எரிமலையை நேசித்து எரிமலையிலேயே வாழ்ந்த எரிமலைக் காதலர்களின் கதை!



கடந்த சில வருடங்களில்  வெளியான ஆவணப்படங்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது, ‘ஃபயர் ஆஃப் லவ்’. இந்த வருடத்துக்கான சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. இதன் இயக்குநர் சாரா தோசா.  எரிமலை நிபுணர்கள் மற்றும் தம்பதியினரான மோரிஸ் - காத்யாவைப் பற்றியது இந்த ஆவணப்படம்.

யார் இந்த மோரிஸ் - காத்யா?

‘‘நெருப்பில் தங்களின் வாழ்விடங்களை ஏற்படுத்திக்கொண்ட காதலர்கள்...” என்று மோரிஸ் - காத்யா தம்பதியினரைப் புகழ்கின்றனர். மிகச்சிறந்த எரிமலை நிபுணர்களாகக் கருதப்படுகின்றனர். உலகிலேயே அதிகளவிலான எரிமலைகளை நேரில் பார்த்த தம்பதியினரும் இவர்களே. எரிமலை குறித்து 100 மணி நேரத்துக்கும் மேலாக ஓடக்கூடிய காணொளி காட்சிகளையும், ஆயிரக்கணக்கான புகைப்படங்களையும் எடுத்திருக்கின்றனர். இருவரும் ஃபிரான்சைச் சேர்ந்தவர்கள். புவிசார் வேதியியலில் நிபுணர் காத்யா. புவியியல் வல்லுநர் மோரிஸ். காத்யாவைவிட நான்கு வயது இளையவர் மோரிஸ்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய நாட்களில் இருவரது குழந்தைப்பருவமும் கழிந்தது. உலகில் மனித வாழ்க்கைக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை; வாழ்க்கை  நிரந்தரமற்றது என்பதை இருவரும் சிறு வயதிலேயே உணர்ந்துவிட்டனர். அதனால் மனிதர்களைத் தவிர்த்து இயற்கையைத் தேடிச் செல்வதில் ஆர்வம் கொண்டனர். 
குறிப்பாக  மோரிஸுக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது தந்தை இத்தாலியிலுள்ள ஸ்ட்ராம்போலி எரிமலைக்கு அழைத்துச் சென்றார். முதல் பார்வையிலேயே மோரிஸை எரிமலை வசீகரித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே எரிமலை மீது தீராத காதல் கொண்டுவிட்டார். காத்யா படித்த வேதியியலும், இயற்பியலும் அவரை இயற்கையை நோக்கி நகர்த்தியது. அவருக்கு அடைக்கலம் கொடுத்தது எரிமலை.
 
1966ம் வருடம் எரிமலை குறித்தான ஒரு நிகழ்வில் காத்யாவை சந்தித்தார் மோரிஸ். அப்போது அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ஒரு பல்கலைக்கழகத்தில் எதேச்சையாக சந்தித்துக் கொண்டனர். அப்போதும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. அதற்குப்பிறகு பிரபல எரிமலை நிபுணர் ஹரோன் டாஷிப்பின் எரிமலை குறித்த ஆவணப்பட நிகழ்வில் மீண்டும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் இருவரும் எரிமலை குறித்து நிறைய நேரம் பேசி தங்களுக்குள் நட்பை உருவாக்கிக் கொண்டனர்.

இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பாரிஸில் நடந்த போருக்கு எதிரான போராட்டத்தில் ஜோடியாகக் கலந்துகொண்டனர். ஆனால், இயற்கையின் சக்திக்கு முன்பு மனிதர்களின் போராட்டங்கள் அர்த்தமில்லாதது என்று அவர்களுக்குத் தோன்றியது. அத்துடன் போர் உண்டாக்கிய பாதிப்புகள் மனித இனத்தின் மீது ஒருவித நம்பிக்கையின்மையை அவர்களுக்குள் விதைத்திருந்தது.

மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மை இருவரையும் எரிமலையை நோக்கித்தள்ளியது. மனிதர்களை விட்டு விலகி எரிமலையுடன் வாழத் தொடங்கினார்கள். மனிதர்களின் புரிதலுக்கு அப்பால் இருக்கும் எரிமலை மனிதர்களைவிட எவ்வளவோ சிறந்தது என்று நினைத்தனர். எரிமலை குறித்து மிக ஆழமாகப் படித்தனர். ஆனால், அவர்களுக்கு மிகப்பெரிய மர்மமாகவே எரிமலை இருந்தது. அதனால் எரிமலையை நெருங்கிப்போகவும், அதன் மர்மத்தைக் கண்டுபிடிக்கவும் முடிவு செய்து ஆபத்தான பயணத்தை காதலுடன் ஆரம்பித்தனர்.

