Can I sing a song FOR YOU..?



“எக்ஸ்க்யூஸ் மீ ! உங்களுக்காக நான் ஒரு பாட்டு பாடலாமா?” கையில் கிட்டாருடன் இளைஞர் கூட்டம் இருக்கும் இடம் நோக்கி ஜாலியாக முன்னேறும் மார்ட்டின் காட்டேன்ஜர் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமானது.சென்னையின் முக்கிய சாலைகள், பாண்டி பஜார், மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச், மால்கள், ஃபுட் கோர்ட், பூங்கா... என குவிந்திருக்கும் இளைஞர் படைக்கு மத்தியில் புகுந்து பாட்டுப் பாடுவது அல்லது நண்பர் வருகைக்கு காத்திருக்கும் பெண்ணை கிட்டாருடன் அணுகி, ‘எனக்காக ஐந்து நிமிடம் கொடுக்க முடியுமா? Can I sing a song for you?’ என அனுமதி கேட்டு பாட ஆரம்பிப்பது மார்ட்டின் உருவாக்கி வைத்திருக்கும் அவரது ஸ்டைல்.

இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்ட்டாக நகர்கிறது. வித்தியாசமாக எதையாவது யோசித்து... அதை வித்தியாசமாகச் செய்து இணையத்தில் வைரலாக்குவது அவர்களது வாடிக்கை. மார்ட்டின் காட்டேன்ஜரும் அப்படியான ஒரு நபராக இருக்கிறார்.  ‘‘கடந்த 7 வருடங்களாக நானே சொந்தமாகப் பாட்டு எழுதி. ட்யூன் போட்டு. புரொடியூஸ் செய்து... பாடல்களை ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்...’’ என  பேச ஆரம்பித்தவர், தன்னை ஒரிஜினல் இண்டிபெண்டன்ட் ஸாங் சிங்கர் என நம்மிடம்
அறிமுகப்படுத்திக் கொண்டார்.   

‘‘என் பாட்டை புதுசா யாராவது ஒருத்தர் கேட்டுக்கிட்டே இருக்கணும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருக்கிறது. என் பாட்டு உங்களுக்குப் பிடிச்சா ஸ்பாட்டிஃபை (Spotify) மியூஸிக்கல் ஆப்பில் என்னை ஃபாலோ பண்ணுங்க. பிடிக்கலைன்னா இப்பவே பளார்னு என்னை அறைஞ்சுட்டு போயிக்கிட்டே இருக்கலாம்...” என்பது இளைஞர்களிடத்தில்

மார்ட்டின் கூறும் ஜாலி அணுகுமுறை.

‘‘நானொரு செல்ஃப் டாட் மியூஸிஷியன். யு டியூப் மற்றும் ஆன்லைன்  மெட்டீரியல்ஸ் மூலமாகத்தான் மியூஸிக் கற்று, நானாகவே டியூன் போட ஆரம்பிச்சேன். இதை வைத்துதான் இவ்வளவு தூரம் மியூஸிக்கில் டிராவல் பண்ணியிருக்கேன்...’’ என நம்மை ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கிறார்.

மார்ட்டின் காட்டேன்ஜரின் பாடல்களை பெண்கள் வெகுவாக தலையாட்டி ரசிக்கிறார்கள். பொது இடங்களில் இவரைப் பார்த்தால், ‘‘நீங்கள் மார்ட்டின்தானே...’’ எனக் கேட்டு பாடச் சொல்கிறார்கள். சில இடங்களில் மார்ட்டின் பாடும்போது, பெண்கள் டான்ஸ் ஆடி அந்த ஏரியாவையே கலகலப்பாக்கி விடுகிறார்கள். ‘‘மார்ட்டின் காட்டேன்ஜர் என்பது என்னோட ஸ்டேஜ் நேம். மைக்கேல் ஜாக்சன், பாப் மார்லி மாதிரி எனக்கும் இசையில் சில கனவுகள் இருக்கு. அதை நோக்கி ஓடுகிறேன்...’’ என்றவர், பிராப்பர் நார்த் மெட்ராஸ் பையனாம்.

