மண்ணை ஆள்றவனுக்குதான் எல்லை... அள்ளுறவனுக்கு இல்ல! எல்லையில்லா மாஃபியா கிங் எஸ்டிஆர்!‘அக்கரையில நிக்கறவன எட்டுது நம்ம சத்தம்...’ என ஏ.ஆர்.ரஹ்மான் அடித்த அடி உண்மையாகவே அக்கரைச் சீமையில் நிற்பவர்களையும் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது.
பாடல் டாப் சார்ட், சிம்புவின் கெத்து தோற்றம், நடனம் என ‘பத்து தல’ படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கிவிட்டன. ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்
சாலை’ படங்களின் புகழ் இயக்குநர் கிருஷ்ணா இப்போது ஒபெலி என்.கிருஷ்ணா! இதோ நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் மாஸ் லெவல் ரீஎன்ட்ரியாக ‘பத்து தல’ படம் கொடுக்க தயாராகியிருக்கிறார்.

‘‘‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என முதல் ரெண்டு படங்களும் சிம்பு சாருக்கு வெற்றி. இப்போ ஹாட்ரிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு என் கிட்ட வந்துடுச்சு. கொஞ்சம் பிரஷர் இருக்குறதை உணர முடியுது...’’ உற்சாகமும் பொறுப்பும் சூழ ரிலீஸ் மும்முரத்துக்கு இடையிலே பேசினார் ஒபெலி என்.கிருஷ்ணா. ‘நெடுஞ்சாலை’ படத்துக்குப் பின் ஏன் இடைவேளை எடுத்திட்டீங்க? இடையிலே தெலுங்கில் ‘ஹிப்பி’ படம் ரிலீஸ் ஆனது. பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் ஒரு புராஜெக்ட் செய்யறதா திட்டமிருந்துச்சு. அதற்கான பெரும்பாலான வேலைகள் முடிச்சிட்டோம். அதற்குள் கொரோனாவால் ஒரு மூணு வருடங்கள் போயிடுச்சு.

ஆனால், சேர்த்து வெச்சு இப்ப ‘பத்து தல’ தயாரா இருக்கு. 15 வருடங்களுக்கு முன்னாடி ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் தயாரிச்ச அதே ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா சார் இந்தப் படத்துக்கும் தயாரிப்பு. சென்டிமென்டா படத்திலே நிறைய பாசிட்டிவ் வைப்.

‘பத்து தல’?

ஞானவேல் ராஜா சார் ஒரு நாள் கூப்பிட்டார். கன்னட ‘மஃப்டி’ படத்தினுடைய தமிழ் ரீமேக் வாங்கி வெச்சிருந்தார். ‘செய்யலாமா’ன்னு கேட்டார். எனக்கு அந்தக் கதையை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யாமல் என்னுடைய ஸ்டைலில் எழுதணும்ன்னு சொன்னேன். ‘அப்படி தோணுச்சுன்னா தாராளமா எழுதுங்க’னு ஞானவேல் ராஜா சார் சொல்லிட்டார்.

எல்லா மனுஷனுக்குள்ளேயும் ஒரு கிரே ஷேட் இருக்கும்.
அப்படித்தான் நான் இலங்கை அரசன் இராவணனைப் பார்க்கறேன். அவன்மேலே வைக்கப்பட்ட ஒரே குற்றச்சாட்டு ‘சீதை’ மட்டும்தான். ஆனால், அதைத்தாண்டி அவன் ஏன் கெட்டவன், அவனுக்குள்ள இருக்க நல்லவன் யார்... இப்படி அந்தக் கேரக்டரை நான் புரிஞ்சிக்கிட்டேன். அந்தக் கேரக்டர்தான் படத்தின் நாயகனுக்கும் இருக்கும். அதை நினைவுபடுத்தத்தான் ‘பத்து தல’ என்கிற பெயர்.

எஸ்டிஆர், ஏஜிஆர் ஆன கதையச் சொல்லுங்க?

கன்னட ‘மஃப்டி’ படக் கதைக்கும், கேரக்டர் ஸ்கெட்ச்சுக்குமே நிறைய மாற்றங்கள் செய்திருக்கேன். குறிப்பா சிம்பு சார் கேரக்டர் ஆச்சர்யம் உண்டாக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு உடலை இறக்கினவர் நான் கேட்டதும் இந்தக் கதைக்காக திரும்ப வெயிட் போட்டு வந்தார். அந்த அளவுக்கு சினிமாக் காதலன் சிம்பு சார்.
ஒரு இக்கட்டான சூழல்ல முந்தைய படத்தினுடைய பேட்ச் ஷூட்டுக்காக இந்த ‘பத்து தல’ லுக் பயன்படுத்தணுமேங்கற நிலை வந்துச்சு. அதைக்கூட எந்த அளவுக்கு அவர் மாற்றிக் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டினார்.

