சிறுகதை - நுனியளவு செல்



சென்ற இதழ் தொடர்ச்சி...

“அம்மா பஸ் ஸ்டாண்ட் வந்திருச்சு...” என்று நடத்துனர் சத்தமாக சொன்னதும்தான் அவள் நிலைக்கு வந்தாள். பெட்டியுடன் கீழே இறங்கினாள். ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு சென்றாள். ஊரின் ஒவ்வொரு இஞ்ச்சும் அவனையும் அவள்களையும் ஞாபகப்படுத்தியபடியே சென்றது.  வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, தூங்குவது, சினிமா பார்ப்பது, கோயில் குளங்களுக்குப் போவது என்று நகர்ந்து கொண்டேதான் இருந்தது.

அவனோடு வளர்ந்த மகனை அவன் போக்கில் விடாமல் தொலைதூர ஊர்களுக்குப் படிக்க அனுப்பி அவனது ஒவ்வொரு மதிப்பெண்ணையும் மானிட்டர் பண்ணிக் கொண்டு அவனை ஒரு கோழையாக, ஜெல்லியாக, இப்போது ஒரு மனநல ஆலோசகரை அணுகும் அளவிற்குக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியதும் அவன்தான்.மாடியும் கீழுமாக வீடு அப்படியேதான் இருந்தது. அவன் வைத்த பூச்செடிகள், அவன் வடிவமைத்த டிசைன் எல்லாம் அவனது விருப்பத்தில் கட்டிய வீடு. காம்பவுண்டு கதவைத் திறந்து உள்ளே போனாள்.

சிம்பா ஓடிவந்து ‘வவ்’ என்று வாலாட்டியபடி அவள் மீது தாவப் பார்த்தது. சிம்பாவைக் கொண்டு வந்ததும் அவன்தான். சிம்பாவை விலக்கிவிட்டு உள்ளே போனாள்.
உள்ளே இருந்து ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வந்தாள். நல்ல சிவந்த நிறம். ரப்பர் பேண்டுக்கு அடங்காத கூந்தல். கண்மை தீட்டியிருந்தாள். முந்தானை தோளில் அமர்வதற்கு யோசித்தவாறு இருக்கும் வண்ணம் சேலை கட்டியிருந்தாள். தீர்க்கமான மூக்கு. குழி விழுந்த கன்னம்.

“வாங்க மேடம்...” என்றாள்.“யார் நீ?’
“வா மாதவி. இவள் சுந்தரி. அம்மாவுக்கும் எண்பத்தைந்தை நெருங்குவதால் முழுநேர நர்ஸ் இவளை ஏற்பாடு பண்ணியிருக்கேன். பாலக்காடு சொந்த ஊர். கல்யாண் ஆஸ்பத்திரியில் இருந்தா. காலையில் ஆறுமணிக்கு வந்தா சமையல், அம்மாவைப் பார்த்துக் கொள்வது, எல்லாமே இவள்தான் செய்கிறாள்...” என்று நடந்து வந்தபடியே பாலகிருஷ்ணன் கூறினான்.
முன்பு இருந்தது போல அவனால் நடக்க முடியவில்லை. முழங்கால்களில் இயக்கம் இல்லாமல் போனதால் அவன் நடையே வேறுவிதமாக இருந்தது.

முழங்காலிலிருந்து பாதம் வரையில் நீர் சேர்ந்து வீங்கித் தெரிந்தன. அவள் இருந்தபோதே எல்லா விரல்களிலும் வீக்கம் ஏற்பட்டு நீட்டி மடக்குவதில் சிரமப்பட்டான். இப்போது மேலும் மோசம் அடைந்திருப்பது தெரிகிறது. நடையில்லாததால் உடலும் சற்று அதிகமாகவே பருமனாகி விட்டது. முகத்தில் வலியின் ரேகைகள் நெளிந்தன. சோபாவில் உட்காரக் கூட சிரமப்பட்டான். அந்த சுந்தரிதான் அவனைத் தொட்டு உட்கார வைத்தாள்..

