நிர்வாணம்...உள்ளாடை...மூக்கை நோண்டுவது... இதற்கெல்லாம் நாள் இருக்கு தெரியுமா?!



அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், மகளிர் தினம்... என ஏகப்பட்ட தினங்கள் நமக்குத் தெரியும். தெரிந்தோ தெரியாமலோ கொண்டாடவும் செய்கிறோம்.
விஷயம் இதுவல்ல... நமக்குத் தெரியாத இன்னும் பல தினங்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் அவை மற்ற நாடுகளில் கொண்டாடப்பட்டும் வருகின்றன.அவை எல்லாம் என்னவென்று நாம் அறிய வேண்டாமா..? எதிர்காலத்தில் நம் நாட்டிலும் இவை எல்லாம் கொண்டாடும் நிலை வருமல்லவா?!

பொறுங்கள். ஆவலுடன் படிக்கத் தொடங்குவதற்கு முன் ஓர் எச்சரிக்கை. ஷாக்கை குறைத்து மேற்கொண்டு படிக்கத் தொடங்குங்கள். ஏனெனில் இதற்கெல்லாமா நாட்கள் கொண்டாடுகிறார்கள் என்று இதயம் வெடித்துவிட வாய்ப்பு இருக்கிறது! ரைட். முழுமையாக இல்லாவிட்டாலும் குத்து மதிப்பாக சில ஸ்பெஷல் தினங்களை மட்டும் தெரிந்துகொள்வோமா? ரெடி, ஸ்டெடி, கோ...

உலக நிர்வாண நாள் (February 4)

​நோ... நோ... நோ... நீங்கள் ‘நினைக்கும்’ அல்லது ‘எதிர்பார்த்த’ நாள் அல்ல இது! ஆம். Working Naked Day என்பது நீங்கள் ஆடை இல்லாமல் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்பதில்லை. இதன் பொருள் நீங்கள் அலுவலகத்துக்கு உங்களுக்கு மிகவும் வசதியான உடைகளில் வரலாம் என்பதுதான்! அந்த நாளில் மட்டும் வீட்டில் இருப்பதைப் போன்ற சாதாரண உடையை உடுத்திக் கொண்டு வேலை செய்யலாம்.

Plan a Solo Vacation Day (March 1)

பொதுவாக சுற்றுப் பயணங்களை எப்படி மேற்கொள்வோம்? நண்பர்களுடன், குடும்பத்தினருடன் செல்வோம் அல்லவா? ஆனால், உலகம் சுற்றுவதற்கு துணை தேவையில்லை. அதை நீங்களே தன்னந்தனியாக செய்யலாம் என்பதை உணர்த்துவதுதான் Solo trip. அதற்காக மார்ச் ஒன்று அன்று Plan a Solo Vacation Day என்று கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில் அனைத்து இடங்களுக்கும் தனியாகச் செல்ல திட்டம் போடலாம்.

World Mosquito Day (August 20)

ஆமாம்... ஆமாம். கொசுக்களுக்கான தினம் இது! ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 20ம் தேதி இந்த கொசு நாள் கொண்டாடப்படுகிறது. அனாபிலிஸ் கொசுக்கள் மலேரியாவை மனிதர்களுக்கு பரப்பும் என்று பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்ததை நினைவுகூரும் நாள். ஆங்கிலேய மருத்துவர் இதை 1897ல் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

National Underwear Day (August 5)

கண்களை கசக்க வேண்டாம். சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்! இந்த நாள் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. இது வேடிக்கையாக இருந்தாலும், இந்த நாளில் உங்களுக்குப் பிடித்த உள்ளாடைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம். உடனே எப்போதும் நமக்குப் பிடித்த உள்ளாடைகளைத்தானே நாம் தினமும் அணிகிறோம் என்று கேட்கக் கூடாது. இது ஒரு தினம். அவ்வளவுதான்!

National Cleavage Day (March or April)

துள்ளிக் குதிக்க வேண்டாம். அதுவேதான்! இந்த நேஷனல் கிளீவேஜ் டே, தென்னாப்பிரிக்காவில் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மற்ற பல நாடுகளில் மே 19 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கிடைக்கும் நிதி தென்னாப்பிரிக்கர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளைக்கு செல்கிறது.

International Nose Picking Day (April 23)

ஆங்கிலத்தில் இருக்கும் இந்த வாக்கியத்துக்கான அர்த்தம் மூக்கை நோண்டுவது! இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

World Bromance Day (August 14)

இந்த நாள் எப்படி உருவானது என்று யாருக்கும் தெரியாது! ஆகஸ்டு 14, காதலர் தினத்திற்குப் பிறகு சரியாக ஆறு மாதங்கள் கழித்து புரோமன்ஸ் தினம் என்று கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் தினம் போன்று தங்கள் நண்பர்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்டும் நாட்களில் இதுவும் ஒன்று.

காம்ஸ் பாப்பா