தங்க இடமில்லை... உண்ண உணவில்லை... விற்றது பானிபூரி... சாதித்தது IPLல்!கடந்த வாரம் 13 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதற்குமுன் கே.எல்.ராகுலும், பேட் கம்மின்ஸும் 14 பந்துகளில் இந்தச் சாதனையை செய்திருந்தனர். அதனை முறியடித்து கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 21 வயதே நிரம்பிய ஜெய்ஸ்வால்.

அதுமட்டுமல்ல. இந்திய கிரிக்கெட் தேசிய அணிக்கான தேர்வுக் குழுவையும் ஜெய்ஸ்வால் தன்பக்கம் திருப்பியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். கடந்த காலங்களில் ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதேபோல ஜெய்ஸ்வாலும் விரைவில் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் என அவரின் ஆட்டத்தைப் பார்த்து மெச்சுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.

அப்படியொரு நாள் வரும் என்றுதான் பலகாலமாகக் காத்துக்கொண்டு இருக்கிறார் ஜெய்ஸ்வால். ஏனெனில், இந்த இடத்தைப் பிடிப்பதற்கே அவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், ஃபோருக்கும் பின்னால் கண்ணீர் ததும்பும் கதை இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பதோஹி மாவட்டத்திலுள்ள சூர்யவன் நகரில் பிறந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அப்பா பூபேந்திர ஜெய்ஸ்வால் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் கொண்ட சிறிய கடை ஒன்றை நடத்துகிறார். அம்மா காஞ்சன் ஹவுஸ் வொய்ஃப். இரண்டு அக்காக்கள், ஒரு அண்ணன் என ஆறு பேர் கொண்ட கஷ்டப்பட்ட
குடும்பம். யஷஸ்விக்கும், அண்ணன் தேஜஸ்விக்கும் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது தீராக் காதல். வீட்டின் முன்பகுதியில் இருந்த இடத்தில் இருவரும் கிரிக்கெட் ஆடியபடியே இருப்பர். இதற்கு அப்பா பூபேந்திராவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

ஐந்து வயது இருக்கும்போதே அதிகாலையில் எழுந்து கிரிக்கெட் ஆடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரைவிட அதிக வயதுள்ள இளைஞர்கள் லெதர் பந்துகளில் போடும் பவுன்சர்களை அப்போதே பவுண்டரிக்கு விரட்டிருக்கிறார். அவர் ஆடும் அணி உள்ளூரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் 95 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதற்குக் காரணம் யஷஸ்வி என்கின்றனர் சூர்யவன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள். யஷஸ்வியின் விளையாட்டை ரசித்த அவரின் அப்பா பூபேந்திரா அவரின் கனவை நனவாக்க நினைத்தார். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து அவரைப்போல ஆட வேண்டுமெனவும், அதற்கு மும்பைக்கு அழைத்துச் செல்லும்படியும் கேட்டு வந்தார் யஷஸ்வி. எதிர்பாராவிதமாக 2012ல் அந்தத் திருப்புமுனை நடந்தது.

மும்பையில் இருந்த யஷஸ்வியின் மாமா சந்தோஷ் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பூபேந்திரா. அவரின் இலக்கு ஆசாத் மைதானத்திற்கு அழைத்துச் சென்று யஷஸ்வி யைப் பயிற்சி அளிக்கச் செய்ய வேண்டும் என்பது. இருந்தும் பூபேந்திராவின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தது குடும்பம். இதனால், அவர் மீண்டும் சூர்யவன் திரும்ப வேண்டியதானது.

யஷஸ்வியிடம், ‘திரும்பி ஊருக்கே போய்விடலாம்’ என பூபேந்திரா சொன்னபோது, ‘இல்லை. நான் இங்கேயே தங்கி மும்பைக்காக விளையாடுவேன்’ எனக் கூறியிருக்கிறார். அப்போது யஷஸ்வியின் வயது 11. இதனால், அரைமனத்துடன் அப்பா பூபேந்திரா, யஷஸ்வியை மாமா வீட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அப்போதிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பட்ட துன்பங்கள் கொஞ்சமல்ல.

ஏனெனில், அவரின் மாமா வீடு ஓர் அறை கொண்ட மிகச்சிறிய வீடு. அதனால், அங்கு யஷஸ்வியால் தங்க முடியவில்லை. பின்னர், கல்பாதேவி என்ற இடத்தில் உள்ள பால்
கடையில் சுத்தம் பண்ணும் பணியுடன் அங்கே தங்கும்படியும் ஏற்பாடானது. ஆனால், நாள்முழுவதும் கிரிக்கெட் பயிற்சி எடுத்த களைப்பால் அவரால் அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. ஒருநாள் அந்தக் கடையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இனி நடந்ததை யஷஸ்வியே விவரிக்கிறார். ‘‘அப்போது செய்வதறியாது நின்றேன். பிறகு மாமா சந்தோஷ் முஸ்லிம் யுனைட்டட் கிளப்பின் டென்ட்டில் தங்க அனுமதி கேட்டார். ஆசாத் மைதானத்தில் உள்ள அந்த டென்ட், மைதான பராமரிப்பாளர்களுக்கானது. அங்கிருந்த பப்பு சார், இந்த மேட்ச்சில் சிறப்பாக ஆடினால் டென்ட்டில் இடம் தருவதாகச் சொன்னார். நான் அந்த மேட்ச்சில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தேன். எனக்கு டென்ட்டில் தங்க இடம் கிடைத்தது. ஆனால், டென்ட்டில் தங்குவதும் அவ்வளவு எளிதானதல்ல.