“மேடம் என்ன சாப்பிடறீங்க?” என்றாள் சுந்தரி. அவள் மீது சொல்ல முடியாத எரிச்சல் ஏற்பட்டாலும் அதனைக் காண்பிப்பதால் அவளுக்கு அவன் மீது பொஸஸிவ்னஸ் இருப்பது போன்ற பாவத்தை ஏற்படுத்தும் என்பதால் “சூடா ஒரு கப் காபி...” என்றாள்.மாமியாரின் அறைக்குச் சென்று பார்த்தாள். மாமியார் எவ்வித பேச்சுமின்றி சுவரைப் பார்த்து அமர்ந்து கொண்டிருந்தாள். அவளது அறையில் பெரிய எல்.ஈ.டி திரையுடன் கூடிய சுவர் தொலைக்காட்சி ஒன்றில் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. மாமியார் ரிமோட்டை அவளிடம் நீட்டி நிறுத்தச் சொல்லி விட்டு நலம் விசாரித்தாள்.

“என்ன முடிவு பண்ணியிருக்க?”
“இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை...”‘‘எனது நடமாட்டமே இந்தப் படுக்கைக்கும் அந்த பாத்ரூமுக்கும் மட்டும்தான். காப்பி டிபன் எல்லாம் இங்கேயே வந்து விடுகிறது...”
“நல்லதுதானே?” “யாருக்கு?’’ என்றாள் மாமியார். அப்போது மாதவிக்குப் புரியவில்லை.இரண்டொரு நாட்களில் விஷாலும் அவனது மேற்படிப்பு படிக்கும் கல்லூரி விடுதியிலிருந்து வந்துவிட்டான். அதே தோற்றம். எதையோ பறி கொடுத்த பார்வை. சீரில்லாத உடைகள். தெளிவில்லாத பேச்சு. உள்ளடங்கிய கண்கள். உதட்டில் நிகோட்டின் கருப்பு.

இவன் தன் மகன் இல்லை. வேறு யாரோ.உள்ளே எங்கேயோ வலித்தது. மகன் என்பது கணவன், மனைவி இருவரின் பங்களிப்பு. உடல் ரீதியாக மட்டுமில்லை, எத்தனையோ விஷயங்களில். பாலகிருஷ்ணனைப் புறக்கணிப்பதாக எண்ணி மகனைக் காவு கொடுத்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு எழுந்தது. 

மகனை அவன் போக்கில் வளர விட்டிருந்தால் கூட அவன் இந்நேரம் ஒரு நல்ல மனிதனாக உருவெடுத்திருப்பான். இவன் இதைத்தான் படிக்க வேண்டும், இந்தப் பள்ளியில்தான் சேர வேண்டும், இந்தக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற பாலகிருஷ்ணனின் பிடிவாதமும், பணமும் மகனை இப்படி ஆக்கியுள்ளது.

எல்லா விதத்திலும் தனது ஈடுபாடு என்பதை ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டு ஒரு காரியம் முழுமை பெறாதபோது தன்னைக் குற்றம் கூறுவது எந்த வகை நியாயம்?
மறுநாள் அவன் மருத்துவமனைக்குக் கிளம்பினான். டாக்டர் ராகவன் அவனுடன் பியூசி வரை ஒன்றாகப் படித்தவன்தான். படித்தவர். அவனது நண்பர்களை ஒருமையில் அழைக்கப் பிடிக்கவில்லை. பாலகிருஷ்ணன் கிளம்பும்போது அவளும் ஒரு நல்ல சேலை கட்டிக் கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

“டிரைவர் இருக்கான். சுந்தரி கூட இருக்கா. நீ சிரமப்பட வேண்டாம்...” என்ற அவனது த்வனியில் ‘பரவாயில்லையே’ என்ற பாவம்தான் இருந்தது. அவள் மறுப்பும் சொல்லாமல் விருப்பும் சொல்லாமல் அவனுடன் இறங்கினாள். சுந்தரிக்கு மட்டும் மாமியாரைப் பார்த்துக்கொள்ள உத்தரவிட்டாள்.

