையே சொல்லணும்...”
“சொல்லுங்க சுகுமார்...”“ஸார், எங்கம்மா எழுபது வயசுக்கு எவ்வளவு அழகா இருக்காங்க பார்க்கிறீங்க இல்லை. அவங்க இருவது வயசிலே எப்படி இருந்திருப்பாங்கன்னு யோசித்துப் பாருங்க... அவங்க அழகு அவ்வளவு பிரசித்தமாம். மிலிட்டரியிலே மானேஜராக இருந்த எங்கப்பா விடுமுறையிலே வந்தபோது, தூரத்து உறவான அம்மாவைப் பார்த்ததுமே மயங்கி பெண் கேட்டிருக்கிறார்.
 
மகா ஏழைக் குடும்பத்துப் பெண்ணுக்கு அழகிருந்தாலும் ஆபீஸர் பிள்ளை கிடைப்பானா? அப்பாவுக்கு வடக்கே டேராடூனில் வேலை. மிலிட்டரி வாழ்க்கை அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சாம். தினம் தினம் பார்ட்டிகள், ஆண், பெண் கலந்து பழகுவது, அனைவரும் பாக்கீ, பாக்கீ என்று அவர் தோற்றத்தைக் கொண்டாடுவது என்று. அம்மாவுடைய பர்சனாலிடியில் மயங்கி அவரை பூஜித்த அப்பா, உங்களைப் போலத்தான், வேறு சில விஷயங்களைக் கவனிக்கத் தவறி விட்டார்.

அடுத்த வீட்டில் வசித்த மல்ஹோத்ராவுக்கும் அம்மாவுக்குமான உறவு மெல்ல வளர்ந்து வருவதை அவர் கவனிக்கவில்லை. ஆனால், மல்ஹோத்ராவின் மனைவி சும்மாயிருக்கவில்லை. ஆர்மி ஹெட்குவார்ட்டர்ஸில் விலாவாரியாகப் புகார் செய்து விட்டாள். மிலிட்டரியில் சக ஊழியரின் மனைவியுடன் உறவு வைத்துக் கொள்வது பெரிய குற்றம். மலஹோத்ராவை கோர்ட் மார்ஷல் செய்து மிலிட்டரி வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். அவரும் மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊரான தில்லிக்குச் சென்று விட்டார். அம்மா இனி, அப்பாவுடன் ஒழுங்காக வாழ்வதாக ஏற்பாடு.

மல்ஹோத்ரா தந்த பலத்தில் திடீரென்று ஒருநாள் ஆறு வயதான என்னையும், நாலு வயதான தங்கை ரம்யாவையும் அழைத்துக் கொண்டு அம்மா, அப்பாவிடம் சொல்லாமல் தில்லி கிளம்பி விட்டாள். அங்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் மல்ஹோத்ரா அம்மாவை மட்டுமே வரச் சொன்னான்... எங்களையும் சேர்த்துப் பாதுகாக்கத் தயாராக இல்லை என்று புரிந்திருக்கிறது.
அந்த நிலையில் கூட அம்மா திரும்பியிருந்தால் அப்பா ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால், அம்மா என்ன செய்தாள் தெரியுமா? முன்பின் தெரியாத ஒருவரிடம் எங்களிருவரையும் புதுக்கோட்டை அருகிலிருந்த தன் பெற்றோர் வீட்டில் சேர்க்கச் சொல்லி அனுப்பிவிட்டு மல்ஹோத்ராவுடன் சின்ன வீடாய் வாழப் போய்விட்டாள்.

மூன்று நாள் டிரெயினில் என் தங்கை அழுத அழுகையையும், அம்மா, அப்பா இரண்டு பேரையும் காணாமல் ஒன்றும் புரியாமல் நான் மிரண்டதையும், எங்களை அழைத்து வந்தவர் அடித்த அடிகளையும் என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது ஸார்...”“அந்த பயம் இன்று கூட உங்கள் கண்களில் அப்பட்டமாகத் தெரிகிறது...” என்று சொல்லாமல் சொன்னார் சுப்பையன்.
“விதவையான பாட்டி மிகவும் நல்லவர். ஆனால், வறுமை தாங்க முடியாதது. கிராமத்தில் சமையல் தவிர வேறு வேலை செய்யவும் வாய்ப்பில்லை. எப்படியோ எங்களுக்கும் சோறு போட்டு, பள்ளிக்கு அனுப்பினார்கள். அப்பா, அம்மா இருவருடனும் தொடர்பு கிடையாது.

