பெண் ஆர்ட் டைரக்டரா இருப்பது சவாலானது... ஆனா, இன்பமானது!



அவ்வளவு எளிதில் புகழ் கிடைக்காத ஆர்ட் டைரக்‌ஷன் டிப்பார்ட்மெண்ட்டில் துணிச்சலாக நுழைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நர்மதா. சமீபத்தில் வெளியான ‘இராவண கோட்டம்’ படத்துக்கு அசத்தலான செட் போட்டு அசத்தியவர். நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய கணவரின் ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணிக்கொண்டிருந்த நர்மதா ஆன்லைனில் ஃப்ரெஷ் ஜூஸ் ஆர்டர் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். பதினைஞ்சு வருஷமா ஃபீல்டுல இருக்கேன். சினிமா பேக்ரவுண்ட் என்பது எங்க ஜெனரேஷனுக்கே இல்லை. நான்தான் முதன் முறையா சினிமாவுக்கு வந்திருக்கேன். படிச்சது பி.எஸ்சி. இண்டீரியர் டிசைனிங். சினிமாவில் ஆர்ட் டைரக்டராகணும்னு ஆசைப்பட்ட எனக்கு சினிமா பூஜை, ஆடியோ ஃபங்ஷன், புரோமோஷன் நிகழ்ச்சிகள் போன்ற வாய்ப்புகள் கிடைச்சது.
எந்தவித முன் அனுபவமும் இல்லாத என்மீது நம்பிக்கையோடு ‘பீட்சா’, ‘அட்டகத்தி’ படங்களோட ஈவண்ட்டை நடத்தும் வாய்ப்பை தயாரிப்பாளர் சி.வி.குமார் சார் கொடுத்தார். சன் டிவி நிகழ்ச்சிகளுக்கும் செட் ஒர்க் பண்ணியிருக்கிறேன்...’’ என்கிற நர்மதா முதல் சினிமா அனுபவத்தை பகிர்ந்தார்.

‘‘தயாரிப்பாளர் ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ ரவீந்திரன் சாருக்குதான் நன்றி சொல்லணும். முகநூலில் அவருடைய அறிமுகம் கிடைச்சது. என்னுடைய பயோவை அனுப்பிவெச்சு சினிமா சான்ஸ் கேட்டேன். அவர் தயாரிச்ச ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ல ஆர்ட் டைக்டரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்துல வரும் ‘ஏதோ சொல்ல...’ பாடல் நல்ல ரீச்சானது. அதுல பெரியளவில் செட் போட்டு பிரமாண்டத்தையெல்லாம் காட்டல. எல்லாமே  நேச்சுரலா இருக்கும். அந்தப் பாடலை ஷோபி மாஸ்டர் பிரமாதமா கம்போஸ் பண்ணியிருந்தார்.

செட் ஒர்க்கைப் பொறுத்தவரை ஒரு பிராப்பர்ட்டியை வெச்சுகிட்டு பிரமாதமா காட்டலாம். ஆனா, ஸ்பாட்ல என்ன இருக்கிறதோ அதை வெச்சு அழகா காட்டுவது என்பது தனி சவால். ஏனெனில், ஒரிஜினாலிட்டி முக்கியம். கதைக்கும் காட்சிக்கும் சம்பந்தமே இல்லாத பொருட்களை வைக்கக்கூடாது. இப்படி பல விஷயங்களை கவனிச்சு கலைநயத்தையும் மிஸ் பண்ணாம பண்ணணும்...’’ என்கிற நர்மதா, ‘இராவண கோட்டம்’ அனுபவத்தை ஆச்சர்யத்துடன் பகிர்கிறார்.

‘‘‘இராவண கோட்டம்’ எனக்கு தினந்தோறும் புதுசு புதுசா கற்றுக்கொள்ளும் அனுபவமா இருந்துச்சு. எந்தப் படம் சவாலா இருந்துச்சுன்னு கேட்டா, இந்தப் படத்தைச் சொல்லுவேன்.
‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ஜாலி ஸ்கிரிப்ட். அதுல என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ‘இராவண கோட்டம்’ சென்சிடிவ்வான  கதை. ஓவரா கிரியேடிவிட்டி காட்றேன் பார்னு எக்ஸ்ட்ராவா எதுவும் பண்ணக்கூடாது. எல்லாமே கதைக்கான அளவுகோலுடன் இருக்கணும்.