 சுந்தரிக்கு பாலகிருஷ்ணனைக் கைத்தாங்கலாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததில் வருத்தமிருக்கலாம்.மருத்துவமனையில் அதிக கூட்டமில்லை. போன உடனே பார்க்க முடிந்தது.“You have taken a right decision...” என்றார் டாக்டர் ஜெயகாந்தன். படங்களில் வரும் டாக்டரைப் போல ஆங்கிலத்தில் கூறினார்.

“எதுக்கு டாக்டர்?”

“இந்த மாதிரி சமயத்தில்தான் அவனுக்கு ஒரு சப்போர்ட் வேணும். நீங்க ஸ்கூல் ஹெட் மிஸ்ட்ரஸா இருந்தவங்க. உங்களுக்கு ருமாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் எவ்வளவு கொடுமையான வியாதி என்பது தெரிஞ்சிருக்கும். இன்னொரு நபரின் துணை இல்லாமல் பால்கியால் இனிமேல் இயங்க முடியாது. 

நீங்க கூடவே இருந்தால் அவனுக்கு இதைவிட சப்போர்ட் இருக்க முடியாது. ஒரு மனைவியா கவனிச்சுக்கணும் என்பது கூட இல்லை...” என்று கூறிவிட்டு ஒரு சின்ன இடைவெளி விட்டவனிடம், ‘உன் வேலை ஊசி போடுவதுதான், ஊசி செருகுவது இல்லை’ என்று அவள் சொல்ல வாயெடுக்கும் முன்பே ‘‘ஒரு நர்ஸா கூட மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவனை நீங்க பார்த்துக்கலாம்...” என்று முடித்தார்.

“பிறப்பைத் தவிர மத்த எல்லாத்தையும் விலை கொடுத்து வாங்க முடியும் டாக்டர்...” என்றாள் பட்டென்று. இதைக் கூறும்போது அவன் வெளியில் அமர்ந்திருந்தான். பிறகு போன் செய்து கேட்டுக் கொள்ளட்டும்.“இப்போது பிறப்பையும் விலை கொடுத்து வாங்க IVF தொழில் நுட்பத்தோட நிறைய ஹாஸ்பிடல்ஸ் வந்தாச்சு...’’ என்று டாக்டர் பெரிய நகைச்சுவையைக் கண்டுபிடித்ததைப் போல சிரித்தது எரிச்சலூட்டியது.   

 அவன் அவளது கைகளைப் பற்றியபடி நடப்பதற்குச் சம்மதிக்கவில்லை. இது பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் உள்ளது. இந்த சின்ன ஈகோ கூட இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை. ஆனால், அவன் நடக்கும் விதத்தில் அவன் அருகில் யாராவது இருப்பது அவசியம் என்பது புரிந்தது.

வீட்டிற்கு வந்ததும் சுந்தரி உரிமை எடுத்துக் கொண்டு அவனைக் கைத்தாங்கலாகக் கூட்டிச் சென்றாள். அதனை அவள் வரவேற்கவில்லை என்றாலும் மறுப்பதையும் விரும்பவில்லை.
இப்படியே ஒருவாரம் போனது. அவனுக்கு தேவையான பத்தியச் சாப்பாட்டை செய்து கொடுத்தாள். 

சென்ற மாதம் மதுரையில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் ஒருவாரம் தங்கி சிசிச்சை எடுத்துக் கொண்டதன் தொடர்ச்சியாக கொண்டு வந்திருந்த தைலத்தை அவளே அவனது முழங்காலிலும் பாதத்திலும் கைவிரல்களிலும் சூடு பரக்கத் தேய்த்து விட்டாள்.
அதன் பலனாக அவன் காலையில் எழுந்து நடமாடுவதில் முடக்குவாதத் தொந்தரவுகள் இல்லாமல் இருந்தான்.

“அம்மா! பாரேன், மாதவி எண்ணெய்ப் பிழிச்சலை நல்லா தேச்சு விடுவதால் எனக்குக் காலையில் எலும்பு மூட்டுகளில் வலி முன்ன மாதிரி இல்லை...” என்று ஒரு சின்னக் குழந்தையைப் போல கூறினான்.இரண்டு நாத்தனார்கள் வந்திருந்தனர். ஒருத்தி மதுரையிலிருந்து. ஒருத்தி சென்னையிலிருந்து. 

