5 விரல்களே கையின் வெற்றிக்கு காரணம்!
கர்நாடக மாநில தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை வசமாக்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. தென் மாநிலங்களில் தங்கள் வசம் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகத்தை இழந்திருக்கிறது பாஜக.இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது கர்நாடக மாநில முதல்வர் யார் என்பதும் தெரிய வந்திருக்கும். இந்தச் சூழலில் கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக 5 விஷயங்களை அரசியல் பார்வையாளர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
கர்நாடக மாநில தேர்தல்களில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சமூகமாக லிங்காயத் சமூகம் இருக்கிறது. கர்நாடக மாநில மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 100 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கவர்களாக இந்த லிங்காயத் சமூகத்தினர் கருதப் படுகிறார்கள்.கடந்த 2018ல் நடந்த தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முன்னிறுத்தப்பட்டதால் அக்கட்சிக்கு லிங்காயத் சமூகத்தின் முழு ஆதரவு கிடைத்தது.
ஆனால், இப்போது அக்கட்சியில் எடியூரப்பாவுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை. இது லிங்காயத் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்கிறார்கள். போதாத குறைக்கு அதே நேரத்தில் லிங்காயத் சமூகத்தினரிடையே எடியூரப்பாவுக்கு அடுத்து அதிக செல்வாக்கு பெற்றவரான ஜெகதீஷ் ஷட்டர், கடைசி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது.இதனால் லிங்காயத் சமூகத்தின் பல மடங்கள் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்ததும் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியதாக சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆவின் எப்படியோ, அப்படித்தான் கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால். அம்மாநில மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட அரசின் பால் நிறுவனத்தின் (கர்நாடகா மில்க் கார்ப்பரேஷன்) பிராண்ட் இது. கர்நாடகாவில் லிங்காயத்களுக்கு அடுத்ததாக அதிக வாக்குகளைக் கொண்ட ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கர்நாடகா மில்க் கார்ப்பரேஷனுக்கு தங்கள் பாலை விற்று வந்தனர். மைசூரைச் சுற்றியுள்ள விவசாயிகளின் மிக முக்கியமான வாழ்வாதாரமாக இது இருந்தது.
இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன் நந்தினி பாலுக்கு பதிலாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனத்தின் பாலை கர்நாடகா மில்க் கார்ப்பரேஷன் சப்ளை செய்யப் போவதாக செய்திகள் கசிந்தன. இது கர்நாடக மாநில பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சியும், மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சியும் பெரிய அளவில் பிரசாரம் செய்தன.இதற்கு பாஜக அரசும் சரியான பதிலைச் சொல்லாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று கருதிய ஒக்கலிகா சமூக மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பினர்.
பாஜகவின் ஆட்சிக்காலத்தில் ஊழல் மலிந்துள்ளதாக மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. ‘40 சதவீத ஊழல் அரசு’ (40% government), ‘பே சிஎம்’ (PayCM) ஆகிய பெயர்களில் எதிர்க்கட்சிகள் நடத்திய பிரசாரங்கள் மக்கள் மத்தியில் எடுபட, பாஜக அரசு ஊழல் அரசு என்ற பிம்பம் மக்களிடையே ஏற்பட்டது.இதனால் பாஜக ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் மக்களிடையே உடைந்தது. அக்கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகத்தினரை சமாதானப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 4 சதவீதத்தைக் கூட்டியது பாஜக. ஏற்கெனவே இஸ்லாமியர்களுக்கு இருந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டில் கை வைத்துதான் இந்த இட ஒதுக்கீட்டை செய்தது. கர்நாடகாவில் உள்ள 12 சதவீத இஸ்லாமிய ஓட்டுகள் இதனால் காங்கிரஸ் பக்கம் கரை ஒதுங்கியது.அதேநேரத்தில் தேர்தலுக்காக கடைசி நேரத்தில் பாஜக அறிவித்த இட ஒதுக்கீட்டை லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் நம்பவில்லை. இது அக்கட்சிக்கு பலத்த அடியைக் கொடுத்தது.
கர்நாடகத்தில் பாஜகவின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய அளவில் காரணமாக இருந்தது. 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மாதம் 10 கிலோ இலவச அரிசி ஆகியவற்றை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்தது பல வாக்காளர்களைக் கவர்ந்தது.பாஜகவும் இதேபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், ‘இதுவரைக்கும் தராதவங்க இனிமேலா கொடுக்கப் போறாங்க’ என்று மக்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
2024 மக்களவைத் தேர்தலுக்கு இது ஆரம்பமா..?
அப்படித்தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் காங்கிரசுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு பாஜகவுக்கும் முக்கியமான தேர்தல்தான்.2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலை ஊக்கத்துடன் எதிர்கொள்ள, கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு மிக அவசியமான ஒன்றாக இருந்தது. பாஜகவைப் பொறுத்தவரை, இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி என்ற இமேஜை உடைப்பதற்கு கர்நாடகத்தில் இருந்த ஆட்சி உதவிகரமாக இருந்தது. ஆகவே, அதைத் தக்கவைக்க அந்தக் கட்சி விரும்பியது.
ஆனால், இந்தத் தோல்வியால், தென்னிந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளும் காங்கிரசும், பாஜகவை மீண்டும் ஒரு வட இந்தியக் கட்சியாக சித்தரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் பாஜக வலுவாக உள்ள ஒரே மாநிலம் கர்நாடகம்தான். மற்ற மாநிலங்களில் கட்சியின் நிலை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. கேரள மாநிலத்தில் 2016ல் ஒரு இடத்தைப் பெற்ற பாஜக, 2021ல் அதையும் இழந்தது. தமிழ்நாட்டில் இரு தசாப்தங்களுக்குப் பிறகு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் நான்கு இடங்களைப் பெற்றுள்ளது அந்தக் கட்சி. தெலுங்கானாவில் 2014ல் ஐந்து இடங்களைப் பெற்ற அந்தக் கட்சி, 2018ல் ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. இடைத் தேர்தல்களில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு மக்களவைத் தொகுதிகளைப் பெற்றது.
தெலுங்கானாவில் வரும் டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் நான்கு இடங்களைப் பிடித்த பாஜக, இந்த சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை வெல்ல நினைக்கிறது. ஆனால், அங்கு பாஜகவுக்கென வலுவான தலைவர்களோ, வேட்பாளர்களோ கிடையாது. பாஜகவின் சார்பில் இடைத்தேர்தலில் வென்றவர்கள்கூட, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியிலிருந்து பாஜகவுக்கு வந்தவர்கள்தான்.
ஆந்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, 2014ல் நான்கு இடங்களைப் பெற்ற பாஜக, 2019ல் ஒரு இடத்தையும் பெற முடியவில்லை. இந்தப் பின்னணியில்தான் இப்போது கர்நாடக மாநிலத்தில் கிடைத்திருக்கும் தோல்வியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆகவே, மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கணக்குகளில் கர்நாடகத்திற்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. இந்தச் சூழலில்தான் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்தச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்குமா?
ஜான்சி
|