ஏனெனில் லைட், டாய்லெட் எதுவும் அங்கே கிடையாது. வெயில் காலத்தில் உள்ளே படுக்கமுடியாது. மழைக்காலத்தில் தண்ணீர் வடியும். ஆனாலும், நான் சகித்துக் கொண்டேன். அதற்குக் காரணம் என் மனதில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது...’’ என நம்பிக்கையுடன் சொல்லும் யஷஸ்வி, பயிற்சி தவிர்த்த மற்ற நேரங்களில் பானிப்பூரி, பழங்கள் விற்று தனக்கான வருமானத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார்.  

‘‘அப்பா அனுப்புகிற பணம் போதுமானதாக இருக்காது. அதனால், சாயங்காலத்தில் பானிப்பூரி விற்பேன். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். ஆசாத் மைதானத்தில் நடக்கும் ராம்லீலா நிகழ்ச்சி சமயத்தில் பானிப்பூரி விற்பனை நன்றாக நடக்கும். அப்போதெல்லாம் கடவுளிடம் என் டீம்மேட்ஸ் அங்கு வரக்கூடாது என வேண்டுவேன். இந்நிலையில் என்னை அவர்கள் பார்ப்பது என் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அப்புறம் பழக்கடைகளில் உதவியாளராகவும்  வேலை செய்திருக்கிறேன்.

மைதான பராமரிப்பாளர்கள் சிலநேரங்களில் சண்டையிட்டு சமைக்காமல் இருந்துவிடுவார்கள். இதனால், பலஇரவுகள் சாப்பாடு இல்லாமல் வெறும் வயிற்றுடன் தூங்கியிருக்கிறேன். அப்பெல்லாம் மனது வீட்டைத் தேடும். மைதானத்தில் கழிப்பறை கிடையாது. அதனால், அருகிலிருந்த ஃபேஷன் தெருவில் ஒரு கழிப்பறையை பயன்படுத்தி வந்தேன். அதை இரவில் பூட்டிவிடுவார்கள். அப்போது மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.

அப்பாவையும் அம்மாவையும் நினைத்து அழுதிருக்கிறேன்...’’ என வேதனையுடன் குறிப்பிடுகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

மூன்றாண்டுகள் கழித்து ஆசாத் மைதான வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒருநாள் யஷஸ்வி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது பயிற்சியாளர் ஜ்வாலா சிங் கவனித்தார். ‘யார் நீ... இங்கு என்ன செய்கிறாய்...’ என யஷஸ்வியிடமே கேட்டிருக்கிறார்.

அப்போது மாறியது யஷஸ்வியின் வாழ்க்கை. உணவு வாங்க பணம் கிடையாது. தங்க ஓர் இடம் இல்லை. இப்படியான ஜெய்ஸ்வாலுக்கு கேர் டேக்கராக மாறினார் ஜ்வாலா சிங். ஏனெனில், யஷஸ்வி கதைபோல்தான் ஜ்வாலாவின் கதையும். அவரும் 13 வயதில் கிரிக்கெட் ஆட மும்பை வந்தவர். இப்போது பயிற்சியாளராக மாறிவிட்டார்.

அந்நேரம், பள்ளி கிரிக்கெட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து நாட்அவுட்டாக இருந்தார் யஷஸ்வி. இது லிம்கா சாதனையானது. பிறகு, மும்பை அண்டர் 16 அணிக்காக தேர்வானார். அடுத்து அண்டர் 19 இந்திய அணிக்கான ஆசிய கோப்பைக்குத் தேர்வானவர் தொடரின் சிறந்த வீரர் விருதும் பெற்றார். அந்தக் கோப்பையையும் இந்திய அணி வென்றது. பிறகு, மும்பை அணிக்கான ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்து ஜார்க்கண்ட் அணியுடனான விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் அடித்து அசத்தினார். அதுமட்டுமல்ல. இளம் வயதில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த வீரர் என்கிற வரலாற்றுப் பெருமையையும் சாதனையையும் படைத்தார்.  இதன்பிறகு 2020ல் நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்குத் தேர்வானார். இதில் மொத்தமாக நானூறு ரன்கள் குவித்து தொடரின் சிறந்த வீரர் என்ற விருதினையும் வாங்கினார் ஜெய்ஸ்வால். அதனால்தான் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாட 2.40 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானார்.

இப்போது 4 கோடி ரூபாய் கொடுத்து அவரை ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. இதுக்குக் காரணம் யஷஸ்வியின் அதிரடி ஆட்டம்தான். அதை இந்த சீசனில் நாம் நேரடியாகவே பார்த்து வருகிறோம். இந்த சீசனில் ஒரு நூறும், நான்குமுறை ஐம்பது ரன்களும் அடித்து மொத்தமாக 575 ரன்கள் எடுத்துள்ளார். ஃபாப் டூ ப்ளஸ்சியை விட ஒரு ரன் குறைவாகப் பெற்று இரண்டாம் இடத்திலும் இருக்கிறார். அநேகமாக வரும்போட்டிகளில் முதலிடம் பிடித்து இந்த சீசனில் ஆரஞ்ச் கேப் வாங்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படியே இந்திய அணிக்கும் தேர்வாகி அவரின் கனவு மெய்ப்படட்டும்!

பி.கே