கொழுந்தன் திருச்சியிலிருந்து வந்திருந்தான்.“எங்களுக்கு எல்லாம் பால்கி எவ்வளவோ செஞ்சுச்சு. அதை இப்படி பார்க்க சகிக்கலை. வாய்க்கு ருசியா ஆக்கிப் போடக் கூட வெளியாளுங்களை நம்பி இருப்பதைப் பார்த்தால் எனக்கு ரத்தக் கண்ணீர் வருது...” என்று பொரிந்த தங்கைக்குச் சாதா கண்ணீர் கூட வரவில்லை.

“இங்கனயே தங்கியிருந்து அண்ணனுக்கு ஆக்கிப் போடலாமே மலர்...” என்று மாதவி கூறியதும் முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு போனவள் ‘‘புருஷனுக்கு இப்படி ஆனது தெரிஞ்சும் நான் இப்படி ஓடிப் போக மாட்டேன். எனக்கு வீடு, குடும்பம், புருஷன், பிள்ளை, மாமியார் எல்லோரும் இருக்காங்க...” என்றாள்.

“நான் ஓடிப் போகலை மலர். சொல்லிட்டு ஹோமில்தான் போயிருக்கேன்...” என்றாள் மாதவி.அவள் அறையில் இல்லாதபோது மலர்விழியை மற்ற இருவரும் சன்னமான குரலில் எச்சரித்துக் கொண்டிருந்தனர். ‘‘மலரு! அவ திரும்பி வந்ததே அதிசயம். நீ இப்படி வாயாடின அவ திரும்பியும் போயிருவா. ஏதோ அவனுக்கு வந்த முடக்குவாதம் அவங்க ரெண்டு பேரையும்  ஒண்ணாக்கட்டும்...”இரண்டு நாட்களில் குசலம் விசாரிக்க வந்தவர்கள் கிளம்பிப் போன பிறகு மாமியாருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டாள். மகனும் பரீட்சை இருக்கிறதென்று கிளம்பி விட்டான்.

மாதவி அங்கே வந்து ஆறு நாட்கள் ஆனது. ஏழாவது நாள் பாலகிருஷ்ணன் தனது சொந்த அலுவல் காரணமாக டிரைவரை அழைத்துக் கொண்டு வெளியில் போயிருந்தபோது மாமியார் அவளை அருகில் அழைத்தாள்.மாமியாரை கடந்த ஆறுநாட்களும் நீள அங்கி உடையில் பார்த்துப் பார்த்துக் கண்களுக்குப் பழகி விட்டது. 

தோள்கள் சதையிழந்து தொள தொள என்று ஆடிக் கொண்டிருந்ததும். கணுக்காலுக்கு மேல் நின்ற அங்கி என்பதால் சுருங்கிய கால்களில் ஓடிய பச்சை நரம்புகளும் மாமியார் பழைய மாமியார் இல்லை என்பது தெரிந்தது. தலை சீவி விடக் கூட சுந்தரி வருவதில்லை என்பது தெரிந்தது.

மாதவி ஒரு தைல சீசாவை எடுத்துக் கொண்டு மரச்சீப்புடன் மாமியாரின் பின்னால் அமர்ந்து கொண்டாள். மரச்சீப்பை அழுத்தி வாரும்போது மாமியாரின் முடியிலிருந்து கொத்து கொத்தாகப் பேன்கள் கிளம்பின. நிதானமாக அவற்றை கை விரலால் நசுக்கிக் கொன்றபடி தலையை வாரி ஒரு ரப்பர் பாண்டால் முடித்து விட்டாள். கட்டிலின் கீழே சப்பணமிட்டு அமர்ந்தபடி மாமியாரின் கால் பாதத்தைத் தனது மடியில் வைத்துக் கொண்டு நகவெட்டியால் பக்குவமாக ஒரு இஞ்ச் நீளம் வளர்ந்திருந்த நகங்களை வெட்டிக் களைந்தாள்.