இயக்குநரின் மனநிலையைப் புரிஞ்சு வேலை செய்கிற சில நடிகர்கள்ல சிம்பு சாரை தவிர்க்கவே முடியாது. அவர்கிட்ட நிறைய டைமென்ஷன் இருக்கு. அதை இன்னும் தமிழ் சினிமா முழுமையா பயன்படுத்தலை. அவராகவே ‘இப்படி பண்றேன், பாருங்க பிடிச்சதுன்னா சொல்லுங்க’னு நாம எதிர்பார்த்ததை விட ஸ்பெஷலா ஒரு ஆக்டிங் கொடுப்பார். ஆக்டிங் மீட்டர் செட் செய்யறதிலே திறமையானவர் சிம்பு சார்.

‘ஏ.ஜி.ராவணன் (எ) ஏஜிஆர்’. பெரும்பாலும் மணல் கொள்ளையை எதிர்த்து ஹீரோக்கள் சண்டை போடுவாங்க. இந்தப் படத்திலே ஹீரோவே மணல் மாஃபியா கிங். ஆனால், நிச்சயம் எங்கேயும் அதை சரின்னு சொல்கிற மாதிரி இருக்காது. படமும் மணல் திருட்டுக்கு எதிராதான் குரல் கொடுக்கும்.

கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், மனுஷ்யபுத்திரன்... இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

கௌதம் கார்த்திக் கேரக்டரைப் பற்றி சொன்னால் மொத்தக் கதையும் நான் சொல்ல வேண்டியதா இருக்கும். ஆனா, நிச்சயமா அவருடைய முந்தைய படங்களிலிருந்து மொத்தமா இது வேற ஒரு கேரக்டரா இருக்கும். நமக்குள்ள இவ்வளவு திறமை இருக்கானு அவங்களுக்கே தெரியாம இருக்கும் இல்லையா... அப்படியான ஒரு ஆர்ட்டிஸ்ட்தான் கௌதம் கார்த்திக்.
வில்லனாக கௌதம் மேனன் சார். அவர் படத்தில் ஒரு அரசியல்வாதி. சிம்பு சாருக்கும் கெளதம் சாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்க்ரீன் ரெண்டு பேர் கிட்டயும் மிகப்பெரிய புரிதல் இருக்கிறதால எனக்கு பெரிய வேலை இல்ல.  

படம் முழுக்க கெளதம் சார் வேஷ்டியிலே நடிச்சிருக்கார். அவரே கேட்டார் ‘டேய்... இந்த கேரக்டரை நான் செய்தா கரெக்ட்டா இருக்குமா’னு. ‘நீங்க நடிச்சாதான் சார் புதுசா இருக்கும்’னு சொன்னேன். ‘அசுரன்’ பட டிஜே அருணாச்சலம் இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சிருக்கார். கலையரசனுக்கு சின்ன ரோல். ஆனா, ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்.
மனுஷ்யபுத்திரன் சார் ஒரு போராளியா நடிச்சிருக்கார். அவருக்கே தெரியாம அவருக்குள்ள ஒரு நடிகன் இருக்கான். அதை நான் வெளியே கொண்டு வந்திருக்கேன். இந்தக் கதைக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தார். ‘சார்பட்டா பரம்பரை’ சந்தோஷுக்கு ஒரு ஐகானிக் கேரக்டர்.

பிரியா பவானி சங்கர் தாசில்தாரா நடிச்சிருக்காங்க. அவங்ககிட்ட ஒரு  கம்பீரம் இருக்கும். அந்த கம்பீரத்தையும் தைரியத்தையும் இந்த படத்துல பயன்படுத்திக்கிட்டேன். அவங்க கேரக்டரிலும் ரெண்டு ஷேடு பார்க்கலாம். ரெடின் கிங்ஸ்லி, அப்பறம் ‘மஃப்டி’ பட மதுகுருசாமி நடிச்ச கேரக்டரை மட்டும் அவரையே நடிக்க வெச்சிட்டேன். அவர் ரொம்ப அற்புதமாக அந்த படத்தில் நடிச்சிருந்தார்.

உங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அப்படி என்ன கெமிஸ்ட்ரி?