ஷூட் முழுவதும் வறண்ட பகுதியில் எடுத்தார்கள். நிழலில் ஒதுங்க இடம் இருக்காது, பாத்ரூம் வசதி இருக்காது. அப்படி சில நடைமுறைச் சிக்கல் இருந்ததால லேடி ஆர்ட் டைரக்டரான நான் எப்படி சமாளிக்கப் போறேன்னு கேள்வி இருந்துச்சு.எனக்கு மட்டுமல்ல, மொத்த டீமுக்கும் சவால் இருந்துச்சு.

ஆக்ச்சுவலா நான் இரண்டாவது ஷெட்யூலில்தான் ஜாயின் பண்ணினேன். முதல் ஷெட்யூலில் வேற ஒரு ஆர்ட் டைரக்டர் ஒர்க் பண்ணியிருந்தார். நடுவுல லாக்டவுன் காரணங்களால் இரண்டு வருஷம் தாமதம் ஏற்பட்டது. மறுபடியும் படப்பிடிப்பு தொடங்கினப்ப ஊரே மாறியிருந்தது. முந்தைய ஆர்ட் டைரக்டர் பண்ணிய ஒர்க்கை அப்படியே மேட்ச் செய்து பண்ணுவது கடினமா இருந்துச்சு.

கத்தி, கல் போன்ற பல பொருட்களை டம்மி பண்ணி பயன்படுத்தினோம். ஃபயர் ப்ளாஸ்ட் ஒர்க் பண்ணினோம். ஒரு சீன்ல ஆப்பிள் வெடிக்கிற மாதிரி வரும். அது யாருக்கும் பாதிப்பு வராத மெட்டீரியலில் பண்ணினோம். அடுத்து, கரிமூட்டம் செட். தென் மாவட்டத்துல பல அடுக்குகளில் மரங்களை அடுக்கி வைத்து புகை மூட்டம் போட்டு கரி தயாரிப்பாங்க. அந்த கரி மூட்டம் செட் மீது ஹீரோ ஃபைட் பண்ற மாதிரி க்ளைமாக்ஸ் ஷூட் பண்ணினாங்க. ரியல்னு சொல்லுமளவுக்கு டம்மி செட் போட்டு அந்த ஃபைட் எடுத்தோம்.

திருவிழா செட்டப், கபடி கிரவுண்ட் என படத்துல நீங்க பார்த்த பல விஷயங்கள் செட் ஒர்க். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சார் கொடுத்த சுதந்திரத்தாலதான் என்னால் அப்படி ஒர்க் பண்ண முடிஞ்சது...’’ என்றவர் சினிமா டிஜிட்டலுக்கு மாறிய நிலையில், கலை இயக்குநர்களுக்கான வேலை வாய்ப்பு எப்படியிருக்கிறது என்பதையும் பகிர்கிறார்.

‘‘சினிமா என்னதான் டெக்னாலஜியில வளர்ந்தாலும் ஆர்ட் டிபார்ட்மெண்ட் இல்லாம ஒர்க் பண்ணமுடியாது. கிராஃபிக்ஸ் காட்சிகள் எங்கு தேவைப்படுகிறது என்றால் செட் போட நேரம் இல்லாத சமயத்தில். பட்ஜெட், டைம், ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் இல்லாத சமயத்தில் கிராஃபிக்ஸ் ஆப்ஷனுக்கு போய்த்தான் ஆகவேண்டும்.

இப்ப, கிராஃபிக்ஸ் கலைஞர்களும் நாங்களும் சேர்ந்து ஒர்க் பண்றோம். அதை ‘வேர்ட்’ என்று சொல்கிறோம். அதாவது ‘விஷுவல் ஆர்ட் டைரக்டர்’. உதாரணத்துக்கு ஒரு ஃபாரஸ்ட் சீன் எடுப்பதாக இருந்தால் பாரஸ்ட் சிஜில இருக்கும். ஆர்ட்டிஸ்ட் மரம், செடி, கொடிகளைச் சுற்றி நடந்து வருகிற மாதிரி காட்சி இருக்கும். அதுல வர்ற மரம், செடி, கொடி ஆர்ட் டைரக்டரோட வேலை.

இப்போது அந்த முறையில பல கேமராமேன்கள் ஷூட் பண்ணுகிறார்கள்...’’ என்கிற நர்மதா சினிமாவில் பெண் டெக்னீஷியன்களுக்கான வரவேற்பு குறித்து பகிர்கிறார்.
‘‘சினிமாவில் பெண்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை குறைவாக இருக்கிறது. சிலரிடம் பெண்களால் இதைத்தான் செய்ய முடியும், இதெல்லாம் செய்ய முடியாது என்ற மனநிலை இருக்கிறது. இது டஃப் வேலையாச்சே, இது எப்படி இவர்களால் பண்ண முடியும் என்ற பார்வை இருக்கிறது.