பிறந்தது வியாசர்பாடி என்றாலும், வசிப்பது அம்பத்தூரில். இஞ்சினியரிங் முடித்திருக்கிறார். ‘‘கல்லூரியில் படிக்கும்போதே சில ஸ்டேஜ் ஷோக்களை செய்திருக்கிறேன். எனக்குப் பிடித்த பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லைதான். என் பாடல்களுக்கு யார் ஆடியன்ஸ் என முடிவு செய்து, அவர்களைக் கேட்க வைப்பதற்காகவே தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

என் பாடல்களைக் கேட்க வைக்க நிறைய முயற்சிகள் செய்தேன். அது எதுவுமே வொர்க்அவுட் ஆகல. கடைசியா பப்ளிக்கிடம் நேரடியாகவே கடைவிரிச்சுட்டேன்!
ஒரு நாள் என் கிட்டாரோடு சாலையில் இறங்கி, இளைஞர்கள் கூட்டத்தை நெருங்கி, அவங்க முன்னாடி எனது பாடலைப் பாடி அவங்க ரியாக்‌ஷனை கேப்ச்சர் செய்து என் இன்ஸ்டா பக்கங்களில் பதிவேற்றினேன். கூடவே குட்டிக் குட்டி ரீல்ஸ்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினேன்.

இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதே நேரம் எனது பாடல்களும் பிரபலமடைந்தது. ஆடியோ ப்ளாட்ஃபார்ம்ல எனக்கு ஸ்ட்ரீம்ஸ் அதிகமாக ஆரம்பித்தது...’’ என்றவருக்கு, மியூஸிக்கல் ஆடியோ ப்ளாட்ஃபார்ம்களில் கிடைத்துள்ள ஸ்ட்ரீமர்ஸ் மில்லியனைத் தாண்டுகிறது. ‘‘முதல்ல ஒரு பாட்டை ரிலீஸ் செய்ததும் அதை ஒரு மாதத்தில் 500 பேர் வரைதான் கேட்டாங்க. இப்ப  50 ஆயிரம் பேர்வரை கேட்கறாங்க...’’ என விரல் உயர்த்தி தம்ஸ்அப் காட்டியவர் கிட்டாரோடு தெருவில் இறங்கிப் பாடும் கான்செப்ட்டை கற்றது வெளிநாடுகளில் இருந்தாம்.

‘‘ஆமா. இவையெல்லாம் வெளிநாடுகள்ல ஏற்கனவே இருக்கிற விஷயம்தான். அதை நான் சரியாப் பிடித்து பயன்படுத்த ஆரம்பிச்சேன். சட்டுன்னு வொர்க்அவுட் ஆச்சு. வெளிநாடுகள்ல திரைப்படங்கள் சாராத தனி மியூசிஷியன்ஸ் இருக்காங்க; தனி டிராக்குல இயங்கறாங்க. இந்தியாவுல மட்டும்தான் மியூசிக் என்பதே சினிமா சார்ந்ததா இருக்கு.

என்னுடையது எல்லாமே இண்டிபெண்டன்ட் ஸாங்ஸ். என் பெயரைத் தட்டினாலே எனது பாடல்கள் அனைத்தும் எல்லா ஆடியோ ப்ளாட்ஃபார்மிலும் கிடைக்கும். இதுவரை 20 பாடல்களை நானே எழுதி மியூஸிக் போட்டு புரொடியூஸ்  செய்து ரிலீஸ் செய்திருக்கேன். வெளியில போறப்ப, வாய்ப்பு கிடைக்கிற இடத்துல எல்லாம் இசையமைச்சு பாட ஆரம்பிக்கறேன்...’’ என்றவர் பெண்களின் ரியாக்‌ஷன் குறித்து புன்னகையுடன் விவரித்தார்.

