கண்சிமிட்டும் காஜல் இந்தியன் 2... ஷ்ஷ்ஷ்... அது சீக்ரெட்!திருமணம், குழந்தைப் பேறு எனச் சின்னதாக பிரேக் எடுத்தவர் மீண்டும் ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’, ‘உமா’... இவைகளை விட முக்கியமாக ‘இந்தியன் 2’ என காஜல் அகர்வால் பிசி நடிகையாகவும் பிசி மம்மியாகவும் நமக்கு ஹாய் சொல்கிறார்.

சினிமாவில் 15 வருடங்கள்..?

15 வருடங்கள் ஆகிடுச்சானு ஆச்சர்யமா இருக்கு. இதுக்கு பின்னாடி என் குடும்பம், இப்ப என் ஹஸ்பண்ட், குழந்தைனு எல்லாருமே இருக்காங்க. இதோ ஆறு மாச குழந்தையை வீட்ல விட்டுட்டு வந்திருக்கேன். எங்க அம்மா சப்போர்ட் இல்லாம நிச்சயமா நான் இங்க வந்து உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்க முடியாது. குறிப்பா ரசிகர்களுடைய அன்பு. அதுதான் என்னை இத்தனை வருடங்களா ஓட வச்சுக்கிட்டு இருக்கு.

நேற்று ‘லைவ் டெலிகாஸ்ட்’,  இப்ப ‘கோஷ்டி’... பேய் படங்கள் பிடிக்குமா?

ஒரு சீக்ரெட் சொல்றேன். எனக்கு பேய் படங்கள் சுத்தமா பிடிக்காது. பயமும் இருக்கு. படமா கூட நான் ஹாரர் பார்க்க மாட்டேன். ஹாரர் கான்செப்டில் நம்பிக்கையும் இல்ல. ஃபர்ஸ்ட் டைம் வெங்கட் பிரபு சார் கேட்டார்... சரி முயற்சி செய்து பார்ப்போமேனு நடிச்சதுதான் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸ். ‘கோஷ்டி’ ஹாரர் கொஞ்சம்தான்... படம் முழுக்க காமெடி தூக்கலா இருக்கும். டைரக்டர் கல்யாண் செம காமெடியா படத்தை உருவாக்கியிருக்கார். படம் முழுக்க அவ்ளோ நகைச்சுவை நடிகர்கள்.

திருமணத்திற்குப் பிறகும் கூட எப்படி ஸ்டார் அந்தஸ்தை தக்க வெச்சிருக்கீங்க?

ஐ யம் லக்கி. வேற என்ன சொல்ல. என்னை நான் எப்பொழுதுமே டைரக்டர்களுடைய ஹீரோயினாதான் பார்ப்பேன். ஸ்கிரீன் முன்னாடி, கேமரா முன்னாடி இயக்குநர் கேட்பதை அப்படியே கொடுக்கணும்னு நினைப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்துட்டா பேக்கப்னு சொல்ற வரைக்கும் வேற எதைப் பற்றியும் யோசிக்கவே மாட்டேன். அதுதான் என்னை உந்தித் தள்ளுகிற சக்தியா நினைக்கிறேன்.

மாஸ் ஹீரோக்கள், சூப்பர் ஸ்டார்கள் இப்படி ஜோடி சேர்ந்து நடிச்சுட்டு இப்ப ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’னு நடிப்பதை எப்படி பார்க்கறீங்க..?

எதுக்குமே ஒரு நேரம் காலம் வரணும் இல்லையா. முழுமையா என்னை மட்டுமே நம்பி ஒரு கதைனு வரும்பொழுதுதான் என்னுடைய பலம் என்னனு எனக்குப் புரியும்.
சினிமாவுக்காக நான் எதுவும் தனியா படிக்கலை. இத்தனை வருஷமா சினிமாவிலே நான் நடிச்ச படங்கள்தான் எனக்கு ஒவ்வொண்ணா கத்துக் கொடுத்துச்சு. இப்பவும் மாஸ் மசாலா கமர்ஷியல் படங்கள் நடிக்கப் பிடிக்கும். ஆனாலும் புது இயக்குநர்கள் நல்ல, நல்ல கதைகளோடு வரும்பொழுது, நாம தனியா நடிச்சாலும் ஆடியன்ஸ் பார்ப்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்கிற காலமும் கனிந்திருக்கும்போது அதைப் பயன்படுத்திக்கணும்னு நினைக்கறேன்.

ரியல் லைஃப் கோஸ்ட் அனுபவம் இருக்கா?

என்னுடைய தாத்தா இறந்த வேளை... அப்ப நான் சின்னப் பொண்ணு. நானும் என் சிஸ்டரும் ஒரே ரூம்ல தூங்கிட்டு இருந்தோம். ஒரு மூணு மணி இருக்கும்... திடீர்னு அரைத் தூக்கத்தில் கண் முழிச்சு பார்க்கறப்ப வெள்ளையா, புகை மாதிரி ஒரு உருவம் என் கண்ணுக்கு தெரிஞ்சது. அப்படியே அது எங்க தாத்தா மாதிரியே இருந்துச்சு. இப்ப சொல்லும்போதுகூட எனக்கு புல்லரிக்குது. அப்படியே ஜம்ப் பண்ணி என் சிஸ்டர் மேல போய் விழுந்தேன். அவ கொஞ்சமும் யோசிக்காம ‘ச்சீய்... அந்தப் பக்கம் போ’னு விரட்டி விட்டா.

அவருக்கு ரொம்ப செல்லமான பேத்தி நான். ஒருவேளை எனக்கு குட் பை சொல்ல வந்திருப்பார் போல.குழந்தைப்பேறு என்றால் குறைந்தபட்சம் ஒரு வருடம் பிரேக் எடுத்துப்பாங்க. நீங்க ஆறு மாசம் கூட கேப் எடுத்துக்கலையே..?