1968ம் வருடம் அன்பளிப்பாகக் கிடைத்த கார் மற்றும் கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு நண்பர் ஒருவருடன் ஐஸ்லாந்தில் உள்ள எரிமலைகளைத் தேடி அவர்களது முதல் பயணம் தொடங்கியது. அவர்கள் சென்ற கார் 27 முறை பிரேக் டவுன் ஆனது. ஒரு முறை விபத்துக்குள்ளானது. இருந்தாலும் அங்குள்ள எரிமலையை அடைந்தனர்.

140 டிகிரி வெப்பத்தில் மணல் கொதித்துக்கொண்டி ருந்தது. அங்கே ஒரு பள்ளத்தில் இருந்த சுடுநீரில் மோரிஸ் விழுந்துவிட்டார். கால்களில் நெருப்புக் காயம். ஆனால், கொஞ்சம் கூட மனம் தளராமல் எரிமலையைக் கண்டடைந்து பரவசமடைந்தனர். அடுத்து அருகில் இருக்கும் இன்னொரு எரிமலைக்குச் சென்று எரிமலை வெடிப்பில் லயித்துப் போனார்கள்.

எரிமலை வெடிப்பு ரொம்பவே ஆபத்தானது. ஆனால், வெடிப்பை அருகில் இருந்தவாறே புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவு செய்தனர். இதுபோன்று மோரிஸும், காத்யாவும் எடுத்த காணொளிகளையும், புகைப்படங்களையும் பயன்படுத்தித்தான் ‘ஃபயர் ஆஃப் லவ்’ எடுக்கப்பட்டிருக்கிறது. ‘‘ஒருமுறை எரிமலை வெடிப்பை பார்த்துவிட்டால் போதும். அது இல்லாமல் நீங்கள் வாழமுடியாது. அவ்வளவு சக்தி வாய்ந்ததாக, ஆர்ப்பாட்டமாக இருக்கும். இந்த மாதிரி கட்டுப்படுத்தப்படாத இயற்கைக்கு முன்பு மனிதன் ஒன்றுமில்லை...’’ என்று உணர்வு பொங்க சொல்கிறார் காத்யா.

குறைவான நண்பர்களின் முன்னிலையில் 1970ம் வருடம் திருமணம்  செய்துகொண்டனர். எரிமலைதான் முக்கியம் என்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று ஒரு மனதாக தீர்மானித்தனர்.‘‘பூமியோட தாளலயத்துக்கு இசைந்தபடி நாங்கள் வாழ்கிறோம். அடுத்து நாங்கள் எங்கு போக வேண்டும் என்று பூமிதான் முடிவு செய்கிறது...” என்கிற மோரிஸ் - காத்யா தம்பதியினர் எரிமலையைத் தேடி பூமி காட்டும் திசையில் எல்லாம் பயணித்தனர். எரிமலைக்கு அருகிலேயே எந்தவித பயமும் இல்லாமல் தங்கினார்கள். எரிமலைக்குழம்பின் சூட்டில் சமைத்துச் சாப்பிட்டனர்.

“எரிமலையோட வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது மனிதனின் வாழ்க்கை வெறும் கண்சிமிட்டும் நேரம்தான். எரிமலை எப்படிச் செயல்படுகிறது... பூமி ஏன் சூடாக இருக்கிறது... போன்ற ஆராய்ச்சிகளுக்கு அறிவியல் ரீதியாக மெய்நிகர் பதில் கிடைக்காது. உண்மையில் நமக்கு  எதுவுமே தெரியாது. அதனால் நான் இன்னும் நெருக்கமாக எரிமலையோட வயிற்றுக்குள் போக விரும்புகிறேன். அது என்னைக் கொல்லலாம். ஆனால், நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை...” என்கிற மோரிஸால் காத்யா இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. காத்யாவாலும் மோரிஸ் இல்லாமல் இயங்க முடியாது.

எரிமலை பயணத்தின் போது மோரிஸ் முன்பு செல்வார். அவரைப் பின்தொடர்ந்து காத்யா செல்வார். இரண்டு பேரில் யாராவது ஒருவர் தவறு செய்துவிட்டால் அது இருவரையுமே பாதிக்கும்.