‘‘பத்து பேரை அணுகினா எட்டு பேர் ‘பாடுங்க கேட்கிறோம்’னு சொல்வாங்க. ஆனா, அதுல பாதிப் பேர் வீடியோ வேண்டாம்னு மறுத்துடுவாங்க. மீதி நான்கு பேர் ரொம்பவே ஜாலியா ‘ஓகே, ரெக்கார்டு செய்துக்கோங்க. இன்ஸ்டாவிலும் போட்டுக்கோங்க’னு சொல்வாங்க. சென்னை மாதிரியான நகரங்கள்ல தனியா அல்லது ஆண் நண்பர்களோடு இருக்கும் பெண்களை அணுகிப் பாடுவது அத்தனை சுலபமில்ல.

இட்ஸ் நாட் எ ப்ராங்க் ஷோ. ஜெனூய்னா அவங்களை அணுகி ‘உங்களுக்காக ஒரு பாட்டு பாடவா’னு கேட்பேன். அனுமதிச்சா பாடுவேன். அவங்க ஓகே சொன்னா மட்டுமே இன்ஸ்டாவுல போடுவேன்...’’ என்றவரிடம் ‘பெண்கள் முன்பாக பாடும் முயற்சியில் கன்னத்தில் பளார் வாங்கிய அனுபவங்கள் உண்டா’ என்றால் சிரிக்கிறார்.

‘‘அடையாரில் ஒரு பொண்ணு முன்னாடி பாடினேன். அன்று அவர் முன் நான் பாடினது லவ் ஃபெயிலியர் சாங். உடனே பட்டுனு என் கன்னத்துல அறைஞ்சுட்டு ‘வேற பாட்டு பாடுங்க’னு சொல்லிட்டாங்க. அன்றைக்கு என்ன ஃபீலிங்ல அந்த பொண்ணு அங்க வந்தாங்கனு எனக்குத் தெரியாது...’’ என கன்னத்தைத் தடவியவர், இளைஞர்களின் தக்லைட் மொமெண்ட்ஸ்களையும் சந்தித்திருக்கிறாராம்.

‘‘இன்னைக்கு தேதிக்கு நான் செய்யற விஷயத்தில் ஜாலியா எல்லோரையும் சந்தோசப்படுத்திக்கிட்டே இருக்கேன். இசையில் என்னை தனித்துவப்படுத்திக்கிட்டு போகணும் என்பதே என் விருப்பமா இருக்கு. ஆனாலும் எனக்குனு சில பல செட் ஆஃப் ரூல்ஸ் வச்சுருக்கேன். அதுல முதல் ரூல் நானே எழுதி நானே மியூசிக் போட்ட பாடல்களை மட்டுமே பாடுவது. அல்லது எனது நண்பர்கள் எனக்காக எழுதி, நான் கம்போஸ் செய்த பாடல்களை மட்டும் பாடுவது என்பதே.

திரைப்படப் பாடல்களை நான் கவர் ஸாங்கா பாடுவதில்லை. மேடைல பாடும் வாய்ப்பு கிடைச்சா முதல்ல என் பாடலுக்கு ஏற்ற ஒரு குட்டி ஸ்டோரி... பிறகு ஸாங்... மீண்டும் குட்டி ஸ்டோரி, ஸாங்... என பார்வையாளர்கள் ரசிக்கும்படி எனது ஸ்டேஜ் ஷோ  ஒன்றரைமணி நேரம் போகும்...’’ எனக் குறிப்பிடுகிறார் மார்ட்டின்.‘‘சமீபத்துல தூத்துக்குடில நடந்த நெய்தல் விழாவுல எனக்கு மேடைல பாடும் வாய்ப்பு கிடைச்சது. நான் பாடுவதை அங்கிருந்த மக்கள் மட்டுமில்ல, கனிமொழி எம்பியும் வெகுவா ரசிச்சாங்க...’’ என்கிறார் மார்ட்டின்.

மகேஸ்வரி நாகராஜன்