இதை பெரிய ஆசீர்வாதமா பார்க்கறேன். அவர் என்கிட்ட சொன்ன ஒரு விஷயம் ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணினாலே நிச்சயமா ‘சில்லுனு ஒரு காதல்’ பட ஒப்பீடு வரும். அந்த டெம்ப்ளேட் வராம இந்த படத்துக்கு என்ன தேவையோ அதை செய்வோம்’னு சொன்னார்.  விவேக், கபிலன், சினேகன்... மூணு பாடலாசிரியர்கள் நான்கு பாடல்கள் கொடுத்திருக்காங்க. பாடல்கள் படத்துக்கு தேவையில்லாத இடத்திலே இருக்காது. சூழலுக்கு ஏத்த மாதிரி புரிஞ்சுகிட்டு வரிகள் எழுதியிருக்காங்க. ஒரு பாடலை ரஹ்மான் சார் பையன் அமீன் பாடியிருக்கார். அவர் பாடினா நல்லா இருக்கும்னு வற்புறுத்தி கேட்டு வாங்கினேன்.  

டெக்னீசியன்கள் பற்றி சொல்லுங்க..?

‘நெடுஞ்சாலை’ படத்தில் வசனங்கள் எழுதின ராமகிருஷ்ணன் சார், இந்தப் படத்துக்கும் எழுதி இருக்கார். ஒரு கேரக்டர் பவர்ஃபுல்லான இடத்தில் இருக்குன்னா அவன் பேசுற வார்த்தைகளும் பவர்ஃபுல்லா வரணும். அந்தக் கேரக்டர் அதிகம் பேசாது. பேசினாலும் அதிலே அவ்வளவு விஷயம் இருக்கும். இதெல்லாம் மனசிலே வச்சிக்கிட்டுதான் ராமகிருஷ்ணன் சார் வசனங்கள் கொடுத்திருக்கார். ஃபரூக் ஜே பாஷா இந்த படத்துக்கு சினிமாட்டோகிராபி. பல வருஷங்களா என் கூடவே டிராவல் செய்யறார். நிறைய பேசுவோம். சரியான புரிதலோடுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போவோம்.

எடிட்டர் பிரவீன் கே.எல். பெரிய எடிட்டர். என்னுடைய முந்தின தெலுங்கு படம் தொடங்கி ஏராளமான படங்கள் செய்திருக்கார். ஷார்ப்பான எடிட்டிங் கொடுத்திருக்கிறார். உத்ராமேனன் காஸ்ட்யூம்ஸ். இதுக்கு முன்னாடி அவங்க வேலை செய்த படங்கள் எல்லாம் கலர்ஃபுல்லான காஸ்ட்யூம்களா இருக்கும். ஆனா, இந்தப் படத்தில் கேரக்டருக்கு நிறைய ஆய்வு செய்து காஸ்டியூம் கொடுத்திருக்காங்க. ஆக்‌ஷன் ஸ்டண்ட் சக்தி சரவணன். எதார்த்தமான சண்டைக் காட்சிகளா கொடுத்திருக்காங்க. நானும் அப்படித்தான் விரும்பினேன். ஆர்ட் டைரக்‌ஷன் மிலன்.  
ஹீரோவே மணல் அள்ளும் கொள்ளையன்... படம் அரசியல் பேசுமா?

நிச்சயமா அரசியல் படம்தான். அதனால்தான் கன்னடத்தில் இருந்த திரைக்கதையை அப்படியே எடுக்காம தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த மாதிரி இருக்கு... அதை சுற்றி எப்படியான அரசியல் நடக்குதுனு எல்லாத்தையும் சேர்த்து திரைக்கதை எழுதி இருக்கேன். அதே சமயம் ஒரு சில இடங்களில் சினிமாவுக்கான லிமிட் என்னவோ அந்த மீட்டரையும் விடாம பார்த்துக்கிட்டோம். சர்ச்சையை கிளப்பிடக் கூடாது. அதேபோல ஹீரோவே மணல் மாஃபியா தலைவனா இருக்கிறதால அதை நியாயப் படுத்தவும் முடியாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மணல் சென்சிட்டிவான விஷயம். அதை கையில் எடுக்கும்போது எனக்கும் நிறைய சவால்கள் இருந்துச்சு. அதையும் தாண்டி சிம்பு சார் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கும். ஆடியன்ஸ்க்கும் என்டர்டெயின்மென்ட் இருக்கும்.

‘சில்லுனு ஒரு காதல்’ மேஜிக் மீண்டும் நடக்குமா?

அப்படி ஒரு மேஜிக் உருவாக்கும்னு நினைச்சு அந்தப் படம் செய்யலை. கதைக்கு என்ன தேவையோ அதை செய்தோம். ஒர்க் அவுட் ஆகிடுச்சு. ‘பத்து தல’ படத்தினுடைய ரிலீஸுக்கு அப்பறம்தான் அடுத்த படம் பத்தின ஐடியா. ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் மாதிரி இன்னொண்ணு கொடுக்கலாம். ஆனால், அதே மேஜிக் நடக்கறது ஆடியன்ஸ் கையிலேதான் இருக்கு.

ஷாலினி நியூட்டன்