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் பெண் என்றால் சென்சிடிவ், திட்டும்போது அழுதா என்ன பண்றதுனு யோசிக்கிறாங்க. ஆண்களை விட பெண்களுக்கு ரெஸ்பான்ஸ் அதிகம்.
பெண் என்பவள் பிறக்கும்போதே மல்டி டாஸ்க்குடன் பிறக்கிறார். பெண்களால் பத்து விஷயத்தை ஒரே சமயத்துல பண்ண முடியும்.

ஆண்களால் முடியாதுனு சொல்லவில்லை. விவாதம் என்று வரும்போது என்னால் இந்த வாதத்தை முன் வைக்க முடியும். ஆக்ச்சுவலா பெண்களிடம் ரெஸ்பான்ஸ் பற்றி கேள்வியே கேட்கக் கூடாது. அது அவர்கள் பிறவியிலே கலந்தது...’’ என்ற நர்மதா பர்சனல் பக்கங்களையும் புரட்டுகிறார்.‘‘சினிமா என்று வரும்போது கஷ்டம் இருக்கும்னு இருநூறு சதவீதம் தெரிஞ்சுதான் உள்ளே வந்தேன். சினிமாவுல என்னால் சுதந்திரமா செயல்பட முடிகிறது என்றால் அதற்கு காரணம் என்னுடைய குடும்பம். மாமியார், கணவர் எல்லோருமே சப்போர்ட் பண்றாங்க.

இண்டஸ்ரியைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாகுபாடு என்னை பெரியளவில் பாதிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லாருமே சமம். ஆண்கள் எப்படி வேலை செய்கிறார்களோ அப்படிதான் பெண்களும் வேலை செய்கிறார்கள். ஒருவேளை, ஃபேமிலியிடமிருந்து சப்போர்ட் கிடைக்காம இருந்திருந்தா தனியா நின்னு போராடுகிறோமே என்ற ஃபீல் வந்திருக்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணாக இருக்கும்போது குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

மற்றபடி ஆர்ட் டைக்ரஷன் என்பது மற்ற துறையை விட கொஞ்சம் கடினம்னு சொல்லலாம். கிரியேட்டிவ்வா யோசிக்கிறதை யார் வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனா, எல்லாராலும் எக்ஸிகியூட் பண்ண முடியுமா என்பது சந்தேகமே. யோசிச்சு ஸ்கெட்ச் வரைவது ஈஸி. அதை அப்படியே ஒர்க்ல காட்டணும். சொல்லப் போனா கூடுதலா டிராயிங்ல இல்லாத விஷயங்களை ரியாலிட்டியோடு ‘வாவ்’ சொல்ல வைக்கணும். அந்த வகையில் இயக்குநரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டால் எல்லாமே வெற்றி.

நான் இப்போது ஆர்ட் டைரக்டரா ஒர்க் பண்ண முக்கிய காரணமா இருந்தது எங்கள் கலை இயக்குநர்கள் சங்கம். அவங்கதான் பெண் கலை இயக்குநர்கள் நிறையப் பேர் வரணும்னு யாரிடமும் அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணாத என்னை யூனியன் மெம்பர் ஆக்கினாங்க. ஆர்ட் டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட சில நுட்பங்களை தெரிஞ்சிக்க ஆர்ட் டைரக்டர் கிரண் அண்ணா உதவியிருக்கிறார். இப்ப, நடிக்கவும் வாய்ப்பு வருது. சீக்கிரமே நடிகையாகவும் என்னைப் பார்க்கலாம்...’’ எனப் புன்னகைக்கிறார் நர்மதா.

மினி பயோ...

பெயர்: நர்மதா.
க/பெ: கணேஷ் சிங்.
அறிமுகம்: ‘முருங்கைக்காய் சிப்ஸ்’.
இப்போது : ‘விடியும்வரை காத்திரு’, பிரபல தெலுங்கு ஹீரோ படம்.
பிடித்த ஆர்ட் டைரக்டர்கள்: ஆனந்த் சாய், கிரண், சுரேஷ்.
பிடித்த நடிகர்கள்: ரஜினி, தனுஷ்.
பிடித்த நடிகைகள்: சமந்தா, சாய்பல்லவி.
பிடித்த படம் : ‘புதுப்பேட்டை’.
எதிர்காலத் திட்டம் : நடிப்பு.

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்