சினிமாவில் என்னுடைய டிராவலை நினைக்கும்போது அச்சமாக இருக்கு...



சொல்கிறார் அவந்திகா மிஸ்ரா

இராணுவக் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் அவந்திகா மிஸ்ரா. அறிமுகம் தெலுங்கு என்றாலும் தமிழில் ‘டி பிளாக்’, ‘என்ன சொல்லப் போகிறாய்’ போன்ற படங்களில் நடித்தபிறகுதான் அறிந்த முகமாக வலம் வர ஆரம்பித்தார். இப்போது அசோக் செல்வன் நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ செய்துள்ளார். சினிமா நடிகையாக மட்டுமல்லாமல், பயணங்கள், விளையாட்டு என எப்போதும் பிசியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பல லட்சம் ஃபாலோயர்ஸ் இவரைப் பின்தொடர்கிறார்கள்.

‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ எப்படி வந்திருக்கு?

மறக்க முடியாத நல்ல அனுபவமா இருந்துச்சு. இது ரொமான்டிக் காமெடிப் படம். இந்த மாதிரி கதையில் இதுவரை நடிச்சதில்லை. ஆக்‌ஷன், த்ரில்லர் போன்ற படங்கள்தான் பண்ணியிருக்கிறேன். இந்த வாய்ப்பு மூலம் ஒரே மாதிரி வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற இமேஜை உடைத்துப் பண்ணியிருப்பதாக நினைக்கிறேன். உண்மையில் என்னுடைய கேரக்டரை ரசிச்சுப் பண்ணினேன்.

படத்துல எனக்கு நர்ஸ் கேரக்டர். காதலும் இருக்கு. கேரக்டருக்காக சில நாட்கள் தெரிஞ்ச நர்சிங் ஹோம் சென்று அங்கிருக்கும் நர்ஸ்களிடம் பழகி அவர்களுடைய டூட்டி, நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதை ஸ்டடி பண்ணினேன். 
அது என்னுடைய கேரக்டரை சிறப்பாக செய்வதற்கு உதவியது. ஒரு பாடலை தனி தீவாக காட்சியளிக்கும் ஓர் இடத்தில் எடுத்தார்கள். அப்போது வெயில் உச்சத்தில் இருந்துச்சு. 45 டிகிரி வெயில், சுடுமண் நடுவே ஷூட்டிங் எனும்போது உடல் ரீதியாக சில கஷ்டம் இருந்துச்சு. அதுதான் படத்துக்காக நான் சந்திச்ச சவால்.

மற்றபடி இயக்குநர் பாலாஜி கேசவன் சார் இயக்கத்தில் நடிச்சது நல்ல அனுபவம். ஹியூமர் சென்ஸ் உள்ளவர். அசோக் செல்வன் எப்போதும் சிம்பிளா இருப்பார். சக நடிகர்களிடம் ஜாலியாகப் பழகுவார். அவரும் படத்துக்காக கடினமாக உழைத்தார்.

தமிழ் சினிமா அனுபவம் எப்படி?

ரொம்ப பிடிக்கும். என்னுடைய இரண்டாவது வீடு மாதிரி என்றும் சொல்லலாம். சென்னையில்தான் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். தமிழ் மக்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல, உழைப்புக்கு மரியாதை தருபவர்கள். அழகைத் தாண்டி திறமையானவர் என்று அடையாளம் காணும்போது மிகப் பெரிய மரியாதையைக் கொடுக்கிறார்கள். அதுவே எனக்கு தமிழ் சினிமா மீது பெரிய மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ரசிகர்கள் அன்பானவர்கள். எவ்வளவு காலம் ஃபீல்டில் இருக்கிறோம் என்பதைவிட திறமை இருக்கும்பட்சத்தில் அவர்களை என்கரேஜ் பண்ணத் தவறியதில்லை. இங்கு அன்பும், மரியாதையும் கிடைக்கிறது. என்னுடைய அம்மா சென்னை என்பதால் தமிழ் எனக்கு ஸ்பெஷல்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடிக்கிறீர்கள். எந்த மொழியில் முக்கியத்துவம் தருகிறார்கள்?

எல்லா மொழிகளிலும் திறமையான நடிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக நினைக்கிறேன். நான் எப்போதும் செய்யும் தொழிலை மதிப்பேன். ஒவ்வொரு மொழியிலும் என்னுடைய திறமையை வெளிப்படுத்துவதோடு இயக்குநர்கள், சக நடிகர்களிடமிருந்து புது விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு மொழியில் நடிக்கும்போதும் சிறப்பாகப் பண்ணனும் என்ற அழுத்தம் இருக்கும். 