“என் கேள்விக்கு பதில் சொல்லு மாதவி, என்ன செய்யப் போற?”“ஒரு வாரத்தில் முடிவு செய்ய முடியாதே அத்தை...” “ஆனால், என்ன முடிவு செய்ய வேண்டும் என்றாவது யோசித்து வச்சிருப்ப இல்லை?”மாதவி பதில் சொல்லவில்லை.“யார் மனசில் என்ன இருக்கு என்பதை அடுத்தவர்களால் கணிக்க முடியாதுதான். ஆனால், அடுத்தவங்க இந்த மாதிரி நினைச்சு விடக் கூடாதுன்னு எடுத்துச் சொல்லலாம் இல்லையா?” என்றார் மாமியார்.

மாதவி மாமியாரின் முகத்தை ஏறிட்டாள். தீர்க்கமில்லாமல் வந்து கொண்டிருந்த வார்த்தைகள் திருத்தமாக வருவது போலத் தெரிந்தது. மாமியார் தொடர்ச்சியாக மனதில் உள்ளவற்றைச் சொல்லிவிட நினைப்பது தெரிந்து மாதவி குறுக்கிடாமல் அவர் பேசுவதைக் கேட்டாள்.“பாலகிருஷ்ணன், அவங்க அப்பா, உன் மைத்துனர்கள் இவங்கள்ளாம் நம்மோடு நெருங்கியிருப்பவங்க. சொந்தம் பந்தம் என்பதையெல்லாம் தாண்டி ஒரு சமனற்ற உலகின் பிரதிநிதிகள், அவ்வளவுதான்...” இப்படி ஒரு வாக்கியத்தை மாமியார் திருத்தமாகப் பேசியதும்தான் பழைய விஷயங்கள் பல ஞாபகத்திற்கு வந்தன.

மாமியார் டீச்சர் ட்ரையினிங் முடித்த சமயத்தில்தான் அவருக்கும் மாமனாருக்கும் திருமணம் நடந்ததும், மாமனார் பிடிவாதமாக மாமியார் வேலைக்குப் போவதைத் தடுத்ததும் நினைவிற்கு வந்தது.“என்னுடைய கதை கிட்டத்தட்ட முடிந்து போன பல பெண்களின் கதையின் இறுதிப் பகுதி. எனக்கு உன் மாமனாரின் போக்கையும் கண்டிக்க முடியவில்லை, உன் புருஷனையும் கண்டிக்க முடியவில்லை.

உன் மாமனார் சாகும் வரையிலும் மற்றவர்களிடம் எப்படியோ தெரியாது என்னிடம் அவர் கல்யாணம் ஆன புதிதில் எப்படி நடத்தினாரோ அப்படியேதான் இறுதி வரையில் நடத்தினார். அவரோட எண்பதாவது ஆண்டு நிறைவில் நடந்த கூத்து உனக்குத் தெரிந்திருக்கும். ஆனால், உனக்கோ மற்றவர்களுக்கோ தெரியாமல் அவர் என்னை ஒரு புழுவைப் போலதான் மதித்தார்.

பெண் என்றால் அவளுக்கு ஒன்றும் தெரியாது என்ற போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை. நீ அவனை விட்டுத் தனியாகக் கிளம்பிப் போக முதன்முதலாக முடிவெடுத்தபோது  நான் உள்ளுக்குள் எவ்வளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? உனக்கு இப்போது இருக்கும் காலம், சூழல், சமூக மாற்றங்கள், இப்போதிருக்கும் விஞ்ஞான வசதிகள் எதுவுமே எனக்கு அப்போது கிடையாது.

இருந்திருந்தால் நான் அப்போதே அவரை விட்டு விலகியிருப்பேன்...’’ என்று நிதானமாகப் பேசினார். ஏதோ இதுதான் தனது கடைசி இரவு என்பது போல படபடப்பின்றி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்து கோர்த்துப் பேசினார்.“உன்னிடம் நான் வேண்டுவது உன் முடிவிலிருந்து நீ பின் வாங்காதே என்று மட்டும்தான். அவனுக்கும் இப்போது வந்திருக்கிறாளே ஒரு மெய்ட்... அவள் பெயர் என்ன மோகினியா? சுந்தரியா? ஏதோ ஒண்ணு. அவளிடம் அவன் காட்டும் நெருக்கம் எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