பல வருஷம் கழித்துத்தான் அம்மா ஓடிப்போன அவமானம் தாங்காமல் எங்கப்பா துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து விட்டார் என்ற விஷயமே தெரிந்தது. அம்மாவுடைய தில்லி விலாசத்தைக் கண்டுபிடித்து பாட்டி எத்தனையோ கடிதங்கள் எழுதினார். பதிலாக எப்போதாவது ஒரு நூறு ரூபாய் மணி ஆர்டரில் வரும். பெற்ற குழந்தைகளைப் பற்றிய ஒரு விசாரிப்பு கூட இருக்காது.

நான் எட்டாவதும், ரம்யா ஆறாவதும் படிக்கும்போது திடீரென ரம்யாவுக்கு உடம்பு பலகீனமானது. கை வைத்தியத்தில் சரியாகாததால், லோக்கல் டாக்டரிடம் போக, அவர் ரத்தம் எடுத்துப் பார்த்து, ‘லுகேமியா மாதிரி இருக்கு. மெட்ராஸுக்குப் போய் பாருங்கள்’ என்று லெட்டர் கொடுத்தார். படிப்பறிவில்லாத பாட்டி யார் யாரிடமோ கெஞ்சி கொஞ்சம் பணம் சேர்த்து ரம்யாவை மெட்ராஸ் கான்சர் ஆஸ்பத்திரியில் சேர்த்தாள். அம்மாவுக்கு போட்ட தந்தி, கடிதம் எதற்கும் பதில் வரவில்லை. கொஞ்சம் உடம்பு தேவலை என்று ஊருக்கு அழைத்து வர, மருந்து வாங்க, திரும்ப மெட்ராஸ் போய் ஆஸ்பத்திரியில் சேர்க்க என்று எதற்குமே பணம் திரட்ட முடியவில்லை.

எங்க கண் முன்னாலேயே அவ கொஞ்சம் கொஞ்சமாக துடித்து செத்துப் போனா ஸார்... எப்படிப்பட்ட பரிதாபமான காட்சி தெரியுமா... ரம்யா இறந்துபோன செய்தி கேட்டுக் கூட அம்மா கிராமத்துக்கு வரவில்லை. துக்கம் தாளாமல் பாட்டியும் பைத்தியமாகப் போக, நான் மூட்டை தூக்கி, மளிகைக் கடையில் வேலை செய்து என்று பள்ளிப் படிப்பை முடித்தேன் ஸார். ஒரு நல்லவர் வழிகாட்டலில் இந்த வேலை கிடைத்தது.

எனக்கு கல்யாணம், காட்சி செய்து வைக்க யார் இருக்காங்க... நடுத்தர வயசிலேதான் அனாதை ஆஸ்ரமத்திலே வளர்ந்த சீதாவை கட்டிக்கிட்டேன். ரெண்டு அனாதைங்க கூட்டு சேர்ந்து ஒரு குடும்பத்தை ஆரம்பித்தோம். ரெண்டு பசங்க இருக்காங்க. ஏதோ வாழ்க்கை போகுது. இத்தனை வருஷத்திலே அம்மா என்கிற உறவே மறந்து பேச்சு. ஆனா, ஒரு சில விஷயங்கள் காதில் விழுந்தது. அப்பா இறந்த பிறகு, தற்கொலையை விபத்தா மாற்றிக் காட்டி, அம்மா பென்ஷன் பணம் பெற்றுக் கொண்டு, மல்ஹோத்ராவை விட்டுவிட்டு தில்லியில் வேறு ஒரு மராட்டியருடன் வசிப்பதாக.