தமிழ் ரசிகர்கள் பெர்ஃபாமன்ஸ் நல்லாயிருந்தால் மனம் திறந்து பாராட்டுவார்கள். வெரைட்டியான ரோல் எந்த மொழியில் கிடைக்கிறது என்றால் தமிழ் என்று சொல்லலாம். வில்லேஜ் கேர்ளாக நடிக்கணும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த மாதிரி ரோலுக்காகக் காத்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் உள்ள ஒற்றுமை என்ன?

எல்லா மொழிகளிலும் கன்டன்ட்டுக்கு முக்கியத்துவம் தருவதைப் பார்க்க முடிகிறது. சில வருடங்களுக்கு முன் இருந்த சினிமா வேறு, இப்போதுள்ள சினிமா வேறு. இப்போது வித்தியாசமான படங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ரசிகர்கள் ரொம்ப ஸ்மார்ட். அவர்களுக்கு புதுசாக தரணும் என்ற இடத்தில் சினிமா இருக்கிறது. இயக்குநர்களும் அதைப் புரிந்து படங்கள் பண்ணுகிறார்கள்.

எந்த அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்வீர்கள்?

படப்பிடிப்புக்கு போகும்போது சந்தோஷமான மனநிலையில் செல்லவேண்டும் என்று நினைப்பேன். எந்த வேடம் செய்தாலும் அது ரசிகர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கணும் என்பதோடு தனிப்பட்ட விதத்தில் எனக்கும் உத்வேகம் தரணும். 

எனக்கான சுதந்திரம் இருக்கணும். சோதனை முயற்சியாகவும் இருக்கணும்னு நினைப்பேன். அந்த வகையில் என் மீது இருக்கும் முந்தைய பட பிம்பத்தை உடைத்துப் பண்ண எப்போதும் ஆயத்தமா இருப்பேன். முக்கியமாக நான் யாருடன் பணிபுரிகிறேன் என்று நினைக்கும்போது அது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கணும். படக்குழு மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.

நடிகையாக சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

சினிமாவில் பின்புலம் இல்லையென்றால் ஜெயிப்பது கடினம். எங்கள் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. சுயமாக என்னுடைய முயற்சியில்தான் சினிமாவுக்கு வந்துள்ளேன். பின்புலம் இல்லையென்றால் நல்ல வாய்ப்புக்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். பிரபல இயக்குநர்களை அணுக அனுமதி அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதையும் மீறி வாய்ப்பு வருகிறது என்றால் கடவுள் புண்ணியத்துலதான் அது நடந்துச்சுன்னு சொல்லணும்.

அந்த வகையில் சினிமா பின்புலம் இல்லாமல் வருகிறவர்கள் பெரிய போராட்டங்களைச் சந்திக்கிறார்கள். சில சமயங்களில் நம்முடைய வேலைகளைப் பார்த்து வாய்ப்பு வரும். அப்படி என்னுடைய படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அஜித் சார் பாணியில் சொல்வதாக இருந்தால், என்னை நானே செதுக்கிக் கொண்டேன்.

நீங்களும் யூ-டியூப் சேனல் ஆரம்பிச்சுட்டீங்களே?

சேனல் ஸ்டார்ட் பண்ணக் காரணம் ரசிகர்கள். தினமும் எங்களுடன் தொடர்பில் இருங்கள் என்று கேட்பதுண்டு. இன்ஸ்ட்டாகிராமில் சில நொடிகள் ஓடக் கூடிய வீடியோக்களை ஷேர் பண்ணுவேன். 

அதைப் பார்த்துவிட்டு நீங்கள் ஏன் சேனல் துவங்கக் கூடாது என்று கேட்டார்கள். அப்படி சினிமாவிலும் என்னுடைய வாழ்க்கையிலும் தினசரி நடக்கும் நிகழ்வுகளை ஷேர் பண்ணுகிறேன். பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். வீடியோ தயாரிப்பு பணி மகிழ்ச்சி என்றால் மக்களுடன் இணைந்திருப்பது திருப்தி தந்துள்ளது.

சினிமாவில் உங்கள் ரோல் மாடல்?

ரஜினி சார், அமிதாப்பச்சன் சார், ஷாரூக்கான் சார். பெரியளவில் பின்னணி இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர்கள். பெரிய வெற்றியைப் பார்த்தவர்கள். மிக உயர்ந்த இடத்துக்குப் போனாலும் எளிமையாக இருக்கிறார்கள். தங்கள் புரஃபஷனில் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். சினிமாவில் அவர்கள் பார்க்காத வெற்றி இல்லை. 

இந்த நிலையிலும் கடினமாக உழைக்கிறார்கள். சில சமயம் சினிமாவில் என்னுடைய டிராவலை நினைக்கும்போது அச்சமாக இருக்கும். அப்போது இந்த ஜாம்பவான்களை நினைக்கும்போது கடினமான வேலைகளை ஏன் சவாலாக எடுத்துப் பண்ணக்கூடாது என்று தோன்றும்.

எஸ்.ராஜா