இவனுக்கு என்ன... முடக்குவாதம் வந்தால் மட்டும் மாற மாட்டான் மாதவி. நாமதான் ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டு இறங்கி வந்து இரக்கம் காட்டுவோம். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் அவனுக்கு வந்துள்ள வியாதி அவன் செய்த குற்றங்களுக்குத் தண்டனை என்பது மாதிரியும் அதற்குப் பரிகாரமாக அவன் இனிமேல் உன் மீது காட்டும் பரிவையும் நீ அவனுடன் சேர்ந்திருப்பதற்கான  காரணங்கள் என்பார்கள்.

பார்க்கும் யாருக்குமே அது சரியாகப்படும். ஆனால், நாற்பது வருஷம்... உனக்குக் கல்யாணம் ஆனப்போ என்ன வயசு? இருபத்து மூணா? சரி, முப்பத்தேழு வருஷம். உன்னுடைய  இளமைப் பருவம், கனவு, நம்பிக்கை எல்லாம் தொலைந்து போனதே... அதற்கு ஈடு எது என்று இவங்களாலே பதில் சொல்ல முடியுமா?

அவன் நோய்வாய்ப்பட்டதால் உன்னிடம் மன்னிப்பு கேட்பதாகவே வச்சுகிட்டாலும் உனது இழந்த வாழ்க்கையை யாரால் திருப்பித் தர முடியும்? அவனுடைய மன்னிப்பு என்பது நீ அவனுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு என்னும்போது அது அவனுக்கு மறைமுகமாக வழங்கப்படும் சலுகையில்லையா?

இதில் நியாயமே இல்லை மாதவி. நான் நினைச்ச மாதிரியே எல்லோரும் இந்தப் புள்ளியை நோக்கிதான் உன்னை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவன் நல்லா இருந்தப்போ உனக்கு அவனிடம் சுகமில்லை. அவன் முடியாம போனப்போ நீ அவனுக்கு ஒரு செவிலி. 

ஒரு கணம் கூட இங்கே இருக்காதே. நீ கிளம்பு!கல் நெஞ்சக்காரி என்பார்கள். இரக்கமில்லாதவள் என்பார்கள். அசைந்து கொடுக்காதே. இந்த நேரத்தில் நீ அவனிடமிருந்து விலகி இருப்பது ஒண்ணுதான் அவன் உன்னை எப்படி நடத்தியிருக்கிறான் என்பதை மத்தவங்களுக்குப் புரிய வைக்கும்.

உன் நோக்கம் பதிவிரதை என்று பெயர் வாங்குவதில் இல்லை. உன்னை அவன் எப்படி நடத்தினான் என்பதைப் புரிய வைப்பதில்தான். கிளம்பு...” என்றார்.

மாதவி மாமியாரின் கைகளில் உள்ள பச்சை நரம்புகளை நீவி விட்டபடி இருந்தாள். மாமியார் தனது உறவுமுறையைத் தாண்டி அகண்ட பெண்மையின் ஒரு துளி போலத் தோன்றினாள்.
அவன் இன்னும் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருக்கவில்லை. ஒரு துண்டுச் சீட்டில் எழுதி சுந்தரியின் கையில் கொடுத்து அவன் வந்ததும் கொடுக்கச் சொல்லி மாதவி தனது உடமைகளைத் திரட்டிக் கொண்டு கோயம்பத்தூருக்குக் கிளம்பினாள்.

“நீங்கள் இருக்கும்போது கிளம்பிச் செல்வது எனக்கு மன உளைச்சலையும்,  சங்கடத்தையும்  அளித்தாலும் அளிக்கலாம் என்பதால் நீங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் கிளம்பு
கிறேன்...’’ என்று மட்டும் அவள் எழுதியிருந்த சீட்டை அவன் வந்து படிக்கும்போது அவள் திண்டுக்கல்லை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய அலைபேசியிலிருந்து அவன் நான்கைந்து முறை அழைத்தபடி இருந்தான். அவள் எடுக்கவில்லை.

 - சத்தியப்பிரியன்