சில நேரங்களில் காத்யாவின் பார்வையிலிருந்து மறைந்துவிடுவார் மோரிஸ். மறுபடியும் மோரிஸைப் பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்பதுதான் காத்யாவின் ஒரே பயம்.
“ஒருவேளை மரணத்தை நோக்கி மோரிஸ் சென்றால் அவரைப் பின்தொடர்ந்து செல்வேன்...” என்று காதலுடன் சொல்லும் காத்யாவைத் துணிச்சலான விஞ்ஞானி என்று அறிவியல் உலகம் போற்றுகிறது.

எங்கேயாவது எரிமலை வெடிக்க ஆரம்பித்ததுமே அங்கிருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலமாக தகவல் கிடைத்துவிடும். உடனே மோரிஸும், காத்யாவும் கிளம்பி
விடுவார்கள். எரிமலை பிளந்து எரிமலைக்குழம்பு ஆறாக ஓடும்போதும் அதன் பக்கத்தில் இருந்து படமெடுத்துக் கொண்டிருப்பார்கள்.தன்னோட சிறிய வாழ்க்கையை எரிமலையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்தபடி கழிக்க வேண்டும்; பூமியில் நிகழ்கிற அனைத்து எரிமலை வெடிப்புகளையும் பார்க்க வேண்டும் என்பதுதான் காத்யாவின் கனவு. எவ்வளவு ஆபத்தான வெடிப்பு நிகழ்ந்தாலும் சரி நெருப்பை நெருங்கி நெருங்கிப் போக விரும்பும் ஒரு மனிதர் மோரிஸ்.

‘‘நான் நீளமான சாதாரண வாழ்க்கையைவிட, சிறியதாக இருந்தாலும் தீவிரமான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அதாவது எரிமலையோட அழகில் தன்னையே இழக்கின்ற ஒரு வாழ்க்கை முறை. எரிமலைக்குழம்பு ஆறாக ஓடும்போது அதன்மீது படகில் பயணம் செய்ய வேண்டும் என்பது என் கனவு...” என்று எரிமலையின் மீதான பெருங்காதலை வெளிப்
படுத்துகிறார் மோரிஸ்.  

காங்கோ நாட்டிலிருக்கும் நியூரகோங்கோ எரிமலை 1977ல் வெடித்துச் சிதறியது. அப்போது வெளிப்பட்ட எரிமலைக்குழம்பு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி அருகிலிருந்த மக்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். இந்த கொடூர நிகழ்வு தந்தி மூலமாக மோரிஸுக்குத் தெரிவிக்கப்படவே, உடனே எரிமலைக் காதலர்கள் நியூரகோங்கோவிற்கு விரைந்தனர்.  

எரிமலைச் சீற்றத்தால் மனிதர்கள் மரணிப்பதை நேரடியாகப் பார்த்ததும், தங்களுடைய வாழ்வும் இப்படித்தான் ஒரு நாள் முடியப்போகிறது என்று முடிவு செய்துவிட்டனர்.
எரிமலை வெடிப்பால் மனிதன் உட்பட மற்ற உயிரினங்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் அவர்களை அலைக்கழித்தன. அதனால் எரிமலை வெடிப்பு மற்றும் அதனால்உண்டாகும் ஆபத்துகள் குறித்த காணொளிகளை எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தனர். இதற்கான பயணம் தொடங்கியது.

இதுவும் ரொம்பவே ஆபத்தானது. எண்பதுகளில் அவர்கள் எடுத்த காணொளிகள்தான் இன்றைக்குக்கூட எரிமலை ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது. இரண்டு பேரும் எரிமலைக்காக வாழ்ந்தனர். ஆனால், அவர்களின் போற்றுதலை எரிமலை கண்டுகொள்ளவே இல்லை. ஆம்; 1991ம் வருடம் ஜப்பானில் உள்ள உன் சென் எரிமலையில் நிகழ்ந்த வெடிப்பை பதிவு செய்யும்போது மோரிஸையும், காத்யாவையும் உன்சென்  அபகரித்துக் கொண்டது. மோரிஸுக்கும், காத்யாவுக்கும், எரிமலைகளுக்கும் இடையிலான பெருங்காதல் ‘காதல்’ என்ற சொல்லுக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறது.

த.சக்திவேல்