அழகு, இளமை எல்லாமே ஒரு காலகட்டத்துக்குள் அடங்கியதுதானே... அதுவும் நேர்மையற்ற உறவுகளில் என்ன ஸ்திரத் தன்மையை எதிர்பார்க்க முடியும்? திடீரென ரெண்டு வருஷம் முன்னால ஒரு நாள் அம்மா என் வீட்டைத் தேடி வந்தாள். எனக்கு அவர் முகம் மறந்து போயிருந்தது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன ரம்யாவுக்காக இப்போது அழுதாள். நானும், சீதாவும் அம்மாவை மனதார ஏற்றுக் கொண்டு எங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத் தயாரானோம்.

ஆனால், அம்மாவின் சுபாவம், தனக்கு நிகரில்லை என்ற அகம்பாவம் வெளிவர அதிக நாளாகவில்லை. இரண்டே அறைகள், அதுவும் சிறியது. அதில் அம்மா தனக்குத் தனி அறை வேண்டுமென்றாள். தந்தோம். என் குழந்தைகளைக் கண்டாலே ‘தூ... தரித்திரங்கள்...’ என்று விரட்டினாள். அதைக் கூடப் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அவருடைய ஸ்டேட்டஸுக்குத் தகுந்தாப்பல சாப்பாடு, சௌகரியங்கள் எல்லாம் அவர் செலவழிக்காமல் நான் தரணும் என்று எதிர்பார்த்தபோது எனக்கு வசதி பத்தலை ஸார்... இள வயசுல, அவங்க அழகுக்காகவும், அவங்களால பெற முடிஞ்ச உடம்பு சந்தோஷத்துக்காகவும் பணத்தைக் கொட்டி அவரை ராணி மாதிரி வச்சிண்ட ஆட்கள் எவருமே வயதானபிறகு அவரைச் சீண்டவில்லை.

அவர் செய்த அத்தனை கொடுமைகளையும் மறந்து, அன்பைக் கொடுக்க விரும்பின, நான் தந்த சௌகரியங்கள் அவருக்குப் போதவில்லை. நான் என்ன ஸார் செய்யட்டும்?
திடீரென்று மூட்டை கட்டிக் கொண்டு இந்த இல்லத்துக்கு வந்துவிட்டாள். எத்தனையோ கெஞ்சிப் பார்த்தேன். காது குடுத்துக் கேட்கல்லை. இங்கே அவங்களால ஒரு ராணி மாதிரி உலாவ முடிகிறது. பிறத்தியாரை அதிகாரம் செய்ய முடிகிறது. கிழவிகள் நடுவிலும் ஒரு சூப்பர் கிழவியா இருக்க முடியறது. குடும்பத்துல எல்லா உறவுமே சரி சமமானதுதானே ஸார்...

என்ன ஆனாலும் என்னைப் பெற்றவங்க ஸார். வயசிலே மூத்தவங்க. வாய்ப்பிருந்தா மனுஷங்க எல்லாரும் தப்பு செய்யத் தயங்காதவங்கதான். அம்மாவுக்கு அந்த வாய்ப்பிருந்தது, வாழ்ந்தாங்க. அவ்வளவுதான். எனக்கு ஒரு சந்தோஷம் ஸார். உங்க இல்லத்துல, அவங்க வாழ்க்கை அவங்க விரும்பற விதமாத் தொடர்றது. என்னால முடிந்தது ஏதோ ஒரு ஸ்வீட்டோ, காரமோ செய்துகொண்டு வந்து பார்க்கிறேன்.

நீங்க ஒரு விஷயத்திலே என்னை நம்பலாம் ஸார். அம்மா படுத்த படுக்கையா ஆயிட்டாலோ, இல்லை, இல்லத்தை விட்டு வந்தாலோ, நானும், சீதாவும் அவரைக் கடைசி வரை அன்போட காப்பாத்துவோம் ஸார். இது சத்தியம் ஸார்...”கடைசி சொட்டு காபியையும் உறிஞ்சிவிட்டு, சுகுமாரனுடன் கை குலுக்கி, விடைபெற்ற போது சுப்பையன், கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்.

 - உஷா சுப்ரமணியன்