ஐ லவ் மை ஜாப்.பேபி வயிற்றோடு நடிக்கலாம்னு ஒரு வாய்ப்பு கிடைச்சிருந்தா அதிலேயும் நான் நடிச்சிருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு நடிக்க பிடிக்கும். அதே சமயம் டெலிவரி டைம்ல ஒரு 14 கிலோ என்னுடைய எடையும் கூடிடுச்சு. அதெல்லாம் குறைச்சு மறுபடியும் பேக் டு ஃபார்ம் வரத்தான் ஒரு மூணு மாசம் கேப் எடுத்துக்கிட்டேன். பேபி மூணு மாசம் இருக்கும்பொழுதே நான் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.திருமணம், குழந்தைக்குப் பிறகு ஹீரோயின்களுக்கு வாய்ப்புகள் குறையும்னு சொல்லுவாங்களே..?

அந்த வகையில் நான் லக்கினு நினைக்கறேன். கல்யாணத்துக்கு அப்புறம்தான் ‘ஹேய் சினாமிகா’, ‘இந்தியன் 2’, இப்ப ‘கோஷ்டி’னு நிறைய படங்கள் நான் நடிச்சிட்டு இருக்கேன். குறிப்பா ‘இந்தியன் 2’ மாதிரியான மிராக்கிள் இப்பதான் என் லைஃப்ல நடந்திருக்கு.

காமெடி படங்களில் நடிக்கும் பொழுது ஒரு நடிகையா உங்களுக்கு கிடைக்கற சிறப்பு என்ன?

ஃபேமிலி ஆடியன்ஸ்கிட்ட சுலபமா ரீச் ஆக முடியும். ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படமாகட்டும், இப்ப ‘கோஷ்டி’ படமாகட்டும்... இரண்டுமே முழுமையான காமெடி படம்தான். ஆனா, அந்த காமெடி வேற... இந்த நகைச்சுவை வேற. இந்த காமெடி இன்னும் வித்தியாசமா இருக்கும். காமெடிப் படங்கள்ல நடிக்கும் பொழுதுதான் குழந்தைகள் கிட்டயும் ஃபேமிலிகிட்டயும் ரொம்ப சுலபமா நெருங்க முடியும். அதுதான் காமெடி படங்கள் கொடுக்கிற சிறப்பா பார்க்கறேன்.

எனக்கு ஒரே டெம்ப்ளேட்ல நடிக்கிறதுக்கு பிடிக்காது. வித்யாச வித்யாசமான கேரக்டர்கள் முயற்சி செய்து பார்த்துட்டே இருக்கணும். அதுல ஒரு சேஞ்சுதான் காமெடி படங்கள்.

வெப் சீரிஸ், திரைப்படங்கள்... இரண்டிலும் நடிக்கும் போது என்ன வித்தியாசத்தை பார்க்கறீங்க?

எல்லாத்துக்கும் கதையும், கன்டென்ட்டும்தான் முக்கியம். வித்தியாசம்னு பார்த்தா வேலை செய்கிற காலமும் நேரமும்தான் வெப் சீரிஸுக்கும், சினிமாவுக்கும் வித்தியாசப்படும். மத்தபடி அங்கேயும் இங்கேயும் ஒரே வேலைதான். நிறைய வெப் சீரிஸ்ல் நானும் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஆனா, இப்போதைக்கு படங்களில் அதிகமாக வேலை இருக்கிறதால தற்சமயம் வெப் சீரிஸ்களுக்கு ஒரு சின்ன பிரேக் கொடுத்திருக்கேன்.

திருமணம், குழந்தைப் பேறு... இதையெல்லாம், இப்போதைய சில பெண்கள் தங்களுடைய கரியருக்கு தடையா நினைக்கறாங்களே..?

எடை கூடுவதை எல்லாரும் பெருசா நினைக்கறாங்க. எனக்கும் 14 கிலோ வரைக்கும் எடை கூடி என்னுடைய லுக்கெல்லாம் கூட மாறிடுச்சு. குறிப்பா குழந்தை வந்தபிறகு உங்களைப் பார்த்துக்க நேரம் நிச்சயமா இருக்காது. குழந்தை பின்னாடி ஓடுறதுக்கே நேரம் சரியா இருக்கும்.

ஆனா, அதையும் தாண்டி உங்களுக்குன்னு கொஞ்ச நேரம் கொடுங்க. குறிப்பா நீங்க செய்கிற வேலையை நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சாலே, தானாகவே நீங்க பேக் டூ ஃபார்ம் வந்துடுவீங்க.
நானும் குதிரை ஏற்றம், எக்சர்சைஸ், ஸ்விம்மிங்னு நிறைய விஷயங்கள் செய்துதான் கூடின எடையை குறைச்சேன். குடும்பம், குழந்தைனு எல்லாமே முக்கியம்தான். அதையும் தாண்டி நீங்க உங்களுக்கு ரொம்ப முக்கியம்; உங்களுக்கான முக்கியத்துவத்தை நீங்கதான் கொடுக்க ஆரம்பிக்கணும். இதைப் புரிஞ்சுகிட்டா எதையும் தடையா பார்க்க மாட்டோம். எல்லாத்துக்கும் ஈக்வல் இம்பார்ட்டன்ஸ் கொடுக்க ஆரம்பிச்சுடுவோம்.

‘இந்தியன் 2’?

ஷ்ஷ்ஷ்... அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு. இப்போதைக்கு ஷூட்டிங் பிஸியா போகுது.

ஷாலினி நியூட்டன்